Home Blog Page 5610

ரூ. 1 கோடி தரேன்னீங்களே என்ன ஆச்சு? ரஜினியிடம் அய்யாக்கண்ணு கேள்வி

rajinikanth - 2026

நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவரது இல்லத்துக்கு அய்யாக்கண்ணு வருகை தந்தார்

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க
ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு வருகை தந்தார்.

தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ரூ.1 கோடி தருவதாக கூறியது குறித்து
அவரிடம் மனு அளித்தார் அய்யாக்கண்ணு.

ஆதரிப்பதா; எதிர்ப்பதா?: ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.,க்கள் தவிப்பு

Tamil Nadu Assembly EPS - 2026

அ.தி.மு.க., ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ., க்கள் சட்டசபையில் பேச வாய்ப்பு பெற
முடியாமல், பெயருக்கு வந்து செல்கின்றனர்.

ஓபிஎஸ் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

‘அ.தி.மு.க.,வில் இருந்து, சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்.

ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’

இக்கோரிக்கைகளுடன் உள்ள ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை சசிகலா அணியினர் ஏற்றுக்
கொள்ளவில்லை.

முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள்சசிகலா குடும்பத்தை விட்டு விலக
முடியாமல், தவிக்கின்றனர்.

சட்டசபை கூட்டத்திற்கு, ஓபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், பெயரளவிற்கு
வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களால், எதையும் பேச முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறுவது:

எதிர்க்கட்சியாக இருந்தால், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பேச முடியும்.
ஆளும் கட்சியாக இருந்தால், அரசின் சாதனைகள் குறித்து பேச வாய்ப்பளிப்பர்.
நாங்கள், இரண்டும் இல்லாமல், திரிசங்கு நிலையில் உள்ளோம்.

சட்டசபையில் பேச, ஆளும் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. துணை
கேள்வி கேட்க, சபாநாயகர் வாய்ப்பு தருவதில்லை.

எங்கள் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன், பல முறை பேச வாய்ப்பு கேட்ட பின்,
சபாநாயகர் ஒரு முறை மட்டும் அனுமதித்தார். எனவே, அரசுக்கு எதிராக செயல்பட
வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதுகுறித்து எங்கள் அணியினருடன் பேச உள்ளோம்
என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆளுநரிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

Stalin met governor - 2026

ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநரை சந்தித்த போது அவரிடம் அளிக்கப்பட்ட புகார்
கோப்புகளும், கோரிக்கையும் தமிழாக்க வடிவில் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாராம்சங்கள் எடப்பாடி மற்றும் சசிகலாவை
மையப்படுத்தியே உள்ளது…

அதில் முக்கிய விசயமாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய
கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலின் ஆளுநரிடம் விடுத்த கோரிக்கையின் தமிழாக்கம்:

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்துள்ள குளறுபடிகள்,
“டைம்ஸ் நவ்” வீடியோ டேப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு, மீண்டும்
புதியதாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு உத்திரவிட வேண்டும். சி.பி.ஐ அமைப்பு நேரடியாகவும்,
பாரபட்சமற்ற முறையிலும் “கூவத்தூர்” மற்றும் “குதிரை பேரம்” குறித்து விசாரணை
மேற்கொண்டு 1988-ஆம் வருடத்திய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வருவாய் புலனாய்வுத் துறை மற்றும்
அமலாக்கத்துறை ஆகிய துறைகள் “குதிரை பேரம்” “பண பரிமாற்றம்” “தங்கம்
கொள்முதல்” உள்ளிட்டவை பற்றி நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதப்
பணப்பரிமாற்றம் நடைபெற்ற பாதைகளை கண்டறிந்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகள்
மூலம் மட்டுமே, சந்தேகத்திற்குரிய வகையில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டு,
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஒரு
அரசாங்கம் நடைபெறக் காரணமாக இருப்பவர்களின் கைகளிலிருந்து ஜனநாயகத்தை
பாதுகாக்க முடியும். அது மட்டுமின்றி, அரசியல் சட்டப்படியான நம்பிக்கை
வாக்கெடுப்பில் “குதிரைபேரம்” மூலம் வெற்றி பெற்றதை தடுத்து ஜனநாயகத்தை மீட்க
முடியும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்று தனது கோரிக்கையின் மூலம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு இயந்திரம் சரிவர செயல்படாத நிலையில், ஆளுநருக்கே முடிவெடுக்கும் உச்சபட்ச
அதிகாரம் இருப்பதால், இது தொடர்பாக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டு ஏறாமல் கிளம்பிய ஆலப்புழா எக்ஸ்பிரஸ்: டிரைவர்களிடம் விசாரணை

Indian railways - 2026

*சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சிக்னலும் போடல.

