பா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அமைச்சர் காமராஜ்
அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற ராமதாஸ் கோரிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், அவைத்தலைவர் மேற்கொண்ட முடிவினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நாளை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், அவைத்தலைவர் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இந்த மனுவை நாளை ( 22 ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
தி.மு.க., செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பதவிக்கு பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சசிகலா, சட்டசபை, அ.தி.மு.க., தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம், ராஜினாமா செய்தார். பின் அவர், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக, பகிரங்கமாக புகார் தெரிவித்தார். ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கவர்னரிடம் சசிகலா உரிமை கோரினார். அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவருக்கு தகுதியிழப்பு ஏற்பட்டது.அதனால், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, பழனிசாமியை தேர்ந்தெடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. முதல்வராக, பிப்., 16ல், பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், 18ம் தேதியே, சட்டசபையின் சிறப்பு கூட்டம்,காலை, 11:௦௦ மணிக்கு துவங்கியது. சென்னை, காமராஜர் சாலையில், என் கார் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. இதனால், சட்டசபையை நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.சட்டசபை துவங்கியதும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும், பன்னீர்செல்வமும் கோரிக்கை விடுத்தனர்.
‘எம்.எல்.ஏ.,க்களை சட்டவிரோத காவலில் வைத்ததால், அவர்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க வேண்டும் என்றால் ரகசிய வாக்கெடுப்பு ஒன்றே வழி’ என, வலியுறுத்தப்பட்டது; அதை, சபாநாயகர் மறுத்தார். சட்டசபையை, பிற்பகல், 1:00 மணிக்கு தள்ளி வைத்தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் வகையில், போலீஸ் படையினர் அங்கு வந்தனர். பகல், 1:00 மணிக்கு சட்டசபை துவங்கியதும், தி.மு.க., உறுப்பினர்களை வெளியே அனுப்பும்படி, சபை காவலர்கள் மற்றும் சபை காவலர்கள் சீருடையில் இருந்த போலீசாருக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.
பின், சபையை, 3:00 மணிக்கு தள்ளிவைத்தார். சபாநாயகரின் உத்தரவை சாதகமாக எடுத்து, கூடுதல் போலீஸ் ஆணையர் சேஷசாயி தலைமையில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் தாக்கினர். அப்போது, சபையில் சபாநாயகர் இல்லை.சபை விதிகளை பின்பற்றாமல், என்னையும் வெளியேற்றினர். போலீசார், முரட்டுத்தனமாக அணுகினர்; என் சட்டை கிழிக்கப்பட்டது. கடைசியில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றினர். சபாநாயகர் செயல்பட்டதை கண்டித்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
கவர்னரை சந்தித்து முறையிட்டோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல், முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. முதல்வருக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும், எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த அறிவிப்பு, சட்டவிரோதமானது; சபை விதிகளை மீறியது.
எனவே, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்; முதல்வர் என்ற முறையில் கொள்கை முடிவெடுக்க, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். கவர்னரின் செயலர், தலைமை செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் மீண்டும் ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்; சபாநாயகரின் முடிவு செல்லாது என உத்தரவிட வேண்டும்.
என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை, தாற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், ‘மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்’ என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.
பயமுறுத்தும் எண் 13 பற்றி தெரிந்துகொள்வோமே
வெளிநாட்டினரைப் பொறுத்தவரை 13 ஒதுக்கப்பட வேண்டிய நம்பர்.
அத்துடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அலறுவார்கள்.
இதற்கு என்னென்னவோ காரணங்கள் கூறுகிறார்கள்.
நம்பர் 13 எப்படியெல்லாம் வெளிநாட்டினரை பாடுபடுத்துகிறது என்று பாருங்களேன்..
ஒரு வெள்ளிக்கிழமை 13ம் தேதிதான் இயேசு பெருமான் சிலுவை யில் அறையப்பட்டார் என்கிறது வரலாறு.
