சென்னை:
சென்னையில் ரூ. 14.5 லட்சம் லஞ்சம் பெற்ற சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையராகப் பணியாற்றி வருபவர் துர்கா பிரசாத். சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விசாரணை செய்த ஆணையர், வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஆணையர் துர்கா பிரசாத், ரகசிய இடத்தில் வைத்து ரூ. 14.5 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும், மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், விரைந்து சென்று லஞ்சம் பெற்ற துர்கா பிரசாத் மற்றும் அதை அளித்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து துர்கா பிரசாத்தின் அலுவலகம், வீடு மற்றும் 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