*கார்டும் ஏறல.

*பறந்தது ஆலப்புழா எக்ஸ்பிரஸ்

* நடுவழியில் 1 மணி நேரம் நிறுத்தம்

* டிரைவர்களிடம் அதிரடி விசாரணை

சேலம்:

சேலத்தில் ரயில் இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் கொடுக்கும் கார்டு ஏறுவதற்கு
முன், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு
ஏற்பட்டது. விதியை மீறி ரயிலை எடுத்துச் சென்ற டிரைவர்களிடம் அதிகாரிகள்
விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்
(22640) நேற்று வழக்கம்போல் அதிகாலை 1.20 மணிக்கு சேலத்திற்கு வந்தது.

அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் நின்றபடி பச்சை விளக்கை காட்டி சிக்னல்
கொடுக்கும் கார்டு மது என்பவர், கீழே இறங்கி அருகில் பார்சல் அனுப்பும்
பெட்டியை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதிகளவில் பார்சல்கள் இறக்கி,
ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென ரயில் புறப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால்
கார்டு மதுவால் தனக்குரிய பெட்டியில் ஏற முடியவில்லை. உடனே, நான் சிக்னல்
கொடுப்பதற்கு முன் எப்படி ரயிலை எடுத்துச் செல்லலாம்? என வாக்கி டாக்கியில்
பேசியுள்ளார்.

அதையும் இன்ஜினில் இருந்து இரு டிரைவர்களும் கவனிக்கவில்லை. இதனால், ரயில்
சேலத்தை கடந்து தின்னப்பட்டியை நோக்கிச் சென்றது. இதையடுத்து நிலைய
மேலாளருக்கு கார்டு மது தகவல் கொடுத்தார்.

உடனடியாக தின்னப்பட்டி ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல்
கொடுத்து, ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். வேகமாக
சென்று கொண்டிருந்த ரயில், நடுவழியில் திடீரென ஒரு ஸ்டேஷனில் நின்றதால்
பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அந்த பகுதியில், ரயில்களை நிறுத்தி பயணிகளிடம் நகைபறிப்பு சம்பவம்
நடந்தது என்பதால் பெண்கள் பீதி அடைந்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பின், தின்னப்பட்டிக்கு கோவையில் இருந்து சென்னை
செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. அந்த ரயிலில் வந்திறங்கிய
கார்டு மது, ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பச்சை விளக்கை காட்டி சிக்னல்
கொடுத்தார்.

இதையடுத்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் பற்றி, சேலம் ரயில்வே கோட்ட
போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தங்களின்
விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் புறப்பட, கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு
பச்சை விளக்கை எரியச் செய்து சிக்னல் கொடுப்பதோடு, வாக்கி டாக்கியிலும்
புறப்படலாம் என தகவல் கொடுக்க வேண்டும்.

இத்தகவலை பெற்ற பின்னர் தான், இன்ஜின் டிரைவர்கள் ரயிலை எடுக்க வேண்டும்.
ஆனால், ரயிலில் கார்டு ஏறாத நிலையில், சிக்னல் ஏதும் பெறாமல் தன்னிச்சையாக
டிரைவர்கள் ரயிலை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் டிரைவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப்பண தகவல்களை அளிக்க சுவிஸ் ஒப்புதல்!

images - 2026

கருப்புப் பணம் குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள
சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியா உள்பட 40 நாடுகளின் நிதிச் சேவை கணக்கு விவரங்களை அது தானாகவே
பகிர்ந்து கொள்ள உள்ளதாம்.
கருப்புப் பண விவரங்களை சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு உடனடியாகத் தரத் தயாராக
உள்ளதாம் சுவிட்சர்லாந்து அரசு!

‘மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க முடியும்?

246400 479182102136836 1433845875 n 2 - 2026

”மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க
முடியும்?
விவாகரத்து வரை போன ஒரு தம்பதிகளை சேர்த்துவைத்த பெரியவா

ஜூன் 17,2017,தினமலர்-விட்டுக் கொடுத்து வாழுங்கள்!-திருப்பூர் கிருஷ்ணன்

ஒரு கணவன், மனைவி…ஒற்றுமையாகத் தான் இருந்தனர். திடீரென அவர்களிடையே தகராறு
வந்தது. பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் இதை ஊதி ஊதி பெரிது பண்ணி
விட்டார்கள். கடைசியில் விவாகரத்து வரை போனது. அவளுக்கு விவாகரத்தில்
விருப்பமில்லை. ஏன் அவள் கணவனுக்கும் கூட அதில் சம்மதமில்லை. வீட்டு
பெரியவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய சூழலில் இருந்தார்கள்.

