Home Blog Page 5730

தமிழகத்தின் டிசம்பர் துயரம்!

தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது.
1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார்.
1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார்
1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார்.
2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின
2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
2016, டிசம்பர், 5- முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

ஜெயலலிதா உடல் இன்று நல்லடக்கம்!

சென்னை:
திங்கள் கிழமை இரவு காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று முன்தினம் மாலை திடீர் இதய முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஜெயலலிதா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காலமானார். திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.

போயஸ் கார்டனில் இறுதி சடங்கு:
ஜெயலலிதாவின் உடல் செவ்வாய்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவருடைய இல்லமான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க., அமைச்சர்கள் உடன் போயஸ் கார்டன் சென்றனர். அவரது உடலுக்கு சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. அதிகாலை 4.30 மணி முதல் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

இன்று மாலை 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

மன்னார்குடியும் மத்திய அரசும்! ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் ராஜாஜி ஹால் வரை!

அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு வந்த அதேநேரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்கிற செய்தியும் வெளியாகிறது. தேவைப்பட்டால் பிரதமர் மோடியும் சென்னை வருவார் எனவும் கூறப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத நேரத்திலும் கூட மத்திய அரசு தரப்பில், தேவைப்பட்டால் துணை ராணுவப் படை அனுப்பப்படும் என்ற பீதியான செய்தி தொடர்ந்து வருகிறது.
சென்னைக்கு வந்து சேர்ந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் போனவேகத்தில் அவர் 10 நிமிடத்திலேயே திரும்பிவிட்டார். அவரிடம் இருந்து அறிக்கை வரும் வரும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து விடிந்ததுதான் மிச்சம்.
ஆனால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வித்யாசாகர் ராவிடம் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதாக கூறப்பட்டது.. உண்மையில் அப்போது தமிழகம் ஜெயலலிதாவுக்கு என்னாச்சோ என்ற தவிப்புடன் ஆளுநர் அறிக்கைக்காக காத்திருந்தது. மத்திய அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு பற்றியே பேசிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து தமிழகமே எதிர்பார்த்து காத்துகிடக்க அப்பல்லோவில் விடிய விடிய அமைச்சர்களும் சசிகலாவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை ஒருபக்கம் நடக்க தலைமைச் செயலரோ ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஒருபக்கம் தவிப்பு இருக்கும் நேரத்தில் அதிகார மையங்கள் இடைவிடாத ஆலோசனைகளில் மூழ்கியிருந்தது.
இப்படி ஒரு இரவு முழுவதும் உருவாக்கப்பட்டிருந்த பீதியான திங்கள்கிழமை காலை சற்றே தணிந்தது. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன… அதே நேரத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தே மீண்டும் மீண்டும் மத்திய அரசு பேசியது. துணை ராணுவப் படையினரை அனுப்புவோம் என்றெல்லாம் மத்திய அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.
இந்த அறிவிப்புகளுக்கு நடுவே அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையிலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னர் ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் எம்எல்ஏக்கள், உதவியாளர்களின் செல்போன்களையும் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவர்களை அதிமுக தலைமை கழகத்திலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டது. இப்படி அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா தரப்பு மும்முரமாக இறங்கியது.
பின்னர் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமானது என அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்.. மத்திய அரசு தம் பங்குக்கு களமிறங்கியது. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மீண்டும் தமிழக சட்ட ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் பேசினார்… ஆளுநரும் அப்பல்லோவுக்கு வருகிறார் என செய்திகள் வெளியாகின. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உடனே சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து மீண்டும் மீண்டும் மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டு வந்தது. இதன் உச்சகட்டமான காட்சிகள்தான் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. அப்பல்லோவுக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சுமார் 40 நிமிடம் அங்கேயே இருந்தார்.
அப்போது ராயப்பேட்டை அதிமுக தலைமை நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க முடியாமல் அப்பல்லோவில் இருப்பதாக கூறப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயடுவும் அப்பல்லோவில்தான் இருந்தார்.
நீண்டநேரத்துக்குப் பின்னர் அப்பல்லோவில் இருந்து வெங்கையா நாயுடு புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னையிலேயே தங்கி இருந்து தமிழக நிலவரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விவரித்தார்.

