Home Blog Page 291

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மறியலில் திருநங்கைகள்..

IMG 20231010 WA0180 - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மதுரை – தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

கடந்த ஏழு ஆண்டுகளாக காரியாபட்டி தாசில்தார் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 
தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து இடம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஏழு வருடமாக இதைதான் சொல்கிறீர்கள் என ஆத்திரமடைந்த திருநங்கைகள் தாலுகா அலுவலகம் முன்பு மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்து வந்த காரியாபட்டி காவல்துறையினர் திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு வார காலத்தில் புறம் போக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இடம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

WC 2023: முதலிடம் பெற்ற நியூசிலாந்து

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஐந்தாம் நாள் – ஹைதராபாத்
நியூசிலாந்து vs நெதர்லாந்து – 09.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணி (322/7, யங் 70, லேதம் 53, ரச்சின் 51, டேரில் மிட்சல் 48, ஆர்யன் தத், மீகெரன், மெர்வே தலா 2 விக்கட்) நெதர்லாந்து அணியை (46.3 ஓவரில் 223, ஆக்கர்மேன் 69, சாண்ட்னர் 5/59) 99 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி பந்துவீசத் தீர்மானித்தது. நியூசிலாந்து அணி முதல் பத்து ஓவர்களான பவர்ப்ளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 63 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர்.

எனவேதான் 50 ஓவர் முடிவில் 30 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் அவர்களால் ஏழு விக்கட் இழப்பிற்கு 322 ரன் எடுக்க முடிந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் (4, 6, 17, 12 & 21) எடுத்து அணியின் ஸ்கோரை நல்ல் நிலைக்கு உயர்த்தினர்.

நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சின் முன்னர் நெதர்லாந்து வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நியூசிலாந்தின் சாண்ட்னர் ஐந்து விக்கட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்து அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நாளை தர்மசலாவில் வங்கதேசம் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெற உள்ளது.

WC 2023: இந்திய அணி பெற்ற முதல் வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
நான்காம் நாள் – சென்னை
இந்தியா vs ஆஸ்திரேலியா – 08.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆஸ்திரேலிய அணி (49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன், ஸ்மித் 46, வார்னர் 41, லபுசேன் 27, மிட்சல் ஸ்டார்க் 28, ஜதேஜா 3/28, குல்தீப் 2/42, பும்ரா 2/35) இந்திய அணியிடம் (விராட் கோலி 85, கே.எல். ராகுல், ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க்)

இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு

          பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன் எடுத்தது. ஆறு விக்கட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 11ஆவது ஓவர் முடிவில் 50/1 ரன் எடுத்திருந்தனர். 25ஆவது ஓவர் முடிவில் 110/2; ஆனால் 49.3 ஓவரில் 199 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து விட்டனர்.

          இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், பும்ரா 60 பந்துகளில் 40 டாட் பந்துகள் வீசினார்; ஜதேஜா 60இல் 38 டாட் பால்; அஸ்வின் 60இல் 32 டாட் பால்; குல்தீப் 60இல் 31 டாட் பால். ஸ்மித், லபுசேன், அலக்ஸ் கேரி ஆகிய மூவரின் விக்கட்டுகளை ஜதேஜா, தான் வீசிய முதல் இரண்டு பந்துகளில் எடுத்துவிட்டார்.

டக், டக், டக்

          இந்திய அணி ஆடத் தொடங்கியதும் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது எட்டாவது முறை. இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு, ஜிம்பாபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது நடந்தது. எட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி ஒரு கேட்ச் கொடுக்க அதனை மார்ஷ் பிடிக்கத்தவறினார்.

The Lady luck smiled at Kholi

          அதன் பின்னர் கோலியும் ராகுலும் நிதானமாக ஆடினர். தேவைப்படும்போது ஷாட்டுகள் அடித்து, மீதி நேரத்தில் ஒரு ரன் எடுத்து, தடுத்து ஆடி வெற்றியைக் கிட்டத்தட்ட் ஏட்டியபோது விராட் கோலி, 37.4ஆவது ஓவரில், 85 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராகுலின் ஸ்கோர் 75. 41.2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து ராகுல் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்ட நேர முடிவில் ராகுல் 97 ரன், ஹார்திக் பாண்ட்யா 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த வெற்றியோடு இந்திய அணி 2 புள்ளிகள், 0.883 ரன்ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை ஹைதராபாத்தில் நெதர்லாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் அடுத்த ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறும்

நம்ம ஊரு சுற்றுலா: பிச்சாவரம்

pichavaram - 2026
#image_title

பகுதி 8 – பிச்சாவரம்

–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

          பஞ்சவடியில் இருந்து பாண்டிச்சேரி சென்று அங்கே ஊருக்குள் நுழையும் முன்னர் ஒரு அருமையான குளிர்பதன வசதி கொண்ட ஒரு ஹோட்டலில் எங்களது மதிய உணவை முடித்துக்கோண்டோம். பின்னர் அங்கிருந்து புவனகிரியில் எனது நண்பர் திரு இரவிசந்திரன்-புவனா இல்லத்திற்குச் சென்றோம்.  அவர்களோடு சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அங்கிருந்து பிச்சாவரம் சென்றோம்.

