Home Blog Page 288

நம்ம ஊரு சுற்றுலா: கங்கைகொண்ட சோழபுரத்தின் அழகு!

gangaikondachozhapuram - 2026
#image_title

பகுதி 11 – கங்கைகொண்ட சோழபுரம் (2)

–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

          சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதாவது, லோயர் அணைக்கட்டு என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கீழஅணையும் கொள்ளிடத்திற்குப் பாலமும் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மதிலையும் இடித்துக் கற்களை எடுத்தனர்.

ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை. கோயிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன. கோயிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

          இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால் அக்கேணி முதலாம் இராசேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

          சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க வில்லையென்றும்; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் வைத்தான் என்பதும் தெரிகின்றது.

          இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும். இத்தலத்திற்கு ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் – சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

          160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்) பல கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது. இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது. இத்தலம் தற்பொழுது சிற்றூராக உள்ளது. இங்குப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை.

          கோயிலமைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயிலமைப்பே ஒத்துள்ளது. சிற்பக் கலையழகு சிந்தனைக்கு எட்டாதது. இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது. முதலாம் இராசேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வழங்கினான்.

          மூலவர் சிவலிங்கமூர்த்தி கிழக்கு நோக்கியுள்ளார், பேருருவம் 13 அடி உயரம்; ஆவுடையார் சுற்றளவு 60 அடி, ஒரே கல்லால் ஆனவை; விமானம் 160 அடி உயரம் – 100 அடி சதுரமானது. மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது. மூலவர் முன்பு நிற்குங்கால் – வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் – உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.

இதற்குச் சொல்லப்படும் காரணம், மூலவரின் அடியில் சந்திரக் காந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக் காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது.

வடகிழக்குப் பருவ மழை எப்போது?

rains weather rain women - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் வழங்கும் 2023ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் கால வானிலை முன்னறிவிப்பு

          வலுவான நேர்மறை Indian Ocean Dipole (IOD) (இந்தியப் பெருங்கடல் இருமுனை) விளைவாக எழும் பெரிய அளவிலான காற்றின் இறக்கம் (அதாவது வளிமண்டலத்தின் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு இறங்குதல்)  காரணமாக உலகளாவிய வானிலை மற்றும் காலநிலை மாதிரிகள் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்புக்குக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கின்றன. இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் 2023 வரையிலான காலப்பகுதி அதிக வறண்ட காலங்கள் மற்றும் குறைந்த மழைக்காலங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் வலுவான எல்-நினோவின் வளிமண்டல நிலைகள் மற்றும் வலுவான நேர்மறை IOD உடன் இணைந்த போதெல்லாம் கடந்த கால தரவுகளை பகுப்பாய்வு செய்தால், அது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழையை விளைவித்தது. எடுத்துக்காட்டாக, 1997, 2015ஆம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், வலுவான எல் நினோ வளிமண்டலம், நேர்மறை IOD நிலை இரண்டையும்  பார்த்தோம், இது உண்மையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழையைக் கொண்டு வந்தது. ஆனால் இந்தக் காரணிகளை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. நாம் MJO (மேடன் ஜூலியன் அலைவு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். மேடன் ஜூலியன் அலை என்பது மழை தரும் மாஸ்டர் அலை எனக் கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் (P2&P3) இந்த அலையின் வருகை, அதன் கால அளவு இரண்டையும் பார்க்க வேண்டும்.

          முன்னணி மையங்கள் மூலம் MJO கண்காணிக்கப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று மேற்கு இந்தியப் பெருங்கடலில் (WIO) நுழைந்த MJOவின் பலவீனமான துடிப்பு கிழக்கு நோக்கி நகர்ந்து செப்டம்பர் 9 அன்று கிழக்கு இந்தியப் பெருங்கடலில் (EIO) வெளியேறியது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அது 14ஆம் தேதி வரை EIO மற்றும் கடல்சார் கண்டத்தின் எல்லைக்கு அருகில் இருந்தது மற்றும் செப்டம்பர் 15 ஆம் தேதி EIO இல் மீண்டும் நுழைந்தது. இது செப்டம்பர் 23 அன்று EIO இல் இருந்து வெளியேறியது. IO இல் MJO துடிப்பு இருப்பது தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் மீது நல்ல வடகிழக்கு பருவமழை செயல்பாடு தொடர்பானது.