ஜெயலலிதா கடந்து வந்த பாதை

சென்னை:
தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா 2016 டிச.5ம் தேதி இரவு காலமானார். அவர் கடந்து வந்த பாதை:

1948: மைசூருவில் பிப்., 24ம் தேதி பிறந்தார்.
1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் அறிமுகம்
1965: வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகம்
1965: தெலுங்கு படத்தில் அறிமுகம்
1968: இந்தி படத்தில் அறிமுகம்
1982: எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., வில் உறுப்பினரானார். * ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் முதன்முறையாக கட்சித் கூட்டத்தில் உரை.
1983: திருச்செந்துார் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதன்முறையாக தேர்தல் பிரசாரம்.
1983: கொள்கை பரப்பு செயலராக எம்.ஜி.ஆரால் நியமனம்.
1984 – 89: ராஜ்யசபா எம்.பி.,
1984: சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்., வெளிநாட்டில் சிகிச்சை. ஜெ., வின் சூறாவளி சுற்றுப் பயணத்தால் அ.தி.மு.க., வெற்றி.
1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் அ.தி.மு.க., இரண்டாக பிரிவு. இரட்டை இலை சின்னம் முடக்கம்.
1989: சட்டசபை தேர்தலில் வெற்றி. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். * அ.தி.மு.க., மீண்டும் ஒன்றானது. இரட்டை சிலை சின்னம் மீண்டும் ஒதுக்கீடு. ஜெ., பொதுச் செயலர் ஆனார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வர். தேர்தல் மூலம் வெற்றி பெற்ற முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
1991: லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி.
1996: எதிர்க்கட்சி தலைவர்
2001: 2வது முறையாக தமிழக முதல்வர்.
2002 : 3வது முறையாக தமிழக முதல்வர்.
2006: எதிர்க்கட்சி தலைவர்
2011: 4வது முறையாக தமிழக முதல்வர்.
2014: செப்., : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை.
2015 மே: விடுதலை
2015 மே: 5வது முறையாக தமிழக முதல்வர்.
2016 : 6வது முறையாக தமிழக முதல்வர்.

6 முறை முதல்வர் ஆனவர்:

1) 1991 ஜூன் 24 முதல் 1996 மே 12 வரை
2) 2001 மே 14 முதல் செப்., 21 வரை
3) 2002 மார்ச் 2 முதல் 2006 மே 12 வரை
4) 2011 மே 16 முதல் 2014 செப்., 27 வரை
5) 2015 மே 23 முதல் – 2016 மே 22
6) 2016 மே 23 முதல் நேற்று வரை

எதிர்க்கட்சித்தலைவர்

1989 பிப்., 9 முதல் டிச., 12 வரை
2006 மே 29 முதல், 2011, மே 13 வரை

தேர்தல் களத்தில்

ஆண்டு தொகுதி முடிவு வித்தியாசம்
1989 போடி வெற்றி 28,731
1991 பர்கூர் வெற்றி 37,215
1991 காங்கேயம் வெற்றி 33,291
1996 பர்கூர் தோல்வி 8,366
2002 ஆண்டிபட்டி வெற்றி (இடைத்தேர்தல்) 41,201
2006 ஆண்டிபட்டி வெற்றி 25,186
2011 ஸ்ரீரங்கம் வெற்றி 41,848
2015 ஆர்.கே.நகர் வெற்றி (இடைத்தேர்தல்) 1,41,062
2016 ஆர்.கே.நகர்., வெற்றி 39,545
2001 தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தியாவில் பதவி வகித்த பெண் முதல்வர்களில் நீண்டகாலம் பதவியில் இருந்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் ஜெயலலிதா உள்ளார். முதலிடத்தில் தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் (5,504) உள்ளார்.

