பள்ளி ஆய்வுக்கூடத்தில் +2 மாணவர் தீக்குளித்து தற்கொலை: ஆசிரியர் கைது

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளத்தூரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி மாயாண்டி. இவருக்கு 2 மகன்கள். இளைய மகன் பிரகாஷ், அருகில் உள்ள பள்ளத்தூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், வேதியியல் ஆசிரியர் செபஸ்திராஜ், வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த பிரகாஷ் உள்ளிட்ட மாணவர்களைக் கண்டித்துள்ளார்.

சக மாணவ, மாணவியர் முன்னிலையில் கண்டித்ததால் அவமானம் அடைந்த பிரகாஷ், பள்ளி இடைவேளையில் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். ஆய்வகத்தில் இருந்து புகை வெளியேறியதால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் அங்கிருந்தோர், பிரகாஷ் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்தனர்.

தகவலறிந்த மாணவரின் உறவினர்களும், பொதுமக்களும் பள்ளியின் முன்பாக திரண்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். மேலும், அந்தப் பகுதி எம்எல்ஏவான கே.ஆர். பெரியகருப்பன், கம்யூனிஸ்ட் கட்சியினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆல்பி ஜான்வர்க்கீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர், மாணவரின் சடலத்தை பள்ளத்தூர் காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் செபஸ்திராஜை கைது செய்தனர்.