          இந்தியப் பெருங்கடல் இருமுனையின் (IOD) குறியீடு செப்டம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் +1.25 °C ஆக இருந்தது. இதனால் ஒரு நேர்மறை IOD கட்டம் ஏற்கனவே உருவாகியுள்ளது. மாதிரி முன்னறிவிப்புகள் IOD இன் நேர்மறையான கட்டம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என்பதைக் குறிக்கிறது. IODஇன் நேர்மறையான கட்டம் தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவில் வடகிழக்கு பருவமழையின் நல்ல செயல்பாடுகளுடன் தொடர்புடையது.

          அனைத்து நினோ பிராந்தியங்களிலும் SSTகள் அதிகரித்து வருகின்றன. நினோ பிராந்தியம் 3.4 இல் ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 3-மாத சராசரி SST ஒழுங்கின்மை 1.1 ºC ஆகும். அனைத்து நினோ படுகைகளிலும் SST முரண்பாடுகள் தொடர்ந்து நேர்மறையாகவே இருக்கின்றன.

          நடப்பு ஆண்டைப் போலவே, 2006 மற்றும் 2015ஆம் ஆண்டிலும் ஒரே நேரத்தில் எல் நினோ மற்றும் நேர்மறை IOD நிகழ்வுகள் நிகழ்ந்தன. வடகிழக்கு பருவமழை இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் நீண்ட கால சராசரியை விட முறையே 15% மற்றும் 52% அதிகமாக இருந்தது. ராயலசீமா (-23% 2006) மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் (2015 இல் -15%) தவிர, தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் பிற துணைப்பிரிவுகளிலும் பருவகால வடகிழக்கு பருவமழை நீண்ட கால சராசரியை விட அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு TN மற்றும் AP பகுதிகளுக்கு நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

ECMWF, CFS, NMME, Canips போன்ற முக்கிய உலகளாவிய கணினி மாடல்களில் பெரும்பாலானவை TN மற்றும் AP க்கான வடகிழக்குப் பருவமழைக் கால மழைப்பொழிவு (அக் – டிசம்பர் 2023) இயல்பை விட குறைவாகவே இருக்கும் எனச் சொல்கின்றன. தெற்கு TN மட்டுமே இயல்பை விட அதிக மழை பெறும் எனக் காட்டப்பட்டுள்ளது.

மொத்தத்தில்: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 23 முதல் 28 வரை ஏதாவது ஒரு நாளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பகுதிகளில் தொடங்கலாம்.

கணினி வானிலை மாதிரிகள் தெற்கு வங்காள விரிகுடாவில் அக்டோபர் 22 முதல் 24 க்கு இடையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கிறது. எந்தப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தைத் தீர்மானிக்கும்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இயல்பான மழைப்பொழிவைக் காணும், மேலும் தென் மாவட்டங்கள் வழக்கத்திற்கு மேல் பருவமழையைக் காணும், இது MJO முன்னேற்றம் மற்றும் P2, P3 மற்றும் P4 இல் தங்கியிருக்கும் காலத்தைப் பொறுத்தது.

நவம்பர் நடுப்பகுதி வரை பருவமழை பலவீனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அது TN மற்றும் AP இல் அதன் வேகத்தை அதிகரிக்கும்.

வங்காள விரிகுடாவுடன் ஒப்பிடும்போது அரபிக் கடல் இந்தப் பருவகாலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது புயல்களைக் காட்டிலும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு மழையைக் கொண்டுவரும் ஈஸ்டர்லி அலைகள் அதிகமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பாகும்.

KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு) இந்த ஆண்டு இயல்பான மழைப் பொழிவைக் காணும்.

கடந்த ஆண்டுகளில் 39 ஆண்டுகள் எல்-நினோ இருந்திருக்கிறது. இந்த சமயத்தில் 11 ஆண்டுகளில் இயல்புக்கு அதிகமான மழையும், 22 ஆண்டுகளில் இயல்பான மழையும், 6 ஆண்டுகளில் மட்டும் இயல்புக்குக் குறைவான மழையும் பெய்திருக்கின்றது.

WC 2023: ஆச்சரியப் படுத்திய ஆப்கன்! அப்செட் ஆன இங்கிலாந்து!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி பதினோராம் நாள்
ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
டெல்லி – 15.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284, குர்பாஸ் 80, அலிகில் 58, அதில் ரஷீத் 3/42, மார்க் வுட் 2/50) இங்கிலாந்து அணியை  (40.3 ஓவரில் 215 ஆல் அவுட்,ஹாரி ப்ரூக் 66, டேவிட் மலான் 32, முஜிபுர் ரஹ்மான் 3/51, ரஷீத் கான் 3/37) 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணியை வென்றது இந்த ஒருநாள் உலகக் கோப்பையின் மிகப்பெரிய அப்செட்; அதிர்ச்சி; இங்கிலாந்து முதல் நான்கு அணிகளுள் ஒன்றாக வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றுள்ளது.

பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி, மிகத் தன்னம்பிக்கையோடு ஆப்கானிஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது. அந்த அணி அடித்த 284 என்ற ஸ்கோருக்கு எதிராக இரண்டாவதாக விளையாடிய இங்கிலாந்து அணி தடுமாற்றத்துடன் ஆடியது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (80 ரன்), இக்ரம் அலிகில் (58 ரன்) ஆகியோரைத் தவிர சத்ரன் (28 ரன்), முஜிபுர் ரஹ்மான் (28 ரன், ரஷீத் கான் (23 ரன்) ஆகியோரும் நன்றாக ஆடினர். இதனால் 50 ஓவர் வரை அவர்களால் ஆட முடிந்தது; மேலும் ரன்ரேட்டை 5.69 என்ற நிலையில் அவர்களால் வைக்கமுடிந்தது.

இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் சேர்க்க முடிந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது டேவிட் மலான், ஹாரி ப்ரூக் ஆகியோரைத் தவிர பிறர் சரியாக விளையாட வில்லை. இதனால் 40.3 ஓவரில் இங்கிலாந்து அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மகத்தான வெற்றி; இங்கிலாந்துக்கு இனிமேல் கவனமாக ஆட ஒரு பெரிய விழிப்புணர்வு அழைப்பு. மூன்று ஆட்டங்களில், இரு அணிகளும் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு மேலும் தோல்விகளுக்கு இடமில்லை.

இதற்கு முன்பு இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்திடம் தோல்வியடைந்த பிறகு இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அடுத்த சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மோதல் அவர்களுக்குக்  கடினமாக இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்டம், சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம். இன்றைய வெற்றியின் பின்னணியில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும்.

ஆனால், அதற்கெல்லாம் முன்பாக, தற்போது அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி நாளை பட்டியலில் கீழிருந்து மூன்றாவதாக, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

மதுரை கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்!

navarathri in madurai temples - 2026
#image_title

மதுரை கோயிலில் நவராத்திரி விழா:

மதுரையில் உள்ள கோயில்களில், நவராத்திரி முன்னிட்டு அம்மன் பல்வேறு அலங்கரி அலங்காரத்தில் பக்தருக்கு காட்சி அளித்தார்.

மதுரையில் மீனாட்சி சுந்தரர் கோவில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில், அருள்மிகு முக்தீஸ்வரர், அண்ணா நகர் சர்வேஸ் ஆலயம், வைகை விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வர சக்தி விநாயகர் ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி முன்னிட்டு அம்மன் மீனாட்சி மற்றும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதேபோல், சோழவந்தான் ஜனகை மாரியம்மன், ஜஎனகஐ நாராயணப் பெருமாள், திரௌபதியம்மன், பிரளயநாத சிவன் ஆலயம், தென்கரை மூலநாதர் திருவேடகம் ஏடகநாதர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் நவராத்ரி விழாவையொட்டி, அம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

மதுரை அவனியாபுரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவிலில் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது. மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம் .

இந்த ஆண்டு நவராத்திரி கொலுவிழாவின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து கொலு நடைபெற்றறது. விழாவில், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பக்தர்களின் பாடல்களுடன் சிறப்பாக பூஜையுடன் கொலு விழா நடைபெற்றது.

திருக்கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகாளய அமாவாசை: சதுரகிரி மலையில் திரண்ட பக்தர்கள்!

sathuragiri devotees - 2026
#image_title

‘மகாளய அமாவாசை’ தினத்தில், சதுரகிரிமலையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். சித்தர்கள் வசிக்கும் புண்ணிய மலையாகக் கருதப்படும் சதுரகிரிமலைக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள்.

நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாள். மகாளய அமாவாசை நாளன்று முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெறுவதற்காக திதி கொடுப்பது, சிவன் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடுகள் நடத்துவது, அன்ன தானம் வழங்குவது உள்ளிட்ட பல் வேறு நம்பிக்கைகள் பெரும்பாலானவர்களிடம் இருந்து வருகிறது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிமலையில், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 6 மணியிலிருந்தே பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர்.

மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சதுரகிரிமலை அடிவாரப்பகுதி, நுழைவுப் பாதை, மலைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பக்தர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

செய்தி: வி காளமேகம்

நம்ம ஊரு சுற்றுலா: கங்கை கொண்ட சோழபுரம்!

gangaikondachozhapuram - 2026
#image_title

நம்ம ஊரு சுற்றுலா பகுதி 10
கங்கைகொண்ட சோழபுரம்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

          வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து மயிலாடுதுறை வழியாக குத்தாலம் வந்து, திருமணஞ்சேரி செல்லும் வழியில் சென்றால், திருமணஞ்சேரிக்கு முந்தைய கிராமம் கண்டியூராகும். குத்தாலம், வில்லியநல்லூர் போன்ற இக்கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள பல குடும்பங்களுக்கு இக்கோயில் குல தெய்வக்கோயிலாகும். கோயிலுக்கு பக்தர்கள் வரும் முன்பாக குருக்களுக்கு தொலைபேசி மூலம் சொல்லி வைப்பார்கள். அபிஷேக ஆராதனைகளுக்குரிய பொருட்களுடன் பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.

          சுமார் 1100 மணிக்கு பூஜைகள் தொடங்கும். வடிவுடையம்மனுக்கு முக்கிய சன்னதி; மாரியம்மன், லிங்கமூர்த்தி, வீரன் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு. அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, மாவிளக்கு போட்டு, பூஜை முடிக்கையில் சுமார் 1330 மணி ஆகிவிடும். கோயிலிலேயே பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்புவோம். நான் சுமார் 45 ஆண்டுகளாக, ஆண்டிற்கொருமுறை இந்தக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

          கோயிலில் இருந்து சுமார் 1400 மணிக்கு நாங்கள் கிளம்பினால் ஒரு மணி நேரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து சேரலாம்.  அணைக்கரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றின் மீது கீழணை கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அடிக்கடி பழுதடைந்துவிடும். அதனால் சற்று தாமதமாகும்.

          முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. தன் தந்தையைப்போல, அதற்கீடாக மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கிபி 1012-1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. இராசேந்திரன் லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பிய போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணினான்.

          இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் – கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் அல்லது அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.

          இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை (உக்கோட்டை) என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றது. இவ்வூருக்காக கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது.

          முதலாம் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டியர் கி.பி.12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்த்து எழுந்தனர். அப்போது சோழமன்னர் பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையை அழித்தனர். இதனால் மனங்குமுறிய பாண்டியர், சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு, பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தேதான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்தல் வேண்டும். மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன.

WC 2023: தொடரும் வெற்றி ‘ராசி’: பொளந்து கட்டிய ரோஹித் சர்மா!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பத்தாம் நாள்
இந்தியா vs பாகிஸ்தான்
அகமதாபாத் – 14.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாகிஸ்தான் அணியை (42.5 ஓவரில் 191 ஆல் அவுட், பாபர் அசம் 50, ரிஸ்வான் 49, இமாம் உல் ஹக் 36, பும்ரா 2/19, சிராஜ் 2/50, ஹார்திக் 2/34, குல்தீப் 2/35, ஜதேஜா 2/38) இந்திய அணி (30.3 ஓவரில் 192/3, ரோஹித் ஷர்மா 86, ஷ்ரேயாஸ் ஐயர் 53, ஷாஹீன் அஃப்ரிடி 2/36, ஹசன் அலி 1/34) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதுவரையில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு முறை கூட இந்திய அணியை வென்றிராத பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட வந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 29.4 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் அடுத்த 13 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடினார். 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 86 ரன் எடுத்து அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 79 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியாக 30.3 ஓவரில் இந்திய அணி வெற்றியை எட்டியது. பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 100 ஓவருக்குப் பதிலாக 74 ஓவர்களில் மேட்ச் முடிந்துவிட்டது. இந்திய அணிக்கு நல்ல ரன்ரேட்டும் கிடைத்தது.

உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இந்திய பாகிஸ்தான் – அணிகள் மோதும் போட்டி என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியே வென்று, பாகிஸ்தானுடன் தோல்வியை சந்திக்காத ராசியை தொடரச் செய்துவிட்டது.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 6 புள்ளிகளுடனும் சிறப்பான ரன் ரேட்டுடனும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெறுகிறது.  

1917 முதல் 2023வரை தங்கம் விலை! பள்ளி கண்காட்சியில் ஆர்வத்துடன் பார்த்த பெற்றோர்!