காஞ்சிப் பெரியவரின் ஆசிகளோடு என்றுதானே கல்யாணப் பத்திரிகையில் அச்சிட்டோம்!
அவர் நடமாடும் தெய்வ மல்லவா! அவரைப் போய்ப் பார்ப்போம் என முடிவு செய்தாள்.

அவள் தன் பெற்றோருடன் காஞ்சிபுரம் போனாள். பெரியவரின் அருள் வேண்டி அவர்முன்
நின்றாள். நிம்மதியில்லாமல் தவிக்கும் தன் மனநிலையை மானசீகமாக அவரிடம்
முறையிட்டாள்.
எல்லார் மனதையும் படித்துவிடும் ஆற்றல் வாய்ந்த அந்தக் கருணைக் கடல், அவளையே
பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ‘காமாட்சி கோவிலுக்குப் போய்
அம்பாளை தரிசனம் பண்ணிவிட்டு வா!’ என்றார். அவள் புறப்பட்டாள்.
பெற்றோரும் அவளோடு புறப்பட்டனர்.

”நான் அவளைத்தான் காமாட்சி கோவிலுக்குப் போகச் சொன்னேன்!” என்றார் சுவாமி.

பெற்றோர் தயங்கி அங்கேயே நின்று விட்டார்கள்.

அர்ச்சனைத் தட்டைக் கொடுத்துவிட்டு சன்னதியில் பக்திப் பெருக்குடன் நின்றாள்
அவள். அர்ச்சனை நிறைவடைந்ததும் தட்டைக் கொண்டு வந்தார் அர்ச்சகர். அவள்
கைநீட்டி வாங்கிக் கொள்ளப் போனாள்.

‘ரெண்டு பேருமாச் சேந்து வாங்கிக்குங்கோ!’ என்றார் அர்ச்சகர்.

யார் ரெண்டு பேர்? நான் மட்டும் தானே நிற்கிறேன்? அவள் திரும்பிப் பார்த்தாள்.
என்ன ஆச்சரியம்! அவள் கணவன் தான் அவள் பின்னால் நின்று கொண்டிருந்தான்.

இருவர் விழிகளிலும் கண்ணீர் வழிந்தது. சேர்ந்தே அர்ச்சனைத் தட்டை வாங்கிக்
கொண்டார்கள். விழிகளைத் துடைத்துக் கொண்டு, பேசியவாறே மடத்தை நோக்கி
நடந்தார்கள். அந்தப் பேச்சில் எல்லாப் பிரச்னையும் சரியாகி விட்டது.

பெரியவரை இருவருமாகச் சேர்ந்து வணங்கினார்கள்

. ”மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க
முடியும்? அர்ச்சனைத் தட்டைச் சேந்து வாங்கிண்ட மாதிரி வாழ்க்கையையும் சேந்து
வாழப் பழகுங்கோ! ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழறதுதான் வாழ்க்கை.
விட்டுக் கொடுக்கறதில உள்ள சந்தோஷம் அதை அனுபவித்து பார்த்தால் தான்
புரியும்…! யாரோட வார்த்தைகளும் இனிமே உங்களைப் பிரிக்காது! பிரிக்கும்படி
நீங்களும் விடக்கூடாது.”

பெரியவர், அவளுக்கு குங்குமப் பிரசாதத்தை மட்டுமல்ல. ஆனந்தமான வாழ்க்கையையும்
பிரசாதமாக வழங்கி விட்டார்.

ஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்

thirukkachur - 2026

பிட்சை ஏற்று சுந்தரர் பசி தீர்த்த ஈசன்!

அமரர்கள் பலம்பெற அமிர்தம் தேவைப் பட்டது. பாற்கடலைக் கடைந்தால் அமுதம் பெறலாம் என்றனர். அசுரருக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. இருவரும் இணைந்து மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தனர். மலையோ கனம் தாங்காது கடலில் அமிழத் தொடங்கியது. அது மூழ்காமல் தடுக்க, திருமால் ஆமை (கச்சப) உருக் கொண்டு மந்தார மலையின் அடியினைத் தம் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார். இவ்வாறு திருமால் பலம் பெற்று மலையைத் தாங்க, சிவபெருமானின் அருளும் தேவைப் பட்டது. அவர் பூவுலகில் ஒரு மலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அந்த மலையின் எதிரே இன்னொரு மலையில் சிவபெருமான் கோயில் கொண்டார். இவ்வாறு இருவரும் கோயில் கொண்ட மலைகள் இரண்டும் ஔஷதகிரி என, மருந்துமலை எனும் பெயர் பெற்றது.

