Home Blog Page 199

தேசியக் கொடியுடன் பேரணி செல்ல பாஜக.,வினருக்கு தடை; கைது!

aruppukottai bjp - 2026
#image_title

அருப்புக்கோட்டையில் பாஜகவினரின் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார்; போலீசார் உடன் வாக்குவாதம் செய்து கலைந்து செல்வதாக கூறி டிமிக்கி கொடுத்து விட்டு வேறு இடத்திற்கு சென்று அங்கிருந்து திட்டமிட்டபடி தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜகவினரை விரட்டிச் சென்று குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புளியம்பட்டி பகுதியில் இருந்து வெள்ளக்கோட்டை பகுதி வரை தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.‌ ஆனால் இந்த இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

எனினும் பாஜகவினர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் புளியம்பட்டி பகுதியில் தேசியக்கொடி மற்றும் இருசக்கர வாகனத்துடன் கூடினர். இதனை அடுத்து டிஎஸ்பி காயத்ரி தலைமையில், நகர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லப்பாண்டி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, உள்ளிட்ட போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.‌

இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது எனவும் வேண்டுமென்றால், புளியம்பட்டியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் வரை நடந்து செல்லுங்கள் எனவும் போலீசார் கூறினர். அப்படி என்றால் புளியம்பட்டியில் இருந்து பாம்பே மெடிக்கல் வரை சுமார் 500 மீட்டர்‌ தூரம் வரை நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பாஜகவினர் டிஎஸ்பி காயத்ரியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அனுமதி தர முடியாது எனவும், அப்படி செல்வதாக இருந்தால் கைது செய்வோம் எனவும் டிஎஸ்பி காயத்ரி கூறினார்.

இதனை அடுத்து தேசியக் கொடியுடன் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறி நாங்கள் பேரணியே, செல்லவில்லை நாங்கள் கலைந்து செல்கிறோம் என பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பாஜகவினரும் அங்கிருந்து சென்று விட்டதாக போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்று நேராக காந்தி மைதானம் பகுதியில் கூடி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தேசிய கொடியுடன் முழக்கங்கள் எழுப்பியவாரே பஜார் வழியாக சென்றனர்.

மற்ற பாஜகவினரும் ஆங்காங்கே இணைந்த நிலையில் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணியாக பாஜகவினர் சிவன் கோவில் சந்திப்பு, முருகன் கோவில் சந்திப்பு, தங்கமயில் பேருந்து நிறுத்தம், பஜார், எம் எஸ் கார்னர், திருச்சுழி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கையில் தேசிய கொடியுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு வெள்ளக்கோட்டை பகுதியை வந்தடைந்தனர்.

பாஜகவினர் ஊர்வலம் செல்வதை எதிர்பாராத போலீசார் அவர்களை பின்னாடியே விரட்டிச் சென்று அவர்களும் வெள்ளக்கோட்டை பகுதியை வந்தடைந்தனர்.‌ ஆனால் பாஜகவினர் எதுவும் தெரியாது போல் அங்கு தேசியக்கொடி ஏற்ற முயற்சி செய்தனர்.‌ அப்போது அங்கு வந்த டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் உங்களை கைது செய்கிறோம் என கூறினார்.

ஆனால் நாங்கள் ஊர்வலமே செல்லவில்லையே இருசக்கர வாகனத்தில் அனைவரும் ஒன்றாக இங்கு வந்து தேசியக்கொடி ஏற்ற உள்ளோம் நீங்கள் ஊர்வலம் செல்லக்கூடாது என கூறினீர்கள். அதனால் நாங்கள் இங்கு வந்து விட்டோம் என கூலாக கூறினர்.‌ நாங்கள் வந்தது ஊர்வலமே இல்லை அனைவரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் இங்கு வந்தோம் என கூறினர்.‌

ஆனால் இதை ஏற்க மறுத்த போலீசார் அங்கிருந்த பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், நகரத் தலைவர் முருகானந்தம், தெற்கு ஒன்றிய தலைவர் பூலோகராஜ், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் பிரித்திவிராஜ் மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஸ்வரி‌ என 2 பெண்கள் உள்ளிட்ட 24 பாஜகவினரை குண்டு கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியுடன் சென்ற பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியது.‌

முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!

IMG 20240812 WA0002 - 2026
#image_title

தமிழகத்தின் முன்னுதாரணமான முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது வழங்கப்பட்டது.

கரூர் பரணி பார்க் கல்விக் குழும அறநெறி ஆசிரியராக ஆயிரக்கணக்கான மாணாக்கருக்கு தெய்வீகத் தமிழிசை, அறநெறி, நற்பண்புகளை தொடர்ந்து பல ஆண்டுகள் போதித்து, தற்போது சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் “பெண் ஓதுவாராக” தெய்வத் தமிழ்த் தொண்டாற்றி வரும் கரூர்-வேலாயுதம்பாளையம் சிவ.சுகாஞ்சனாவுக்கு பரணி பார்க் கல்விக் குழுமம் மற்றும் கருவூர் மகா அபிசேகக் குழு இணைந்து ‘தெய்வீகத் தமிழிசை மாமணி’ என்ற உயரிய விருது வழங்கி பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் 26ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழாவின் ஒரு பகுதியாக பெண் ஓதுவார் சிவ.சுகாஞ்சனாவின் தெய்வீகத் திருமுறை, தமிழிசைக் கச்சேரி கரூர் பரணி பார்க் கல்விக் குழும செயலர் பத்மாவதி மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கரூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் சரவணன், தமிழக காவல் துறை கண்காணிப்பாளர் முத்துக்கருப்பண், தேனி சுந்தரலிங்க சுவாமிகள், பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், கருவூர் மகா அபிசேகக் குழு தலைவர் ஆனிலை பாலகிருஷ்ணன், செயலர் ஸ்காட் தங்கவேல், கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலர் வெங்கட்ராமன், மூத்த பத்திரிக்கையாளர் சிவராமன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர் இணைந்து ‘பெண் ஓதுவார்’ சிவ.சுகாஞ்சனா கோபிநாத்க்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி’ விருது வழங்கி சந்தன மாலை பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

தொடர்ந்து, ‘பெண் ஓதுவார்’ சுகாஞ்சனா கோபிநாத்தின் தெய்வீகத் திருமுறை தமிழிசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

பல ஆண்டுகள் அறநெறி ஆசிரியராகவும் தற்போது இளம் வயதிலேயே தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் முன்னுதாரணமான முதல் ‘பெண் ஓதுவாராகவும்’ சிறப்பாகத் தெய்வத் தொண்டாற்றி கரூருக்கு உலக அளவில் பெருமை சேர்த்து வரும் சிவ.சுகாஞ்சனா கோபிநாத்தை கரூர் மாவட்ட ஆன்மீக அன்பர்களும், பொது மக்களும், பக்த கோடிகளும், அனைவரும் உளமாரப் பாராட்டி வாழ்த்தினர்.

ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை!

adi swathi narasimha pooja - 2026
#image_title

மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி சுவாதி முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நரசிம்மர் கோவிலில்,
ஆடி சுவாதி முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நரசிம்மர் அலங்கரிக்
கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதே போல, மதுரை அண்ணா நகர் ,தாசில்தார் நகர் ,அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், உள்ள யோக நரசிம்மருக்கு, பக்தர்கள் சார்பில்,
ஆடி சுவாதி முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

நரசிம்மருக்கு, மஞ்சள் பொடி, பால் ,திரவிய பொடி,
சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்கள், துளசி மாலை அணிவித்து, பானகம் படைத்தும், நரசிம்மருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.

பெண்கள் பங்கேற்று நரசிம்மருக்கு விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு கோவில் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

இந்த கோவிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

கணக்கணேந்தல் புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா!

madurai puthukkoil - 2026
#image_title

காரியாபட்டி அருகே, கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி கணக்கனேந்தல் புத்துக்கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாகம்மாள் சிலைக்கு பால், தயிர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப்பெற்றது.

பின்னர், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் சிலையான நாகம்மாள், லிங்கம் போன்ற சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும், நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு ,
கால சர்ப தோஷம், நாகதோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சனை மற்றும் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நாகபஞ்சமி திருவிழா சிறப்பு பூஜையில், விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை போன்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

1814852 sabarimala - 2026

ஆடி நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. நாளை திங்கட்கிழமை அதிகாலை 5.45மணி முதல் காலை 6.30வரை நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். நாளை அதிகாலை 5.45க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். இதற்காக சபரிமலை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டது

இந்த நெற்கதிர்கள் பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

விவசாயம் செழிக்கவும், மக்களின் வறுமை நீங்கவும், உலக மக்களின் பசி. பஞ்சம் தீரவும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை நாளை ஆகஸ்ட் 12 அன்று நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கான
நெற்கதிர்கள் இன்று காலை கேரள மாநிலம் அச்சன் கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அச்சன் கோயிலில் இருந்து இன்று காலை 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப் பெட்டி வாகனத்தில் நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் ஏற்றப்பட்டு சபரிமலைக்கு ஊர்வலம் தொடங்கியது. காலை ஆறு மணி அளவில் செங்கோட்டை விரைவு பேருந்து பணிமனை பகுதியில் நிறைப் புத்தரிசி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் வழியாக ஆரியங்காவு ஐயப்பன் கோயில், புனலூர் கிருஷ்ணன் கோயில், பத்தினம் திட்டா, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்கள் ஆகியவற்றின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலம் செல்லும் வழியில் 36 கோயில்களுக்கு நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் வழங்கப்பட்டது. மாலை இந்த ஊர்வலம் பம்பை சென்றடைந்து.அங்கிருந்து நடைபயணமாக நெற்கதிர்கள் சபரிமலை அய்யப்பன் கோயில்க்கு கொண்டு செல்லப்பட்டு தேவசம் போர்டு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனத்திற்கு பிறகு நெற்கதிர்களுக்கு பூஜை செய்யப்பட்டு கருவறை உள்ளே கொண்டு சென்று அடுக்கப்படும். பிறகு 5.45 மணி முதல் 6.30 மணி வரை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதையடுத்து நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் கைக்குத்தல் மூலம் அரிசி ஆக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அரிசி பாயசம் நெய்வேத்தியம் செய்து படைக்கப்படும். பிறகு பக்தர்களுக்கு அந்தப் பிரசாதம் விநியோகிக்கப்படும். இதுவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது.

ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது.

கேரள மாநிலத்தில் ஆவணி மாதம் நடைபெறும் மலையாள புத்தாண்டு விழாவுக்கு முன்னதாக ஆடி மாதத்தில் முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். விவசாயம் செழிப்பதற்காக நெற்கதிர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரையார் கோபாலகிருஷ்ணன் அனுமதி வழங்கியதன் பேரில் நிறைப்புத்தரிசி பூஜைக்கான நெற் கதிர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

ஆக12 திங்கட்கிழமை காலை அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, புனலூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், ஆரண்முழா பார்த்தசாரதி கோயில், பந்தளம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

இதற்காக ராஜபாளையம் ஐயப்ப‌பக்தர்கள் குழு மற்றும் நாகராஜன் குழுவினர் சார்பில் 120 கட்டுகள் நெற்கதிர் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கட்டி வைக்கப்பட்ட கட்டுகள் அனைத்தும் 3 வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு 30 கோயில்களில் வழங்கப்பட்டதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” – காங்கிரஸ் தலைவர் பிதற்றல்

write thoughts - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

சல்மான் குர்ஷித் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சில சட்டங்கள் பயின்றவர். இது போக, அவர் காங்கிரஸ் கட்சியில் ஒரு இரண்டாம் கட்டத் தலைவர். ஆகையால் நாட்டு விஷயங்கள் பற்றி அவர் வெட்கம் விவஸ்தை இல்லாமல் பேசத் தயாரானவர்.

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், “பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” என்று தைரியமாகப் பிதற்றி வைத்தார்.

அந்த நாட்டில் என்ன நடந்தது?

பங்களாதேஷின் அரசுப் பணிகளில் 56% இட ஒதுக்கீடு இருந்தது. 1971-ம் வருட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிவந்தவர்களுக்கான 30% இட ஒதுக்கீடும் மகளிருக்கான 10% இட ஒதுக்கீடும் அதில் அடங்கும்.

வேலையின்மை அதிகம் உள்ள பங்களாதேஷில், அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் திரண்டனர். அந்த அழுத்தத்தில், 2018-ம் வருடம் பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் சிவில் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்தார். அது தொடர்பாக அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஆனால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஜுன் 2024-ல் பங்களாதேஷின் உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீடு ரத்தானது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பால் பங்களாதேஷ் சிவில் பணிகளில் முன்பு இருந்த 56% இட ஒதுக்கீடு உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் சட்டமாகியது. இதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் அந்த நாட்டில் வலுத்தது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பங்களாதேஷ் அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. எகிறும் மக்கள் போராட்டத்தையும் கவனித்த உச்ச நீதிமன்றம், மொத்த இட ஒதுக்கீட்டை 56 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்தது. இருந்தாலும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. உயிரிழப்புகள் அதிகமாயின.

ஆகஸ்டு 5-ம் தேதி போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை முற்றுகையிட நெருங்கினார்கள். பாதுகாப்பற்ற ஷேக் ஹசீனா அன்றே வீட்டை விட்டு வெளியேறி ஒரு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். மறுநாள் ஆகஸ்டு 6-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது உளறலை வெளிப்படுத்தினார்.

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” என்று எந்த அர்த்தத்தில் சல்மான் குர்ஷித் பேசினார்?

‘இட ஒதுக்கீட்டை எதிர்த்து பங்களாதேஷில் போராட்டம் நடந்ததே, அது போல் நமது நாட்டிலும் நடக்கலாம். ஆகையால் இந்தியா தனது நாட்டின் அரசுப் பணிகளிலும் கல்விச் சேர்க்கைகளிலும் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்’ என்று சொல்ல வந்தாரா சல்மான் குர்ஷித்? அல்லது, ‘பக்கத்து நாட்டில் நடந்த மாதிரி இந்தியாவிலும் ஏதோ காரணத்திற்காக இப்போதுள்ள மத்திய அரசை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் ஏற்படலாம்’ என்று அற்பமாகச் சொல்ல ஆசைப் பட்டாரா?

இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘பிரதமர் ஷேக் ஹசீனா எப்படி பங்களாதேஷை விட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினாரோ, அதே போல் பிரதமர் மோடியும் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடி ஒளியும் நாள் வரும்’ என்று ஒரு கீழ்த்தர எண்ணத்தை வெளிப்படுத்தினாரா சல்மான் குர்ஷித்?

சல்மான் குர்ஷித், அனுபவம் நிறைந்த ஒரு வக்கீல். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். வயது 71. ‘பங்களாதேஷில் நடப்பது மாதிரி இந்தியாவில் நடக்கலாம்’ என்று, நேர்மையும் விவஸ்தையும் உள்ள எவருமே சீரியஸாக நினைக்க மாட்டார்களே – அதுவும் இப்போதைய பாஜக ஆட்சியின் போது? ஆனாலும் ஏன் சல்மான் குர்ஷித் போன்ற ஒருவர் இப்படி மலிவாகப் பேசினார்? காரணம் இருக்கிறது.

‘சேராத இடம் தனிலே சேர வேண்டாம்’ என்று நமக்குச் சொல்கிறது உலக நீதி. இதைக் காற்றில் பறக்கவிட்டவர் சல்மான் குர்ஷித். அதுதான் அவர் பேச்சுக்கான காரணம்.

பதவிப் பித்து மற்றும் பிள்ளைப் பாசம் மிகுந்த சோனியா காந்தி, பித்துக்குளி ராகுல் காந்தி ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர்கள், அந்த இருவரையும் அண்டியே கட்சிப் பதவிகளுக்கு ஆசைப்படுகிறவர்கள், காங்கிரஸ் சார்பில் சட்டசபை அல்லது பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புகளுக்கு ஏங்குபவர்கள், அந்த இரு தலைவர்களை மகிழ்விக்கும் பேச்சை அவ்வப்போது பேசியாக வேண்டும். சுயலாபத்திற்காக இதை நன்கு உணர்ந்தவர் சல்மான் குர்ஷித்.

தான் பிதற்றுவது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குஷிப்படுத்தும் என்ற உள்ளுணர்வில் சல்மான் குர்ஷித் ஏதோ டக்கென்று பேசிவிட்டார். அவர் நினைத்தபடி அந்த இரு தலைவர்களும் ‘சபாஷ் சல்மான்’ என்று அவரை மனதுக்குள் பாராட்டி இருப்பார்கள். அந்த வகையில் சல்மான் தனக்காக ஆசைப்பட்டது நடந்திருக்கிறது.

2024 லோக் சபா தேர்தலில், மக்கள் ‘இண்டி’ கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி பாஜக-வை எதிர்க் கட்சியாக வைத்திருந்தால் – அதாவது, தற்போது ராகுல் காந்தி பிரதமராக அல்லது இண்டி கூட்டணியில் முக்கிய அமைச்சராக இருந்தால் – சல்மான் குர்ஷித் இப்படி உளறுவாரா? மாட்டார். ஆட்சி மாறிய அந்த நிலையில், தனக்கு வருகிற பதவியை அனுபவித்துக் கொண்டு சமர்த்தாக இருப்பார் சல்மான் குர்ஷித்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித் இந்தியாவின் பெயரையும் உச்சரித்தாரே தவிர, இப்போதைய காங்கிரஸ் தலைவரான அவர் தேசத்தைப் பற்றி எல்லாம் எதற்கு வெட்டியாக நினைத்திருக்க வேண்டும்? அப்படித்தானே இருக்கிறது இன்றைய காங்கிரஸ் கட்சியின் மானம் கெட்ட நிலை?

Author: R Veera Raghavan,
Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

திருச்செந்துறை எழுப்பிய கேள்விகள்! புரிந்தால் சரி!

write thoughts - 2026
#image_title

திருச்சி – திருச்செந்துறை – சில சந்தேகங்கள்

டிசம்பர் 3 1866 இல் திருச்சி – ஈரோடு ( கரூர் வழியாக) ரயில் போக்குவரத்து தொடங்கியது. 

இந்த ரயில்வே தண்டவாளம் திருச்செந்துறை கோயிலில் (மதிலில்) இருந்து அதிக பட்சம் 150 மீட்டர் மட்டுமே. 

இந்தியன் ரயில்வே  அல்லது (அப்போதைய) பிரிட்டிஷ் அரசு இந்த தண்டவாளங்கள் போட நிலங்களை கையகப் படுத்தும்போது வக்ஃப் போர்ட் அனுமதி பெற்றதா? தெரியவில்லை. 

அரசு தொடக்கக் கல்வி பள்ளி கோவிலிலிருந்து 50 மீட்டர் தொலைவிலும் , உயர் நிலைப் பள்ளி வெறும் 20 மீட்டர் தொலைவிலும் உள்ளன. இவற்றைக் கட்டுகையில் தமிழக அரசு வக்ஃப் போர்ட் அனுமதி பெற்றதா ? தெரியவில்லை. சமீபத்தில் கட்டப்பட்ட வாட்டர் டேங்க் கோவிலில் இருந்து வெறும் 20 மீட்டர். அதற்கு அனுமதி …? 

தமிழக அரசும் மத்திய அரசும் இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் பாலும் நீரும் அன்னப் பறவையால் பிரிக்கப் படுவது போல் உண்மையும் பொய்யும் பிரிக்கப் படலாம்.

திருச்செந்துறை – மேலும் சில சந்தேகங்கள் 

பொதுவாக அவர்கள் காட்டும் கணக்கு 1740-50 களில்  முகமது அலிகான் வாலாஜா காலத்தை. இத்தனைக்கும்,  அந்த நேரத்தில் சந்தா சாகிப்புக்கு அஞ்சி முகமது அலி திருச்சியில் ஒளிந்து கொண்டிருந்தார்.

குழிப் பெருச்சாளி போல் மறைந்து வாழ்ந்த அவர் இவ்வாறு அரசராக கிராமங்களை கொடுத்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை இல்லை. 

திருசினாபோலி முற்றுகையின் போது (Siege of Trichinopoly 1741) போரிட்டவர்கள் மராட்டியர்களும், சந்தா சாகிப்பும். இதில் முகமது அலி எங்கிருந்து வந்தார் என்ற கேள்விக்கும் இடமில்லை.

ஆற்காட்டுப் போருக்குப் பிறகு அந்த இடங்கள் அனைத்தும் அந்தந்த கிராம மக்களிடம் / நிலச் சுவாந்தாரர்களிடம்  இருந்து  வந்தது. வரி வசூலித்து நில ஆவணங்களை உருவாக்கும் பணியில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது.

இதில் தமாஷ் என்னவென்றால் சந்தா சாகிப் (ஆங்கிலேய கிளைவ் இடம் தோற்றவன்! பிரெஞ்சு அடிவருடி!) திருச்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ( முற்றுகையை முன்னிட்டு) ஒரு வரலாறு உண்டு. “ராஜ பேரிகை ” (சாண்டில்யன்) கதையை சரித்திர ஆவணமாக எடுத்தாலும் முகமது அலி இல்லை.  போரில் தோற்றுப் போன சந்தா சாகிப் தான் இருந்திருக்கிறான். 

ஒரு கால் டுமீலா தாப்பர் சரித்திரத்தை மாற்றி எழுதி விட்டாரோ?

