பாலக்காடில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இதனை கடந்த வாரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!
இந்நிலையில், நெல்லை – தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை எக்ஸ்பிரஸ் ரயிலை விட்டு, ஏற்கெனவே இயங்கி வந்த நெல்லை – தூத்துக்குடி பாசஞ்சர் ரயிலை நிறுத்தியதை பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
திருநெல்வேலி – தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாரை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
பாலக்காடு – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரயில்வே நிா்வாகம் முதலில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ஐயப்பன் முன்னிலையில் நடந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.
இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
செங்கோட்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சியில் வரும் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம். தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சாம்பவர்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமில் ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார் வட்டாரமருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி மருத்துவ அலுவலர் முத்துபிரகாஷ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் வார்டு உறுப்பினர்கள் புணமாலை விமலா ராணி ஆகியோர் முன்னிலை வைகித்தனர் முகாமில் மகப்பேறு மருத்துவம் பொதுநல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் பல் மருத்துவம் கண் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது மேலும் ரத்த பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் இசிஜி மற்றும் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன மூலம் ஆய்வு பரிசோதனைகள் நடைபெற்றது முகாமில் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் மலர்க்கொடி பொதுநல மருத்துவர் . மாரீஸ்வரி மகப்பேறு மற்றும் ஸ்கேன் பரிசோதனை மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீத்தாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர் சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன் கல்யாணசுந்தரம் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர் மற்றும் ஏனைய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் முகாமில் ஆய்க்குடி பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பரிசோதனை மருத்துவ ஆலோசனைகள் கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனர் முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா. செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமைஆசிரியா் திவான்பக்கீர் தலைமைதாங்கினார். உதவி தலைமைஆசிரியா் கோமதிவிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை மண்டல துணை ஆளுநர் பால்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினா். அதனைதொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவா் அபுஅண்ணாவி, செயலாளா் தேன்ராஜ, பொருளாளா் சீதாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். பட்டதாரி ஆசிரியா் கிறிஸ்டோபர் தொகுப்புரையாற்றினார். முதுநிலை ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் கிராமசபை கூட்டம் நடந்தது. செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து கட்டளைகுடியிருப்பில் வைத்து 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கற்குடி பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டியன் தலைமைதாங்கினார். துணைத் தலைவர் பாக்கியலட்சுமி முன்னிலைவகித்தார். கிராம சபை கூட்டத்தில் செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கல்யாண சுந்தரம் கலந்துகொண்டு பிறப்பு பதிவில் பெயர் சேர்ப்பதன் அவசியத்தை பற்றியும் தற்பொழுது பெயர் சேர்ப்பதில் 31 12 2024 வரை உள்ள விதிவிலக்குகள் பற்றியும் அதன் பிறகு விதிவிலக்குகள் கிடையாது என்பது பற்றியும் சுத்தமான குடிநீர் பருகுவதன் அவசியத்தை பற்றியும் அயோடின் உப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் மகப்பேறு உதவி திட்டம் மற்றும் தாய் சேய் நல பரிசு பெட்டகம் மாதவிடாய் கால சுகாதார திட்டம் மக்களை தேடி மருத்துவம் முதலிய தமிழக அரசின் பொது சுகாதார நலத் திட்டங்களை பற்றி விளக்கி கூறப்பட்டது கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் செயலர் இசக்கி நன்றி கூறினார்.
செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் வைத்து நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு நகரத்தலைவா் ராமர் தலைமைதாங்கினார். தென்காசி மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவா் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், நகரத்துணைத்தலைவர் முருகையா, நகர மகளிரணி தலைவா் முத்துலெட்சுமி, ஆகியோர் முன்னிலைவகித்தனா். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச்செயலாளா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நகரத்தலைவா் இராமர் தலைமையில் தேசபிதா மகாத்மா காந்தியின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னா் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மதுசித்திக், எஸ்சி,எஸ்டி பிரிவு நகரத்தலைவா் சிவன், நகர்த்துணைத்தலைவா்கள் காதர்அலி, கோதரிவாவா, நகரப்பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து. இசக்கியப்பன், சுப்பிரமணியன், நகரச்செயலாளா்கள் நடராஜன், சுடலையாண்டி, வார்டு தலைவா்கள் தங்கம், திருமலைக்குமார், நாகூர்மைதீன், வார்டு உறுப்பினா் வேல்சாமி, ஜேம்ஸ், நகர சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பூபதி, சேக்முகம்மது, வாவாகனி, முகம்மதுசர்புதீன், பெரியபிள்ளைவலசை கிராமத்தலைவா் சாய்பு உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகரப்பொருளாளா் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 78 வது சுதந்திர தின விழா மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் வியாழக்கிழமையன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்த நிதி ஆண்டில் கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்திற்கு ரூபாய் 414.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பயணிகள் சேவையின் மூலம் ரூபாய் 270.94 கோடியும், சரக்கு போக்குவரத்து மூலம் ரூபாய் 115.60 கோடியும், இதர பயணிகள் வருமானத்தின் மூலம் ரூபாய் 19.76 கோடியும், வணிக ஒப்பந்தங்கள் மூலம் ரூபாய் 7.75 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். சரக்கு ரயில்கள் மூலம் 0.938 மில்லியன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளன.
இது இந்திய ரயில்வேயில் உள்ள கோட்டங்களை காட்டிலும் முதன்மை சாதனை அளவாகும். சரக்கு ரயில்கள் சராசரியாக மணிக்கு 38.19 கி.மீ. வேகத்தில் இயக்கப் படுகின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.77 சதவீதம் அதிகமாகும்.
இதுவும் இந்திய ரயில்வேயில் முதன்மை சாதனையாக உள்ளது. பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை சேவை விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் ஆகஸ்ட் 14 முதல் 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
மேலும் இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 15 முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 13 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை பொழிவிலிருந்து பாதுகாக்க 39 நீண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்தும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள கழிவறைகள் ரயில் நிலையங்களில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 17 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு வரும் 42 மின் தூக்கிகளில் ஏற்கனவே 7 மின்தூக்கிகள் பயணிகள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 6 மின் தூக்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.
மீதமுள்ள 29 மின் தூக்கிகள் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டு இந்த ஆண்டிற்குள் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரயில் நிலையங்களில் குளிர் குடிநீர் இயந்திரங்களுடன் இந்த ஆண்டு கூடுதலாக வழங்கப்பட்ட மண்பானை தண்ணீர் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் பயண சீட்டு பெற முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மொபைல் பயணச்சீட்டு செயலி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4.5 சதவீதமாக இருந்த விற்பனை ஜூலை மாதம் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்த ரயில் நிலையங்களில் மிகக் குறைந்த வாடகையில் 43 விற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் தயாரிப்புகள் இதுவரை ரூபாய் 55.70 லட்சம் அளவுக்கு விற்பனையாகி உள்ளன.
வயது முதிர்ந்தோர், உடல் நலம் குன்றியவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக 7 ரயில் நிலையங்களில் பேட்டரி கார் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் விழி ஒளியிழந்த பயணிகள் வசதிக்காக ரயில் நிலைய நுழைவாயிலில் இருந்து ரயில் பெட்டி செல்லும் வரை நடைபாதையில் சிறப்பு குறியீட்டு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
15 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நுழைவாயில் வளைவு, காத்திருக்கும் அறைகள், மின் தூக்கிகள், நடைமேடை சுற்றுச்சுவர், வெளிவளாக மேம்பாடு, பசுமை பூங்கா, அணுகு சாலை விரிவாக்கம், கழிப்பறை வசதி, மேற்கூறையுடன் கூடிய வாகன காப்பகங்கள், நடைமேடை மேற்கூரைகள், ரயில் நிலைய முகப்பு மேம்பாடு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வசதிகளுக்காக ரூபாய் 115.85 கோடி செலவிடப்பட்டு வருகிறது. மேலும் திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூபாய் 150.69 கோடி செலவிடப்படுகிறது.