          பிச்சாவரம் புவனகிரிக்கும் சிதம்பரத்துக்கும் இடையே, வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி ஆகும். பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது என அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வூரில் அலையாத்திக் காடுகள் அல்லது சதுப்புநிலக்காடுகள் அல்லது ஆங்கிலத்தில் மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.

          பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம். இந்தச் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் (தில்லை மரங்கள்) அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.

          செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்கு அந்த காலகட்டத்தில் இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் இரை உயிரினங்களே காரணம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.

          பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் ‘கிள்ளை’ என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

          பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு 45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும். துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு. காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன. உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

          நாங்கள் சென்ற சமயத்தில் கூட்டம் சுமாராக இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் நாம் விரும்பும் படகுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டும். குறைவாக இருந்தால் படகுகள் குறைவாக இருக்கும். படகோட்டிகள் அதிகப் பணம் கொடுத்தால் இன்னும் அதிக தூரம் அழைத்துச் செல்வதாகக் கூறுவார்கள். ஆனால் அது தேவையில்லை என எனக்குத் தோன்றுகிறது.

          இந்தப் பகுதியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் முதல் காட்சி (‘கல்லை மட்டும் கண்டால்’ பாடல் காட்சி) இங்குதான் படமாக்கப்பட்டது. அதுபோல நடிகர் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் இங்கு எடுக்கப்பட்டது.

          ஒரு நல்ல படகுப் பயணம் செய்த பின்னர் மீண்டும் நண்பர் வீட்டுக்கு வந்தோம்.

மதுரை கோயில்களில் அக்.8 இன்று ராகு கேது பெயர்ச்சி விழா!

raghu ketu - 2026

மதுரை: மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில், அக்டோபர் எட்டாம் தேதி ஞாயிற்றுக் கிழமை ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. ராகு, பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னியா ராசிக்கும் இடம் பெயர்கிறார்.

இதை ஒட்டி ,மதுரையில் உள்ள அண்ணாநகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நவகிரக ஹோமங்களும், ராகு கேது பீரிதி கோஹமங்களும், அதைத் தொடர்ந்து நவகிரக ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

இதே போல ,மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், காலை 11 மணியளவில் நவகிரக ஹோமம், மற்றும் ராகு, கேது பிரீத்தி ஹோமம் ராகு கேது சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெறுகிறது. இதே போல, மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் மாலை 6 மணி அளவில் ராகு கேது பெயர்ச்சி அபிஷேகம் அர்ச்சனை நடைபெறுகிறது.

மதுரை அருகே உள்ள விசாக நட்சத்திர ஸ்தல் மற்றும் ராகு ஸ்தலமாக கருதப்படும் அருள்மிகு பிரளயநாத சுவாமி ஆலயத்தில், மாலை 4  மணி அளவில், ராகு கேது பெயர்ச்சி முன்னிட்டு, சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

சனீஸ்வர பகவான் ஸ்வாமி ராகு கிரகத்திற்கு, அதிபதி நட்சத்திரம் குரு அதிபதி குரு சனி ராகு ஆகிய ஸ்தலமாக கருதப்படும் இத்திருக்கோவிலில் தொழில் அதிபர் எம்.வி.எம். மணி தலைமையில், பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி பூபதி ஆகியோர் முன்னிலையில், சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.

சிறப்பு ஹோமங்களை, வரதராஜப் பண்டிட் தலைமையில் வேதியர் குழு செய்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

WC 2023: இரண்டு ஆட்டங்கள், ரன்கள் ’மெகா’வும் குறைவும்!

world cup cricket 2023 - 2026

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
மூன்றாம் நாள் இரண்டு ஆட்டங்கள்,
07.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் வங்கதேச, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது போட்டி டெல்லியில் தென் ஆப்பிர்க்கா, இலங்கை அணிகளுக்கிடையே நடந்தது.