இதேபோல் இன்னொரு 13ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினத்தில்தான் ஆதாமும் ஏவாளும் சபிக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டார்களாம்.
ஸ்காட்லாந்து விமான நிலை யத்தில் 13 என்ற எண்ணை பயன்படுத்துவதேயில்லை. மாறாக 12க்குப் பிறகு 12பி என்றுதான் பயன்படுத்துகிறார்கள்.
லுப்தன்ஸா விமானத்தில் 13 என்ற இருக்கை கிடையாது. 12க்குப் பிறகு 14தான்.
பார்முலா ஒன் கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார்களுக்கு 13ம் எண் வழங்கப்படுவதில்லை.
அப்போலோ 13 விண்கலம் வெற்றிகரமாகச் செயல்படாமல் திரும்பியதற்கு, 13 என்ற எண்ணை சேர்த்ததுதான் காரணம் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.
தொடர்ந்து 12 ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராகக் கோலோச்சிய பில்கேட்ஸ், 13வது வருடம் அந்த அந்தஸ்தை இழந்துவிட்டதற்கு, 13 என்றே எண்ணே காரணமாம்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் 13ம் தேதி அன்று பிறந்தாலோ அல்லது இறந்தாலோ அந்த எண்ணை பதிவேட்டில் பயன்படுத்தாமல் 12ஏ என்றே குறிப்பிடுகின்றனர்.
இப்படி 13ம் எண்ணைப் பற்றி வெளிநாடுகளில் நிறைய தகவல் கள் உண்டு.
13ம் நம்பர் வீடுன்னு ஒரு பேய் படம் கூட வந்துருக்கு…
சரி விஷயத்துக்கு வரேன்….
எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் 13வது முதல்வர்….
இது எப்படி இருக்கு?
அரும்புலியூரில் ஓர் அரும் உத்ஸவம்
ஊர் சுற்றல் … அரும்புலியூருக்கு!
ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி அறிமுகமாகி பின்னர் Fakebook.. பேக்புக், வாட்ஸப்புகளில் தொடர் தொடர்பில் இருக்கும் பொய்கைஅடியான் பார்த்தசாரதி ஸ்வாமி, தமது கிராமமான அரும்புலியூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஞாயிறு இன்று காலை பெருமாளுக்கு கல்யாண உத்ஸவம் செய்வதாகவும், தமது ஊருக்கு அவசியம் வருமாறும் அழைத்தார்.
பெங்களூரில் இருக்கும் நம் நட்பு வட்டத்தில் மேற்படி ஸ்வாமியும் ஒருவர். சரி.. இன்று நன்னேரம் போக்குவோமே என்று வழக்கம்போல் கிளம்பிவிட்டேன்.
காஞ்சிபுரத்து கிராமங்களின் அழகை, அதுவும் பாலாற்றுப் படுகை வயல்வெளிகளையும் பச்சை மண்ணையும் ரசித்துப் பார்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். தண்ணீர் வறண்டு வெறும் மணல் ஆறாய்ப் பாலாறு திகழ்ந்திடுனும், இறைவனின் மிச்ச சொச்ச கருணை இருப்பதால் அங்கங்கே பசுமை தலை காட்டுகிறது. பொத்தேரியில் இருந்து கிளம்பி செங்கல்பட்டு பைபாஸ் வழியே காஞ்சிபுரம் சாலையில் திரும்பி சற்று தொலைவில் இடப்புறம் திரும்பி பாலாற்றுப் பாலத்தின் வழியே பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுச் சாலைத் திட்டத்தில் போடப்பட்ட அழகான ஒற்றைச் சாலையில் பயணித்தேன். காவித்தண்டலம்.. பெயர் நன்றாகத்தான் இருந்தது. சாலையை ஒட்டி தலைகாட்டிய சிவன் கோவில் சுவரும் கோபுரம், வெள்ளைச் சுண்ணாம்புப் பசை கண்டு மாமாங்கம் ஆகியிருக்கும்போல். இன்னும் ஓரிரண்டு சிறு சிறு கோயில்கள்…
இன்றே இப்படியான தன்மையைக் கொண்டிருக்கும் பாலாற்றின் கரையைப் பார்த்தபடி பயணிக்கும் போது… பாண்டியனுக்கும் சோழனுக்கும் சவால் விட்ட பல்லவன் தன் நாட்டை எப்படி வைத்திருந்திருப்பான் என்பதை எண்ணிப் பார்த்தபோது மெய்யாலுமே மெய் சிலிர்த்தது. பாலாற்றை மட்டும் பல்லவன் திசை திருப்பி செழிப்பாக்கவில்லை, அங்கங்கே ஏரிகளை அமைத்து வழி நெடுக நீரைத் தேக்கி வைத்திருந்தான். ஏரிகளின் மாவட்டம் என்று இன்று நாம் பீற்றிக் கொள்ளும் பெருமையை, பிளாட்டுகளாக்கி வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறோம்… அது வேறு கதை!