சென்னை – செங்கல்பட்டு சாலையில், சிங்கப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சிறிது தொலைவில் ஆப்பூர், திருக்கச்சூர் எனும் இரு தலங்கள். ஆப்பூரில் உள்ள ஔஷதகிரி மலையில் திருமால், கல்யாணவேங்கடேசராக கோயில் கொண்டிருக்கிறார். திருக்கச்சூரில் ஈசன் மருந்தீஸ்வரராகக் கோயில் கொண்டிருக்கிறார்.

திருமால் கச்சபம் (ஆமை) உரு எடுத்து ஈசனை வழிபட்ட தலம், கச்சபவூர் என்று வழங்கப்பட்டு, இன்று திருக்கச்சூர் என்று பெயர் பெற்றுள்ளது. காஞ்சியில் ஒரு கச்சபேஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆனால், இந்தத் திருக்கச்சூரே ஆதிகச்சபேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. இங்கே உள்ளது கூர்ம தீர்த்தம். இதில்தான் கூர்மமாக திருமால் அமிழ்ந்து, அமுதம் கொணர பாற்கடலுக்குச் சென்றாராம். எனவே இது கூர்ம தீர்த்தமாகப் பேர் பெற்றது. பாற்கடல் அமுதம் இந்த தீர்த்தத்தில் கலந்ததால், இது அமுத தீர்த்தமாம்! இங்குள்ள தியாகராசப் பெருமானும் அமுத தியாகேசர் எனும் பேர் பெற்றார்.

எனவே, இந்தக் கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.

சிவபெருமான் சுந்தரருக்காகத் தம் கையில் திருவோடு ஏந்தி பிட்சை ஏற்று சுந்தரரின் பசிபோக்கிய தலம் எனும் பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.

தலங்களைத் தரிசித்து வந்த சுந்தரர், இங்கே ஆலயத்தினுள் சென்று பெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளியில் வந்தார். வெகு தொலைவில் இருந்து வந்த காரணத்தால் களைப்பும் பசியும் சேர, தள்ளாடி, கோயிலின் வெளி மண்டபத்தில் படுத்தார். சுந்தரரின் நிலை கண்ட ஈசன், ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்பினார். அவரை எழுந்து அமரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுத்தார்.

அன்னம் வேறு வேறு வண்ணங்களுடன், வேறு வேறு சுவையுடன் இருப்பது கண்ட சுந்தரர் காரணம் கேட்டார். சமைத்து உணவு கொண்டுதர நேரம் இன்மையால் அங்குள்ள வீடுகளுக்குச் சென்று பிட்சை ஏற்று வந்து உணவு கொடுத்ததாக அந்தணர் சொன்னார். அவரின் குரலிலும் செயலிலும் நெகிழ்ந்து போன சுந்தரர் அருகிருந்த குளத்தில் இறங்கி கைகழுவித் திரும்புவதற்குள் அந்தணர் மாயமானார். அப்போதுதான் சுந்தரர் ஈசனின் திருவிளையாடலை உணர்ந்தார். ஈசனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தம் திருவடி தேய நடந்து பிட்சையேற்று அன்ன மிட்டதை நினைந்து நினைந்து உள்ளம் உருகினார்.

திருக்கச்சூர் தலம், ஆலக்கோயில் என அழைக்கப் படுகிறது. இங்கே, மூலவர் கச்சபேஸ்வரர். ஆயினும் இது, தியாகராஜ சுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப் படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத் தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோயில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கோபுரம் இல்லை. கோயிலுக்கு எதிரில் உள்ள பெரிய குளமே கூர்ம தீர்த்தம் எனப்படுகிறது. இக்குளத்துக்கு அருகே தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்த 16 கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.

கிழக்கு நுழைவாயில் வழியே சென்றதும், கிழக்கு வெளிப் பிராகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். தெற்கு வெளிப் பிராகா ரத்தில் 27 தூண்கள் கொண்ட நட்சத்திர மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள்ளே தியாகராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவுக்கு ஈசன் தம் நடனத்தை இங்கே காட்டி அருளினார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றில் ஆமை வடிவில் மகாவிஷ்ணு சிவ லிங்கத்தை வழிபடும் சிற்பத்தைக் காணலாம்.