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான் அணியை (37.2 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட், குர்பாஸ் 47, ஷாகிப் 3/30, மிராஸ் 3/25, இஸ்லாம் 2/34) வங்கதேச அணி (34.4 ஓவரில் 158/4, ஷண்டோ 59*, மிராஸ் 57) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஒரு குறைவான ஸ்கோர் ஆட்டம் இது. ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எந்த வகையிலும் சம்மாக இல்லை. எனவே வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா vs இலங்கை

தென் ஆப்பிரிக்க அணி (428/5, டி காக் 100, ராசி வான் டெர் டுஸ்ஸென் 108, மர்கரம் 106, மதுஷங்கா 2/86) இலங்கை அணியை (44.5 ஓவரில் 326 ஆல் அவுட், குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, தசுன் ஷனகா 68, ரஜிதா 33, ஜெரால்ட் 3/68, கேசவ் மகராஜ் 2/62, ரபாடா 2/50, ஜேன்சன் 2/92) 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

94.5 ஓவர்களில் மொத்தம் 754 ரன்கள் அடிக்கப்பட்ட ஹை ஸ்கோரிங் ஆட்டம் இது. தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று சதம் அடிக்கப்பட்டது. அதில் உலகக் கோப்பையில் அதிவேக சதம்.

(1) உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் 428/5 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்திலும் அதிக பட்ச ஸ்கோர்.
(2) ஒரு இன்னிங்ஸில் மூன்று சதம் என்பது இது நாலாவது முறை.
(3) மர்கரம் அடித்த 49 பந்து சதம் உலகக் கோப்பையின் அதிவேக சதம்
(4) மொத்தத்தில் 107 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
(5) மொத்தமாக 754 ரன்கள் உலகக் கோப்பையில் ஒரு சாதனை. இதற்கு முன்னர் 2019இல் ஆஸ்திரேலியா வங்கதேச ஆட்டத்தில் 714 ரன்கள் அடிக்கப்பட்டது.

இலங்கை அணி மறக்க நினைக்கும் ஒரு ஆட்டம். நாளை இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் சென்னையில் நடக்க உள்ளது. மாலை 15:00 மணிக்கு மேல் 20:00 மணிக்குள் மழை வருதற்கான 40% வாய்ப்பு உள்ளது.

இஸ்ரேல்: ஆபரேஷன் இரும்புக் கத்திகள் #OperationIronSwords

isreal operation iron swords - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இன்று சனிக்கிழமை (07.10.2023) அதிகாலை முதல் ‘ஹமாஸ்’ இராணுவப்பிரிவினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கட்டுகளை வீசியும் தனது இராணுவத்தினரை இஸ்ரேலுக்குள் அனுப்பி தரைவழி திடீர் தாக்குதலையும் நடத்தினர். இன்று யூத மதத்தினரின் விடுமுறை நாள். இதனால் இஸ்ரேலில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் அரசு மக்களை பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவித்துள்ளது.

          ஹமாஸின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ள இஸ்ரேல், ஹமாஸின் காசா பகுதியில் பதில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குண்டுவீச்சில் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 14 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. தாக்குதலுக்கு 10 நிமிடம் முன்னர் இஸ்ரேல் ஒரு முன்னெச்சரிக்கை விடுத்தது. அதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ஹமாஸ், யார் இவர்கள்?

          இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் என்ன பிரச்சனை? ஏன் இவர்கள் இஸ்ரேலைத் தாக்குகிறார்கள்? இதெல்லாம் ஒரு பெருங்கதை.

          ஹமாஸ் (Hamas – an acronym of Ḥarakah al-Muqāwamah al-ʾIslāmiyyah, meaning ‘Islamic Resistance Movement’) என்றால் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்று பொருள். மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் (Western Bank and Gaza Strip) ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய முயற்சிக்கு எதிரான முதல் பாலத்தீன எழுச்சி தொடங்கிய பிறகு 1987-ஆம் ஆண்டில் இவ்வியக்கம்உருவானது ஹமாஸ். இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இதன் சாசனம் கூறுகிறது.

          ஹமாஸ் இரு வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஒன்று இஸ் அட்-டின் அல்-காசம் என்ற தனது ராணுவப் பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூகப் பணிகளைச் செய்வது.

          ஆனால் 2005ஆம் ஆண்டில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் இயக்கம் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியது. 2006ஆம் ஆண்டு நடந்த பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. கூட்டணி அரசிலும் பங்கேற்றது. அதிபர் முகமது அப்பாஸின் ஃபதா இயக்கத்தைப் பகைத்துக் கொண்டதால் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு காசா பகுதிக்குள் முடங்கியது.

          அதன் பிறகு இஸ்ரேலுடன் மூன்று பெரிய போர்களில் காசா ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே அடைபட்டிருக்கும் காசா பகுதிக்குள் ஹமாஸ் இயக்கத்தை தனிமைப் படுத்துவதற்காகவும் தாக்குதல்களைத் நிறுத்தவதற்காகவும் இஸ்ரேல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

          ஹமாஸ் இயக்கத்தை முழுமையாகவும், சில நேரங்களில் அதன் ராணுவப் பிரிவை மட்டும் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகிய நாடுகள் பட்டியலிடுகின்றன. பாலத்தீனர்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட பாலத்தீன விடுதலை இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான அமைதி உடன்பாட்டை எதிர்த்த முக்கியமான இயக்கம் என்ற வகையில் 1990களில் பரவலாக அறியப்பட்டது ஹமாஸ்.

          இஸ்ரேலும் பாலத்தீன நிர்வாகமும் எத்தனையோ நடவடிக்களை ஹமாஸுக்கு எதிராக எடுத்தன. அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தன. ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் மூலமாக இஸ்ரேலுக்கும் – பாலத்தீன விடுதலை இயக்கத்துக்கும் இடையேயான அமைதி உடன்பாட்டை தகர்த்தது ஹமாஸ்.

தொடக்க காலம்

          1995ஆம் ஆண்டு டிசம்பரில் ஹமாஸின் வெடிகுண்டு தயாரிப்பாளரான யாயா ஆயாஷை இஸ்ரேல் கொன்றது. இதற்குப் பழிவாங்கும் வகையில் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தியது. சுமார் 60க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள்.

          ஆஸ்லோ உடன்பாட்டுக்குப் பிறகு, குறிப்பாக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் கேம்ப் டேவிட் பேச்சுகள் தோல்வியடைந்த பிறகும், இரண்டாவது பாலத்தீன எழுச்சியைச் தொடர்ந்தும் ஹமாஸ் இயக்கம் வலுவடைந்தது. ஃபதா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்த்தீன நிர்வாகத்தில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நிறைந்திருப்பதாக அதிருப்தி எழுந்த நிலையில், ஹமாஸ் இயக்கம் மருத்துமனைகளும் பள்ளிகளையும் உருவாக்கியது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள்

          இரண்டாவது பாலஸ்தீன எழுச்சியின் தொடக்க ஆண்டுகளில் ஹமாஸ் இயக்கத்தின் தற்கொலைத் தாக்குதல்களை பாலத்தீனர்கள் பரவலாக ஆதரித்தனர். அவற்றை தியாக நடவடிக்கைகள் என்று அவர்கள் கருதினார்கள். மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பழிவாங்கப்படுவதாக எண்ணினார்கள். 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹமாஸ் மதத் தலைவர் ஷேக் அகமது யாசின் மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அப்துல் அஜீஸ் அல்-ரேன்டிஸ்ஸி ஆகியோரை ஏவுகணைகள் மூலம் கொன்றது இஸ்ரேல்.

          அதே ஆண்டில் ஃபதா இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத் மரணமடைந்தார். யாசர் அராபத் பாலஸ்தினத்தின் முகமாக இருந்தார். பாலஸ்த்தீன நிர்வாகத்துக்கு முகமது அப்பாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கருதக்கூடியவர் அவர். 2006ஆம் ஆண்டு நடந்த பாலஸ்த்தீன நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஃபதா இயக்கத்துக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் அதிகார மோதல் தொடங்கியது.

ஆட்சியில் பங்கேற்பு

          தேர்தலில் வெற்றிபெற்றிருந்த ஹமாஸ் இயக்கம், அதற்கு முன் பாலத்தீன நிர்வாகத்தால் கையெழுத்திடப் பட்டிருந்த அனைத்து உடன்பாடுகளையும் எதிர்த்தது. இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிப்பது உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும். அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான பாலத்தீன அரசில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா சிறிது காலம் பிரதமராகப் பணியாற்றினார்.

