புது தில்லி:
பிப்ரவரி 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டசபை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பிப்ரவரி 20 ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை அளித்தார்.
இந்த அறிக்கையை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார். சட்டசபை நிழக்வுகள் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நாளை நேரம் கேட்டுள்ளார். அவர் குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ள நிலையில், இந்த அறிக்கை அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.