1600களில் இருந்து எடுத்துக் கொண்டால்…

தமிழ் நாட்டில் முக்கால்வாசி இடங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆட்சியிலும், தஞ்சாவூர் சார்ந்தவை மராட்டியர்களிடமும், நாயக்கர்கள் , தெற்கில் சேதுபதி மன்னரிடமும் இருந்திருக்கின்றன. இதில் எந்த முஸ்லீம் மன்னர் இத்தனை இடங்களை கொடுத்தார் என்று தெரியவில்லை. 

1600கள் தொடக்கம் வரை விஜயநகரப் பேரரசு வேறு இருந்திருக்கிறது !

கேவலமான தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்  விருது போல்,  அவர்களே தங்களுக்கு அடுத்தவன்  நிலங்களை பட்டா போட்டுக் கொண்டு, மானம் கெட்டு…

என்ன பிழைப்பு இது!? 

சரித்திரப் பூர்வமாக மறுக்க முடியாதவர்கள் வரவேண்டாம். எல்லாவற்றுக்கும் நான் லிங்க் கொடுத்தால் , நீங்கள் என்ன பூனைக்கு புது டிரஸ், யானைக்கு கோவணம் கட்டுவதிலா பிசி ? தேடுங்கள்!

ஈசாப் கதைகள்

இறக்கும் தருவாயில் உயில் எழுதும் தந்தை அத்தனை சொத்துக்களையும் அடிமை பெயரில் எழுதுகிறார். மகனுக்கு ” தந்தைக்கு உரிமையான ஏதாவது ஒன்று மட்டும்” என்று எழுதிவிட்டு இறந்து விடுகிறார். 

அடிமை சொத்துகளை எடுக்க வழக்கு வருகிறது. மகன் ” என் தந்தைக்கு சொந்தமான இந்த அடிமையை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறான். 

இது சிக்கலை புரிய வைப்பதற்காக மட்டும் சொல்லப் படும் கதை. வேறு எதுவும் இல்லை ! 

எதனால் கோவிலை target செய்து தங்களது உரிமை என்று சொல்கிறார்கள் என்று யோசித்தால் புரியும்.

கோவில்களைச் சுற்றியுள்ள நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை. எனவே கோவில் எங்களுடையது என்று ஆவணப் படுத்திவிட்டால் நிலம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்ற வாதம் வைப்பார்கள். 

புரிந்தால் சரி !

  • டி.ஆர். சங்கர்

கிருஷ்ண ஜயந்தி நாளில் பிறந்து, ராமபிரானை பிரசாரம் செய்த… ரசிகமணி!

tamilnadu govt symbol tkc mudaliar - 2026
#image_title

கடந்த நூற்றாண்டில், தமிழுக்கு மூன்று மணிகள் பிரபலமாயிருந்தனர். பண்டிதமணி, ரசிகமணி, கவிமணி என அம்மூன்று மணிகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பண்டிதமணி கதிரேச செட்டியார் ஆகியோர். மும்மணிகளின் பெயருக்கு முன்னும் மணியான பட்டங்கள், பெயருக்குப் பின் அடையாளங்களாய் அலங்கரித்தன!

இவர்களில் ரசிகமணி டி.கே.சி., குற்றால முனிவர் என்ற அடைமொழியுடன் வாழ்ந்த கம்பனின் ராமனுக்கு ரசிகரானவர். அவர் பிறந்தது என்னவோ கிருஷ்ண ஜயந்தி நாளில்! 1891ல் ஆவணி மாத ரோஹிணி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநெல்வேலி தீத்தாரப்ப முதலியார் – மீனம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். டி – தீத்தாரப்ப முதலியார், கே – கிளங்காடு (பூர்விகம்),   சி – சிதம்பரநாத முதலியார் என மூன்றெழுத்தில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் டி.கே.சி.

தென்காசியில் வசித்து வந்தார் ரசிகமணி டி.கே.சி.,யின் பேரன் தீப.நடராஜன். அவர் கடந்த 2021ல் காலமாகி விட்டார். முன்னர், அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருப்பேன். தன் தாத்தா டிகேசி., குறித்து நிறையத் தகவல்கள் சொல்வார். அவர் இருந்த இடமும் ராமாயணத்துடன் தொடர்புடையதாகவே இருந்தது. தென்காசி பரதன் திரையரங்கு அருகே, ஹனுமந்தபுரம் தெருவில் இருந்தது அவர் வீடு. ‘பஞ்சவடி’  என்பது வீட்டின் பெயர்.

ரசிகமணிக்கு தமிழ், சுதேசிய வாழ்க்கை, பாரம்பரிய கல்வி முறை, மருத்துவம் இவற்றில் தான் ஈடுபாடு அதிகம். எனக்கு காய்ச்சல் வந்து அவதிப்பட்ட போது கூட, வீட்டில் குற்றாலக் குளிர் நீரில் குளிப்பாட்டி, வீட்டு மருந்து கொடுத்து சரி செய்தார். எங்களை படிப்பதற்காக ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பினாரில்லை, வீட்டிலேயே நம் கல்வியைக் கற்றுக் கொடுத்தார் என்றார் தீப. நடராஜன்.

டிகேசி.,க்கு கல்கி, சதாசிவம், ராஜாஜி என அக்கால ஆளுமைகள் பலர் மிக நெருக்கம். சென்னைக்கு வரும்போது டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வீட்டில் தங்குவார். தந்தை மகள் உறவைப் போல், டி.கே.சியை மதித்தார். ஒருமுறை வடக்கே சென்றபோது, தனியாக அடுப்பு எடுத்துச் சென்று, அவருக்கு தோசை வார்த்துக் கொடுத்தாராம்.

டிகேசி.,யின் குடும்பம் விருந்தோம்பலில் கரை காணாதது. அதை அவர் பேரன் வீட்டிலும் நான் அனுபவித்துள்ளேன்.

ஒருமுறை மணக்க மணக்க மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் சகிதமாக  சுடச் சுட இலக்கியத் தோசை உண்ட அனுபவமும் எனக்கு உண்டு. காரணம், ரசித்து, ருசித்து சாப்பிடுவது, உள்ளர்த்தங்களை உணர்ந்து அதன் ஊடாக நின்று உணர்வால் உள் கலந்து உண்பது என, ரசிகமணி எப்படியெல்லாம் ரசித்துச் சாப்பிட்டார், கம்பனையும் தமிழையும் எப்படி எல்லாம் அனுபவித்தார்  என்று,  தன் தாத்தா பற்றி தீப.நடராஜன் சொன்னவற்றை இங்கே தருகிறேன்.

டிகேசி.,க்கு ஆரமபக்கல்வி தென்காசியிலும், உயர்கல்வி திருச்சியிலும், பட்டப்படிப்பு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும், சட்டப்படிப்பு திருவனந்தபுரத்திலும்  அமைந்தது. 1908ல் தன் மாமா மகள் பிச்சம்மாளை திருமணம் செய்துகொண்டார். சிறிது காலம் நெல்லை வண்ணார்பேட்டையில் வழக்கறிஞர் பணி செய்தார்.

