Home Blog Page 5677

தில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு

டில்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ., ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன.ரோஹித் குமார் என்ற இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில் கஸ்டமர் கேர் எக்சிக்யூடிவாக பணியாற்றி வருகிறார். இவர் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்.,ல் ரூ.8000 பணம் எடுத்துள்ளார். ரூ.2000 நோட்டுக்களாக எடுக்கப்பட்ட பணம் அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. அந்த போலி ரூ.2000 நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முத்திரைக்கு பதிலாக சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என முத்திரை இடம்பெற்றிருந்தது. 
இது தொடர்பாக அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். ரோஹித்தின் புகாரின் பேரில், குறிப்பிட்ட ஏடிஎம்.,ல் ஆய்வு செய்த போலீசார், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோக் பெப்ஸி விற்பனை தமிழகத்தில் 75% சரிவு

சென்னை : 
தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.
இதையடுத்து, கடந்த 4 வாரங்களில் 75 சதவீதம் அளவுக்கு பெப்சி, கோக் விற்பனை குறைந்துள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டு வரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். வரும் மார்ச் 1 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புகிறோம். விரைவில் அனைத்து கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

சசிகலா அறைக்கு அடுத்த அறை கொலைகாரக் கைதி சிறை மாற்றம்

பெங்களூரு :
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அடுத்த அறையில் இருந்த பயங்கர கொலைக் குற்றவாளி சயனைடு மல்லிகா கர்நாடகாவின் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சயனைடு மல்லிகா (52)வின் உண்மையான பெயர் கேம்பம்மா. பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு அடிக்கடி வரும் பணக்காரப் பெண்களைக் கண்டறிந்து, அவர்களிடம் பழகி, சயனைடு கொடுத்து அப்பெண்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிப்பது இவர் தொழில். நகைக்காக 6 பெண்களை அடுத்தடுத்து கொலை செய்த இவர், பல்வேறு வழக்குகளின் கீழ் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். 
2008 முதல் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், தற்போது கர்நாடகாவில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறை மாற்றம் குறித்து இவரிடம் சிறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரை வேறு அறைக்கு மாற்றப் போவதாகவும், அதனால் பொருள்களை எடுத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். 
சயனைடு மல்லிகாவின் அறைக்கு அடுத்த அறையில் சசிகலா அடைக்கப்பட்ட தகவல் வெளியானதும், சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக.,வினர் சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனால் சசிகலா உணவு வாங்க வரிசையில் நிற்கும் போது, சயனைடு மல்லிகாவை அப்பகுதியில் அனுமதிக்காமல் இருந்தனர். 
இருப்பினும் பாதுகாப்பு கருதி சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்றி உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சட்டமன்ற விவகார ஆளுநரின் அறிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைப்பு

புது தில்லி:
பிப்ரவரி 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டசபை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பிப்ரவரி 20 ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை அளித்தார்.

இந்த அறிக்கையை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார். சட்டசபை நிழக்வுகள் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நாளை நேரம் கேட்டுள்ளார். அவர் குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ள நிலையில், இந்த அறிக்கை அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் மனு மீதான விசாரணை பிப்.27க்கு ஒத்திவைப்பு

சென்னை :

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று( புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும் எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப் பட்டது.

‘சபாநாயகரின் அறிவிப்பு, சட்டவிரோதமானது; நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான, சபாநாயகரின் முடிவு செல்லாது; ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரியின் மேற்பார்வையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.

விசாரணைக்கான வழக்குகள் பட்டியலில், ஸ்டாலினின் மனு நேற்று இடம் பெறவில்லை. இதையடுத்து, தாற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

மாவ​ட்‌ட தலை‌நகர​ங்‌க​ளி‌ல்‌ திமுக சா​ர்‌​பி‌​ல்‌ உண்‌ணாவி‌ரதப்‌ ​போ‌ரா​ட்‌ட​ம்‌ ​தொ‌டங்‌கியது.
தி‌ரு‌​ச்‌​சி‌​யி‌​ல்‌ ​​ந​டை‌​பெ‌று‌​ம்‌ உண்‌ணா​வி‌ரத​ப்‌ ​போ‌ராட்‌டத்‌தி‌ல்‌ திமுக செ‌யல்‌ த​லை‌வர் ​மு.க.ஸ்டாலின் பங்‌​கே‌​ற்பு.
சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதம்  நடைபெறுகிறது.
ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்

சிறையில் தமிழக முதல்வருக்கு அனுமதி மறுப்பு?

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள‌ எடப்பாடி பழனிசாமி சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆசி பெற முயற்சித்து வருகிறார். இதற்காக அனுமதி கோரி முறையாக கர்நாடக சிறைத் துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைத்துறை இன்னும் அனுமதி அளிக்காததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை சந்திக்க வராமல் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. நேற்று காலை செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜ், வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதி என எவரையும் சிறைத்துறை அனுமதிக்கவில்லை. 
இதன் காரணமாக ஆளும் பழனிசாமி அரசு கர்நாடக அரசின் மீது கடும் கோபம் கொண்டுள்ளது. சசிகலாவை தமிழக சிறைக்கு கொண்டு வருவதற்கென வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜெ. சமாதியில் விரைவில் தியானம் செய்யப் போகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

சென்னை: புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டு இன்னும் ஒரு வாரகாலம் கூட முடியவில்லை. அதற்குள் அடுத்த முதல்வர் பற்றி அஇஅதிமுக எம்எல்ஏ க்கள் பேசத் தொடங்கி விட்டனர்.
நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை நேற்றைக்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் விரைவில் டிடிவி தினகரன் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளுவார் என்று பேசியிருக்கிறார். ''எனக்கு யாரிடமும் எந்த பயமும் இல்லை. என் தொகுதி மக்கள் யாரும் என்னை எதிர்க்கவும் இல்லை. மக்கள் ஆதரவுடன்தான் நான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க ஆதரவு தெரிவித்தேன். தேனீ, பெரியகுளம் பகுதிகளில் அஇஅதிமுக வளர்வதற்கு டிடிவி தினகரனின் பணி மகத்தானது. தினகரன் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும்.'' என்று பேசியிருக்கிறார்

மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல் : நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டது. பிறகு, 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும் படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மனு, நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, ‘உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?’ என நீதிபதிகள் கேட்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்” என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.

இன்று விசாரணைக்கு வந்த போது, மே 15க்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

தருமபுரி இளவரசன் தற்கொலைதான்!: வழக்கு முடிப்பு

சென்னை: 
தருமபுரி இளவரசன் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த தகவலை ஏற்று, அவரது  மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  சிபிசிஐடி., போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யா இளவரசனை பிரிந்து, தாயுடன் சென்ற நிலையில், கடந்த 2013 ஜூலை 4ல், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள  ரயில்வே தண்டவாளத்தில் இளவரசன் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ஏற்று, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.