பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சனம் செய்ததற்காக, ராணிப்பேட்டையில், கலைஞர் பாதை என்ற பத்திரிகையின் ஆசிரியரை கண்மூடித்தனமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாகக் கூறப் படுகிறது.
ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகளின் ரௌடித்தனம், நடுரோட்டில் வைத்து நாயை அடிப்பது போன்று அடித்து வெளுத்து வாங்கப்பட்ட பத்திரிகை ஆசிரியர், அச்சத்தில் பொதுமக்கள்… என்ற அடிக்குறிப்புடன், ஒரு வீடியோ சமூகத் தளங்களில் இரு நாட்களாக பகிரப் பட்டு வருகிறது.
இந்த வீடியோவில், ராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களால் முத்துக்கடை பகுதியில் நடுரோட்டில் வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுக்கப் படும் காட்சிகள் பதிவாகி, பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் அண்மையில் அவர்களின் கட்சிக் கூட்டத்தில் அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள் என்று இந்து மத நம்பிக்கையை கேவலப்படுத்தும் விதமாக பேசியது உலக அளவில் இந்துமத நம்பிக்கை உடையவர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
இது போல் தொடர்ந்து இந்து மதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு பேசியும் ஏளனமாக சித்திரித்தும் வரும் திருமாவளவனின் பேச்சினை கண்டிக்கும் பொருட்டு இந்து மதத்தின் பால் பற்றுள்ளவர்கள் பலரும் பல்வேறு வகையில் சமூக வலைதளம் மூலம் எதிர்ப்புப் பதிவுகள், மற்றும் காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த கலைஞர் பாதை பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியரும், கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ஆதரவாளருமான குணசேகரன் என்பவர் திருமாவளவன் குறித்து அடிக்கடி பதிவகளை வெளியிட்டு வந்ததாகவும், அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சந்தித்து, மிரட்டி, இனி இவ்வாறு திருமாவளவன் குறித்து தவறாக பதிவுகள் போடக் கூடாது என்று கூறியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு பதிவை குணசேகரன் செய்ததாகவும், இந்த பதிவினால் கோபம் அடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ், காரை. தமிழ் மற்றும் நிர்வாகிகள் சிலர் ராணிப்பேட்டையில் குணசேகரனை முத்துகடை பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது வழிமறித்து நடுரோட்டில் வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் அரிவாள் வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டியதை தட்டிக்கேட்க முயன்ற காவல்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கில் இதே பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்ட தொண்டரணி நிர்வாகி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கருத்துப்பதிவை கருத்துப்பதிவால் எதிர் நோக்காமல் பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் வைத்து அடித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக, இந்த விவகாரங்களில், பாதிக்கப் பட்டு அடி உதைபடும் நபர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டி வருவதாகவும் கூறப் படுகிறது.