
வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; பக்தர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில். தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள், அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.
அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோயில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் புதிய சிலை வைப்பதற்காக அக்கோயிலில் பாலாலயம் செய்தனர். அதற்கான பணிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் அங்கு வருவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயிலுக்குள் பொதுமக்கள் செல்லாமல் போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. கிராம மக்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டில்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏ டி எஸ் பி அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் பா.சரவண கார்த்திக் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலையத்துறை காவல்துறையை வைத்து பொதுமக்களை மிரட்டுவது, கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும்
அறநிலையத்துறையை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோவில் அர்ச்சக்
புரோகித் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். பொதுமக்கள் இத்தனை ஆண்டுகளாக தங்கள் சொந்த பணத்தில் பராமரித்த ஒரு கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற நினைப்பது வெட்கக்கேடானது. ஹிந்துக்களிடமிருந்து கோவிலை அபகரிக்கும் செயலை விட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலைய துறை காவல்துறையை வைத்து மக்களை மிரட்டுவது கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொது மக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும் அறநிலைய துறையை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்..” என்று, விருதுநகர் மாவட்ட பாஜக., சார்பில் ஸ்ரீவி ராஜா குறிப்பிட்டுள்ளார்.