மதுரை கோட்டத்தில் 80 சதவீத ரயில் பாதைகளில் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 94.7 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 69.75 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்துகளை தவிர்க்க 18 ரயில்வே கேட்டுகள் சிறப்பு ஏற்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 34 கேட்டுகளில் எளிதாக திறந்து மூட கீழ்மேல் இறங்கும் நீண்ட இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
27 கேட்டுகளில் சாலை வாகனங்கள் விரைவாக கடந்து செல்ல மின் ஆற்றல் மூலம் கேட்டை திறந்து மூடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே மருத்துவமனையில் தலையில் ஏற்படும் காயங்களில் எலும்புகளை சரிப்படுத்த கிரானியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நுரையீரல் சிகிச்சைக்கும் நவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக மதுரையில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
ரயில்வே சொத்துக்களை திருடிய 70 வெளிநபர்கள் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே சட்டத்தை மீறிய 3380 நபர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 19.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு ஓடி வந்த 125 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு உள்ளனர். பயணிகள் தொலைத்த ரூபாய் 56.60 லட்சம் மதிப்புள்ள உடமைகள் ரயில்வே பாதுகாப்பு படையால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 375 ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
764 ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 396 ஊழியர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பணியில் மரணம் அடைந்த 12 ஊழியர்களின் வாரிசுகளுக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ரயில் வாசல் படிகளில் பயணம் செய்த 27 விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் ரயில் பெட்டி நுழைவாயில் படிகளில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ பயணம் செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரயில்வே பெண்கள் சங்க மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை கோட்ட ரயில்வே மேலாளர் ஏற்றுக்கொண்டார்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் உட்பட அதிகாரிகளும் ரயில்வே ஊழியர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவரது உரை!
78ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. அவரது உரையில் குறிப்பிட்ட முக்கியமான சில குறிப்புகள்….
நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்.
நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது
செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
நமது பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி.
இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம்.
இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும்.
உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும்
“ஒரே தேர்தல் – ஆதரவு தாருங்கள்”
“தொடர் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை கற்களாக அமைகிறது”
“மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது”
“எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது”
“ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைய தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்”
“பொது சிவில் சட்டம் – அமல்படுத்தும் தருணம்”
“பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது”
“மதம் சார்ந்த சிவில் சட்டத்திலிருந்து மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி மாற வேண்டிய தருணம் இது”
“புதிய சட்டதிட்டங்கள்”
“ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா”
“3ஆம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கவும் மரியாதை அளிக்கவும் புதிய சட்டம்”
“நீதி வழங்கும் அமைப்பை துரிதப்படுத்த புதிய குற்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது”
“பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்”
“உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள்”
“நாட்டை வலிமையாக்க மாற்றங்களை கொண்டு வருகிறோம்”
“மாற்றங்கள் அரசியலுக்கானது அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கானது”
“வங்கி துறையில் செய்த மாற்றங்களால் உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம்பெறுகின்றன”
“இன்று அரசின் திட்டங்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே செல்கிறது”
“விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா”
“விண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்”
“விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்”
“தனியார் துறை செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது, நமக்கு பெருமையான விஷயம்”
“விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறுவதற்கான ஆலோசனைகளை மக்கள் வழங்கியுள்ளனர்”
“அதிகளவிலான செயற்கை கோள்களை இந்தியா விண்ணில் ஏவி வருகிறது”
“திறன்பெற்ற இளைஞர்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை சிலர் வழங்கியுள்ளனர்”
வங்கித் துறை இன்று வலுவாக்கப்பட்டுள்ளது உலகின் தலைசிறந்த வங்கிகள் மத்தியில் பாரத வங்கிகள் இடம்பிடித்துள்ளன. மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு கடனுதவி கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் ரயில், சாலை, துறைமுகம், விமானம் என உள்கட்டமைப்பு பணி நடந்துள்ளது.
