திருச்செந்தூர்:
சர்வதேச மகளிர் தினத்தில் திருச்செந்தூரில் நடந்த சம்பவத்தால் வியாழக்கிழமை நேற்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில், தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்கவிட்ட விவசாயிகள் போராட்ட புகழ் அய்யாக்கண்ணு, திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நேற்று திடீரென துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அவர் கொடுத்த பிரசுரங்களை வாங்காமல் பெண்கள் பலர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் அய்யாக்கண்ணு குழுவினர் விடாப்பிடியாக, அவர்களை நிறுத்தி வைத்து, துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பிரதமர் மோடியை விமர்சித்து அந்தத் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததால் கடுப்பான உள்ளூர் பாஜக., நிர்வாகி பெண் ஒருவர், ஓடி வந்து, இந்த பிராடு கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்காதீர்கள் என்று அந்தப் பெண்களை தடுத்தார். இதனால் கடுப்பான அய்யாக்கண்ணு, வாய் வார்த்தையாக பதில் சொல்லாமல், அந்தப் பெண்ணை அடிக்கக் கை ஓங்கி அவரைத் தாக்க முயன்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, பதிலுக்கு அய்யாக்கண்ணுவுக்கு ஒரு பளார் விட்டார்.
இதனால் அங்கே கைகலப்பு மூண்டது. அந்தப் பெண்ணுடன் வந்த ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அய்யாக்கண்ணுவுடன் வந்தவர்கள் அந்தப் பெண்ணையும் உடன் வந்த நபரையும் தாக்கப் பாய்ந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் செருப்பை எடுத்துக் காட்டி அடிப்பேன் என்றதும், அங்கிருந்த பக்தர்கள் வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்து பிரித்து விட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, உள்ளூர் பாஜக., நிர்வாகியான பெண்ணை மகளிர் தினத்தில் தரக்குறைவாகப் பேசி, கையை ஓங்கி தாக்க முயன்ற அய்யாக்கண்ணுவுக்கு தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்தார். அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் தமிழிசை.