
செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு திடீர் ஆய்வு பணியை மேற்கொள்ள வந்த தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர்க்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. செங்கோட்டை ரயில் நிலையத்தின் வளர்ச்சிகள் குறித்து மனுக்களும் வழங்கப்பட்டன.
இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியபோது…
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் 25/10/25 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தோம். அதில் குறிபிப்ட்டிருந்த முக்கிய அமசங்கள் இவைதான்…
(1) மீட்டர் கேஜ் கால கட்டத்தில் சேரன்மாதேவி , கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம் பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – கொல்லம் & கொல்லம் – திருநெல்வேலி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். முடிந்தால் இந்த ரயில்களை திருவனந்தபுரம் வரை இயக்க வேண்டும்.
(2)தற்போது புனலூர் வரை இயங்கும் கன்னியாகுமரி – புனலூர்- கன்னியாகுமரி ரயில்களை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும்.
(3) கடந்த வாரம் புனலூர் செங்கோட்டை வழியில் இயங்கும் மின்வழித்தட மின்சார இன்ஜின்களின் உந்துதலுக்கு மின்சக்தி அளிக்கின்ற புனலூர் தொடர்வண்டி மின்மாற்றி துணை நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் MEMU மின் ரயில்களை எர்ணாகுளம்/ திருவனந்தபுரம்/கொல்லம் இவற்றில் இருந்து மதுரை/ திருநெல்வேலி/ திருச்செந்தூர்/ தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு இயக்க வேண்டும்.
(4) கடந்த பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட தாம்பரம்- திருவனந்தபுரம் – தாம்பரம் 3E ஏசி வாராந்திர ரயில்களை ( வழி திருச்சி மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்) மீண்டும் வரும் நவம்பர் மாத நடுவிலிருந்து பிப்ரவரி 2026 வரை சபரிமலை ஐயப்ப சீசனை ஒட்டி இயக்க வேண்டும். மக்கள் நலன் கருதி இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டிகளும், முன் பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட வேண்டும்.
(5) செங்கோட்டை- கோயம்புத்தூர் இடையே பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும். இந்த திட்டம் இயலாது போனால் மதுரை – கோயம்புத்தூர்- மதுரை ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
(6)தாம்பரம் – செங்கோட்டை , செங்கோட்டை- தாம்பரம் இடையே முன்பதிவு இருக்கை வசதிகள் & முன் பதிவில்லா இருக்கைகள் வசதிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்கள் அண்மையில் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே ஓடிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அண்மையில்
LHB பெட்டிகளாக மாற்றப்பட்டன. இந்த ரயிலின் பழைய ICF பெட்டிகளை வைத்தே தாம்பரம் – செங்கோட்டை- தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
தற்போது செங்கோட்டை – சென்னை இடையே தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக பகல் நேர ரயில்கள் இல்லை. எனவே இந்த சப்தகிரி ரயிலின் பழைய ICF பெட்டிகளை பயன்படுத்தி செங்கோட்டை – தாம்பரம்- செங்கோட்டை இடையே வாரம் மும்முறை,பகல் நேர விரைவு ரயில்களை ,தீபாவளி சிறப்பு ரயிலின் வழித்தடத்திலேயே இயக்கிட வேண்டுகிறோம்.
(7) தற்போது வாரம் மூன்று நாட்கள் செங்கோட்டையில் இருந்து இயங்கும செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில்களையும் , திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம்- செங்கோட்டை அதி விரைவு ரயில்களையும் விரைவில் தினசரி இயங்கும் ரயில்களாக்க ஆவன செய்ய வேண்டும்.