மண்டபத்தின் தென் வாயில் வழியே சென்றதும் எதிரே அம்பிகை அஞ்சனாட்சியின் சந்நிதி. நான்கு திருக் கரங்களுடன் நின்ற கோலத்தில் அம்பிகை அருள் பாலிக்கிறாள். வலம் வர வசதியாக அம்மன் சந்நிதியில் தனிப் பிராகாரம் உண்டு. அம்பிகை சந்நிதி முன் மண்டபத்தில் இருந்து கிழக்குப் பார்த்த வாசல் வழியே சென்றதும், கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் கச்சபேஸ்வரரை தரிசிக்கலாம். விஷ்ணு வுக்கு அருளிய இவர் சுயம்பு லிங்க ரூபி. கருவறை அகழி அமைப்பு கொண்டது. கருவறைச் சுற்று வலம் வரும்போது, நால்வர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் காணலாம். கருவறை கோஷ்ட மூர்த்திகளாகத் திகழும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் தரிசிக்கலாம். கோயில் வெளிப் பிராகாரத்தில், விநாயகர் சந்நிதி, கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதி, அருகே விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதி, அவருக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதி, தெற்கு நோக்கிய தனி பைரவர் சந்நிதி என பிரமாண்டமான ஆலயத்தைத் தரிசித்து மகிழலாம். இங்குள்ள பைரவர் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்தது. இத்தலம் திருப்புகழ் வைப்புத் தலமாகத் திகழ்கிறது. இங்கே முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானை சகிதராக எழுந்தருளியுள்ளார். இவரை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

தல விருட்சம், ஆலமரம். இது, மக நட்சத்திரத் துக்குரிய மரம். எனவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் இங்கே பெருமானை வழிபடுவது சிறப்பானது. கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரமாண்ட மான வாகனங்கள் அணிவகுக்கின்றன. நந்தியும் விடை வாகனமும் சிறப்பானவை.

திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலாகத் திகழ்கிறது, மருந்துமலை மருந்தீஸ்வரர் கோயில். இது இந்த ஆலக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் சிறிய மலை மீது அமைந்துள்ளது. கோயிலின் முன் நான்கு கால் மண்டபம், ராஜகோபுரம் இல்லாதநுழைவாயில் ஆகியவற்றைக் கடந்து செல்லலாம். உள்ளே, ‘மண்ணே மருந்தான’ மருந்தீசர் சந்நிதி முகப்பு. உள்ளே நுழையும்போதே, அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபத்தைக் காணலாம். இவற்றில், துவார பாலர்கள், லிங்கோத் பவர், மாவடி சேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என பலரின் சிற்பங்கள் வெகு அழகாக அமைந் துள்ளன. மண்டபத்தின் நடுவில் தாமரை போன்ற அமைப்பில் சிறிய சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது.

அம்பிகைக்குத் தனிச்சிறப்பு சேர்க்கும் இக்கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ஔஷதை எனும் சக்தி பீடம் என்கிறார்கள். அதற்கேற்ப இங்கே அம்பிகை இருள்நீக்கி அம்மை எனும் பெயரில் திகழ்கிறார்.

ஒருமுறை, கொடுமையான நோவு கண்ட இந்திரன், தம் நோய் தீர நாரதரின் அறிவுரையை நாடினான். அவரும், ஏற்கெனவே சிவனும் திருமாலும் அருகருகே வீற்றிருக்கும் இம் மருந்து மலையினைச் சொல்லி, இங்கே பலை, அதிபலை எனும் இரு மூலிகைகள் இருக்கும். அவையே உன் நோவுக்குத் தீர்வு என்றாராம். இதனால், இந்திரன், சிவ பெருமானை நினைந்து கடும் தவம் இருந்தான். ஆயினும் நினைத்த பலன் கிட்டவில்லை. எனவே, மீண்டும் நாரதரிடம் வழி கேட்க, அவரோ அன்னையை மறந்து தவம் செய்ததால், உனக்கு அம்மூலிகைகள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றார். தம் தவற்றை உணர்ந்த இந்திரன், இம்முறை அன்னையை மனத்தில் தியானித்து, ஈசனை வழிபட்டான். அவனது தவத்துக்கு மனம் இரங்கிய அம்பிகை, தம் பேரொளியால், மூலிகை இருக்கும் பகுதியை இந்திரனுக்குக் காட்டிக் கொடுத்தாள். இவ்வாறு இருள் நீக்கி, ஒளி கூட்டி, மூலிகையைக் காட்டிக் கொடுத்த அம்பிகைக்கு இருள்நீக்கி அம்மன் எனும் பேர் வந்தது. சிவபெருமான் ‘மருந்தீஸ்வரர்’ எனும் பேரில் திகழ்ந்தார்.

அப்போது, மூலிகை தேடி தாம் பட்ட கஷ்டத்தை சிவபெருமானிடம் முறையிட்ட இந்திரன், சாதாரண மனிதர்களுக்கு பயன் அளிக்கும் படி அருள் புரிய வேண்டினான். அவனது வேண்டுதலைக் கேட்டருளிய ஈசன், இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே இனி மூலிகை மருந்தாக மாறி பூலோகவாசிகளுக்கு பயனளிக்கும் என்று வரம் அருளினார். எனவே இங்கே கொடிமரத்தை அடுத்து இருக்கும் நாகர் சந்நிதியை ஒட்டி உள்ள மண்ணையே மூலிகைப் பிரசா தமாக மக்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளரும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை. அதை, திருக்கச்சூரில் இருந்து மறைமலைநகர், சிங்கப் பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலையோர வயல் வரப்புகளின் செழிப்பைக் கண்டு உணரலாம்.

