Home Blog Page 289

கரூர்: பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 64வது அரங்கேற்றம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில், பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் சார்பில், அரங்கேற்ற விழா நடைபெற்றது. சின்னதாராபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற, அறுபத்து நான்காவது அரங்கேற்ற விழாவில், அப்பகுதிப் பொதுமக்கள், முதலில் விநாயகர் வழிபாட்டை தொடங்கினர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கோவிலில் இருந்து மேளதாளங்களுடன், ஊர்வலமாக, முளைப்பாரியை எடுத்து வந்தனர். தொடர்ந்து மூத்த கடவுள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் பவளக்கொடி கும்மியாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அம்மன் கே விஸ்வநாதன் தலைமையில் அறுபத்து நான்காவது, அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கேற்றத்தில், கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என, ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டு, விநாயகர் மற்றும் முருகன், கருப்பண்ணசாமி, அம்மன் பாடல்கள் உள்பட, பல்வேறு பக்தி பாடல்களுக்கு, கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

அரங்கேற்ற நிகழ்ச்சியில், பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு கும்மியாட்டத்தைக் கண்டு ரசித்தனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் அம்மன் விஸ்வநாதன், அருணாச்சலம் ஆகியோரும், பயிற்சி ஆசிரியராக, வெள்ளக்கோவில் சித்ரா ஆகியோரும் சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கினர். செந்தில் , சி எம் மஹால் உரிமையாளர் மயில்சாமி , சிதம்பரம், ரத்னா, ரவி உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தான்தோன்றிமலை பெருமாள் கோயிலில் 4வது புரட்டாசி சனி தரிசனம்!

கரூர், கல்யாண வெங்கடரமண ஸ்வாமி ஆலயத்தில், நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம், பெருமாளுக்கு மிக உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வேங்கடரமண ஸ்வாமி ஆலயத்தில், புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், தங்களது குடும்பத்துடன், ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும் , பாத காணிக்கை செய்தும், அன்னதானம் வழங்கியும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, அருகில் உள்ள நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்
இருந்து ஏராளமான ஆன்மீக அன்பர்கள், ஆலயத்துக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, போலீசார் சீசீடிவி கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தான்தோன்றிமலை, கல்யாண வேங்கடரமண சுவாமி ஆலய, செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளைச்  செய்துள்ளனர்.

மஹாளய அமாவாசை: மதுரை கோயில்களில் சிறப்பு தர்ப்பணம்!

madurai tharpanam - 2026
#image_title

மதுரை: மதுரை மாவட்டத்தில் மஹாளயா அமாவாசை முன்னிட்டு, கோயில் மற்றும் ஆற்றங்கரையில் சிறப்பு தர்ப்பணம் செய்து பிதுர்களை வழிபட்டனர்.

மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயக ஆலயம் மற்றும் கோரிப்பாளையம் அருகே வைகை ஆற்றங்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

ஆடி ,தை மற்றும் புரட்டாசி அமாவாசையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, மதுரையில் முன்னோர்களுக்கு இன்று காலை தர்ப்பணம் செய்தனர்.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் மகளாய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்! புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

புரட்டாசி அமாவாசை, ஆடி அம்மாவாசை,தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும்.குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர், இங்குள்ள போத்திகள் மற்றும் விற்பனர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தொடர்ந்துஇங்குள்ள அருள்மிகு ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் சோழவந்தான் வைகை ஆற்றில் திருவேடகம் அருகே சாய் பாபா கோவில் அருகில் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.

WC 2023: நியூசிலாந்து அணியின் ‘பாய்ச்சல்’

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஒன்பதாம் நாள்
வங்கதேசம் vs நியூசிலாந்து
சென்னை – 13.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வங்கதேச அணியை (245/9, முஷ்ஃபிகுர் ரஹீம் 66, ஷாகிப் அல் ஹசன் 40, மிராஸ் 30, மகமதுல்லா 41*, ஃபெர்கூசன் 3/49, போல்ட் 2/45, ஹென்றி 2/58) நியூசிலாந்து அணி (42.5 ஓவரில் 248/2, டேரில் மிட்சல் 89*, கேன் வில்லியம்சன் 78*, கான்வே 45, முஸ்தாஃபிசுர் ரஹமான் 1/36, ஷாகிப் 1/54) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          டாஸ் வென்ற நியூசிலாந்து அணி வங்கதேச அணியை மட்டையாடக் கேட்டுக்கொண்டது. போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி வீரர்களால் அதிரடி ஆட்டம் ஆட முடியவில்லை. சற்று தடுமாற்றமாகத்தான் விளையாடினார்கள். இருப்பினும் இதுவரையில்லாத அளவாக உலகக் கோப்பை ஆட்டங்களில் அதிக பட்சமாக 8 சிக்சர்கள் இன்று அடித்தனர். முஷ்ஃபிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் இருவரும் 96 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிற வீரர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாததால் 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 245 ரன் எடுத்தது.

