Home Blog Page 290

நம்ம ஊரு சுற்றுலா: வைத்தீஸ்வரன் கோயில்

vaideeswaran koil - 2026
#image_title

பகுதி 9 – வேதபுரீஸ்வரர், வைத்தீஸ்வரர்

–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

          நண்பர் வீட்டிலிருந்து அவரது குடும்பத்தினருடன் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடலூர் செல்லும் பாதையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில், மேல்புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில் என்ற சிவபெருமான் திருக்கோவிலுக்குச் சென்றோம். இந்தக் கோவில் ஹஸ்த நட்சத்திரக்கார்களுக்கு உரிய கோயில் என்று கூறுகிறார்கள்.

          இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. பெரிய சிற்பங்கள் எதுவும் இல்லாத ஒரு கோயில்.  இக்கோயிலில் வேதபுரீஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

          இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ‘காமிகாகம்’ என்பது தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும்.

          நான் சென்ற தினம் ஒரு பிரதோஷ தினம். எனவே சுமார் 50/60 பேர் கோயிலில் இருந்தனர். நந்தியம்பெருமாளுக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ருத்ரம் ஓதி நிதானமாக  நந்தியம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்தனர். அமைதியான கிராமக் கோயில். மன நிறைவோடு நண்பர் வீடு திரும்பி இரவு ஓய்வு எடுத்தோம்.

          அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து, கார் ஓட்டுநரையும் குளிக்கச் சொல்லி, நண்பர் வீட்டில் அருமையான காபி அருந்திவிட்டு கண்டியூர் நோக்கிப் புறப்பட்டோம். வழியில் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதர் கோவிலில் சுவாமியைத் தரிசிக்க இறங்கினோம்.

          இத்திருத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், இராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.

          வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூராகிய வைத்தீஸ்வரங்கோயிலின் சங்ககாலப் பெயர். அகநானூற்றில் 166ஆவது பாடலில் இதனைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘வேள்’ என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். ‘புள்’ என்னும் சொல் கருடனையும், ‘இருக்கு’ என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.

          இது ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தலமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது.

          வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.

          சம்பாதி, சடாயு, என்ற இராமாயண கால கழுகரசர்கள் இருவரும், முருகப்பெருமானும் பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.

          இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் சப்தரிஷிகளும் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குண்டம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோயிலினுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்.

          இரண்டு கொடிமரங்கள், வரிசையாக அமைந்திருக்கும் நவகிரக சன்னதி என பல சிறப்புகள் உடையது இக்கோயில். மிகப் பெரிய கோயில்; எனவே அனைத்து சன்னதிகளையும் பார்த்து, கோயிலைச் சுற்றிவர சுமார் 45 நிமிடங்கள் வரை ஆகும்.  எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை இக்கோயிலில்தான் போடுவார்கள்.

          கோயிலில் தரிசனம் முடித்த பின்னர் நாங்கள் எங்களின் குலதெய்வக் கோயிலான கண்டியூர் நோக்கிச் சென்றோம். வழியில் மயிலாடுதுறையில் உறவினர் ஒருவர் வீட்டில் காலைச் சிற்றுண்டியை முடித்தோம்.

WC 2023: ஆஸ்திரேலியாவா இது? இவ்ளோ மோசமாக…!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி – 8ம் நாள்
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
லக்னோ – 12.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா அணி (311/7, டி காக் 109, மக்ரம் 56, பவுமா 35, மிட்சல் ஸ்டார்க் 2/53, மேக்ஸ்வெல் 2/34) ஆஸ்திரேலிய அணியை (40.5 ஓவரில் 177 ஆல் அவுட், லபுசேன் 46, மிட்சல் ஸ்டார்க் 27, ரபாடா 3/33, ஜேன்சன் 2/54, கேசவ் 2/30, ஷம்சி 2/38) 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோவில் நடந்த ஆட்டம் ஒருதலைப் பட்சமான ஆட்டமாக இருந்தது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். அந்த அணியின் முதல் ஏழு பேட்டர்களும் இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 311 ரன் எடுத்தது.