ஆலயத்தினுள்ளே விநாயகரை வழிபட்டு வரும் போது, சுவாமி சன்னிதிக்கு எதிரில் ஒரு சாரளம் உள்ளது. இங்கே வந்து மருந்தீசரிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், குறைவிலா வாழ்வு கிடைக்கும்.

கொடிமரத்தின் அருகே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் உள்ளன. சுப்பிரமணியர் சந்நிதி அருகே, ‘ஔஷத தீர்த்தக் குளம்’ உள்ளது. அழகாகக் கீழிறங்கிச் செல்லும்வகையில், படிகல் உள்பக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே, நவகிரக சன்னிதி உள்ளது.

பிராகார வலம் வரும்போது, கோஷ்ட மூர்த்தங் களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்ம முக சண்டிகேஸ்வரராக, நான்கு முகங்களுடன் வித்தியாச தரிசனம் அருள்கிறார். வேறெங்கும் காணமுடியாத சிறப்பு இது. இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள்.

அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரதக் கரங்களுடன் திகழ்கிறார். பைரவர் சன்னிதியும் இங்கே சிறப்பு. விநாயகரின் நேர் பார்வையில் நவகிரக சந்நிதி உள்ளது இங்கே சிறப்பான அம்சம் என்கிறார்கள். இங்கே, மருந்தீஸ்வரர் இருள்நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷம் முதலியவை நீங்கப்பெறலாம்.

அகத்தியரும் அழுகுணி சித்தரும் இங்கே தவம் செய்தனராம். எனவே பௌர்ணமி நாளில் இங்கே அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால், நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார்கள். இம் மலையினை பௌர்ணமிகளிலும், அவரவர் நட்சத்திர நாளிலும் வலம் வருதல் சிறப்பு என்பதால், கிரி வலம் வருவோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது.

அமைவிடம்: செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ளது திருக்கச்சூர்.

– செந்தமிழன் சீராமன்

” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!’-மகா பெரியவா

17309425 418371555182589 581110579721556446 n 1 - 2026

” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு
வந்துட்டயாக்கும்!’-மகா பெரியவா

(நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு,
பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா,
என்ன?!)

”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
(இவர் பிரதோஷம் மாமா உறவினர்)
தொகுப்பு-சாருகேசி
‘நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
புத்தகம்-காமகோடி பெரியவா

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று,
அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு
சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.

”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன்
திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய
இடமாதலால்,பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.

அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது
முகம்காட்டிக்கொடுத்தது.இதைமகாபெரியவாளும்ககவனித்திருக்கவேண்டும்.
தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி
அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும்
இருந்தார்.

பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ”எனக்குத் தீராத வயித்து வலி
சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத
வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு
பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி,
அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். ‘காஞ்சிப் பெரியவரை உடனே போய்த்
தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார்.
அதான், இங்கே வந்தோம்” என்றார் குரல் தழுதழுக்க.

”ஓஹோ… அப்படியா சொன்னார்..?” என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார்
பெரியவா.

அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை
பிறந்ததுபோலும்! தொடர்ந்து… ”எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை
விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம்
கிடைக்கலேன்னா… இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா… தினம்
தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என்
உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்” என்று
கதறினார்.

பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க… நெல்லை அன்பர் தனது
வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ”இப்ப
என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!” என்று வியப்பும் கண்ணீருமாகச்
சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக்
கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே
உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார்
எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு
தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.

பெரியவாளுக்கு பிக்ஷை தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான்.
பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பிக்ஷையில் ஏதேனும் தவறு இழைத்து
விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான
ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத்
தோன்றியது.

மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி
யவாளுக்கு பிக்ஷை செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச்
செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ”எனக்கு என்னவோ,
எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா
உத்தரவு தரணும்!” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.

உடனே, ”’என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு
அடிக்கடி சொல்வியே பாலு… இப்ப ஏன் போகணும்கறே?” என்று குறும்புச்
சிரிப்புடன் கேட்டார் பெரியவா.

எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ”இல்லே
பெரியவா… சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை
தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்…” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார்
பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.

வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என
வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள்.
பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு,
வெள்ளியில் ‘வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். ‘வயிறு’ கிடைக்கவே இல்லை.

உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின்
அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.

”என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல
கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப்
பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க.
நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!” என்று
சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.

