
தேசவிரோத மற்றும் இந்து விரோத கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) மாநாடுக்குத் துணைபோன திமுக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில்,
கடந்த 02/04/2025 முதல் 06/04/2025 வரை மதுரையில் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தொழிலாளர்களுக்கான கட்சி என்று அடையாளப்படுத்தி கொள்ளும் கம்யூனிஸ்ட்கள் அந்த மாநாட்டில் தொழிலாளர்கள் பற்றி எதையும் பேசவில்லை.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வியாபாரிகள் முதல் கடைநிலை கூலித் தொழிலாளர்கள் வரை தாக்குதலுக்குள்ளவது பற்றி பேசவில்லை. கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெருகிவரும் பயங்கரவாதம் , போதை கலாச்சாரம்பற்றி பேசவில்லை.
ஆனால் பேசியது அனைத்தும் இந்து விரோத மற்றும் தேச விரோத கருத்துக்கள் மட்டுமே.
மாநாட்டில் ஏராளமான தட்டிகள் வைத்து கம்யூனிஸ்ட்கள் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டனர். அதில் குறிப்பாக கீழ் வெண்மணி படுகொலை குறித்தும், மதுரை கவுன்ஸிலர் லீலாவதி கொலை குறித்தும் தட்டிகள் வைத்திருந்தனர்.
ஆனால் கீழ் வெண்மணி படுகொலையில் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் நீர்த்து போகச்செய்தது, அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் என்பதை கம்யூனிஸ்ட்கள் துளியும் வெளி காட்டவில்லை.
அதே போல கவுன்ஸிலர் லீலாவதி கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவினர் என்பதையும் மறைத்தார்கள்.
தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து மேடையேற்றியதில் இருந்தே கம்யூனிஸ்ட்கள் எந்தளவுக்கு உண்மைகளை மூடி மறைக்க துணை போகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
கீழடி, சிந்துசமவெளி நாகரிகத்தை RSS சொந்தம் கொண்டாடுகிறது என்று பேசியுள்ளனர். கீழடியும், சிந்து சமவெளியும் இந்த தேசத்தின் தொன்மையை,இந்து சமய கலாச்சாரத்தை பிரதிபலிப்பவை.
ஆனால் கம்யூனிஸ்ட்களின் கொள்கையே இறக்குமதி செய்யபட்டதுதான். அவ்வளவு ஏன் இந்திய கம்யூனிஸ கட்சியே ரஷ்யாவின் தாஷ்கண்டில்தான் துவக்கப்பட்டது. அந்த வகையில் இறக்குமதி கொள்கை, இறக்குமதி கட்சிகாரர்கள் இந்த தேசத்துக்கு சம்பந்தமில்லாத ஓட்டுண்ணியாக இருக்கும் நிலையில் கலாச்சார அபகரிப்பு நடத்துகிறார்கள் என்று பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
கனடா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இந்து கோயில்களும் இந்துக்களும் தாக்கப்பட்டபோது வாய்மூடி மவுனமாக இருந்த கம்யூனிஸ்ட்கள். தற்போது மதுரையில் மாநாடு நடத்தி பாலஸ்தீனியர்களுக்காக கண்ணீர் வடித்துள்ளார்கள்,
அதே சமயத்தில் சமீபத்தில் நடந்த பங்களாதேஷ் உள்நாட்டு கலவரத்தில் அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துகள் தாக்கபட்டதையும் , அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டதைப் பற்றியும் அப்போதும் சரி இப்போதும் சரி பாதிக்கபட்ட இந்துகளுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்துகள் பாதிக்கப்படும்போது மவுனமாக இருந்தவர்கள் மதுரையில் மாநாடு நடத்தி பாலஸ்தீனத்துக்கும் , ரஷ்யாவுக்குமாக ஒப்பாரி வைத்துள்ளார்கள்.
மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் பேசும்போது கார்ப்பரேட்களுக்கு எதிராகவும் ஆதிக்கவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து போரிடுவோம் என்று அறைகூவல் விடுத்துள்ளார. ஆனால் ஆளும் திமுகவிடம் நிதி பெற்று , கட்சி அலுவலகம் கட்டி அதில் கார்ப்பரேட்களுக்கு வாடகைக்கு விட்டு வயிறு வளர்க்கிறார்கள்.
அந்த வகையில் கம்யூனிஸ சித்தாந்தத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு திமுக, திராவிடர் கழகத்தின் ஊதுகுழல் போல இந்து விரோதம் தேசிய விரோதம் பேசி மாநாட்டை நடத்தியுள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. இத்தகைய செயலுக்கு திமுக அரசு துணைபோனதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – என குறிப்பிட்டுள்ளார்.