ஜெயலலிதாவின் அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர்., கூட தனித்து போட்டியிட தயங்கினார். ஆனால், 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 இடங்களில் போட்டியிட்டு, 37 இடங்களில் வென்ற அ.தி.முக., மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

‘ஜெ’யித்துக் காட்டிய போராளி!

”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா.
அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார். காலத்தை வென்று காவியம் படைத்த இவர், தமிழக வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தார். தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்; இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வது நபர்; 29 ஆண்டுகளாக அ.தி.மு.க., வின் பொதுச்செயலர்; தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்; ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்; திருமணமாகாத பெண் தலைவர்; தைரியமான பெண்மணி; ‘அம்மா’ என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர் என பல சாதனைகளை கொண்டிருந்தவர் ஜெயலலிதா.
கர்நாடகாவின் மைசூருவில், 1948 பிப்., 24ல் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா இரண்டு வயதிலேயே தன் தந்தை ஜெயராமை இழந்தார். பின் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா–பாட்டி வாழ்ந்த பெங்களூருவுக்குச் சென்றார். இங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில், சில ஆண்டுகள், ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ பயின்றார்.
ஜெயலலிதா, மூன்று வயதில் இருந்தே பரதநாட்டியத்திலும், கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். மோகினி ஆட்டம், கதக், மணிபுரி ஆகிய பாரம்பரிய நாட்டியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். பரத நாட்டியக் கலையில் நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். வெள்ளித் திரையில் அவரது தாய்க்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், சென்னை சென்றார். ஜெயலலிதா சென்னையிலுள்ள, ‘சர்ச் பார்க் ப்ரேசென்டேஷன் கான்வென்ட்டில்’ மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்தார்.
பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், உயர்கல்வி படிக்க மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாத் துறையில் நுழைய நேரிட்டது. 15 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். அரசியல் அமர்க்களம் தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் நடந்த திருச்செந்துார் இடைத்தேர்தலில், பிரசார பொறுப்பை ஏற்றார்.
முதல் பணியை வெற்றிகரமாக முடித்து, வேட்பாளரை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து, 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1989ல் போடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஜெ., அணி மற்றும் ஜானகி அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக, தேர்தல் கமிஷனால் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.
1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அணி, ‘சேவல்’ சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். ‘இரட்டை இலை’ சின்னம் மீட்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லுார் ஆகிய இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி தேடித் தந்தார்.
முதன்முறை முதல்வர் 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க, கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர், 43, என்ற பெருமையை பெற்றார்.
அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார். 1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. 168 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பின், 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றியடைந்தது. இதற்கு ஜெயலலிதா பெரும் பங்கு வகித்தார். 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளில், 195 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரானார். 2006 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 68இட ங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, அப்போதைய தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் மூலம் ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். கோவை, திருச்சி, மதுரை ஆகிய பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார். இதன் பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. அ.தி.மு.க., மட்டும் தனியாக, 150 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, 2011, மே 16ல் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.
இந்த ஆட்சிக் காலத்தில் நடந்த திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் மற்றும் புதுக்ேகாட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட்ட, 39 தொகுதிகளில், 37 இடங்களில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தார். தடைகளை மீறி… கடந்த, 2014 செப்., 27ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக சிறப்புநீதிமன்றத்தால் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்தார்.
22 நாட்களுக்குப் பின் ஜாமினில் வெளிவந்தார்.தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல் கர்நாடக ஐகோர்ட் இவரை விடுதலை செய்து தீர்ப்புவழங்கியது. இதையடுத்து மே 23ல் முதல்வராக பதவியேற்றார். 2016 சட்டசபை தேர்தலில் 227 இடங்களில்அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. இதில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக
பதவியேற்று சாதித்தார்.

விடைபெற்றார் ஜெயலலிதா; தொண்டர்கள் கண்ணீர்!

சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திங்கள்கிழமை நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியிட்டது.
அந்த அறிக்கை விவரம்:
“சொல்லொணாத் துயரத்துடன் முதல்வர் ஜெயலலிதா புரட்சித் தலைவி அம்மா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதை அறிவிக்கிறோம்.
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
இதையடுத்து அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தாமே உணவு எடுத்து சாப்பிடத் தொடங்கினார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அண்மையில் மாற்றப்பட்டார். சிறப்பு சிகிச்சைப் பிரிவிலும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது.
இவ்வாறு அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மிகக் கடுமையான மாரடைப்பு (இதயச் செயலிழப்பு-“மாஸிவ் கார்டியாக் அரெஸ்ட்’) ஏற்பட்டது. இதயத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்கான முதலுதவி சிகிச்சை முறைகள் செய்யப்பட்டன; அவை பலன் அளிக்கவில்லை.
உடனடியாக ஒரு மணி நேரத்துக்குள் செயற்கை இதய செயல்பாட்டு (“எக்ஸ்ட்ராகார்ப்போரியல் லைஃப் சப்போர்ட்’) கருவி, செயற்கை சுவாசக் கருவி ஆகியவை பொருத்தப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை மீண்டும் செயல்படச் செய்வதற்கு உரிய அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அனைத்து வகையான தீவிர முயற்சிகளையும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டும்கூட முதல்வர் ஜெயலலிதாவின் பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவரை இதயச் செயலிழப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாமல், திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.
அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஓய்வின்றி உழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பால் வாடும் நாட்டு மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் துயரத்தில் அப்பல்லோ மருத்துவமனை தன்னை இணைத்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தது! பொதுச்செயலாளராக ஓபிஎஸ் தேர்வு?

சென்னை,
இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்து எடுக்கப்பட்டதாக தவல்கள் வந்துள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதால், அதிமுகவின் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் சென்னைக்கு வர நேற்று இரவு கட்சி தலைமை அறிவுறுத்தியது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதை அறிந்ததும், சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, மருத்துவமனை சார்பில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சிகிச்சை குறித்து தகவல் கூறப்பட்ட தாகவும், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திய தாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க -வின் புதிய பொதுச்செயலாளராக ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரி விக்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசு, தங்களுக்கு சாதகமாக இருக்கும் தம்பித்துரையை தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தம்பிதுரை இப்போது மக்களவை துணை சபாநாயகராகவும் இருக்கிறார் எனப்து குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் கோவில்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை:
அயோத்தியில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க மத்திய அரசும், உத்திரபிரதேச மாநில அரசும் உடனடியாக தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி சம்பந்தமான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் கோரியும் மாபெரும் காவிக் கொடி ஆர்ப்பாட்டமானது இந்து முன்னணியின் சென்னை மாநகரம் சார்பில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திக் கொண்டுஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

தொடர்ந்து 7 மணி நேர திருக்குறள் சொற்பொழிவு சாதனை

தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆக்கபூர்வமான கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி அரங்கில் தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெற்றது. இந்தச் சாதனையை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் நிகழ்த்தினார்.

இதன் நிறைவு விழாவில், நீதிபதி ராமநாதன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விஜயராகவன், சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் சேயோன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியை தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.

விழாவில் நீதிபதி ராமநாதன் பேசியதாவது: கின்னஸ், லிம்கா சாதனை என அனைத்தும் வாழ்க்கைக்குப் பயன்படாத சாதனையாக சிலர் நிகழ்த்தியுள்ளனர். ஆனால், ஆக்கபூர்வமான முயற்சியாக திருக்குறள் குறித்து கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியுள்ளார். இதன் மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்தியற்கு பாராட்டியே ஆகவேண்டும். பொருள் சுவை மாறுபடாமல் ரசிக்கும்படி, அழகிய தமிழில் பல்வேறு திருக்குறள் கருத்துகளை அவர் எடுத்துரைத்தார் என்றார் நீதிபதி ராமநாதன்.