பாலுவுக்கு ஒரே குழப்பம். ‘யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் ‘வயிறு’ வாங்க
அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என
வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.

‘பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல,
கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே… பாலு சிறு வயதில் படித்த
மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது.
சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக
வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார்
அந்த அதிகாரி.

பிறகென்ன… சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப்
பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார்
பாலு.

மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின்
வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி
குடிகொண்டு இருந்தது.

”பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்”
எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ”சரிதான்… என் வயித்து
வலியைக் கொண்டு போய், அந்தவைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!”
என்றார் புன்னகைத்தபடி!

சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட
மகா பெரியவாளுக்கு, பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும்
தெரியாமல் போய்விடுமா, என்ன?!

பிறந்த நாளில் அரசியல் பிரவேசம்: தயாராகிறாரா ரஜினி?

modi rajinikanth2 - 2026

ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அண்மையில் சொன்னார் ரஜினிகாந்த். அது ரசிகர்களுக்கு உத்ஸாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அத ஒத்திப் போடுவது போல், எல்லாரும் வீட்டுக்குப் போங்க, அவங்க அவங்க வேலைய பாருங்க. போர் வரும் போது பார்த்துக்கலாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டு, தான் புதிதாக நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டார்.

எப்போதெல்லாம் அரசியல் பரபரப்பும், அரசியல் நெடியும் அதிகம் வீசுகிறதோ அப்போதெல்லாம் பஞ்ச் வசனங்களுடன் படத்தை எடுத்து வெளியிடுவது அவரது வழக்கமாகிப் போனது. இத்தகைய சூழலில், ரஜினியின் காலா படமும் அரசியல் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது.

இந்நிலையில், காலா படம் வெளியானதும் அல்லது படப்பிடிப்பு முடிந்ததும் அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

இந்நிலையில் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.சென்னை அடையாரில் தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இப்போதுள்ள நிலைமையே நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அவர் இந்தியர் என்று பேசினார்.

இருப்பினும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பழைய கதைகளைச் சொல்லி பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

அவற்றில் ஒரு கருத்து….

1996ல் நடந்த சம்பவம் அது. ஜிகே + எம்கே=ஓகே என்று ஒரு கணக்கு போட்டு கருணாநிதி பேசியதையும். அப்போது, ரஜினி என்ன செய்தார், ஜெயலலிதாவுடனான வாய்க்கால் வரப்பு தகராறில் ரஜினி எடுத்த நிலை என்ன என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன் ஒருவரிடம். அப்போது, ரஜினி கருணாநிதிக்குக் கொடுத்த வாக்குறுதி, அதனை வெளிப்படையாக அவர் சொல்லிய விதம் எல்லாம்தான்…
அப்படி என்ன சொன்னார் ரஜினி?
(அமங்கலச் சொல் என்னிடம் இருந்து வராது; ஆனால் அவர் சொன்னது…) பெரியவர் இருக்குற வரை அரசியல் பக்கமே எட்டிப் பாக்க மாட்டேன் என்பதுதான்!
இப்போது வருடம் 20 கழிந்து விட்டது. அப்போதே 70க்கு மேல் வயதில் இருந்தார் கருணாநிதி.
சென்ற தேர்தலின் போது, (2016ல்) அழகிரி / ஸ்டாலின் பரபரப்பு பேச்செல்லாம் எழுந்தது. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற குரல் கட்சியில் ஒலித்தது. உபி.,யில் முலாயம், தன் மகனுக்குக் கொடுத்து ஒதுங்கியது போன்று கருணாநிதியும் ஒதுங்க வேண்டும் என்று பரவலாக பேச்சு வந்தபோது, கருணாநிதி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்… “எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராவார்” என்றார்…
96ல் ரஜினி எதிர்வாய்ஸ் கொடுக்க காரணமான ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை … ஆனால் அவர் இருக்கும் வரை வரமாட்டேன் என்று ரஜினி வாக்குறுதி கொடுத்த கருணாநிதி இப்போதும் இருக்கிறார். அவர் ஒருவேளை அரசியலில் இருக்கும் வரை என்றுகூட இப்போது எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அப்படி ஒரு விளக்கத்தை ரஜினி கொடுப்பாரா என்பது எனக்குத் தெரியாது.

