
கடந்த ஞாயிறு அன்று, விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக மாநில அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதுடன், விலைமாதர் குறித்துப் பேசி, அதில் சைவம் வைணவம் என்று சமயங்களை இழுத்து, அவற்றை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இந்தக் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஆன்மிகப் பெருமக்கள் இடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
பொதுவாக, திமுக.,வினர் ஒரு தரப்பை கேலி கிண்டல் செய்து மற்றொரு தரப்பை உயர்வாகப் பேசுவது போல் பேசி, வாக்கு வங்கி அரசியல் செய்வார்கள். ஆனால் பொன்முடி இந்து மதத்தின் இரு பெரும் பிரிவையும் ஒன்று போல் இழிவுபடுத்திப் பேசி ஒட்டுமொத்த இந்து மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.
பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், அவரது கட்சிப் பதவியைப் பறித்து திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
தற்போதைய திமுக., அரசில் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளிலும் அவதூறுப் பேச்சுகளிலும் சிக்கியவர் தான்! அவருடைய ஓஷி ஓஷி என்ற பெண்கள் பஸ்களில் இலவச பயணம் செய்வது குறித்து கிண்டல் செய்திருந்தார். ஆளுநரை போடா எனக் கூறி சட்டப்பேரவையிலேயே ஆபாச செய்கைகளைக் காட்டினார்.
பொன்முடியின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, அன்னியச் செலாவணி மோசடி வழக்கு, அமலாகத்துறை சோதனைகள் என பல்வேறு தொடர் வழக்குகள் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், தனது அமைச்சரவையில் உள்ள செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற எடுத்து முனைப்பை இன்னொரு அமைச்சரான பொன்முடி விவகாரத்தில் திமுக., அரசின் முதல் அமைச்சர் ஸ்டாலின் காட்டவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையிலும் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொன்முடியின் ஆபாசப் பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், திமுக.,வின் பெண் முகமாக முன்னிறுத்தப்பட்டு வரும் மு.கருணாநிதியின் மகளும் முதல் அமைச்சர் ஸ்டாலினின் சகோதரியுமான தி.மு.க., எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்து சமூகத் தளத்தில் கருத்துப் பதிவு செய்தார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொன்முடியின் கட்சிப் பதவியை (துணை பொதுச் செயலாளர்) பறித்து திமுக., தலைமை உத்தரவு வெளியிட்டுள்ளது. திமுக.,வில் மொத்தம் ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருப்பர். அவர்களில் ஒருவராக இருந்த பொன்முடியின் கட்சிப் பதவியை மட்டும் பறித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.
வழக்கமாக பதவிப் பறிப்பு அறிவிப்புகள் அனைத்தும் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகும்;ஆனால் இன்றைய பதவிப் பறிப்பு அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியாகியுள்ளது. காரணம், துரைமுருகனும் அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசி புண்படுத்தியிருந்தார். இது சமூக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள் பொன்முடி சிக்கிக் கொண்டார். இதனால், துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுச் செயலாளர் கையெழுத்தின்றி, தலைவரே கையெழுத்திட்டு அறிவிப்பு வெளியிடுவது, திமுக., தலைமைக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக கட்சி நிர்வாகிகள் சமூக வலைத்தளவாசிகளும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் பதவி, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக.,வில் இருந்து முன்னர் நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட கருத்தில், “சமீப காலமாக இதுபோன்ற அறிவிப்புகள் தலைவர் பெயரில் வருகிறதே. இன்றைய தலைமுறைக்கு கட்சி விதிகள் தெரியாது என்பதாலா? பொதுச்செயலாளர் டம்மியாக இருக்கலாம் ஆனால் கட்சி விதிப்படி அந்தப்பதவிக்குத்தான் உரிமை உண்டு. பொன்முடி கட்சிப்பதவி நீக்கம், அமைச்சர் பொறுப்பில் தொடர்கிறார், அப்படியானால் அமைச்சராக தொடரும் அளவுக்கு அந்த பேச்சு சரி என நினைக்கிறாரா ஸ்டாலின். விலைமாது வீட்டு போவது, அதுபற்றிய விவகாரங்களை கொச்சையாக நா கூசும் வண்ணம் பேசுவதுதான் இவர்கள் வாடிக்கையாக அந்தகாலம்தொட்டு இந்த காலம்வரை உள்ளது.கேவல, அற்ப, வேடிக்கை மனிதர்கள்! #திராவிடமாடல்பேச்சு” என்று பதிவு செய்திருக்கிறார்.