தேவையற்ற 1500 சட்டங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை அளித்தோம். குடிமக்களுக்கு தண்டனையல்ல, நீதி கிடைக்க, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினோம்.
உலகின் மிகப் பெரிய கம்பெனிகள் பாரதத்தில் முதலீடு செய்ய ஆசைப் படுகின்றன. இது பொன்னான வாய்ப்பு. உரிய தொழிற் கொள்கை, நல்லாட்சி, சீரான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை உருவாக்கி மாநில அரசுகள் அதிகபட்ச முதலீட்டை ஈர்க்க போட்டி போட்டு முயற்சி செய்ய வேண்டும்.
தேசத்தின் இளம் செயற்கை நுண்ணறிவு / அனிமேஷன் வல்லுநர்கள் உலக கேமிங் சந்தையில் வலுவான இடம் பிடிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் குறித்த உலகின் கவலையை போக்கும் விதத்தில் நாம் பேச்சால் அல்ல, செயல்பட்டு உலகை ஆற்றுப்படுத்தியிருக்கிறோம், ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறோம்.
பாரத தேசம் உலக நன்மைக்கான தேசம். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எத்தனை சவால்கள் வந்தாலும் சவால்களுக்கு சவால் விடும் ஹிந்துஸ்தானம் இது. எமது 1000 ஆண்டுக்கால கலாச்சாரத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடிக்கும். ஊழல் வாதிகள் மனதில் பயத்தை ஏற்படுத்துவோம்.
ஒரு தொடக்கமாக, அரசியல் தொடர்பே இல்லாத குடும்பங்களிலிருந்து 1,00,000 இளைஞர்களை மக்கள் பிரதிநிதிகளாக முன்னிறுத்த இருக்கிறோம். புதியவர்கள் வரவால் புதிய எண்ணங்கள் வரும் ,புதிய வல்லமை உருவாகும்.
மாதம் தோறும் தேர்தல் நடக்கும் இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இது பற்றி விவாதித்து குழு அறிக்கை தந்துள்ளது. ஒரு தேசம் ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள தேசம் முன்வர வேண்டும்.
ஆண்டு 2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு மெய்ப்படுவதற்காக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள நாங்கள், மும்மடங்கு நேரம் தந்து பணியாற்றுவோம், மும்மடங்கு வீச்சுடன் செயல்படுவோம்.
78ஆவது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரை
எனது அன்புக்குரிய நாட்ட்கு மக்களே,
உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 78ஆவது சுதந்திர திருநாளைக் கொண்டாட நாடு தயாராகி வருவதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனையொட்டி செங்கோட்டை, மாநிலங்களின் தலைநகரங்கள் அல்லது உள்ளூர் பகுதிகளில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதை காண்பது, நமது இதயங்களில் எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும். 1.4 பில்லியனுக்கும் அதிகமான சக இந்தியர்களுடன் நமது பெரும் தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஓர் உணர்வாகும். நமது குடும்பங்களில் நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளைப் போல, நமது சக குடிமக்களை உள்ளடக்கிய நமது குடும்பத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை நாம் கொண்டாடி வருகிறோம்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும், கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் இந்தியர்கள் பங்கேற்று தேசப்பக்திப் பாடல்களைப் பாடி, இனிப்புகளை வழங்குவார்கள். இளம் சிறார்கள், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமது பெரும் தேசம் குறித்தும் அதன் குடிமகனாக நாம் இருப்பதன் பெருமை குறித்தும் அவர்கள் பேசுவதை நாம் கேட்கும் போது, அவர்களது வார்த்தைகளில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் சொல்லி வந்ததை நாம் காணலாம். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களது கனவுகளையும், வரும் ஆண்டுகளில் நாடு அதன் முழுப் பெருமையை பெறும் என்ற அவர்களது விருப்பங்களையும் பிணைத்துள்ள சங்கிலியின் ஒரு பகுதியாக நாம் உள்ளோம் என்பதை நம்மால் உணர முடியும்.