காலம் தப்பி விட்டது ரஜினிக்கு! அதற்குக் காரணமானது அவர் கொடுத்த சத்தியமாகக் கூட இருக்கலாம் அல்லது அப்படி ஒரு மாற்றம் வந்துவிடக் கூடாது என்று இருந்து விட்ட கருணாநிதியே கூட காரணமாக இருக்கலாம். தனக்கும் தன் மகனுக்கும் அடுத்தடுத்த ஆட்சி வாய்ப்புகள் வர வேண்டும் என்பதற்காகவே எம்ஜிஆர்., வைகோ, என்று கழற்றி விட்டவர்…

அப்படியே ரஜினி வந்தாலும், அவர் வரும் வரைதான் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
ரஜினி அரசியலுக்கு வந்தபின்னர்… அவரை ஒன்றுமில்லாமல், புஸ்ஸு என்று ஆக்கிவிட அனைத்து மீடியாக்களும் ரவுண்டு கட்டி அடிப்பார்கள். ஏனென்றால், இங்கே மீடியாக்கள் எல்லாம் கட்சிக்காரர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு நிலையிலும் அரசியல் ரீதியாக தங்களைத் தவிர வேறு ஒரு சக்தி வளர்வதை விரும்ப மாட்டார்கள்… ஒருவரை தூக்கி விடுவது போல் போக்குக் காட்டி, சமாதி கட்டுவதற்கு வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டனுக்கு நேர்ந்த கதி தமிழகம் அறியும்….
இவ்வளவே…! இதை மீறி ரஜினி எப்டி ஜொலிக்கிறார்னு பாக்கலாம்!

மதுக்கடைகள் விவகாரத்தில்  உயர்நீதிமன்ற தீர்ப்பு மிக ஆபத்தானது: ராமதாஸ்

ramadoss
குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள்விவகாரத்தில்  உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஆபத்தானது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 மதுக்கடைகளுக்கு எதிரான கிராமசபைக் கூட்டத் தீர்மானம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை திறக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
சென்னையை அடுத்த பொன்னேரியில் திறக்கப்பட்ட அரசு மதுக்கடையை மூட ஆணையிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ‘‘டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பது தமிழ்நாடு அரசின்  சில்லறை மது விற்பனை விதிகளின் படியும், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின்படியும் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் ஏதேனும் விதி மீறல்கள் இருந்தால் மதுக்கடைகளை மூட ஆணையிடலாம். மாறாக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் காரணம் காட்டி மதுக்கடைகளை மூட ஆணையிட முடியாது’’ என்று அத்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக போராடும் மக்களின் மனநிலையையும், இதுதொடர்பாக கடந்த காலத்தில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. சில்லறை மது விற்பனை விதிகள் எனப்படுவது 2003-ஆம் ஆண்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டிற்கு முன்பாக தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் மதுக்கடைகள் இருந்தன. அவை அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் மது வணிகத்தை அரசே எடுத்துக் கொண்ட நிலையில், கூடுதல் வருமானம் ஈட்ட வசதியாக தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறப்பதற்கு  வசதியாகத் தான் சில்லறை மது விற்பனை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை மட்டும் கருத்தில் கொண்டால் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கும்.
மதுக்கடைகள் திறப்பதற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் போது சட்டத்தை மட்டுமின்றி, மக்கள் நலனையும் நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று எந்த சட்டத்திலும்  விதிகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சாலை விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. சில்லறை மது விற்பனை விதிகளை மட்டும் கருத்தில் கொண்டிருந்தால் இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்க முடியாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதால் தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமானது.
சாலைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இருந்து எவ்வளவு தொலைவுக்கு அப்பால் மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் இவ்விதிகளில் உள்ளன. ஆனால், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இத்தகைய சூழலில், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் பாதிக்கப்படும்  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே நீதியரசர் பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வும், நீதியரசர் நாகமுத்து தலைமையிலான அமர்வும் மதுக்கடைகளுக்கு எதிராக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து  மதுக்கடைகளை மூட வேண்டும் என தீர்ப்பளித்தன.
அதுமட்டுமின்றி, மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து மதுக்கடைகள் மூடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி நாகமுத்து அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக மராட்டிய மாநிலத்தில் 1949-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தின்படி மதுக்கடைகளுக்கு எதிராக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டால், அதனடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்திருந்தால் அடுத்த நிமிடமே அங்குள்ள மதுக்கடை மூடப்பட வேண்டும்.  இவை அனைத்தும் மது அரக்கனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசும், நீதிமன்றங்களும் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளாகும்.
ஆனால், தமிழக அரசு மக்களின் உணர்வுகளையெல்லாம் மதிக்காமல் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறந்து வரும் நிலையில், அதிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கியத் தீர்ப்புகளுக்கு எதிராக புதிய தீர்ப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்குவது நியாயமல்ல. இத்தீர்ப்பைப் பயன்படுத்தி குடியிருப்புப் பகுதிகளில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க முற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்; அது பொது அமைதியை பாதிக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிராம அவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூட ஆணையிட முடியாது என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
From: