Home Blog Page 5729

சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல்

சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்…
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பாரத அளவில் பிரபலமான அரசியல் விமர்சகருமான சோ எஸ். ராமசாமி அவர்களின் மறைவு
தேசிய அளவில் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.
நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மறைந்த நிலையில், இன்று அவரது நெருங்கிய நண்பர் சோ எஸ். ராமசாமி அவர்கள் மறைந்தது, தமிழகத்திற்குப் பெரும் இழப்பு.
சோ எஸ். ராமசாமி, பன்முகத் திறமை கொண்டவர். வழக்கறிஞராக தொடங்கிய அவரது பயணம், திரைப்பட நடிகர், நாடக நடிகர், நாடக எழுத்தாளர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாசிரியர் என்று விரிந்துகொண்டே போகிறது. அவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரைப் பதித்தவர். எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொண்டு, நகைச்சுவையாக பேசக்கூடியவர். வயதின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் விடாது அவர் ஆற்றிய பத்திரிகைப் பணியானது மகத்தானது.
எனக்குத் தனிப்பட்டமுறையில் பல ஆண்டுகளாக நண்பராக இருந்தவர். அதுவும் இந்திராகாந்தி அம்மையார், பாரதத்தில் அவசர நிலை கொண்டு வந்தபோது, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரும் நானும் தொடர்ந்து அவசரநிலையை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டோம்.
தனது பத்திரிகையின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி தமிழக மக்களிடம் கொண்டு சென்று நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தினார். தேசிய அரசியலும் நடைமுறை சாத்திய கூறுகளை ஆராய்ந்து முடிவு எடுத்து அதனை செயல்படுத்தவும் செய்தார். திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக வர தகுதி படைத்தவர் என அவரைப் பற்றி பலவாறு விமர்சனங்கள் எழுந்தபோதும்அவற்றை எல்லாம் புறந்தள்ளி, அவரைப் பற்றி நம்பிக்கையோடு துக்ளக் ஆண்டு விழாவிலும், பத்திரிகையிலும் எடுத்துக்கூறியவர்.
துணிச்சல் மிகுந்தவர், எந்த நிலையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். தனக்கு சரி என பட்ட கருத்தைக் கூற எந்த இடத்திலும் தயங்கமாட்டார். திமுகவைப் பற்றி காரசாரமாக துக்ளக் இதழில் எழுதி வந்த நிலையில், ஒரு நாள் அண்ணாசாலையில் திமுக ஊர்வலம் வந்தபோது, கொஞ்சமும் தயங்காமல், அவர் வந்த வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஊர்வலத்தின் ஊடே வந்து அலுவலகம் வந்து சேர்ந்தார். அதுபோல திராவிடர் கழகம் பகுத்திறிவு என்ற போர்வையில் சேலத்தில் நடத்திய இந்துக்களின் தெய்வமான ராமரையும் செருப்பால் அடித்தும், விநாயகரை உடைத்தும் நடத்திய அநாகரிக நாடகத்தை துணிவுடன் வெளியிட்டார். எமர்ஜென்சியாலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாலும் பல இன்னல்களைச் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் மன உறுதி படைத்தவராக திகழ்ந்தார்.
இராமாயணம், மகாபாரதம், இந்து மகா சமுத்திரம் போன்ற மகா காவியங்களைப் படைத்தவர். அவரது எழுத்தாற்றலால் இளைஞர்களுக்கு உத்வேகம் பிறந்து இந்து சமய, சமுதாய பணியில் நெஞ்சை நிமிர்த்தி செயல்பட வைத்தவர்.
இதுபோன்ற பல ஆயிரம் வெற்றிகளுக்கும், உதாணரங்களுக்கும் சொந்தக்காரர் என்றாலும் சோ அவர்கள் எளிமையானவர், இனிமையான, உற்சாகமான மனநிலை போன்ற நற்குணங்களைக் கொண்டவர்.
துக்ளக் பத்திரிகையின் மூலம் அரசியல் விமர்சனத்தால் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை நடத்திக்காட்டியவர். அரசியல் விமர்சனப் பத்திரிகையின் முன்னோடியாக திகழ்ந்தவர். எல்லா துறைகளிலும் ஏராளமான நண்பர்களை, நம்பிக்கையானவர்களை துணையாகக் கொண்டவர். குறிப்பாக தான் பொதுவாழ்வில் யாரை என்ன விமர்சனம் செய்தாலும், தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு பாராட்டக்கூடியவர்.
தனிப்பட்ட முறையில் நான் எனது நண்பரை, தேசியவாதியை இழந்த சோகத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவரது இழப்பினால் துயரப்படும் அவரது குடும்பத்தினர், வாசகர்கள்., நண்பர்கள் அனைவருக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
– என்று தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்

ஜெயலலிதவின் நண்பர் “சோ” ராமசாமி மரணம்

ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார்.