இந்த வரலாற்றுச் சங்கிலியின் இணைப்புகளாக நாம் இருக்கிறோம் என்பதை உணரும் போது, நாம் மிகுந்த பணிவுடையவர்களாகிறோம். அந்நியர் ஆட்சியின் கீழ், நாடு இருந்த நாட்களை அது நமக்கு நினைவூட்டுகிறது. தேசப்பற்றுடனும், துணிச்சலுடனும், மகத்தான ஆன்மாக்கள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டதுடன். உயிர்த் தியாகங்களையும் புரிந்தனர். அவர்களது நினைவுக்கு நாம் தலை வணங்குகிறோம். அவர்களது முடிவற்ற உழைப்பின் காரணமாக நூற்றாண்டுகளாக சோம்பிக் கிடந்த இந்தியாவின் ஆன்மா விழித்துக் கொண்டது. நமது மண்ணில் தொடர்ந்து காணப்படும் பல்வேறு பாரம்பரியங்களும், நன்மதிப்புகளும், பல தலைமுறைகளைச் சேர்ந்த மாபெரும் தலைவர்களின், புதிய வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. பல்வேறுபட்ட பாரம்பரியங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளை ஒருங்கிணைத்தது நமது துருவ நட்சத்திரமாகவும், தேசப்பிதாவாகவும் திகழ்ந்த மகாத்மா காந்தி ஆவார்.
அவருடன் சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபா சாஹேப், அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் போன்ற மாபெரும் தலைவர்களும் மற்றும் எண்ணற்றவர்களும் இருந்தனர். அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்ற நாடு தழுவிய இயக்கமாக அது இருந்தது. அதில், தில்கா மஞ்ஜி, பிர்சா முண்டா, லஷ்மண் நாயக், புலோஜனா போன்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றனர். இவர்களைப் போன்று தியாகங்கள் புரிந்த பலரும் தற்போது கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் கவுரவ தினமாக நாம் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு அவரது 150ஆவது பிறந்த நாள் வரப்போகிறது. தேசத்தை தட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பை மேலும் பெருமைப்படுத்தும் ஒரு வாய்ப்பு அப்போது கிட்டும்.
எனது அன்புக்குரிய சக குடிமக்களே,
இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி. இந்நாளை பிரிவினைக் கொடூரங்களை நினைவு கூரும் நாளாக நாடு அனுசரித்து வருகிறது. மாபெரும் தேசம் இரண்டாக பிளக்கப்பட்ட போது, திணிக்கப்பட்ட இடப்பெயர்வால், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட நேர்ந்தது. லட்சக்கணக்கான மக்கள், தங்கள் உயிர்களை இழந்தனர். சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னர், ஒப்பிட முடியாத மனித சோகத்தை நாம் நினைவு கூர்கிறோம். இவ்வாறு சுக்கல்களாக கிழித்தெறியப்பட்ட குடும்பங்களுடன் நாம் நிற்கிறோம்.
அரசியல் சாசனத்தின் 75ஆவது ஆண்டு தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டின் பயணம், இடையூறுகள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உலக அரங்கில் இந்தியா தனது உரிமை மிகு இடத்தை பெறுவதற்கு, நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய அரசியல் சாசன லட்சியங்கள் மீது நாம் உறுதியாக நிற்கிறோம்.
இந்த ஆண்டு நமது நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 97 கோடியாக இருந்தது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. மனித குலம் முன் எப்போதும் கண்டிராத மிகப் பெரிய தேர்தல் நடைமுறையை இது குறிக்கிறது. இத்தகைய மாபெரும் நிகழ்வை எத்தகைய குறைபாடுகளும் இன்றி சுமூகமாக நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும். இந்த நடைமுறையின் போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்காளர்களுக்கு உதவிய அனைத்து அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்திய போது, அது ஜனநாயக கொள்கைக்கான மகத்தான வாக்காக திகழ்கிறது. இந்தியாவின் வெற்றிகரமான தேர்தல் நடைமுறைகள், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துகிறது.