          டாஸ் வென்ற பின்னர் ஆஸ்திரேலியா பந்துவீச எடுத்த முடிவு, அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோருக்குப் பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரை அணியில் சேர்த்தது என எதுவும் இன்று ஆஸ்திரேலிய அணிக்குச்  செயல்படவில்லை. பந்து வீச்சில் உத்வேகம் இல்லாதது மற்றும் களத்தில் செய்த பல பிழைகள் அவர்களைத் தோல்வியை நோக்கித் துரத்தியது. 18ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்கு 70 என்ற நிலையில் அவர்களது வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது. தொடக்க ஆட்டங்களில் இரண்டு நேரான தோல்விகள், இதற்கு மேலும் அவர்கள் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் அந்த அணியைத் தள்ளியுள்ளது.

          ஸ்மித் LBWவில் ஆட்டமிழந்தது ஒரு துரதிர்ஷ்டம். ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்ததும் இத்தகைய ஒரு முடிவினால்தான்.

          டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் சிறந்த ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை சென்னையில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய புரட்டாசி பிரதோஷம்!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு, சிறப்புப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அருள்மிகு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் , அபிஷேகப் பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு, ஆலயத்தின் சிவாச்சாரியார், சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி, உதிரிப்பூக்களால் அர்ச்சித்து, நாமாவளிகள் கூறினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பின் பிரதோஷத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு பகவதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா

தொழில் வளம் செழிக்க வேண்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், கொட்டும் மழையில், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வத்தில் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, வடக்குத் தெரு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், புரட்டாசி திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இத்திருவிழாவில், பக்தர்கள், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் இறுதி நாளில், பகவதியம்மன், சிவன், முருகன், கருப்பணசாமி என சாமி வேடங்கள் அணிந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மழை வேண்டியும், தொழில் வளம் செழிக்க வேண்டியும், நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு, முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் ஆற்றில் அனைத்து முளைப்பாரிகளும் கரைக்கப்பட்டன.

விக்கிரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா தொடங்கிய நாள் முதல் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் மேளதாளத்துடன், வாண வேடிக்கையுடன் பூசாரி வீட்டிலிருந்து சாமி பெட்டி எடுத்து வந்தனர். பின் சக்திகிரகம் எடுத்து. பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை அடைந்தனர்.

இங்கு சிறப்பு பூஜை நடந்தது. இப்பகுதி கிராம மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இரண்டாம் நாள் காலை கிராம மக்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். காலை பக்தர்கள் பால்குடம், மதியம் அக்னிச் சட்டி எடுத்து வந்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள் சக்தி கிரகம், முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று மதியம் சாமி பெட்டி, பூசாரி வீட்டுக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

WC 2023: ஆப்கன் அணிக்கு எதிராக இந்தியா !

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஏழாம் நாள் – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – 11.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணியை (272/8, ஹஷ்மத்துல்லா 80, ஒமராசி 62, பும்ரா 4/39, பாண்ட்யா 2/43) இந்திய அணி (35 ஓவரில் 2 விக்கட் இழப்பிற்கு 273 ரன், ரோஹித் ஷர்மா 131, இஷான் கிஷன் 47, கோலி 55*, ஷ்ரேயாஸ் ஐயர் 25*, ரஷீத் கான் 2/57) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.  பவர்ப்ளேயான முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்தது. ஏழாவது ஓவரில் இப்ராஹிம், 13ஆவது ஓவரில் ரஹமத்துல்லா, 14ஆவது ஓவரில் ரஹமத் ஷா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹஷ்மத்துலாவும் ஓமராசியும் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் பும்ரா, குல்தீப், ஜதேஜா ஆகியோரின் பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 272/8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் 39, 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசினார். அவற்றில் ஒரு விக்கட் எடுத்து மொத்தம் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