அப்போது திடீரெனத் தாக்கிய மலேரியா காய்ச்சல் அவரை முடக்கிப் போட்டது. அந்நாளில் கம்ப ராமாயணம் படிக்கத் தொடங்கினார். உடல் கண்ட காய்ச்சல் போனது, உளம் கண்ட கம்பன் காய்ச்சல் அவரை நிரந்தரமாய் ஆட்கொண்டது. வழக்கறிஞர் தொழிலை மறந்தார், கம்பன் இலக்கியப் பணியிலேயே காலத்தைக் கழித்தார்.

1941ல் மகன் தீபன் இறந்த பின், குற்றாலத்தில் குடும்பத்தாருடன் வாசம் செய்யத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இலக்கியப் பணியாற்றியும் விருந்தோம்பல் வேள்வி செய்தும் வாழ்ந்து, 16.02.1954ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது பணிகள் அளவிடற்கரியன.

1928-1930 வரை சட்டமேலவை உறுப்பினராகவும், 1930-1935 வரை இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் இருந்தார். அதனால் தான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது தமிழக அரசுக்கு, (தான் பிற்த, தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் அடையாளமான ஆண்டாளின் ஊரான) ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை சின்னமாக வைக்க ரசிகமணி பரிந்துரைத்த போது அதை அப்படியே ஏற்று செயல்படுத்தினார்.

“தமிழருக்குத் தமிழே துணை” என்னும் மந்திரத்தைச் சொன்னவர் டி.கே.சி. அவர் ஏன் ரசிகமணி ஆனார் என்பதற்கு அவரது வாக்கே எடுத்துக்காட்டு.

“ரசிகர் என்றால் தேன்வண்டைப்போல் அனுபவிப்பதுதான். மறுபடியும் மறுபடியும் புஷ்பத்தில் வந்து விழ வேணும். கவியை விட்டு நம்மால் போக முடிகிறதா. இல்லை” என்பது, ரசிகத் தன்மைக்கு அவர் காட்டிய உதாரணம். கவிதையை அனுபவிக்க வேண்டும். கவிதையிலேயே மூழ்க வேண்டும். எந்தவொரு கலைஞனுக்கும் தான் வெளிப்படுத்தும் கலை ஒரு ரசிகனால் ஏற்கப்பட்டு அனுபவிக்கத் தக்கதாய் அமையவேண்டும் என்பதுவே குறிக்கோளாக இருக்கும்.

ரசிகனால் ரசிக்கப் படுவதற்காகவே தனது கவிதை இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கவிஞன் கவிதையைப் படைத்து அளிக்கிறான். அப்படி, கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு தோன்றிய ரசிகர்தான் ரசிகமணி டி.கே.சி.
வாழ்வு முழுமையும் கம்பர், கம்பர் என்றே கூறி வந்தவர்.

கம்பரை அறிமுகப் படுத்துவதும், கம்பர் கவியை அனுபவிக்கச் செய்வதுமே அவரின் மூச்சுக் காற்றாய் இருந்தது. அதனால் தான் தமிழ் இதழியல் வரலாற்றில் நெடுநாள் வந்த தொடராய், கல்கியில் அவர் எழுதிய ‘கம்பர் தரும் காட்சி’ தொடர் பத்தாண்டுகளைக் கடந்து வெளிவந்தது!

பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள். அவ்விரு சொற்களையும் இணைத்து, ‘கல்ச்சர்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ப்பதமாக ‘பண்பாடு’ என்ற சொல்லைத் தமிழுலகுக்குக் கொடுத்தவர் ரசிகமணி.

ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற தமிழ்ப்பதத்தைக் கொடுத்ததும் ரசிகமணியே. பின்னாளில், வானொலி என்ற இதழ் வெளிவந்தது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ரசிகமணியின் புதல்வர் தீபன்.

ஓவியம், சிற்பம் ஆகிய கலைச் செல்வங்களையும் இனங்கண்டு வெளிப்படுத்தியவர். தென்காசி கோயில் மகா மண்டபத்தில் பத்துத் தூண்களில் வடித்துள்ள சிற்பங்களைப் படமெடுத்து, விளக்கம் எழுதி, கல்கி தீபாவளி மலரின் வெளிவரச் செய்தார்.

தென்காசி கோயிலைக் கட்டிய பராக்கிரம பாண்டியனுக்கு, கோயில் பின்னாளில் கேடு அடையும் என உள்ளுணர்வு சொல்லியதால், “அக்கேட்டினை நீக்கி செப்பனிட்டு சரி செய்வோரை இன்றே பணிகின்றேன்” என்று கல்வெட்டில் பாடலாக வடித்தான். டிகேசி அக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அப்பாடலை உலகறியச் செய்தார்.

“ஆராயினும் இந்தத் தென்காசி மேவு பொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால் அப்போழ்து அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பண்டியனே”!
இப்பாடலைக் கோயிலில் உள்சுவரில் எழுதிப் போட்டிருக்கிறார்கள்.

டிகேசி, குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய கற்களை வெளியே கொண்டு வரச் செய்த போது அரிய சிலைகள் வெளியே வந்தன. அச்சிலைகளை குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் நிறுவினார்.

ராமாயண கதை நம்முடைய நாட்டின் தங்கச் சுரங்கம். அதிலும் கம்பன் பாடிய ராம கதை இருபத்தி நான்கு மாற்று அபரஞ்சி. இந்தத் தங்கத்தை எடுத்துக் காட்டிய தங்க நிபுணர்களுக்குள் நம்முடைய டி.கே.சி. அவர்கள் முதல் இடம் பெற்று விட்டார், இதை யாரும் எந்தப் புலவரும் மறுக்க முடியாது. ஸ்ரீராமபிரான் எப்படிக் கம்பன் உள்ளத்தில் மற்றும் ஒரு முறை அவதரித்தானோ, அவ்வாறே கம்பனும் டி.கே.சி.யின் உள்ளத்தில் மறுபடியும் அவதரித்தான், தற்காலத் தமிழருக்காக என்று நான் சொல்லுவேன்” என்றார் ராஜாஜி.

டி.கே.சி. அவர்கள் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய மகான். ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடந்த பற்பல அறிஞர்களையும் தமிழிலே பேசவும் எழுதவும், தமிழ் மேல் ஆசை கொள்ளவும், தமிழார்வம் மிக்கவர்களாக உருமாற்றம் பெற வைத்த அரும்பணியைச் செய்தவரும் டி.கே.சி.தான் என்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையலாம். கம்பரைப் போல்,  தம் சமகால கவிஞர் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையையும் தமிழ் மக்களிடையே எடுத்துச் சொல்லி கவிமணியின் பெருமையை உணர்ந்து கொள்ளச் செய்தவரும் டி.கே.சி.தான்!