ஏற்கெனவே முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார் சோ. ராமசாமி. அதே போல மீண்டும் சமீபத்தில் அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த, அதே அப்பல்லோ மருத்துமனையில் சோ ராமசாமி சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவு நலம் பெற்ற அவர், பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருங்கிய நண்பர். “சோ. ராமசாமி என் உடன் பிறந்த அண்ணன் போன்றவர்” என்று ஜெயலலிதா சொன்னது உண்டு.

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை சொல்பவர் சோ என்றும் சொல்லப்படுவது உண்டு.

இடையில் சசிகலாவை தனது போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரிலான சில சொத்துக்களுக்கு சோ பொறுப்பாளராக ஆனார் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் மிக மோசமானதை அறிந்த சோ.ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் மரணமடைந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சோ ராமசாமி மரணமடைந்ததாக இதற்கு முன் சில முறை தகவல் பரவியது குறிப்பிடதக்கது.

“சோ” ராமசாமி யார்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி சற்று நேரத்துக்கு முன் மறைந்தார். அவருக்கு வயது 82.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையில் சோ ராமசாமியும் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமான தகவலை அறிந்த சோவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் சோ. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்துக்கு முன் மறைந்தார்.

சென்னையைச் சேர்ந்த ரா.சீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக அக்டோபர் 5, 1934 அன்று பிறந்த சோ ராமசாமியின் இயற் பெயர் ராமசாமி.

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். , பிறகு லயோலா கல்லூரியிலும் விவேகானந்தா கல்லூயிரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டம் பெற்றார். பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார்.

சிறிது காலம், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பயின்ற சோ ராமசாமி, பிறகு டி.டி.கே நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றினார்.

இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

பகீரதன் எழுதிய “தேன்மொழியாள்” என்ற நாடகத்தில் ‘சோ’ எனும் பெயரிலான பாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அது முதல் “சோ” ராமசாமி என அழைக்கப்பட்டார்.

“மு. பி. து” நாடக்ததில்..

நாடகங்களில் நடிப்பதோடு, நாடகங்கள் எழுதுவதிலும் சோ ஈடுபட்டார். “முகமது பின் துக்ளக்” உட்பட பல்வேறு நாடகங்களை எழுதி, நடித்து புகழ் பெற்றார்.

இந்நாடகம் பின்னாட்களில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் திரைப்படங்களில் நடித்தார்.

14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

1970 ஆம் ஆண்டு “துக்ளக்” என்ற பெயரில் வார இதழைத் தொடங்கினார். தனது அரசியல் கருத்துக்களை இந்த இதழில் எழுதிவந்தார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இந்திய அளவில் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் அறிந்தவர் சோ ராமசாமி. இவரது முயற்சியால் பல்வேறு அரசியல் திருப்பங்கள், ஆட்சி மாறறங்கள் ஏற்பட்டுள்ளன. மிகச் சிறந்த நகைச்சவை நடிகர், எழுத்தாளர், அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர் என்றெல்லாம் புகழப்படுபவர் சோ ராமசாமி.

அதே நேரம், “பிராமண பற்றாளரான இவர் சாதி வேறுபாடுகளை விரும்புபவர், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கருதப்பட்டும் மிடாஸ் சாராய ஆலை உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்தவர், பெண் சமத்தவத்தை விரும்பாதவர், பிரச்சினைகளை கிளறிவிடுவாரே தவிர அதற்கு தீர்வு சொல்லமாட்டார்” என்பன போன்ற விமர்சனங்களும் இவர் மீது உண்டு.

பாராட்டும் விமர்சனமும் கலந்து இருந்தாலும், தமிழக அரசியலிலும், திரையுலக நகைச்சுவையிலும், பத்திரிகைத் துறையிலும் தவிர்க்க முடியாத நபர், சோ ராமசாமி.

முதல்வராக பொறுப்புகளைத் தொடங்குகிறார் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை புதன்கிழமை (டிச.7) முதல் தொடங்கவுள்ளார்.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், அவர் தனது வழக்கமான அலுவலகப் பணிகளை புதன்கிழமை (டிச.7)
முதல் தொடங்குவார் எனத் தெரிகிறது.
கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, முக்கிய துறையான வருவாய்த் துறைக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டான்சி வழக்கில் ஜெயலலிதாவால் முதல்வராக பொறுப்பேற்க முடியாத சூழலில் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார்.
2001-ஆம் ஆண்டில்…: அவர், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-லிருந்து, 2002 ஆம் ஆண்டு மார்ச் வரையில் தமிழக முதல்வராக பணியாற்றினார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன், மீண்டும் அவரிடமே முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித் துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார்.
2006-ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது, அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா வராத காலங்களில் அவரே கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களை வழிநடத்தினார்.
தொடர் தேர்தல் வெற்றி: 2001-இல் தொடங்கிய சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி 2011-இலிலும் நீடித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிக்கனியைப் பறித்தார். இதைத் தொடர்ந்து, அவர் நிதியமைச்சர், அவை முன்னவர் பொறுப்பை வகித்தார். சில காலங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
2014-ஆம் ஆண்டில்…2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. இதையடுத்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் வகித்து வந்த முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்து ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.
2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராகவும், அவை முன்னவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை அதிமுக கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்வால், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல்வராக பொறுப்பேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 31 பேர் அப்படியே அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பணிகளைத் தொடர்கிறார்: உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் துறைகளை ஏற்கெனவே கடந்த அக்டோபர் 11-ஆம் தேதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்தார். அப்போது முதல்வர் துறைகளை மட்டுமே கவனித்து வந்த அவர் இப்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடந்தன. இதையடுத்து தனது அலுவல் பணிகளை அவர் புதன்கிழமை (டிச.7) முதல் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் முதல் பேச்சு

ஜெயலலிதா, 1984 மார்ச் 4ல், அ.தி.மு.க., சார்பில் ராஜ்ய சபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 ஏப்., 23ம் தேதி ராஜ்யசபாவில் பதவியேற்ற அவர் தனது முதல் கன்னி உரையை மிக கம்பீரமாகவும், அழகான உச்சரிப்புடனும் ஆங்கிலத்தில் பேசினார். இவரது பேச்சை பல்வேறு தலைவர்களும் பாராட்டினர்.அவரது உரை: எனக்கு பேச வாய்ப்பளித்த துணைத்தலைவருக்கு வாழ்த்துக்கள். எனக்கு முன்பு பேசிய உறுப்பினர், 30 நிமிடம் பேசினார். நான் முதன்முறையாக பேச உள்ளதால் எனக்கு குறைந்தது, 15 நிமிடம் வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் என உரையை தொடங்குகிறேன்.நாட்டின் உயரிய இந்த சபையின் மாண்பினை பற்றி நான் அறிவேன். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இருக்கும் இந்த அவையில் நான் பேசுவதை பெருமையாக கருதுகிறேன்.
சில நாட்களாக ஊடகங்களில் மூத்தவர்கள் இருக்கும் சபையில் இளம் ரத்தம் பங்கேற்கிறது என எழுதப்படுகிறது. அவர்கள் வாழ்ந்த இந்த சபையில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம், 22 ஆண்டுகளுக்கு முன், 1962ல் எங்கள் மறைந்த தலைவர் அண்ணாதுரை, எம்.பி.,யாக இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம். அண்ணாதுரை முதல்முதலாக பேசிய இடத்தில் இருந்தே எனது முதல்பேச்சும் தொடங்குகிறது.இதை எனக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அண்ணாதுரை இந்த சபையில் முதன்முதலாக பேசும் போது, தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரம் பற்றியும், தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பற்றியும் பேசினார்.
எனது கோரிக்கையும் தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பற்றிதான் உள்ளது. தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக 1971ல் தமிழக அரசு, 25 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகம் இல்லை.
ஆந்திரா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு வர காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அணுமின்சார நிலையம் வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் 1967 (முதல் பிரிவு) அமைக்கப்பட்டது.நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் 2வது பிரிவும் அனுமதிக்கப்பட்டது. அப்போது கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வேண்டு மென்ற கோரிக்கை விடப்பட்டது. இதுபற்றிய கேள்வி 1971ம் ஆண்டு இதே சபையில் கேட்கப்பட்டபோது பிரதமர் இந்திரா பதிலளிக்கையில் முதல்பிரிவு முழுவதும் தமிழகத்துக்கும், 2வது பிரிவில் பாதி தமிழகத்துக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு கடம்பாறை திட்டத்தை தயாரித்து வருகிறது.அந்த திட்டத்துக்கு கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பயன்படுத்திகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஆகையால் கல்பாக்கம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு கிடைக்காவிட்டால் கடம்பாறை திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள பணம் நஷ்டமாகி விடும். எனவே கல்பாக்கம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே தர வேண்டும். தமிழக அரசு அனுப்பியுள்ள புதிய திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுபற்றிய உண்மையை சொல்ல வேண்டிய நிலை உள்ளது. 6வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழக அரசுக்கு 630 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பதுதான்.
கல்பாக்கம் அணுமின்சார நிலையத்திற்கு பின் இதுவரை 27 புதிய திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.அதில், 11 திட்டங்களுக்குத்தான் திட்டக்கமிஷன் அனுமதி வழங்கியது. இவ்வளவு திட்டங்களுக்கு அனுமதி கிடைத்தாலும் தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் வடசென்னையில் 1,050 மெகாவாட் அனல்மின்சார நிலையத்துக்கும், துாத்துக்குடி அனல் மின்சார நிலையத்தை விரிவுபடுத்தி மேலும் 420மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் 2வது பிரிவு அமைக்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் போதுமான நிலக்கரி சப்ளை இல்லாததால் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை.கடந்த 1978ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கொள்கைப்படி தேசிய அனல்மின் கார்ப்பரேஷன் கீழ் மத்திய அரசின் மின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எல்லா மாநிலங்களுக்கும் சமமாகவும், அந்த மின்சார நிலையம் அமைந்துள்ள மாநிலங்களுக்கு 10 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படும் என்ற முறையும் உள்ளது.
இது தவறான பங்கீடு ஆகும். இதனால் மின்சார பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் தொடர்ந்து பற்றாக்குறை மாநிலங்களாகவே இருக்கும். குறிப்பாக தமிழகம் எப்போதும் பற்றாக்குறையுள்ள மாநிலமாகவே உள்ளது. தனது மின்சார தேவைக்கு அண்டை மாநிலங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் பெற வேண்டிய நிலை இருக்கிறது.
எனவே தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய கல்பாக்கம், நெய்வேலி மின்சார நிலையங்களில் இருந்து அதிக மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

எனக்கு பின்னும் அ.தி.மு.க., ஜெ., உருக்கம்

தமிழக சட்டசபையில், 2016 ஜன., 23ல் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா, ‘எனக்கு பின்னும், அ.தி.மு.க., இருக்கும்’ என உருக்கமாக பேசினார். அவரது பேசியதாவது: சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக் கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா? ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும், 36 துறைகள் இருக்கின்றன அராசங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்ல வேண்டு மானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை.
ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்க வேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூட வேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.
அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப்பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்ல வேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளன.ஆனால் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான்.எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுயநலமும் இல்லை. பொது நலம் தான்.
மக்கள் நலம் தான். அ.திமு.க. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்.மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம்.
இந்த இயக்கம் இருக்கும் வரை, நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும், தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
முன்னதாக, திங்கட்கிழமை மாலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சரவை விவரம்:
1. ஓ.பன்னீர் செல்வம் – பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் – வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
3. செல்லுார் ராஜூ – கூட்டுறவுத் துறை
4. தங்க மணி – மின்சாரம், மதுவிலக்குத் துறை
5.வேலு மணி – நகர வளர்ச்சி துறை
6.ஜெயகுமார் – மீன்வளத் துறை
7.சண்முகம் – சட்டத்துறை
8.அன்பழகன் – உயர்கல்வி துறை
9.சரோஜா – சமூக நலன், சத்துணவுத் துறை
10. எம்.சி. சம்பத் – தொழில் துறை
11. கருப்பணன் – சுற்றுச்சூழல் துறை
12காமராஜ் – உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் – கைத்தறித் துறை
14. உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி வாரியத் துறை
15. விஜய பாஸ்கர் – சுகாதாரத் துறை
16. துரைகண்ணு – வேளாண் துறை
17. கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
18. ஆர்.பி. உதயகுமார் – வருவாய் துறை
19. வேலுமணி – நகர வளர்ச்சி துறை
20. வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா துறை
21. மஃபா பாண்டியராஜன் – பள்ளி கல்வித் துறை
22. ராஜேந்திர பாலாஜி – பால்வளத் துறை
23. பென்ஜமின் – ஊரக வளர்ச்சி துறை
24. விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை
25. நிலோபர் கபில் – தொழிலாளர் நலத் துறை
26. மணிகண்டன் – தகவல் தொடர்பு துறை
27. ராஜலெட்சுமி – ஆதி திராவிடர் நலத் துறை
28. பாஸ்கர் – கதர் துறை
29. வீரமணி – வணிக வரித் துறை
30. சேவூர் ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத் துறை
31. வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி – கால்நடை துறை

7 நாள் அரசு முறை துக்கம்: மாநில அரசு அறிவுப்பு

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5ம் தேதி) இரவு 11.30 மணிக்கு காலமானார் என்பதை தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது. இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இவ்வாறு தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒரு நாள் துக்கம்:
முதல்வர் ஜெ., காலமானதை தொடர்ந்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், இன்று ஒரு நாள் கர்நாடகாவிலும், துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பீஹார், கேரளா, புதுச்சேரியில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஜெயலலிதா மறைவு:  தலைவர்கள் அஞ்சலி!

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி: முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: தமிழக வளர்ச்சிக்காக ஜெயலலிதா ஆற்றிய பங்கு நீண்டகாலம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.
சோனியா: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்ட போது எந்த அளவிற்கு நோயை எதிர்த்து போராடினாரோ அதே அளவு போராட்ட குணத்துடன் தனது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.
ராகுல் : சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் ஜெயலலிதாவின் பெண்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஜெ., மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது
ம.பி., முதல்வர் சவுகான்: முதல்வர் ஜெயலலிதா மறைவு அறிந்து மிகுந்த துயரடைந்தேன் தமிழக மக்களுக்கு எங்களுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன்: தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தனக்கு சரி என்று பட்டதை தீர்க்கமாவும் நின்று சாதித்தவர், துணிச்சலான அரசியல் தலைவர் என அறியப்பட்டவர்
ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு: மக்களுக்காக உண்மையாக உழைத்த தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா எப்பொழுதும் நம்நினைவில் இருப்பார்.
தில்லி முதல்வர் கெஜ்ரிவால்: ஜெயலலிதா ஒரு செல்வாக்குள்ள தலைவர் சாதாரண மக்களின் தலைவர்
ராஜ்நாத்சிங்: இந்திய அரசியலில் மிகவும் முக்கிய இடத்தை வகித்தவர் ஜெயலலிதா அவருடைய மறைவு சமுதாய மக்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும்
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு: ஜெயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மம்தா: வலுவான, திறமையான மக்களின் நண்பனாக கவர்ந்திருக்கும் தலைவர் அவரது இழப்பு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
ஹமீத் அன்சாரி: ஜெயலலிதா மறைவு இந்திய நாட்டு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு
தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ்: தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
கருணாநிதி: அ.தி.மு.க.,வினர் மனதில் ஜெ., நீடித்து வாழ்வார்
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மத்திய அமைச்ச நிர்மலா சீத்தாராமன்: விடாமுயற்சியும் திடமான மனமும் கொண்ட பயணமாக ஜெயலலிதாவின் வாழ்க்கை இருந்தது.
சசிதரூர்: ஜெயலலிதா அசாதாரண பெண். வெற்றிகரமான மக்கள் தலைவராக விளங்கினார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி: ஒரு சிறந்த நிர்வாகியை, பிரபலமான அரசியல்வாதியை தமிழ்நாடு இழந்து விட்டது.
விஜயகாந்த்: ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
கனிமொழி: திறமை மற்றும் தனித்துவம் மிக்க தலைவரை இழந்து விட்டோம்.
அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி: நம் இதயங்களில் என்றும் வாழ்வார் ஜெயலலிதா.
லாலு பிரசாத் யாதவ்: நாடு உறுதியான தைரியமான தலைவரை இழந்து விட்டது.
வெங்கைய நாயுடு: டாக்டர்கள் தீவிரமாக போராடியும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை இது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
அமிதாப் பச்சன்: வலிமையான பெண் தலைவர் ஜெயலலிதா, அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்திய சினிமாவில் நூற்றாண்டு விழாவை சிறப்பித்த ஒரே முதல்வர். மிகுந்த புகழுக்கு உரியவர்

பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி இரங்கல்

முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் என்று அவர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா: டிசம்பர் துயரங்கள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வர் பதவியை அலங்கரித்து மரணத்தை தழுவினர்.
இருவரும் ஒரே மாதத்தில் இறைவனடி சேர்ந்தனர்.
இருவரின் உடலும் மக்கள் பொது அஞ்சலிக்கு வைக்க பட்ட இடமும் ராஜாஜி ஹாலின் இதே வாசல் படியில் தான்!
இருவரும் கோடிகணக்கான நெஞ்சங்களில் என்றும் வாழ்பவர்கள்!
உடல் அடக்கமும் எம்.ஜி.ஆர்., சமாதி அருகே மெரினாவில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது..
அரசியல் ஆசானுக்கும் அவர் வழி நடந்த சிஷ்யைக்குமான ஒற்றுமை இது.