          அதன் பிறகு ஆடவந்த இந்திய அணி தனது வெற்றியை முதல் பத்து ஓவர்களில் அறிவித்துவிட்டது. அந்த 10 ஓவர்களில் இந்திய அணி 94/0; அதில் ரோஹித் ஷர்மா 74 ரன். ரோஹித் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 131 ரன் எடுத்தார். முதலில் ஆட்டமிழந்தது இஷான் கிஷன். அவர் 47 பந்துகளில் 47 ரன் எடுத்தார். பின்னர் ஆடவந்த கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்கள் பங்குக்கு ஆடி 35 ஓவரில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் ஏழு சதங்கள் அடித்த முதல் வீரரானார். இன்றைய ஆட்டத்தில் அவர் நாலாவது சிக்சர் அடித்தபோது, ஒருநாள் ஆட்டங்களில் 554 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரரானார்.

          இந்த வெற்றியோடு, நாலு புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில், 1.5 என்ற ரன்ரேட்டுடன் இரண்டாமிடம் வகிக்கிறது.  நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே லக்னோவில் ஆட்டம் நடைபெறும்

WC 2023: இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பெற்ற வெற்றி

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஆறாம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 10.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆறாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது.

இங்கிலாந்து vs வங்கதேசம்

இங்கிலாந்து அணி (364/9, மலான் 140, ஜோரூட் 82, பெயர்ஸ்டோ 52, மெஹதி ஹசன் 4/71, ஷோரிஃபுல் இஸ்லாம் 3/75) வங்கதேச அணியை (48.2 ஓவரில் 227, லிட்டன் தாஸ் 76, ரஹீம் 51, ஹிரிதய் 39, டாப்லி 4/43, வோக்ஸ் 2/49) 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே மட்டையாட வந்த இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்டர்கள் மிக அருமையாக ஆடினார்கள். இங்கிலாந்து அணி 49 பந்துகளில் 50 ரன்; 93 பந்துகளில் 100; அதாவது அடுத்த 43 பந்துகளில் அடுத்த 50 ரன்; 152 பந்துகளில் 150 ரன்; 193 பந்துகளில் 200; 216 பந்துகளில் 250; 242 பந்துகளில் 300; 290 பந்துகளில் 350 ரன்; என சீராக ரன் குவித்தது. டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 140 ரன் அடித்தார். இப்படியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 364 ரன் எடுத்தது.

          வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன்தாஸ் நன்றாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய முதல் நான்கு பேட்டர்கள் (ஹசன் 1 ரன், ஷண்டோ 0 ரன், ஷாகிப் 1 ரன், மிராஸ் 8 ரன்) அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த பேட்டர்கள் சுமாராக ஆடினர். இருப்பினும் ரன் ரேட் மிகக் குறைவாக் இருந்ததால் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கை vs பாகிஸ்தான்

இலங்கை அணியை (344/9, குசால் மெண்டிஸ் 122, சமரவிக்ரம 108, நிசாங்கா 51, ஹசன் அலி 4/71, ஹரிஸ் ரவுஃப் 2/64) பாகிஸ்தான் அணி (48.2 ஓவரில் 345/4, ஷஃபிக் 113, ரிஸ்வான் 131*) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பதுன் நிசாங்கா நிதானமாக ஆடினார் என்றால் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 122 ரன் அடித்தார். பதுன் ஆட்டமிழந்ததும் மெண்டிஸுக்கு ஜோடியாக ஆட வந்த சமரவிக்ரமா 89 பந்துகளில் 108 ரன் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா இருவரும் சதம் அடித்தபோதும் இலங்கை அணியை 50 ஓவர் முடிவில் 344 ரன்னுக்கு பாகிஸ்தான் அணியால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது.

          தங்களது இன்னிங்ஸை ஆட வந்த பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை நாலாவது ஓவரில் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அப்துல்லா ஷஃபிக் (103 பந்துகளில் 113 ரன்) மற்றும் ரிஸ்வான் (ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்) ஆட்டத்தை பாகிஸ்தான் கைப்பிடிக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் 48.2 ஓவரில் பாகிஸ்தான் அணி நாலு விக்கட் இழப்பிற்கு 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

          நாளை டெல்லியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெறும்.