கூகுள் மேப் புண்ணியத்தில் அரும்புலியூர் செல்லும் சாலை மனத்தில் பதிந்து விட்டது என்றாலும், பயணத்தினூடே கிராம மக்களிடம் எதை முன்னிட்டு உரையாடுவது? வழி கேட்பதில்தானே! தென்பட்ட ஓரிரு பெரியவர்களிடம் ஐயா… அரும்புலியூர் போற ரோடு இதானேன்னு உறுதிப் படுத்திக் கொண்டு, அவர்களின் காஞ்சி பிரதேச தொண்டை மண்டல பேச்சு மொழியை ரசித்தவாறே பயணித்தேன்.
அரும்புலியூர்… அழகிய கிராமம்தான்! சுற்றிலும் பசுமை வண்ணம் மட்டுமே தெரிந்த வயல்வெளிகள். நடுவே கோயில். பொய்கையடியான் புன்னகைத்தவாறே… வாரும் வாரும் என்று வரவேற்றார். முதல்முறை நேரில் பார்க்கிறார் என்றாலும் என் முகம் பளிச்சென்று தெரிந்திருக்கிறது மனிதருக்கு! (இதுக்குதான் அப்ப அப்ப நாம வேலை பாக்கற பத்திரிகைகள்லயே போட்டோக்களெல்லாம் போட்டு… எடுபிடிகள் மூலம் பேனர் வைத்து, ஐயா வர்றார் ஐயா வர்றார்ன்னு முன்னேற்பாடெல்லாம் செய்து, மூஞ்ச பிரபலப் படுத்திக்கணும்ங்கிறதுன்னு திபிக., தானைத் தலைவர் மானசீகமா வந்து ஓரமா காதுல கிசுகிசுத்தார்… இல்லயா பின்னே! அப்பத்தானே அங்க இங்க நிகழ்ச்சி நடத்துறவங்க.. எங்க ப்ரோக்ராமுக்கும் வாங்க வாங்கன்னு குமிப்பாங்க… இன்விஷ்டேஷனா!
🙂 )
பெருமாள் மாலைகளை மூங்கில் தட்டில் சுருட்டி எடுத்து முதுகில் சுமந்து கொண்டு, ஆடியாடி அகம் தணிந்து, இசை பாடிப்பாடி இசைவாய்ச் சுருண்டு, தரை தொட்டு, முழந்தாளிட்டு நடந்து ஆடி … கொஞ்சம் எண்டர்டெய்ன்மெண்ட் கொடுத்தார் ஒரு பெரியவர்… ருசிகரமாகத்தான் இருந்தது.
மாலை மாற்றல் முடிந்து வந்தவரிடம்
ஸ்வாமி.. அடியேன். உம் திருநாமம்.. என விசாரித்தேன்.
குப்புஸ்வாமி என்றார்.
தப்பா நெனச்சிக்கப்டாது.. உம் வயஸ்ஸு என்னவோ? – கேட்டேன். 78 என்றார்.