“கம்பராமாயணத்தை இன்று தமிழுலகம் அறிவதற்கும் மதிப்பதற்கும் படிப்பதற்கும் காரணமாயிருந்தவர் நம் ரசிகமணி அவர்களே. ஷேக்ஸ்பியர் கவிதைத் தரத்தைவிடக் கம்பன் கவிதை ஒரு சிறிதும் தாழ்வில்லாதது என்று சொன்னாற்போதாது. அதனினும் மேம்பட்டதாகும் என்று ஆங்கிலம் கற்ற புலவர்களிடையே அஞ்சாமல் எடுத்துக் கூறின ஆண்மையாளர் அவர். அந்தக் கருத்தை எழுத்துக்களின் மூலமும் சொற்பொழிவுகளின் மூலமும் ஓயாமல் எடுத்து விளக்கி நிலைநாட்டி கம்பர் கவிதைக்கு ஏற்றம் தந்த பெருமை நம் ரசிகமணி அவர்களையே சாரும். ஆங்கிலம் கற்றவரே கற்றவரென்றும், தமிழ்க் கல்வி இழிவானது என்றும், தமிழில் பேசுவதும் எழுதுவதும் அநாகரிகமென்றும் எண்ணி வந்த காலமொன்றிருந்தது.
பட்டதாரிகள் பலர் மேடை மீதேறி நின்று எனக்குத் தமிழில் பேச வராது; ஆங்கிலத்திலேதான் பேச முடியும் என்று பெருமையோடு சொல்லி வந்தார்கள். அந்தக் காலத்தில் நமது ரசிகமணி ‘தமிழில் சொல்ல முடியாதது என்ன உண்டு?’ என்று ஆர்வத்தோடு கூறி, அவர்களைத் தமிழாசையும் கவிதை வெறியும் கொள்ளச் செய்தார்.
அவர்,யாவருக்கும் உத்தம நண்பர், எனக்கு உயிர் நண்பர். என்னைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று உபசரித்ததை நான் என்றும் மறக்க முடியாது. அன்னை போலிருந்து என்பால் அன்பு சொரிந்தார். அருவியில் நீராட்டினார். அருகிலிருந்து உணவூட்டி உபசரித்தார். என்னைப் பாராட்டினார். என் கவிதைகளைப் பாராட்டினார்.”
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

“டி.கே.சி. என்று ஒருவன் இருந்தான். அவன் ‘தமிழைப் போன்ற உயர்ந்த மொழி உலகத்திலேயே கிடையாது. கம்பரைப் போன்ற உயர்ந்த கவிஞன் உலக இலக்கியத்தில் கிடையாது’ என்று சொல்லுவான் என்பதை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களையும் சொல்லச் செய்ய வேண்டும். 500 ஆண்டுகள் அல்லது, 1000 ஆண்டுகள் கழிந்த பின்னாவது நான் சொன்னதை உண்மை என்று உலகமே ஒப்புக்கொள்ளும்” – மரணம் நெருங்கிய நிலையில் டி.கே.சி உதிர்த்த அமரத்துவ வார்த்தைகள்!

டி.கே.சி பார்வை – தனித்துவமான ஒரு பார்வை. அவரது அணுகுமுறையும், நோக்கும் இலக்கியத்தில் மட்டுமின்றி, இசையிலும், பிற கலைகளிலும், கல்வி, பண்பாடு, சமயம் என்று பல நிலைகளிலும் பரவி நிற்கிறது. “உண்மையைக் கூசாமல் சொல்லத் தீர்த்து விடுகிற பேர்வழி நான்” என்று தன்னைப் பற்றி அவர் வாக்குமூலம் தந்திருக்கிறார். இதனாலேயே அவர் பலவித எதிர்ப்புகளுக்கும் ஆளானார்.


தமிழறிஞர்கள் யாரும் செய்யத் துணியாத பலவற்றை தமிழுக்குச் செய்தவர் டி.கே.சி. அவற்றில் முக்கியமானது – கவி எது என்று கண்டுணர்ந்து சொன்னது செய்யுள் உருவில் எழுதப்பட்ட அனைத்துமே ‘கவிதை’ என்று சொல்லப்பட்ட போது, கவி வேறு, செய்யுள் வேறு என்னும் வித்தியாசத்தைப் பார்க்கக் கற்றுத் தந்தார்.
கம்பராமாயணம் முழுவதையும் பல ஆண்டுகள் கற்றார். கற்றபின், டி.கே.சி.யின் உள்ளுணர்வு, கம்பன் கவிகளுக்கிடையில் வெறும் செய்யுள்கள் விரவிக் கிடப்பதைக் கண்டது. கம்பன் கவிதை முத்திரை இல்லாத இடைச் செருகல்களை எல்லாம் அவர் தூக்கி எறிந்தார். கம்பனில் தொடங்கிய ரசிகமணியின் இலக்கியப் பார்வையும் ரசனையும் தமிழ்க் கவிகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்றது. அதன் பயனாக எத்தனையோ தமிழ்க் கவிஞர்களுடைய கவிகளை ரசிகமணி சுண்டிப் பார்த்து, பாடிப் பார்த்து, ரசித்து, பின் வெளிப்படுத்தினார்.

முன்னோரது படைப்பு எனும் ஒரே காரணத்துக்காக எந்தவொரு இலக்கியத்தையும், கவிதையையும், கதையையும், கருத்தையும் ரசிகமணி ஏற்றுக் கொண்டது என்பது கிடையாது. தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே அறிவுறுத்தியும் வந்தவர் டி.கே.சி.
திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யப் பிரபந்தம், ஒளவையார், பட்டினத்தார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இரட்டைப் புலவர்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, நந்திக் கலம்பகம், கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி, காவடிச்சிந்து இன்னும் பல கவிஞர்களின் சிறப்பான கவிகளை டி.கே.சி. தமிழர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவரது விளக்கத்தோடும், பார்வையோடும், தமிழ்க் கவிகளை அணுகுவோர்க்கு ஏற்படும் அனுபவம், தனியான, மேலான, சுவையான அனுபவம்.

தேவாரப் பாடல்கள் அனைத்தையும் மொத்தமாக டி.கே.சி ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பர் சுவாமிகளது பல கவிகளை அனுபவித்து, ரசித்துப் போற்றிய ரசிகமணி “கூற்றாயினவாறு” என்ற முதல் பாடலை ஒதுக்கி விட்டிருப்பதைக் காண்கிறோம். தாங்கள் பெற்ற அருமைப் பிள்ளை சீராளனை பெற்றோர் இருவரும் வாளால் அரிந்தனர் என்ற கருத்தை டி.கே.சி. ஒப்புக் கொள்ளவில்லை.

அதே போன்று பக்திப் பரவசம் மிக்க அருமையான கவிகளை அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் வழங்கியுள்ளாரே, அவைகளைப் படித்து அனுபவிப்பதை விட்டு விட்டு மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே புலவர்கள் என்று ஆதங்கப்பட்டவர் டி.கே.சி.

ரசிகமணியின் பேராண்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி. 80 ஆண்டுகளுக்கு முன் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு தேநீர் விருந்துக்கு கல்லூரியின் பழைய மாணவரான டி.கே.சியையும் அழைத்தார்கள். அவர் அப்போது சென்னை சட்டசபை எம்.எல்.சியாக இருந்தார். ஸ்காட்லாந்து பாதிரியார் ஒருவருக்கான வரவேற்பு நிகழ்ச்சி அது. அடிமை இந்தியாவில், இந்திய மக்கள் நாகரிகமற்றவர்கள், கல்வி அறிவில் தாழ்ந்தவர்கள் என்று ஆங்கிலேயர்கள் எண்ணியிருந்தனர்.பாதிரியாரிடம் டி.கே.சி.யை அறிமுகப்படுத்தினர்.  பாதிரியார் அவரிடம் ஏளனம் தொனிக்க கேட்டார்.

