
மார்ச் 16 இன்று, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில், வன உயிரினங்கள் பாதுகாப்பு, மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் படி, குற்றாலம் வனச்சரக அலுவலர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில், வனவர்கள் பி.பாண்டியராஜ், ஏ.அழகர் ராஜ், வனக்காப்பாளர் சங்கர்ராஜா, இயற்கை சமூக ஆர்வலர் தேரிகுமார், மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அந்தப் பகுதியில், குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சமூகத் தளங்களில் பரவிய செய்தியின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வாறு குரங்குகள் எதுவும் உயிரிழக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் நேரிட்டால், தங்களை உடனே தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் வன அலுவலர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இரு தினங்களுக்கு முன் நாம் வாட்ஸ்அப் பதிவில் குற்றாலம் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஓரிருவர் சொன்ன தகவலை வைத்தும், குற்றாலம் அருவிக்கரை பகுதியில் தாம் பார்த்ததாக ஒரு டீக்கடைக்காரர் சொன்ன தகவலையும் வைத்து, குரங்குகள் இயல்புக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளன என்றும், இதனை சம்பந்தப்பட்ட வனவர், அதிகாரிகள் பார்வையிட்டு, ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தோம்.
அதன்படி மார்ச் 16 இன்று குற்றாலம் வனச்சரகத்தில் இருந்து வனவர் உள்ளிட்டோர் கல்லூரிக்குச் சென்று விசாரித்து தகவல் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நம் நன்றி~
வெறும் வாட்ஸ்அப் தகவல் தானே என்று அசிரத்தையாக இருந்துவிடாமல் அதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரித்ததற்காக மீண்டும் ஒருமுறை நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
அதேநேரம் கல்லூரியில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றும், வாட்ஸ் அப்பில் வந்த தகவல் உண்மையில்லை என்றும், அப்படி ஏதேனும் குரங்குகள் உயிரிழந்து விழுந்தால் தாங்கள் அவசியம் வனச்சரகத்துக்கு தகவல் அளிப்போம் என்றும் கல்லூரி முதல்வரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக குற்றாலம் வனவர் பெயரில் ஒரு கடிதம் நம் பார்வைக்குக் கிடைத்தது!
ஆனால் நாம் ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் நமக்கு கிடைத்த தகவலை வைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். காரணம் தற்போது பரவிவரும் வைரஸ் மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் விழிப்பு உணர்வுடன் செயல்படுவது நல்லது என்ற எண்ணம்தான்!
நாம் ஒவ்வொரு நாளும் விடாமல் செய்திகளைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். கடந்த வார (மார்ச் 8) செய்தி: கேரளம் வயநாடில் குரங்குக் காய்ச்சலால் 48 வயதான வனவாசிப் பெண் உயிரிழந்தார். (Kerala: Woman dies of monkey fever in Wayanad)
There is a condition called Monkey fever which is caused by virus and cause micro bleeding . This is endemic to South India. I am not saying it could be now happening but needs to be investigated – என்று நம் பாளை., சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவராக இருந்த மூத்த நண்பரும் தெரிவித்தார்.
எனவே, பெறப்பட்ட இந்தத் தகவலில் குரங்குக் காய்ச்சல் என்ற அம்சத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது என்ற எண்ணத்தில், முன்னெச்சரிக்கைக்காக இதனைப் பதிவு செய்தோம். இதன் பின்னும் போனில் பேசி, இந்த விஷயத்தில் அப்டேட் ஏதும் உண்டா என்று கேட்ட நண்பரான அந்த மருத்துவருக்கு என் நன்றி!
அதே நேரம் கல்லூரி மாணவிகள் எவரும் உண்மைக்கு மாறாக, தாங்கள் பார்க்காததை பார்த்ததாக நம்மிடம் சொல்ல வேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் பார்த்ததை நம்மிடம் பகிர்ந்தார்கள்! இதில் நம் தவறு எதுவும் இல்லை. குரங்குகள் உயிரிழப்பில் நாம் தவறாக எதுவும் செய்துவிடவில்லை. இயற்கையின் மாறுபாட்டை கவனித்து, நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்!
நல்லவேளையாக நாளை முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மாநில அரசு! எனவே நாளை முதல் கல்லூரிகளுக்கு மாணவிகளும் வரப்போவதில்லைதான்! அந்த வகையில் ஏதோ ஒரு வழியில் நல்லது நடந்திருக்கிறது!
எனவே அடுத்து வரும் நாட்களில் குற்றாலம் பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களாகிய நாம் சற்று விழிப்புடன் இயற்கையை உற்று கவனிக்க வேண்டும்!