1917 முதல் 2023வரை தங்கம் விலை அறிவியல் கண்காட்சியில் ஆர்வமுடன் பார்த்த பெற்றோர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவேடகம், மேற்கு விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில், கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்தப் பள்ளியின் செயலாளர் சுவாமி பிரம்மானந்தர், நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார்.

விவேகானந்தா கல்லூரி முதல்வர், முனைவர் வெங்கடேசன், சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மாதவன் வரவேற்றார்.

இந்தக் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில், 130 படைப்புகள் இடம்பெற்றன. இந்திய வரைபடத்தில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்திருந்தனர். மேலும், ராக்கெட்டின் செயல் விளக்க மாதிரி, ரத்தம் சுத்திகரித்தல், சாண எரிவாயு தயாரித்தல், ஜேசிபி எந்திர மாதிரி செயல் விளக்கம், போன்ற படைப்புகளை, மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். குறிப்பாக தங்கம் விலையைக் குறிப்பிட்டு வைத்திருந்தது, பெற்றோர்களைக் கவர்ந்தது.

சோழவந்தான் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரலிங்கம், துரை, கிருஷ்ணசாமி, மகாலிங்கம், சித்திரவேல், கார்த்திகேயன் ஆகியோர், கலை மற்றும் அறிவியல் கண்காட்சிக்கு படைப்புகளைச் செய்வதற்கு மாணவர்களை ஊக்குவித்துப் பேசினர்.

பள்ளி உதவி தலைமையாசிரியர் அச்சுதலிங்கம் நன்றி கூறினார். கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

செங்கோட்டை – மதுரை மின்சார எஞ்சினில் ரயில்கள் இயங்குவது எப்போது?!

sengottai punalur electrification - 2026
#image_title

உலகப் பிரபலமான இந்திய ரயில்வேயில் முக்கிய அங்கம் வகிக்கும் செங்கோட்டை – புனலூர் மலை வழி ரயில் பாதையில் மின் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இப்பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இப்பணியை மேற்கொள்பவர்கள் கூறுகின்றனர். ஆரியங்காவு கணவாய் தென்மலை கணவாய் பகுதியில் மின் வயர் பொருத்தும் பணிகள் நவீன இயந்திரங்களுடன் நடந்து வருகிறது.

கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையை பொருட்படுத்தாது ஊழியர்கள் இப்பணியை செம்மையாக செய்து வருகின்றனர். வரும் மார்ச் மாதத்திற்குள் விருதுநகர் – செங்கோட்டை – புனலூர் – கொல்லம் ரயில் வழிப் பாதையில் மின்மயமாக்கல் பணி முழுமையாக நடந்து விடும் எனக் கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாகவே சோதனை ஓட்டம் துவங்கி, கொல்லம் – செங்கோட்டை – மதுரை வழித்தடத்தில் மின் ரயில்கள் இயங்கும். புதிய மின்சார ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என ஏற்கெனவே மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் அண்மையில் புனலூரில் தெரிவித்திருந்தார்.

இந்த வழிப் பாதையில் மின்மயமாக்கல் முடிந்ததும் செங்கோட்டை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை பணி அமைக்க வேண்டும் என கேரளா எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, வரும் அக்.18ம் தேதி புதன்கிழமை முதல், திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் மூன்று, மின்சார இஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06681 / 06682, வண்டி எண் 06684/06687 , வண்டி எண்:06657/06658 ஆகிய மூன்று வண்டிகளும் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்படவுள்ளது.

இது குறித்து, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் கே.ஹெச். கிருஷ்ணன் கூறியபோது, “நாங்கள், 12/10/23 அன்று மின்னஞ்சல் மூலமாக தெற்கு ரயில்வே பொது மேலாளர்,ரயில்வே அமைச்சர் அலுவலகம் (தில்லி), மத்திய அமைச்சர் முருகன், மதுரை கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள், தென்காசி எம்.பி., தனுஷ்குமார், மதுரை நெல்லை விருதுநகர் எம்.பி.க்கள், பாஜக., தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு – வெற்றிகரமாக மார்ச் 2023ல் மின்சார லோக்கோ இயக்க சோதனைகள் முடிந்த —செங்கோட்டை – தென்காசி – விருதுநகர் மற்றும் செங்கோட்டை – தென்காசி – திருநெல்வேலி பாதைகளில் எப்போது ரயில்கள் மின்சார லோக்கோக்களால் இயக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் – என்று கேட்டிருந்தோம் . இன்று தெற்கு ரயில்வே அதிகார பூர்வமாக 18/10/23 முதல் செங்கோட்டை – திருநெல்வேலி இடையே சில ரயில்கள் மின்சார லோக்கோவால் இயக்கப்படும் என்ற மகிழ்வான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைத்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் நன்றி” என்று கூறினார்.

