
‘ஆடி 18’ம் பெருக்கு நாளில், ‘2026’ ஆங்கில புத்தாண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடும் பணிகளில், சிவகாசி காலண்டர் நிறுவனங்கள் சுறுசுறுப்பு…..
வரும் ‘2026’ ஆங்கில புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்களுக்கான ஆல்பம் தயாரிக்கும் இறுதிகட்ட பணிகளில்,சிவகாசி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் அச்சிடுவதால் சிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன.
காலண்டர்களின் வகைகள்,ரகங்கள், புதிய டிசைன்கள், விலை விவரங்கள் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றினைத்து முதலில் ஆல்பங்களாக தயாரிப்பார்கள். தயாரிக்கப்பட்ட ஆல்பங்களை ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி 18’ம் பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் செய்து வெளியிடுவது வழக்கம்.
காலண்டர் ஆல்பங்களை முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஆடி பெருக்கு நாளில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கும்.
இந்தாண்டிற்க்கான புதுவரவான பொற்காலம், புதுயுகம், வழிகாட்டி,VIP காலண்டர் என அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இது குறித்து காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெயசங்கர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் சித்திரை மாதம் பிறந்து, பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தொடங்கப்படும்.
வழக்கமான காலண்டர்களுடன் புதிய ரகங்களும் அறிமுகம் செய்யப்படும். அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ‘ஆடி 18’ம் பெருக்கு நாளான இன்று சிறப்பு பூஜைகளுடன் காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட உள்ளன.
மூலப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வகைகளால், புத்தாண்டு தினசரி காலண்டர்களின் விலை கடந்தாண்டை விட இந்தாண்டு 7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் உயரும் நிலை உள்ளது என்று கூறினார்.