          இஸ்ரேல் நாட்டை உள்ளடக்கிய வரலாற்று ரீதியிலான நிலப்பரப்பே பாலஸ்தீனம் என ஹமாஸின் சாசனம் வரையறுக்கிறது. யூத நாட்டுடன் எந்தவிதமான அமைதி உடன்பாடும் கூடாது என்கிறது. யூத மக்களுக்கு எதிரான கடுமையான கருத்துகள் அந்த சாசனத்தில் கூறப்பட்டுள்ளன. அதனால் யூத எதிர்ப்புக் கொள்கையைக் கொண்ட அமைப்பு என ஹமாஸ் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

          2017ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் தனது புதிய கொள்கைகளைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டது. 1988ஆம் ஆண்டு சாசனத்தின் பல்வேறு அம்சங்களில் தீவிரத்தன்மை இதில் குறைந்திருந்தது. நிலைப்பாடுகள் மாறியிருந்தன. ஆயினும் இஸ்ரேல் என்றொரு நாட்டை அங்கீரிப்பதாயில்லை. ஆனால் காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாலத்தீன நாட்டை உருவாக்குவதை ஒப்புக் கொண்டது.

          ஹமாஸின் சண்டை, யூதர்களுக்கு எதிரானதல்ல, “ஸியோனிச ஆக்கிரிப்பாளர்களுக்கு” எதிரானது என்கிறது ஹமாஸின் புதிய ஆவணம். யூதர்கள் பின்பற்றுவது ஸியோனிசம். எனவே ஸியோனிசத்தை எதிர்ப்பதும் யூதர்களை எதிர்ப்பதும் ஒன்றுதான் என்பது வெளிப்படை. இது தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் நாங்கள் பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணீயத்தைத்தான் எதிர்க்கிறோம் என்பதற்கு ஒப்பானது. ஆனால் இஸ்ரேல் ஹமாசின் ‘ஸியோனிச எதிர்ப்பு’ கருத்தை ஏற்கவில்லை. உலகை ஏமாற்றும் முயற்சி என்று விமர்சித்தது.

அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள்

          ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகளும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. 2007ஆம் ஆண்டு காசா பகுதியில் இருந்து ஃபதா இயக்கத்துக்கு ஆதரவான படைகளை ஹமாஸ் இயக்கம் வெளியேற்றியது. பதிலடியாக காஸாவின் எல்லைகளில் தடைகளைக் கடுமையாக்கியது இஸ்ரேல். பதிலடியாக ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

          காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் அனைத்து ராக்கெட் தாக்குதல்களுக்கும் ஹமாஸ் இயக்கமே காரணம் என்கிறது இஸ்ரேல். இதுவரை காசா பகுதிக்குள் மூன்று முறை ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டு டிசம்பரில் காசா பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல்களைத் தடுப்பதற்காக ஆபரேஷன் கேஸ்ட் லீட் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் நடத்தியது. 22 நாள்கள் நடந்த இந்தப் போரில் 1,300 பாலத்தீனர்களும் 13 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள்.

          இதே போன்றதொரு காரணத்துக்காக 2012ஆம் ஆண்டில் ஆபரேஷன் பில்லர் டிஃபன்ஸ் என்ற பெயரில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த வான்வெளி தாக்குதலில் காசா படைப் பிரிவின் தலைவர் அகமது ஜபாரி கொல்லப்பட்டார். 8 நாள்கள் நீடித்த சண்டையில் 170 பாலத்தீனர்களும் 6 இஸ்ரேலியர்களும் பலியானார்கள்.

          இந்த இரு சண்டைகளில் இருந்து மீண்டு வந்தது ஹமாஸ். ராணுவ ரீதியாக பின்னடைவு ஏற்பட்டாலும் இஸ்ரேலை எதிர்த்த இயக்கம் என்ற வகையில் பாலத்தீனர்களின் பரவலான ஆதரவு ஹமாஸுக்குக் கிடைத்தது. 2014-ஆம் ஆண்டு மேற்குக் கரையில் இருந்த ஹமாஸ் இயக்க உறுப்பினர்களை இஸ்ரேல் அதிரடிச் சோதனைகளை நடத்திக் கைது செய்தது.

          அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது ஹமாஸ். அதற்கு மறுநாளே ஆபரேஷன் புரோடெக்டிவ் எட்ஜ் என்ற பெயரில் தாக்குதல்களைத் தொடங்கியது. காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் சுரங்கப் பாதைகளையும் அழித்தது. இந்தச் சண்டை 50 நாள்கள் நீடித்தது. 2,251 பாலத்தீனர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் 1,462 பேர் பொதுமக்கள். இஸ்ரேலியத் தரப்பில் 67 வீரர்களும் பொதுமக்களில் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

          2014ஆம் ஆண்டில் இருந்து அவ்வப்போது சண்டைகள் தொடங்குவதும் எகிப்து, கத்தார், ஐ.நா. போன்றவற்றின் தலையீட்டில் நிறுத்தப்படுவதுமாக பலமுறை நடந்திருக்கிறது. முழு அளவிலான போர் எதுவும் வெடிக்கவில்லை. காசா பகுதியைச் சுற்றி கடுமையான தடைகளை இஸ்ரேல் விதித்திருந்தாலும், ஹமாஸ் இயக்கம் காசாவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ராக்கெட்டின் வலிமையையும் அதிகரித்திருக்கிறது. ஃபதா இயக்கத்துடனான அமைதி முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.

