சென்னை :
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று( புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும் எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப் பட்டது.
‘சபாநாயகரின் அறிவிப்பு, சட்டவிரோதமானது; நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான, சபாநாயகரின் முடிவு செல்லாது; ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரியின் மேற்பார்வையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.
விசாரணைக்கான வழக்குகள் பட்டியலில், ஸ்டாலினின் மனு நேற்று இடம் பெறவில்லை. இதையடுத்து, தாற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.




