ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்

மதுரை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு நடக்கவில்லை. ஆகவே, வரும் தைத் திருநாளையொட்டி, ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஆனால், அதற்குரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, அவசரச் சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸும் விரைவில் மத்திய அமைச்சரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுப்பார் என்றார்.
மேலும், முல்லைப் பெரியாறில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வுக் குழுத் தலைவர் நாதன் கூறியுள்ளார். ஆகவே, கேரள முதல்வர் உம்மன்சாண்டி உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இரு மாநில மக்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்த ராமதாஸ், மக்கள் நலக் கூட்டணியால் பாமகவுக்கு எள்ளவுகூட பாதிப்பிருக்காது. வெள்ள பாதிப்பால் திமுகவுக்கு செல்வாக்கு கூடியிருப்பதாகக் கூறுவது தவறு. திமுக பட்டமரமாகிவிட்டது. அது இனித் துளிர்க்காது. தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக பாமகவே உள்ளது என்றார்.