          அதே நேரத்தில் காசா பகுதியில் வசிக்கும் சுமார் 20 லட்சம் பாலத்தீன மக்களின் நிலைமை மோசமடைந் திருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. குடிநீர், மின்சாரம், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

          இன்றைய தாக்குதல்களுக்குப் பின்னர் இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக ஆப்பரேஷன் அயர்ன் சுவார்ட்ஸ் (இரும்புக் கத்திகள் நடவடிக்கை) தொடங்கி இருக்கிறது. எனவே இந்தப் பகுதியில் மீண்டும் ஒரு முறை பதற்றம் அதிகரித்திருக்கிறது.

இஸ்ரேலைத் தாக்கிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! போர் என அறிவித்த நெதன்யாஹு!

isreal operation iron swords - 2026
#image_title

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர், விமான நிலையங்களில் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது. இஸ்ரேல் மக்களே, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம். ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெற்றியைப் பெற முடியாது.. போர்தான் என்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் இப்போது போர்க்களத்தில் உள்ளோம். போரில் வெல்வோம். நமது எதிரி அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும், இதுவரை அவர் கண்டிராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர். 
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே, பாலஸ்தீனர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர் என்று பாலஸ்தீன அதிபர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, காஸா பகுதியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் மையப்பகுதியும் தெற்குப்பகுதியிலும் சனிக்கிழமை காலை 3.5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இஸ்ரேல் ஒரு அவசரநிலையில் உள்ளது” மற்றும் ஹமாஸின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு “கடுமையான இராணுவ பதிலடியை” ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக அறிக்கை கூறியுள்ளது.

பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் தங்கியிருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,  இஸ்ரேலில் 18000 இந்தியர்கள் இருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனியாக இருப்பதை தவிர்த்து விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

அங்கு வாழும் இந்தியர்கள் அவசர தேவைக்கு +97235256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது consl.telaviv@mea.gov.in க்கு மெசேஜ் அனுப்பலாம். — இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் –

tirupathi perumal in simma vahanam - 2026
#image_title

கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் – சுவாரஸ்யமான திருப்பதி கதை

திருப்பதி ஏழுமலையான், தடபுடலாக வாத்திய கோஷங்கள் முழங்க வீதியுலா வந்துகொண்டிருந்தார். ஊர்வலம் தெற்கு மாடவீதியில் இருக்கும் அசுவ சாலையை அடைந்தது. வாத்தியங்கள் எல்லாம் திடீரென `கப்சிப்’ என்று அமைதியாகிவிட்டன. அதுவரை அசைந்து, அசைந்து எழிலாய் பவனி வந்த பெருமாளும் அந்தச் சாலையைக் கண்டதும் வேகவேகமாய் ஓடிக் கடந்தார். ‘அட, ஏன் இப்படி ஏழுமலையான் சந்தடியில்லாமல் அவசரமாகக் கடந்துசெல்கிறார்’ என்று நினைத்து அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தால், அதன் பின்னே கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் சம்பவம் ஒன்றிருப்பதை அவர்கள் விளக்கினர்.

திருப்பதி
கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதைப்போல,கடனுக்குச் சுண்டல் வாங்கிச் சாப்பிட்டு, அதை அடைக்க முடியாமல் ஓடும் வேங்கடவன் திருவிளையாடல் இது.’

ஏழுமலை அடிவாரத்தில் உள்ளது சந்திரகிரி. அந்த சந்திரகிரியில்தான் மங்காபுரம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு ஆதரவற்ற கிழவி ஒருத்தி சுண்டல் விற்று வாழ்ந்து வந்தாள். நாள்தோறும் ஏழுமலைமீது கூட்டம் கூட்டமாக மக்கள் ஏறிச் செல்வதைக் கிழவி பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஒருநாள், அப்படி மலையேறும் ஒருவரிடம், நீங்கள் எல்லாம் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டாள். அதற்கு அந்த ஆள்,என்ன பாட்டி, இப்படிக் கேட்கிறாய்…மேலே கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வேங்கடவன் கோயில் இருக்கிறதில்லையா… அவனை தரிசிக்கத்தான் செல்கிறோம்” என்று சொன்னான்.