விருதுநகர் அடுத்தடுத்து இருவர் கொலை..

IMG 20231010 WA0133 - 2026
#image_title

சாத்தூரில் டாஸ்மாக் கடை முன்பு கடை ஊழியர் வெட்டி படுகொலை…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை முன்பு டாஸ்மாக் ஊழியர் இருக்கண்குடியைச் சேர்ந்த காந்திராஜா என்பவர் வெட்டி படுகொலை. பட்டப்பகலில் நடந்த படுகொலையால் பரபரப்பு…ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்…..

IMG 20231010 WA0141 - 2026
#image_title

சாவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் காந்திராஜா (33). இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் காந்திராஜா சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல பணியில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். வெட்டிய மர்ம நபர்கள் தப்பியோடினர். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உடனடியாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு துரித விசாரணை நடத்தினர். CCTV காட்சி உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரனை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெருவில் கூலி வேலை செய்து வரும் சசிகுமார் என்ற இளைஞர் தனது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு; உடலை கைப்பற்றி தாலுகா போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் இவரது இளைய மகன் சசிகுமார்(19) கொத்தனார் மற்றும் சிற்ப வேலை செய்யும் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இளைஞர் சசிகுமாருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும் வெளியூர் நண்பர்களை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு சசிகுமார் தனது வீட்டில் தனியாக தூங்கி உள்ளார். வீட்டில் இருந்த மற்றவர்கள் அருகே வெளியே சென்று தூங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை சசிகுமாரின் தந்தை கணபதி வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சசிகுமார் கழுத்து அறுக்கப்பட்டும் வயிற்றில் கத்தியால் குத்தப்படும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கொலை செய்தது யார் எதற்காக கொலை நடைபெற்றது அண்ணன் தம்பி பிரச்சனையா இல்லை போதைப் பழக்கத்தால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சதுரகிரி திருவிழா அனுமதி கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..

IMG 20231010 WA0153 - 2026
#image_title

சதுரகிரி திருவிழாவிற்கு அனுமதி கோரி 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

IMG 20231010 WA0149 - 2026
#image_title

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் ஆனந்தவல்லி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா வரும் 15 தேதி துவங்கி 10 நாள் திருவிழா நடைபெற உள்ள நிலையில்
கடைசி மூன்று நாட்கள் இரவில் தங்கி திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி தர வேண்டும், மேலும் ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் ஏழு ஊரு மக்களுக்கு மொத்தம் 350 பேர் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுந்தரபாண்டியம் ஏழூர் சாலியர் சமூகத்தினர் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டடுள்ளனர். இந்தநிலையில்

10 நாள் திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி எனவும், இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், வனத்துறை தெரிவித்துள்ளது.

ராஜபாளையம் உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு மரியாதை..

IMG 20231010 WA0172 - 2026
#image_title

ராஜபாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு அரசு சார்பில், ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி இறுதி மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி சாலை விபத்தில் சிக்கிய இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் மூளை சாவு அடைந்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உறவினர்கள் சம்மதத்துடன் இவரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பு படி இவரது உடலுக்கு இன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

உயிரிழந்த மாரியப்பனின் உடல் இன்று பிற்பகல் 3 மணி அளவில் அவரது சொந்த ஊரான முகவூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டின் முன்புறம் அவசர ஊர்தியில் வைக்கப்பட்டபடி மாரியப்பன் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

பின்னர் அவரது உடல் தகனத்திற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ப்ரீத்தி, சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர் மாலை வைத்தும் அரசு மரியாதை செலுத்தினர்.

இறந்த மாரியப்பனின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் 2 வதாக திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் 3 குழந்தைகளும் வாலிப வயதில் இருக்கும் நிலையில், இரண்டாவது மனைவியின் 3 குழந்தைகளும் 5 வயதுக்கு உட்டபட்ட சிறுவர்களாக உள்ளனர்.

எனவே குழந்தைகளின் படிப்புக்கும், மனைவியின் வாழ்வாதாரத்திற்கும் அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என மாரியப்பனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.