பெங்களூரு :
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அடுத்த அறையில் இருந்த பயங்கர கொலைக் குற்றவாளி சயனைடு மல்லிகா கர்நாடகாவின் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சயனைடு மல்லிகா (52)வின் உண்மையான பெயர் கேம்பம்மா. பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு அடிக்கடி வரும் பணக்காரப் பெண்களைக் கண்டறிந்து, அவர்களிடம் பழகி, சயனைடு கொடுத்து அப்பெண்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிப்பது இவர் தொழில். நகைக்காக 6 பெண்களை அடுத்தடுத்து கொலை செய்த இவர், பல்வேறு வழக்குகளின் கீழ் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்.
2008 முதல் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், தற்போது கர்நாடகாவில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறை மாற்றம் குறித்து இவரிடம் சிறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரை வேறு அறைக்கு மாற்றப் போவதாகவும், அதனால் பொருள்களை எடுத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
சயனைடு மல்லிகாவின் அறைக்கு அடுத்த அறையில் சசிகலா அடைக்கப்பட்ட தகவல் வெளியானதும், சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக.,வினர் சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனால் சசிகலா உணவு வாங்க வரிசையில் நிற்கும் போது, சயனைடு மல்லிகாவை அப்பகுதியில் அனுமதிக்காமல் இருந்தனர்.
இருப்பினும் பாதுகாப்பு கருதி சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்றி உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்