அன்புக்குரிய சக குடிமக்களே,
2021இலிருந்து 2024 வரை இந்தியா ஆண்டுக்கு 8 சதவீத சராசரி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. இது மக்களின் கைகளில் அதிக பணத்தை தந்ததுடன் மட்டுமல்லாமல், வறுமைக் கோட்டுக்கு கீழே வசித்து வந்த ஏராளமான மக்களை பெருமளவுக்கு குறைக்கவும் செய்தது. வறுமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருபவர்களை, கைதூக்கி விடுவதற்கும், அதிலிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டுவருவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு திட்டம், பெருந்தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அது சுமார் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷனை வழங்கி வருகிறது. அண்மையில் வறுமையிலிருந்து விடுபட்டவர்கள், மீண்டும் அதன் பிடிக்குள் சிக்காமல் இருப்பதை அது உறுதி செய்துள்ளது. இந்தியா உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறியிருப்பது நமது அனைவருக்கும் பெருமைக்குரியதாகும். விரைவில் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக நாம் மாற உள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்களின் இடையறாத கடின உழைப்பு, திட்டங்களைத் தீட்டுபவர்கள், செல்வத்தை உருவாக்குபவர்கள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் தொலைநோக்குச் சிந்தனையால் இதனை சாதிக்க முடிந்தது. நமது அன்ன தாதாக்களான விவசாயிகள், எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, வேளாண் உற்பத்தியைத் தொடர்ந்து உறுதி செய்துள்ளனர். இத்துடன், வேளாண்மையிலும் நமது மக்களுக்கு உணவூட்டுவதிலும், இந்தியா தன்னிறைவை அடைய மிகச் சிறந்த பங்களிப்பை அவர்கள் வழங்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மிகப் பெரிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. உத்திபூர்வ திட்டமிடுதல், சிறப்பான நிறுவனங்கள் ஆகியவை, சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை விரிவுப்படுத்த உதவி உள்ளன. எதிர்கால தொழில்நுட்பத்தில் பெரும் வளத்தைக் கருத்தில் கொண்டு, அரசு செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளைத் தீவிரமாக மேம்படுத்தி வருகிறது. மேலும், புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்களது வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. அது இந்தியாவை மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றியுள்ளது. பெரும் வெளிப்படைத்தன்மையுடன் வங்கி மற்றும் நிதித்துறைகள், மேலும் சிறந்த செயல் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்சங்கள் அனைத்தும், அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அரங்கை அமைத்துள்ளதுடன், வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை கொண்டு செல்லும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
இந்த அதிவேக, அதே சமயம், சமத்துவமான வளர்ச்சி, உலக விவகாரங்களில் இந்தியாவிற்கு ஒரு உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஜி20 தலைமைத்துவத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர், இந்தியா, உலகின் தென்பகுதிக்கான குரலை ஒலிக்கச் செய்யும் பங்கை ஒருங்கிணைத்துள்ளது. உலக அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை விரிவுபடுத்த, இந்தியா தனது செல்வாக்கு மிக்க நிலையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனது அன்புக்குரிய சக குடிமக்களே,
