
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டு பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆம்னி பேருந்து வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு வழக்கம்போல் களியக்காவிளையிலிருந்து கோவைக்கு கிளம்பியது. இந்த ஆம்னி பேருந்து ஒட்டுநர் இராம்நாடு பகுதியை சேர்ந்த அகிலன் (44) மற்றும் நடத்துனர் களியக்காவிளையை சேர்ந்த விவண்(35) ஆகும்.
இவர்கள் 14 பயணிகள் உட்பட பேருந்தினை ஓட்டிக் கொண்டு சாத்தூர் வழியாக வரும்போது பைபாஸ் பாலத்தின் மீது ஏறிய சமயம் பேருந்தில் திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தினை நிறுத்திவிட்டு இறங்கி சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது பேருந்தில் இருந்த டீசல் டேங்க் அருகே புகை வந்தது. பின்னர் பேருந்து மள மளவெண தீப்பற்றியது. உடனடியாக ஒட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை அவசர அவசரமாக இறக்கினர். அதிக அளவிலான தீ பேருந்து முழுவதும் பற்றியது. இதில் பயணிகளின் உடைமைகள் மற்றும் பேருந்து முற்றிலும் தீப்பற்றியது. துரிதமாக செயல்பட்டு பயணிகளை இறக்கியதால் 14 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஆம்னி பேருந்து தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டவுன் போலீசார் சாத்தூர் தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து கருகியது. டவுன் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் போக்குவரத்தை மாற்றி அமைத்ததுடன் பயணிகளை பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் ஆம்னி பேருந்து தீ பற்றியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் இருந்தது.
போலீசார் போக்குவரத்தை மாற்றிய பின்னர் போக்குவரத்து சரியானது. மேலும் விபத்து குறித்து சாத்தூர் டவுண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்