“ஸ்காட்லாண்ட் தேசத்தில் எங்களுக்கு மரங்கள் என்றால் ரொம்பப் பிரியம். இந்தியர்களான உங்களுக்கு எப்படியோ?” – கேட்டார் பாதிரியார்.

டி.கே.சி சொன்னார்: “மரங்களிடத்தில் எங்களுக்குப் பிரியம் கிடையாது. நாங்கள் மரங்களிடம் பக்தியே செலுத்துகிறோம்” என்று சொல்லி, பாதிரியாருக்கு விளக்கமும் தந்தார் டி.கே.சி.

“தமிழ் நாட்டில், ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சம் உண்டு. குற்றாலத்தில் பலாமரம்; திருநெல்வேலியில் மூங்கில் மரம்; திருப்பெருந்துறையிலே குருந்தமரம் & இப்படியாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மரம் உண்டு. தாவர வர்க்கத்துக்கு, ஒவ்வொரு செடிக்கும் மரத்துக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றுக்குள் ஒரு ஞாபகசக்தியும் இருந்து தொழிற்படுத்துகிறது. ரோஜாச் செடியிலிருந்து ரோஜாப்பூதான் பூக்கும்; அதற்குரிய தனியான மணமும், வண்ணமும்தான் அந்த மலரில் இருக்கும். தப்பித் தவறி எந்த ரோஜாச் செடியாவது பிச்சிப்பூவைப் பூத்து வைக்குமா?
இந்த அற்புதங்கள் எல்லாம் இறைத் தத்துவமல்லவா என்பதை எங்கள் முன்னோர்கள் உணர்ந்ததன் காரணமாகத்தான் ஸ்தல விருட்சம் என்று கோவில்கள் தோறும் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்” என்று டி.கே.சி. விளக்கம் கொடுத்தார். கேட்ட ஸ்காட்லாண்டுக்காரர் வாயடைத்துப் போனார்.

அறிவியல் சொற்களை தமிழில் கொண்டு வருவது குறித்த விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அறிவியலில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்; அறிவியல் சொற்களை புதிதாக உண்டாக்குவதில் காலத்தை வீணாக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“கலைச் சொல் கமிட்டி’யில் சயன்ஸ் சம்பந்தம் இல்லாதவர்களே இதுவரை இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரே நோக்கம் வடமொழியை விருத்தி பண்ணிவிட வேண்டும், அல்லது தமிழை விருத்தி பண்ணிவிட வேண்டும், சையன்ஸ் எப்படியேனும் போகட்டும் – என்றுதான் எண்ணுகிறார்கள்.
விஷயந்தான் முக்கியம் என்று எண்ணிவிட்டால் வார்த்தைகளின் ஆதிக்கம் முன்னணிக்கு வராது.
மேல்நாட்டான் ஒரு பிள்ளையைப் பெற்றான். அதற்கு ஏதோ “விக்டர்’ என்று பெயரிட்டான். நாமும் அவனை “விக்டர்’ என்று சொல்லி விட்டால் தமிழ் கெட்டா போகும்? போகாது. அதுபோல உடம்பைப் பிரித்துப் பார்த்தான். ஒரு உறுப்புக்கு “மால்பிகியன் காப்ஸியூல்’ என்று ஏதோ பெயரிட்டான். நாமும் அந்தப் பெயரையே இட்டு அழைத்தால் கேடு ஒன்றும் விளைந்து விடாது. நாளடைவில் வேறு பெயர் இட்டு நம்மவர்கள் அழைக்க ஆரம்பித்தால் அதைச் சேர்த்துக் கொள்ளுகிறது.

மோட்டார் டிரைவர்களும் கிளீனர்களும் கலைச் சொற் கழகத்தின் உதவி இல்லாமலே மோட்டாரை ஒக்கிட்டு விடுகிறார்கள்; ஓட்டி விடுகிறார்கள். நம்மை விட்டு வார்த்தை மோகம் என்று ஒழியுமோ தெரியவில்லை. அது ஒழிந்தால்தான், தானே சயன்ஸ் கைக்கு வரும்.
முன்னேறிய நாடெல்லாம் சயன்ஸை வாழ்க்கைக்கும் பொருள் விருத்திக்கும் சாலைத் தொழிலுக்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நாம் சௌகரியமாக, சாவகாசமாகப் பிரதி பதங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாம். – என்பது அவருடைய கருத்து.

குற்றாலம் மலைமேல் சிற்றருவிக்கு அப்பால் ஒரு திறந்த வெளியில் பாறை ஒன்று இருக்கிறது. மாலை நேரத்தில் டி.கே.சி., ராஜாஜி, கல்கி மற்றும் இலக்கிய நண்பர்கள் அங்கு கூடி ரசிகமணி பாடும் கவிதைகளையும் அவரது விளக்கத்தினையும் கேட்டு மகிழ்வார்கள். அந்தப் பாறையில் இருந்து கீழே பார்த்தால் தென்னஞ்சோலைகளும் மரகதப் பச்சையில் வயல்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தொலைவில் முருகன் கோயில் கொண்டிருக்கும் திருமலைக்கோவில் ஒருபுறமும், இன்னொரு புறம் “ரெட்டைக் கோபுரம்”  (அப்போது தென்காசி கோபுரம் மின்னல் தாக்கி சிதைவுண்டு இரண்டு பகுதியாக நின்றது. பின்னாளில் தான் கோபுரம் எடுத்துக் கட்டப்ப்ட்டது) தென்காசி அங்கேதான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டிக் கொண்டும் இருக்கும். – ரசிகமணியின் அனுபவம்.

கம்ப ராமாயணத்தில் பல்வேறு காலகட்டங்களில் அதனைப் படித்த புலவர்கள் தங்கள் மேதைமையை கம்பனில் சேர்த்து, தங்கள் பாடல்களையும் கம்பராமாயணப் பாடல்கள் என்று நுழைத்து விட்டார்கள். அப்படி, கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் நிறைய உண்டு என்று வருத்தப்பட்டார் ரசிகமணி டி.கே.சி. அவர் கம்பனில் கரை கண்டவர். கம்பராமாயணத்தில் உள்ள இடைச்செருகல்களை சரியாக அறிந்து, அவற்றை நீக்கி, அந்தப் பாடல்களை எல்லாம் தனியாக ஒரு பக்கத்தில் தொகுத்து பிற்சேர்க்கை என்று அறிவித்தார். அவர் தள்ளிய பாடல்களில் கம்பனின் கவிப் புலமையும் இல்லை; சொற்களில் பிற்காலத்திய கட்டுமானம் இருக்கும்; நவீன தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டிருக்கும். பேச்சு நடை அமைந்திருக்கும். அப்படி அவர் முதலாக, அமரர் அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் சான்றோர்கள் பலரும் நீக்கிய இடைச் செருகல் பாடல் ஒன்றில்தான், சேதுவின் முகப்பை ராமன் அம்பு கொண்டு கீறியதாக ஒரு வரி வருகிறது. அது கம்பன் பாடல் இல்லை என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆபத்து: ஆன்மிகத் தலம் சுற்றுலா தலமானால்…? 

courtallam temple water pots - 2026
#image_title

இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை, நம் கோயில்கள், ஆன்மீகத் தலங்களில் பார்க்கிறோம். பாரம்பரியமான கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது,  குலதெய்வக் கோயில்களுக்குச்  சென்று வழிபடுவது, ஆலயங்களின் தேர்த் திருவிழா போன்ற திருவிழாக்களில் பங்கேற்பது என்பதெல்லாம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வரும் நல்ல பழக்கம் தான்.  ஆனால் இப்போது புதிதாக முளைத்துவிட்ட ஜோதிடர்களாலும்,  யுடியூப் போன்ற சமூகத்தளங்களின் கைங்கரியத்தாலும் கணக்கற்ற மக்கள், எவர் சொல்வதை எல்லாமோ கேட்டு,  கண்களை மூடிக்கொண்டு அப்படியே நம்பி, அவற்றை செயல்படுத்த முனைவது பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்துகிறது! 