ஊர்…? வினவினேன். பொன்விளைந்தகளத்தூர் என்றார்… தொடர்ந்து ஒவ்வொரு சன்னிதியாகச் சொல்லி, அங்கெல்லாம் போய் இந்தக் கைங்கர்யத்தைச் செய்வதை கண்களில் அவ்வளவு ஆர்வம் பொங்கக் கூறினார். கேட்டு பிரமிப்பாக இருந்தது. (ஃபோட்டோவில் இருப்பவர்…)
தொடர்ந்து வழக்கமான சடங்குகள்… மாங்கல்யதாரணம், வாரணமாயிரம், சாத்துமுறை என்று நிறைந்தது.
கிராமத்து மக்கள் அதிகம் தலைகட்டினர். கிராமத்துச் சிறுவர்கள், தூக்கிக் கட்டிய பாவாடை சட்டை, டிராயர் சட்டை என கபடற்ற சிறுவர் சிறுமியர்… வாரிப் பின்னலிட்டும், தலை சொறிந்து ஒழுங்கற்ற தலைமுடியும் என அப்பழுக்கற்ற நம் கிராமக் குழந்தைகளின் முகம் காணும் போது … நன்றாய்த்தான் இருக்கிறது.
ஆலய மண்டபத்தில் இடப்புறம் வேத பாராயணத்தில் சிலர் என்றால்… வலப்புறம் இருக்கும் பிராகார சிறு இடத்தில் பாண்டி ஆடிய சிறுமிகள்… ஒரு பயல் பக்கத்திலேயே பம்பரம் விட்டான்.
மலர் மாலைகள் சூடி தெம்பாக இருந்தார் பெருமாள். பாவம் அவர் தோள் கனக்கிறது என்று பரிவு காட்டி, கைங்கர்ய ஸ்வாமி பெருமாள் மாலைகளைக் கழற்றி வந்திருந்தவர்களுக்குப் போட்டு… சிலவற்றை சிறிதாக்கி ஊர்ப் பெரியவர்களை அழைத்து எல்லோருக்கும் மாலைகளை கழுத்திலிட்டு.. (ஒவ்வொருவர் முகத்திலும்தான் என்ன பெருமிதம்…!) பெருமாளை வெறும் முத்துக் கொண்டை சகித கவசபூஷிதனாக்கிவிட்டார்!
கோஷ்டி முடிந்து வரிசையாக ததியாராதனை…
கொஞ்சம் கூட கரைச்சலோ சத்தமோ குழப்பமோ இன்றி.. சிறார்களில் இருந்து ஊர்ப் பெரியவர்கள் வரை எல்லோரும் வரிசையாக அமர்ந்து…சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் தயிர்சாதத்தை உண்டு…
அந்த ஒழுங்கைப் பார்க்கும்போது பல வித எண்ணங்கள் மனத்தில்!
ஆனால்… ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெள்ளத் தெளிவாக இந்த சமூகத்துக்குச் சொல்ல விழைகிறேன்..
நம் முன்னோர்களின் சமூகக் கட்டமைப்பு …
ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ… அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து…
கிராமத்தின் நன்மைக்காக, ஊர் சுபிட்சமுடன் திகழ, விவசாயம் செழிப்பாக இருக்க, மழை நன்றாகப் பொழிய, ஆற்றில் நீர் வர, நோய் நொடியற்று கிராமத்தினர் நலமுடன் திகழ… என்று சங்கல்பித்து இறை வழிபாட்டுடன் அந்த எண்ணத்தை மக்கள் மனத்தில் நன்றாக ஊன்ற வைத்து எல்லாம் சரியாக இருந்தவரை… கிராமங்களில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அவ்வப்போது வரும் வறட்சி, பஞ்சத்துக்கும் வழிபாட்டைச் சொல்லி ஒரு கூட்டம் தன்னை முழுதுமாய் ஈடுபடுத்தியது. இப்போது எல்லாமே வெளியேற்றம்…
பயனை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