          பதிலுக்கு ஆட வந்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. முதல் 50 ரன் அடிக்க 74 பந்துகள் எடுத்துக்கொண்டனர். அடுத்த 50 ரன் அடிக்க 52 பந்துகளே தேவைப்பட்டன. இவர்களது இன்னிங்க்ஸில் ஏராளமான டாட் பால்கள்; ஆனால் ஒரு ஓவருக்கு ஒரு ஃபோர் அடித்து ரன்ரேட்டை 4க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

அணியின் ஸ்கோர் 200 ஆக இருக்கும்போது வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறினார். 150 ரன்னிலிருந்து 200 ரன் அடிக்க அவர்கள் 45 பந்துகள் எடுத்துக் கொண்டனர். இறுதியில் 42.5 ஓவரில் 248 ரன் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. லோக்கி ஃபெர்கூசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

          நியூசிலாந்து அணி இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடி, மூன்றிலும் வெற்றி பெர்று 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

குமரனுக்கு வேல் எடுக்கும் விழா! திருப்பரங்குன்றம் முருகன் பல்லகில் பவனி!

thiruparankundram murugan pallakku - 2026
#image_title

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி வேலை பல்லாக்கில் சுமந்து மலை மேல் கொண்டு செல்வர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா, கந்த சஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள்
கொண்டாடப்படும்.

இதில், மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவுகூரும் வகையிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி திருகரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரித்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து , பல்லாக்கில் வைக்கப்பட்ட வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில், திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பாக கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனை அடுத்து மலைக்கு கீழ் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெறும். மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்கரத்தில் இருக்கும்.

இரவு 7 மணியளவில் பூ பல்லக்கு அலங்காரத்தில் வேல் பழனியாண்டவர் கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடையும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருவட்டாறு கோயிலில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றம்!

thiruvattaru kodiyetru - 2026

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது,

ஐப்பசி திருவிழா திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நாளை (14ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து காலை 8 முதல் 9 மணிக்குள் திருக்கொடியேற்றப்படுகிறது. இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

2ம் நாள் (15ந் தேதி) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி,

3ம் நாள் ( 16. ந் தேதி) காலை 8 மணிக்கு நாரணீய பாராயணம், இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவை நடக்கிறது.

4ம் நாள் (17-ந்தேதி) இரவு .7.30 மணிக்கு நடன நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் ஆகியனவும்

5ம் நாள் (18. ம் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றமும், 9 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பவனியும், 10 மணிக்கு நள சரிதம் கதகளி ஆகியவையும்,

6ம் நாள் (19. ம் தேதி) இரவு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு தேவயானி சரிதம் கதகளி ஆகியன நடக்கிறது.

7ம் நாள் (20-ந்தேதி) இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனியும், தொடர்ந்து தோரண யுத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

8ம் நாள் (21. ந் தேதி) இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு துரியோதன வதம் கதகளி

9ம் நாள் (22.ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடக்கிறது.

10ம் நாள் (23. ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

நம்ம ஊரு சுற்றுலா: வைத்தீஸ்வரன் கோயில்

vaideeswaran koil - 2026
#image_title

பகுதி 9 – வேதபுரீஸ்வரர், வைத்தீஸ்வரர்

–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

          நண்பர் வீட்டிலிருந்து அவரது குடும்பத்தினருடன் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடலூர் செல்லும் பாதையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில், மேல்புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில் என்ற சிவபெருமான் திருக்கோவிலுக்குச் சென்றோம். இந்தக் கோவில் ஹஸ்த நட்சத்திரக்கார்களுக்கு உரிய கோயில் என்று கூறுகிறார்கள்.

          இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. பெரிய சிற்பங்கள் எதுவும் இல்லாத ஒரு கோயில்.  இக்கோயிலில் வேதபுரீஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

          இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ‘காமிகாகம்’ என்பது தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும்.

          நான் சென்ற தினம் ஒரு பிரதோஷ தினம். எனவே சுமார் 50/60 பேர் கோயிலில் இருந்தனர். நந்தியம்பெருமாளுக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ருத்ரம் ஓதி நிதானமாக  நந்தியம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்தனர். அமைதியான கிராமக் கோயில். மன நிறைவோடு நண்பர் வீடு திரும்பி இரவு ஓய்வு எடுத்தோம்.

          அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து, கார் ஓட்டுநரையும் குளிக்கச் சொல்லி, நண்பர் வீட்டில் அருமையான காபி அருந்திவிட்டு கண்டியூர் நோக்கிப் புறப்பட்டோம். வழியில் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதர் கோவிலில் சுவாமியைத் தரிசிக்க இறங்கினோம்.

          இத்திருத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், இராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.

          வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூராகிய வைத்தீஸ்வரங்கோயிலின் சங்ககாலப் பெயர். அகநானூற்றில் 166ஆவது பாடலில் இதனைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘வேள்’ என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். ‘புள்’ என்னும் சொல் கருடனையும், ‘இருக்கு’ என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.

          இது ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தலமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது.

          வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.

          சம்பாதி, சடாயு, என்ற இராமாயண கால கழுகரசர்கள் இருவரும், முருகப்பெருமானும் பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.

          இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் சப்தரிஷிகளும் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குண்டம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோயிலினுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்.

          இரண்டு கொடிமரங்கள், வரிசையாக அமைந்திருக்கும் நவகிரக சன்னதி என பல சிறப்புகள் உடையது இக்கோயில். மிகப் பெரிய கோயில்; எனவே அனைத்து சன்னதிகளையும் பார்த்து, கோயிலைச் சுற்றிவர சுமார் 45 நிமிடங்கள் வரை ஆகும்.  எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை இக்கோயிலில்தான் போடுவார்கள்.

          கோயிலில் தரிசனம் முடித்த பின்னர் நாங்கள் எங்களின் குலதெய்வக் கோயிலான கண்டியூர் நோக்கிச் சென்றோம். வழியில் மயிலாடுதுறையில் உறவினர் ஒருவர் வீட்டில் காலைச் சிற்றுண்டியை முடித்தோம்.

WC 2023: ஆஸ்திரேலியாவா இது? இவ்ளோ மோசமாக…!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி – 8ம் நாள்
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
லக்னோ – 12.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா அணி (311/7, டி காக் 109, மக்ரம் 56, பவுமா 35, மிட்சல் ஸ்டார்க் 2/53, மேக்ஸ்வெல் 2/34) ஆஸ்திரேலிய அணியை (40.5 ஓவரில் 177 ஆல் அவுட், லபுசேன் 46, மிட்சல் ஸ்டார்க் 27, ரபாடா 3/33, ஜேன்சன் 2/54, கேசவ் 2/30, ஷம்சி 2/38) 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோவில் நடந்த ஆட்டம் ஒருதலைப் பட்சமான ஆட்டமாக இருந்தது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். அந்த அணியின் முதல் ஏழு பேட்டர்களும் இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 311 ரன் எடுத்தது.

          டாஸ் வென்ற பின்னர் ஆஸ்திரேலியா பந்துவீச எடுத்த முடிவு, அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோருக்குப் பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரை அணியில் சேர்த்தது என எதுவும் இன்று ஆஸ்திரேலிய அணிக்குச்  செயல்படவில்லை. பந்து வீச்சில் உத்வேகம் இல்லாதது மற்றும் களத்தில் செய்த பல பிழைகள் அவர்களைத் தோல்வியை நோக்கித் துரத்தியது. 18ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்கு 70 என்ற நிலையில் அவர்களது வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது. தொடக்க ஆட்டங்களில் இரண்டு நேரான தோல்விகள், இதற்கு மேலும் அவர்கள் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் அந்த அணியைத் தள்ளியுள்ளது.

          ஸ்மித் LBWவில் ஆட்டமிழந்தது ஒரு துரதிர்ஷ்டம். ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்ததும் இத்தகைய ஒரு முடிவினால்தான்.

          டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் சிறந்த ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை சென்னையில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய புரட்டாசி பிரதோஷம்!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு, சிறப்புப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அருள்மிகு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் , அபிஷேகப் பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு, ஆலயத்தின் சிவாச்சாரியார், சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி, உதிரிப்பூக்களால் அர்ச்சித்து, நாமாவளிகள் கூறினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பின் பிரதோஷத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு பகவதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா

தொழில் வளம் செழிக்க வேண்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், கொட்டும் மழையில், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வத்தில் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, வடக்குத் தெரு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், புரட்டாசி திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இத்திருவிழாவில், பக்தர்கள், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் இறுதி நாளில், பகவதியம்மன், சிவன், முருகன், கருப்பணசாமி என சாமி வேடங்கள் அணிந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மழை வேண்டியும், தொழில் வளம் செழிக்க வேண்டியும், நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு, முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் ஆற்றில் அனைத்து முளைப்பாரிகளும் கரைக்கப்பட்டன.