கிழவிக்கு ஆர்வம் மேலிட, அப்படியா, எனக்கும் இங்கு யாரும் இல்லை. நான் அவனை தரிசித்து இந்தப் பிறவி போதும் என்று வேண்டிக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். அழைத்துச் செல்வீர்களா?" என்று கேட்டாள். உடனே அந்த நபரும்,சரி பாட்டி, என்னோடு வா” என்று சொல்லி அழைத்துச் சென்றார். கிழவியும் திருமலை சென்று வேங்கடவனை தரிசித்தாள். அவள் மனம் குளிர்ந்துவிட்டது. ஆனாலும், வேங்கடவனை தினமும் கண்ணாரக் கண்டு தரிசிக்க ஆர்வம் கொண்டாள். தன்னை அழைத்து வந்த மனிதரிடம், “நான் இங்கேயே தங்கி இறைவனை தரிசித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். மேலும், எனக்கு அவனை பிரத்யட்சமாகக் காண வேண்டும் என்று ஆசை” என்றாள்.

“பாட்டி, நாங்கள் சம்சாரிகள். எங்களுக்கு அவனை நேரில் காணும் வழிகள் தெரியாது. ஒருவேளை இந்த மலையிலேயே இருந்துகொண்டு தவம்புரியும் முனிவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்” என்று சொல்லி, கிழவியை அந்த முனிவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டனர்.

பெருமாள்
கிழவி அந்த முனிவர்களிடம், நான் இங்கேயே உங்களுடன் தங்கியிருந்து உங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினாள். முனிவர்களும் சம்மதித்தனர். கிழவியும் அங்கேயே தங்கிக்கொண்டு, முனிவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துவந்தாள். `தனக்கு என்ன வேண்டும்' என்று முனிவர்களிடம் அவள் சொல்லவேயில்லை. சில நாள்கள் கழித்து முனிவர்களும் அவளிடம் சென்று,அம்மா, தங்களுக்கு என்ன வேண்டும்?”என்று கேட்டனர்.

கிழவியும், தனக்கு வேங்கடவனை கண்களால் பிரத்யட்சமாகக் காண வேண்டும். அதற்கு உதவ முடியுமா?" என்று கேட்டாள். முனிவர்களுக்கோ ஆச்சர்யம். இதுவரை தவமியற்றி வரும் தங்களுக்கே தரிசனம் கொடுக்காத பெருமாள், எதுவும் அறியாத கிழவிக்கு எவ்வாறு தரிசனம் கொடுப்பார் என்று எண்ணினர். ஆனபோதும் கிழவியின் நம்பிக்கையைக் கெடுக்காமல்,அம்மா, கோயிலுக்குத் தெற்கே இருக்கும் புளியமரத்தின் அடியில் ஒரு புற்று உள்ளது. பெருமாள் அதனுள் அமர்ந்துதான் தவம் செய்து வந்தார். பிறகு பத்மாவதித் தாயாரை மணந்துகொண்டு திருமலையில் கோயில் கொண்டுவிட்டார். நீ அவர் தவமிருந்த புற்றுக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டு, பெருமாளை தியானித்துக் கொண்டிருந்தால், உனக்கு அவனுடைய தரிசனம் கிடைக்கக்கூடும்” என்று கூறினார்கள். அவர்கள் சொன்னபடியே கிழவியும் புற்றுக்கு அருகில் சென்று அமர்ந்துகொள்ளத் தயாரானாள். ஆனால். பெருமாளை தரிசிக்க வெறும் கையுடன் போகக்கூடாது என்று நினைத்து, சுண்டல் செய்து எடுத்துக்கொண்டு சென்றாள்.

பெருமாள்
ஒவ்வொருநாளும் சுண்டல் செய்து எடுத்துக்கொண்டு புற்றின் அருகே சென்று அமர்ந்துகொள்வாள். வேங்கடவன் வருவானா என்று காத்திருப்பாள். கிழவியின் வைராக்கியத்தைக் கண்டு மனமிரங்கிய பெருமாள் ஒருநாள், வயோதிக வேடம் கொண்டு புற்றிலிருந்து வெளியே வந்தார். கிழவியைக் காணாததுபோல நடந்தார். உடனே கிழவி ஓடிச்சென்று அவரை நிறுத்தினாள். அவரின் திவ்யமுக தரிசனத்திலேயே அவர் யார் என்று புரிந்துவிட்டது.

“ஐயா, உங்களைக் கண்டால் பசியால் வாட்டம் கொண்டவர்போல் இருக்கிறது. இந்தச் சுண்டலை உண்டு பசியாறுங்கள்” என்றாள்.
பெருமாளும் அவள் கையால் தந்த சுண்டலை சுவைத்து உண்டார். சுண்டலை உண்டபின்பு கிளம்பப் போன பெருமாளைக் கிழவி தடுத்து,

“சுண்டலுக்குப் பணம்? ” என்றாள்.