இதற்கு அண்மைய உதாரணம், திருச்செந்தூர்! முன்பெல்லாம் கடற்கரைக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற குளித்து, முருகப்பெருமானை தரிசித்து வருவது பாரம்பரிய வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக பௌர்ணமி வந்துவிட்டால் இரவு நேரம் முழு நிலவொளியில், கடற்கரையில் பாயை விரித்துப் படுக்கும் ‘ஜோதிட’ பரிகாரத்தால், திருச்செந்தூர் திக்குமுக்காடி விடுகிறது. உள்ளூர் மக்கள் கையைப் பிசைந்து கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கித் தவிக்கிறார்கள். 

திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல், மகான்களின் வழிகாட்டலில் நடைபெற்று வந்த பாரம்பரிய ஆன்மிகக் கண்ணோட்டத்தில் இருந்து மாறி, பரிகாரங்களில் பார்வையில் பட்டு விட்டதால், லட்சக்கணக்கான மக்களின் நெரிசலைச் சமாளிக்கத் தேவையான கட்டுமான வசதிகளின்றி திருவண்ணாமலை திக்கு முக்காடித் தவிக்கிறது. உள்ளூர்வாசிகள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறுகளைச் சொல்லி நொந்து போயிருக்கிறார்கள்.  

எங்கு சுற்றிலும் அரங்கனைச் சேர் என்பது பழமொழி. எந்த ஊர்களில் இருந்தாலும் இறுதியில் திருவரங்கம் வந்து அரங்கன் அடி பணிய வேண்டும் என்பது பழங்காலத்தில் இருந்தே வந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடம் முழுமையாகவாவது திருவரங்கம் கோயிலை சுற்றி எங்காவது வசித்து தினமும் உத்ஸவங்களைக் காண வேண்டும் என்பதை வாழ்நாள் இலக்காகக் கொண்டிருப்போர் பலர். ஆனால் இப்போதெல்லாம் அத்தகைய நிலை சாத்தியமற்றதாகவே மாறிவிட்டது. 

பாரம்பரிய ஆன்மீகத் தலங்களில் இடையூறுகள் இப்படி என்றால், இன்று சுற்றுலாத்தலமாக உருவெடுத்து விட்ட தலங்களிலோ இடையூறுகள் வேறு வகையில் முன்நிற்கின்றன! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருக்குற்றாலம்!

திருக்குற்றாலம் பிரதான அருவியுடன் இணைந்த குற்றாலநாதர் கோயில், ஒரு பாடல் பெற்ற தலம். மூர்த்தி- தலம்- தீர்த்தம் எனும் வகையில் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த புனிதத் தலம். அருவி நீர் விழும் பாறையில், நந்தி, சிவ லிங்கங்கள் நிறைய செதுக்கி வைத்திருப்பார்கள். குற்றாலநாதர் கோயில் பூஜைகளுக்கு அருவித் தண்ணீர்தான். இங்கே பூஜை, புனஸ்காரங்களுக்கே முன்னுரிமை இருந்தது. அது சுற்றுலா தலம் என்று ஆன பின்னர், பாரம்பரிய ஆன்மிகத் தலம் எனும் நிலையை இன்று இழந்து விட்டது!

ஆடி அமாவாசை, தை அமாவாசை நீத்தார் கடன்கள் இங்கே அருவியில் பிரதானம், சபரிமலை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் முன் செய்யும் கடமைகளில் அருவி நீராடலும் குற்றாலநாதர், சித்திரசபை ஆடல்வல்லானை தரிசிப்பதும் முக்கியமான ஒன்றாக இருந்தது. சுற்றிலுமுள்ள கிராமங்களில் ஆடி மாத விழாக்கள், கோயில் கொடை விழாக்கள், அம்மன் ஆலய செவ்வாய் வெள்ளி விழாக்கள், கோயில் கும்பாபிஷேகங்கள் நடந்தால் யானை மீது குற்றால அருவி நீர் எடுத்து சுமந்து வந்து அந்த அந்த ஊருக்குள் கம்பீரமாக வலம் வந்து கும்பாபிஷேகம் செய்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்று! 

இப்போது சுற்றுலாவாக வருபவர்க்கே முன்னுரிமை என்பதால், திருக்குற்றாலம் எனப்பட்டது ‘குற்றாலம்’ ஆகிவிட்டது. காவல் துறையும் உள்ளூர் நிர்வாகமும் சீசன் காலங்களில் காட்டும் கெடுபிடிகள் அனேகம். உள்ளூர்வாசிகள் சீசன் காலத்தில் ஒரு நாள் கூட குளிக்கச் செல்ல முடிவதில்லை என்று புலம்புகிறார்கள். அது ஒருபுறம் என்றால், ‘வெள்ளம் ஏற்பட்டதால் அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு’ என்ற காரணத்தைக் காட்டி, கோயில்  திருவிழாவிற்காக புனித நீர் எடுக்கக் கூட போலீசார் அனுமதி மறுத்ததால் பக்தர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள சடையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பள்ளத்து பேச்சியம்மன் கோவில் திருவிழாவிற்காக புனித நீர் எடுக்க குற்றாலம் மெயினருவிக்கு வந்தனர். ஆனால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருகே செல்லக்கூட அனுமதி வழங்க முடியாது என போலீசார் தடுத்தனர். இதனால் குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள ஒரு தண்ணீர்க் குழாயில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குளித்து விட்டு, அதையே புனித நீராக எடுத்துச் சென்றனர் என்பது செய்தி. 

உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மிகச் செயலுக்கான வேண்டுகோளை ஏற்று, போலீஸாரே தகுந்த பாதுகாப்புடன் புனித நீர் எடுக்க மட்டுமாவது உதவியிருக்கலாம். சுற்றுலா வந்து குளிப்பவர் மீதான தடையை உள்ளூர் பக்தர்கள் மீதும் திணித்திருப்பது, நிர்வாகத்தின் அவல நிலையையே காட்டுகிறது! 

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!

veeran dn 3 - 2026
புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி
அறந்தாங்கி வீரமா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 18 ஆம்  நாள் வல்லம்பர் சமுதாயத்தின்  சார்பில்  திருவிழா நடந்தத
 அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா பூச்சொரிதல் காப்பு கட்டுதளுடன் தொடங்கி 18ம் நாள்
வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில்  நடந்தது விழாவை முன்னிட்டு
 அபிஷேகம் அன்னதானம் நடந்தது தொடர்ந்து நடந்த வழிபாட்டில் மேளதாளம் முழங்க  பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்  இரவு கலை நிகழ்ச்சி நடந்தது வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் நடந்தது விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் செ்யதனர்