விழாவில் கோ.விஜயராகவன் பேசியதாவது: மனித குலம் தொடர்ந்து வள்ளுவத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்கிணங்க கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த கருத்துகளை கேட்பதற்கு பேறு பெற்றிருக்க வேண்டும். பலரும் பல தலைப்புகளில் உரை நிகழ்த்துகின்றனர். ஆனால், தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இவர் பேசிய உரையில் சொன்னதை சொல்லாமல், பல உண்மைக் கருத்துகளை சான்றோர் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளார். இது பாராட்டுக்குரியது.

இந்த விழாவில், அமால்கமேஷன் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, சிவாலயா மோகன், பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவச் சங்க தலைவர் முருகானந்தம், கலைமகள் மாத இதழ் பதிப்பாளர் ஆர்.நாராயணசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது: திருக்குறளை வைத்துக்கொண்டு 7 மணி நேரம் அல்ல, 70 மணி நேரம் வரைகூட பேசலாம். இன்றுவரை அதிகமாக உரை எழுதப்படும் நூல் திருக்குறள் மட்டுமே. ஒவ்வொருவரின் பார்வையில், வேறுபட்ட கோணத்தில் உரை எழுத இன்றும் திருக்குறள் உள்ளது. சிந்திக்கப்படுகிறது.

தினமணி தலையங்கத்திற்குக் கீழே நாளும் ஒரு திருக்குறள் எழுதப்படுகிறது. அதற்கு, முதல் காரணம். எதைப் பற்றி எழுதினாலும் அதைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவன் பேராசான் சிந்தித்திருக்கிறார் என்பது. இரண்டாவதாக, நாள்தோறும் குறளின் விளக்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும், அதைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் படித்துப் பொருளறிந்து மனனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

இதன் மூலம் தமிழ் காக்கப்படும். குழந்தைகளின் வருங்காலம் காக்கப்படும். எனவே, வள்ளுவத்தினால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.
மக்கள் நல்வண்ணம் வாழ்வதற்கும், உலகம் உய்வித்து வாழ்வதற்கும் திருக்குறள் உதவும். கீழம்பூர் சங்கரசுப்பிரமணியன் நிகழ்த்திய இந்த கின்னஸ் சாதனை மூலம் வள்ளுவத்தையும், திருக்குறளும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் கி.வைத்தியநாதன்.

ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி: வருமான வரித் துறை அதிர்ச்சி

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கடந்த மாத இறுதி வரை ஜன் தன் வங்கி கணக்கில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்த இந்த முதலீட்டால் வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக் கப்பட்டது. ரூ.2.50 லட்சம் வரை தனி நபர்கள், இல்லத்தரசிகள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.இதையடுத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பல்வேறு வழி களில் தங்களிடம் உள்ள கோடிக் கணக்கான கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை மக்களுக்காக கடந்த 2014-ல் மத்திய அரசு தொடங்கிய ஜன் தன் வங்கி கணக்கில் கறுப்புப் பண பதுக் கல்காரர்கள் பணத்தை முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்குறித்து நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ‘‘ஜன் தன் வங்கி கணக்கில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கே சொந்தம். ஏழைகள் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களை கண்டறிந்து சிறைக்கு அனுப்ப புதிய திட்டம் வகுத்து வருகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 25.85 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட் டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி வரை ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.45,636.61 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தொகை திடீரென ரூ.28,685 கோடி அதிகரித்துள்ளது.அதே சமயம் 22.85 சதவீத ஜன் தன் கணக்குகளில் இதுவரை பூஜ்ய நிலுவை (ஜீரோ பேலன்ஸ்) நிலையே நீடிக்கிறது. ஜன் தன் வங்கி கணக்கில் உள்ள தொகை களில் ரூ.1.64 கோடி கணக்கில் வராத பணமாக இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ரூ.40 லட்சம் பறிமுதல்?

பிஹாரில் அரா பகுதியில் வசிக்கும் சித்தாரா தேவி என்பவர் தனது ஜன் தன் கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். வருமான சான்றுகளை அவர் அளிக்கத் தவறிவிட்டார். இதனால் அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.40 லட்சமும் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என தகவல் வெளி யாகி உள்ளது