“என்னது பணமா, சொல்லவேயில்லையே… நானே கடன்பட்டுக் கல்யாணம் செய்து இன்றுவரை அதற்கு வட்டி கட்டிக்கொண்டு திரிகிறேன். என்னிடம் ஏது பணம்? ” என்று கேட்டார்.

கிழவியோ, பெருமாள் தன்னிடம் சிக்கிக்கொண்டதை அறிந்து, அய்யா, இந்த உலகத்தில் பணம் இல்லாது ஏதேனும் கிடைக்குமா?" என்று கேட்டாள். உடனே பெருமாளும்,சரி, நாளை வந்து தருகிறேன்” என்று சொல்லிப் போனார்.

மலையப்ப சாமி
மறுநாளிலிருந்து பெருமாள் வரவேயில்லை. ஆனால், கிழவிக்கு வந்தவர் பெருமாள் என்றும், அவர் தனக்குத் தரப்போகும் பணம் வைகுண்டப்பதவி என்பதையும் அறிந்திருந்தாள். ஆனால், இன்னும் திருமலையிலேயே வாசம்செய்யும் வேங்கடவனோ, அந்தக் கிழவிக்குத் தரவேண்டிய கடனுக்கு அஞ்சுபவர்போலவும், அதனால், அவளிருக்கும் திசைக்குச் செல்லும்போதெல்லாம், மறைந்து ஓடுவதுபோலவும் விளையாடிக்கொண்டிருந்தார்.

கிழவி ஒரு நாள் வைகுண்டப் பதவியையும் பெற்றுவிட்டாள். ஆனபோதும் பெருமாள் கிழவிக்கு அருள்பாலித்த திருவிளையாடலை நினைவுகூரும் விதமாக, இன்றும் வீதியுலா எழுந்தருளும்போது, கிழவி இருந்த இடத்தில் சத்தமின்றி கடன்பட்டவன்போல மறைந்து செல்வது தொடர்கிறது.

இந்தச் சம்பவத்தை பிரம்ம வசிஷ்ட பீட பரம்பரையைச் சேர்ந்த ஶ்ரீமான் அரங்கப் பிரகாச சுவாமிகள் கவியாக எழுதினார். அதில் கிழவி, தனக்கு வரவேண்டிய கடனுக்காக பெருமாளிடம் வாதம் செய்வதுபோல அந்தப் பாடல் அமைந்திருக்கும். அந்தப் பாடலை எம்.ஹரி பூஷணம் எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

“நாளை என்று நிதம் கெடுவுகள் சொல்லி நீ
வருடக் கணக்குகளாய் ஆக்கிவிட்டாய்
ஏழையாகிய என்னை ஆட்கொண்டருளாமலே
பாராமுகம் செய்வது நியாயமோ ” என்று கிழவி கேட்க

“அன்புடன் பக்தர்களை காத்து ரட்சித்ததுபோல
கலியுகமந்திய காலத்திலே
இன்பமாய் கொண்டாடி அசலையும் வட்டியையும்
காலந்தவறிடாமல் கொடுப்பேனம்மா”

என்று பெருமாள் பதில் சொல்வதுபோலக் கவி செய்திருக்கிறார் அரங்க பிரகாசர்.

திருப்பதியில் மட்டுமல்ல, சென்னையில் இருந்து திருப்பதி குடை செல்லும் நேரத்தில், யானைக் கவுனியிலும் இந்தத் திருவிளையாடல் நடைபெறுவதுண்டு. ஶ்ரீ வைகுண்டத்தை வெறுத்து புஷ்கரணித் தீரத்தில் வந்தமர்ந்த வேங்கடவன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கடன் பெற்றவன் என்றால் அதில் தவறில்லை.

சென்னை: 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

1744995 central - 2026

பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (அக்.7) முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு – வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை (அக்.7) இரவு 11.30 முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை 7 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.

அதன்காரணத்தால், அந்த 7 மணி நேரத்துக்கு பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி நிறுத்தம்: அக்.7-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்தும், இரவு 9.45 மணிக்கு திருத்தணியிலிருந்தும் சென்ட்ரல் வரும் மின்சார ரயில்கள் ஆவடியுடன் நிறுத்தப்படும்.

அதேபோல், அக்.8 – ஆம் தேதி சென்ட்ரலிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு திருத்தணிக்கும், அதிகாலை 5 மணிக்கு திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.