முன்னதாக, மதுரையில் கடந்த அக்.9ம் தேதி, புதியதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம், மதுரை செங்கோட்டை – புனலூர் – கொல்லம் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கவும், செங்கோட்டை – சென்னை சிலம்பு அதிவிரைவு ரயிலை கொல்லம் வரை நீட்டித்து, கூடுதல் பெட்டிகள் இணைத்து, தினசரி ரயிலாக இயக்கவும்,எற்கெனவே கடந்த சபரிமலை சீசனுக்கு இயக்கிய எர்ணாகுளம் – செங்கோட்டை – ராஜபாளையம் – விருதுநகர் – காரைக்குடி – தாம்பரம் சிறப்பு ரயிலை இந்த ஆண்டு சபரிமலை சீசன் துவங்கும் முன் தினசரி ரயிலாக இயக்கவும் வலியுறுத்தப்பட்டது.

நாகை – காங்கேசன்துறை படகு சேவை தொடக்கம்: பிரதமர் மோடியின் உருக்கமான உரை!

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

pm narendra modi - 2026
#image_title

தமிழாக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மாண்புமிகு தலைவர்களே, சகோதர சகோதரிகளே, நமஸ்காரம், ஆயுபோவன், வணக்கம்!

நண்பர்களே, இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்.

நண்பர்களே, இந்தியாவும் இலங்கையும் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உட்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றிப் பேசுகின்றன. மகா கவி சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை’ பாடலில் நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியிருந்தார். இந்த படகுச் சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

நண்பர்களே, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின் போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல. இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

நண்பர்களே, 2015இல் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம். பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம். சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019இல் தொடங்கியது. இப்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகுச் சேவை இந்த திசையில் மற்றொரு முக்கியமான படியாகும்.

நண்பர்களே, இணைப்புக்கான எங்கள் பார்வை போக்குவரத்து துறைக்கு அப்பாற்பட்டது. இந்தியாவும் இலங்கையும் ஃபின்-டெக் மற்றும் எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. UPI காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் ஒரு வெகுஜன இயக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறியுள்ளது. UPI மற்றும் Lanka Payஐ இணைப்பதன் மூலம் fin-tech துறை இணைப்பில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நமது வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த நமது நாடுகளுக்கு ஆற்றல் பாதுகாப்பு முக்கியமானது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த எங்கள் எரிசக்தி கட்டங்களை இணைக்கிறோம்.

நண்பர்களே, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டு என்பது நமது இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் ஒன்றாகும். யாரையும் விட்டு வைக்காமல், வளர்ச்சியை அனைவருக்கும் எடுத்துச் செல்வதே எங்கள் பார்வை. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கையில் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையைத் தொட்டன.

வடக்கு மாகாணத்தில் வீடுகள், நீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார ஆதரவு தொடர்பான பல திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ரயில் பாதைகளை சீரமைத்தல், யாழ் கலாசார நிலையத்தை நிர்மாணித்தல்; இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நடைமுறைப் படுத்துதல்; அல்லது டிக் ஓயாவில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை அமைத்தல் என அந்தத் திட்டமாக இருந்தாலும் நாங்கள் “அனைவருடனும்- அனைவரின் வளர்ச்சிக்காகவும்-அனைவரின் நம்பிக்கையுடனும்-அனைவரின் முயற்சியுடனும்” என்ற பார்வையுடன் பணியாற்றி வருகிறோம்.

நண்பர்களே, சமீபத்தில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தியது அனைவரும் அறிந்ததே. “வசுதைவ குடும்பகம்” அதாவது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற எங்களது தொலைநோக்கு சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்பட்டது. இந்த பார்வையின் ஒரு பகுதி, நமது அக்கம்பக்கத்திற்கு முதலிடம் கொடுப்பது; முன்னேற்றம் மற்றும் செழுமையைப் பகிர்வது. ஜி20 மாநாட்டின் போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான இணைப்பு வழித்தடமாகும், இது முழு பிராந்தியத்திலும் பாரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும்.

எமது இரு நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட தொடர்பை நாம் வலுப்படுத்துவதால் இலங்கை மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள். இன்று படகுச் சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்தமைக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படகுச் சேவை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கிடையிலான படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நண்பர்களே, எமது மக்களின் பரஸ்பர நலனுக்காக எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. நன்றி!