கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியில் திடீரென தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலின் நடுப்பகுதியில் என்ஜினும், இரு புறங்களில் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் இன்று காலை புலியூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது ரயிலின் என்ஜின் பகுதியில் புகை வருவதை கண்ட புலியூர் ஸ்டேஷன் மாஸ்டர், வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். வீரராக்கியம் ரயில் நிலையத்தில் ரயில் நின்று, பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது, ரயிலின் என்ஜின் பகுதியில் தீப்பற்றியது.
இதனால் பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக கரூர்-திருச்சி மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.