அரசியல் சாசன சிற்பி டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நமது அரசியல் ஜனநாயகத்தை, சமூக ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகத்தை அடித்தளமாக கொள்ளாமல், இருந்தால் அரசியல் ஜனநாயகம் நீண்ட நாள் நீடிக்காது” என்று அவர் கூறியதை நான் மேற்கோள் காட்டுகிறேன். அரசியல் ஜனநாயகத்தின் நிலையான முன்னேற்றம், சமூக ஜனநாயகத்தை ஒருங்கிணைப்பதில் காணப்படும் முன்னேற்றத்திற்கு சாட்சியமாக அமையும். உள்ளடக்கிய என்ற உணர்வு, நமது சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவியுள்ளது. நமது பன்முகத்தன்மை மற்றும் பன்மையுடன் ஒத்திசைந்த தேசமாக ஒருங்கிணைந்து முன்னேறி செல்லவேண்டும். உறுதியான செயல்பாடுகள், உள்ளடக்கத்திற்கான சாதனமாக வலுப்படுத்தப்பட வேண்டும். நம்மைப் போன்ற பரந்து விரிந்த நாட்டில், சமூக நிலைகளின் அடிப்படையில் உணரப்பட்ட கருத்து வேறுபாட்டை தூண்டும் போக்குகள், புறக்கணிக்கப்படும் என்பது எனது திடமான நம்பிக்கையாக உள்ளது. சமூக நீதி, அரசின் உயர் முன்னுரிமையாக உள்ள நிலையில், இதன் மூலம் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் நலனுக்காக இதுவரை இல்லாத வகையில், எண்ணற்ற முன் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. பிரதமரின் சூரஜ் எனப்படும்,சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான பொது நலத்திட்டம், சமுதாயத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு நேரடி நிதியுதவி வழங்க வகை செய்கிறது. பிரதமரின் ஜன்மன் எனப்படும் பிரதமரின் பழங்குடியினர் ஆதிவாசி பரிபாலனத்திட்டம், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பழங்குடியின குழுக்களின் சமூகப் பொருளாதார சூழல்களை மேம்படுத்துவதற்கான மாபெரும் இயக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. நமஸ்தே எனப்படும் இயந்திர மயமாக்கப்பட்ட துப்புரவு சூழலியலுக்கான தேசிய செயல் திட்டம், எந்தவொரு துப்புரவு தொழிலாளரும், கழிவுநீர் மற்றும் மலக்கழிவு தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக இயந்திர உதவியின்றி, பணியாற்றாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
‘நீதி’ என்ற சொல், பல்வேறு சமூக அம்சங்களை உள்ளடக்கிய, விரிவான சாத்தியமான உணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாலின நீதி மற்றும் பருவநிலை நீதி ஆகிய இரண்டு அம்சங்களை மட்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
நமது சமுதாயத்தில், பெண்கள் சமமாக மட்டுமின்றி, சமம் என்பதற்கு மேலாகவே மதிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களும் பாரம்பரிய நியதிகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மகளிர் நலன் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கு இந்த அரசு சம முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த பத்தாண்டுகளில் இந்த நோக்கத்தின் அடிப்படையில், பட்ஜெட் ஒதுக்கீடு 3 மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிறப்பு அளவில் பாலின விகிதம் கணிசமாக மேம்பட்டிருப்பது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகும். மகளிர் நலனுக்காக அரசால் பல்வேறு சிறப்புத் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மகளிர் சக்தியைப் போற்றுவோம் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உண்மையாகவே உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் என்பது யதார்த்தமானதாக மாறியுள்ளது. இது வளரும் நாடுகள் தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பெரும் சவாலாக உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சனையில் நாம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே முன்னேற்றம் அடைந்துள்ளோம். புவி வெப்பமயமாதலின் மோசமான பாதிப்புகளிலிருந்து இந்தப் பூமியை பாதுகாப்பதற்கான மனித குலத்தின் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதில் இந்தியா பெருமிதம் அடைகிறது. நீங்கள் அனைவரும் உங்களது வாழ்க்கை முறையில் சிறிய அளவில் ஆனால், வலுவான மாற்றத்தை ஏற்படுத்தி, பருவ நிலை மாற்றச் சவாலை எதிர்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீதித்துறையைப் பற்றி பேசும்போது, இந்த ஆண்டு ஜூலை முதல் இந்திய நியாயச் சட்டத்தைப் பின்பற்றுவதை சுட்டிக்காட்டுவது அவசியம் என்பதோடு, மேலும் ஒரு காலனி ஆதிக்க காலத்து நடைமுறையை நீக்கியிருப்பதை பற்றியும் குறிப்பிடுவது அவசியம். இந்தப் புதிய சட்டம், குற்ற வழக்குகளில் தண்டனை பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நமது சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையாக நான் பார்க்கிறேன்.
எனது அன்புக்குரிய சக குடிமக்களே,
அமிர்த காலம் எனப்படும், நமது சுதந்திர தின நூற்றாண்டை எட்டுவதற்கான அடுத்த கால் நூற்றாண்டு காலம் தற்கால இளைஞர்களால் வடிவமைக்கப்பட உள்ளது. அவர்களது ஆற்றல் மற்றும் உற்சாகம், நாடு புதிய உச்சத்தை அடைய உதவும். இளைஞர்களின் மனதைப் பக்குவப்படுத்தி, நமது பாரம்பரியத்தில் சிறந்த அம்சங்களையும், தற்காலிக அறிவாற்றலையும் கொண்ட புதிய மனநிலையை உருவாக்குவதே நமது முன்னுரிமையாக உள்ளது. இதற்கேற்ப, தேசிய கல்விக்கொள்கை 2020-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் பலன்கள் தெரியவந்துள்ளது.
இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்த ஏதுவாக, அவர்களுக்கான திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிற வாய்ப்புகளுக்கு உதவும் வகையில் அரசு, பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான 5 திட்டங்கள் அடங்கிய பிரதமரின் தொகுப்பு, 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு பலனளிக்கும். அரசின் புதிய முன்முயற்சியின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி தொழிற்சாலைகளில் ஒரு கோடி இளைஞர் தொழில் பழகுநர் பயிற்சியை பெறுவார்கள். இவை அனைத்தும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளத்திற்கான பங்களிப்பாக அமையும்.
இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பத்தை, அறிவாற்றலுக்கான தாகமாகவும், மனிதகுல முன்னேற்றத்திற்கான சாதனமாகவும் நாம் பார்க்கிறோம். டிஜிட்டல் பயன்பாட்டில் நமது சாதனைகள், பிற நாடுகளின் முன்மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், விண்வெளி ஆய்வில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேறியுள்ளது. மனிதர்களை சுமந்து செல்லும் இந்தியாவின் முதலாவது விண்கலத்தில் இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குழு செல்ல இருக்கும் ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படுவதைக் காண உங்கள் அனைவருடனும் இணைந்து, நானும் ஆவலாக இருக்கிறேன்.
விளையாட்டு உலகம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள மற்றொரு துறையாகும். விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு சரியாக முன்னுரிமை அளித்ததன் பலனை தற்போது காண்கிறோம். அண்மையில் நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தினர். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். அவர்கள் இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர். கிரிக்கெட்டில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஸ் விளையாட்டிலும் நமது வீரர்கள் நாட்டிற்கு பெருமிதம் தேடித் தந்துள்ளனர். தற்போதைய யுகம், செஸ் விளையாட்டில் இந்திய யுகத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுகளிலும் நமது இளைஞர்கள் உலக அரங்கில் தடம்பதித்துள்ளனர். அவர்களது சாதனைகள் அடுத்த தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும்.
எனது அன்புக்குரிய சக குடிமக்களே,
நாடு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், உங்களுக்கு, குறிப்பாக, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நமது சுதந்திரத்தைப் பேணிக் காத்து வரும் நமது ஆயுதப்படையின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீதித்துறை மற்றும் குடிமைப்பணி அலுவலர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது தூதரக பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகள்: நீங்கள் நமது குடும்பத்தின் ஒரு அங்கம், உங்களது சாதனைகள் எங்களைப் பெருமிதம் அடைய வைக்கிறது. நீங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள். அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 2006 கிரேடு சி மற்றும் டி பிரிவுகளைச் சார்ந்த ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 17. இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது.
கல்வி தகுதி என்ன?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படித்தவர்களும் தகுதியானவர்கள்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோர், ஸ்டெனோகிராபி திறன் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இதில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு
சுருக்கெழுத்தர் ‘டி’ கிரேடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
‘சி’ கிரேடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வரும் அக்டோபர் அல்லது நவம்பர் தேர்வு நடைபெற உள்ளது. ஸ்டெனோகிராபர் தேர்வில் பெறும் மதிப்பெண், சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://www.ssc-cr.org/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு
இந்தப் பணிக்கு பார்வையற்றோர், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதோர், கை, கால்களை இழந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.