தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
அரசியல் கட்சிகளின் சார்பில் 89 எம்எல்ஏக்கள் மீண்டும்
தமிழக சட்டப் பேரவை தேர்தலில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் சராசரியாக 4.35 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அவர்களின் சொத்து மதிப்பு சராசரி 8.63 கோடியாக அதிகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சொத்தின் மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் 51 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது 2016ஆம் ஆண்டில் 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் முன்நாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011ஆம் ஆண்டில் 44 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது, நடப்பாண்டில் 62 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் 11 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 27 லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 15 லட்சம் ரூபாயும், பாமக 2 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ. 1 கோடியும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவின் சொத்து மதிப்பு சராசரியாக 3 கோடி ரூபாயும் உயர்ந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் 51 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும், திமுகவின் 16 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



