Home Blog Page 5810

சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து: ராமதாஸ்

சென்னை:

மதுரவாயல் பால திட்டத்துக்கு அனுமதி தேவை; சென்னைத் துறைமுகம் மூடப்படும் அபாயம் உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியீட்ட அறிக்கை:

வருவாய் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக திகழ்ந்த சென்னை துறைமுகத்தின் இன்றைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சில ஆண்டுகளாக  நட்டத்தில் இயங்கி வரும் சென்னை துறைமுகம் காலப்போக்கில் செயல்படாமல் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தின் இந்த அவலநிலைக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் தன் முனைப்பும் (ணிநிளி), ஊழலும் தான். சென்னை மாநகர எல்லையில் பகல் நேரத்தில் சரக்குந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் இரவு நேரத்தில் மட்டுமே செல்ல முடியும். இதனால், சென்னை துறைமுகத்திற்கு ஒருமுறை சென்று சரக்குகளை இறக்கி வருவதற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் ஆகிறது. இந்நிலையை மாற்றி சென்னை துறைமுகத்திற்கு எந்நேரமும் சரக்குந்துகள் சென்று வருவதற்கு வசதியாக, பா.ம.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மதுரவாயல் & சென்னை பறக்கும் பாலம் திட்டம்  உருவாக்கப்பட்டு, 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2011&ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, இத்திட்டத்தின் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து எதிர்பார்த்த சில விஷயங்கள் நடக்காததால் இந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பறக்கும் பாலம் திட்டப்பணிகளை  தொடங்க அனுமதிக்கும்படியும் ஆணையிட்டது. ஆனால், அத்தீர்ப்பை மதிக்காத ஜெயலலிதா அரசு, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பணிகளை மீண்டும் முடக்கியது.
பறக்கும் பாலத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்காவிட்டால், சில ஆண்டுகளுக்கு முன்பே அதன் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கியிருக்கும். ஆனால், அதிமுக அரசின்  பிடிவாதம் காரணமாக பறக்கும் பாலம் திட்டப்பணிகள் 10% முடிவடைந்த நிலையில் முடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததன் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு சென்று சரக்குகளை இறக்கி வருவதற்கான அவகாசம் 4 முதல் 5 நாட்களாக அதிகரித்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் காத்திருப்பதால் ஏற்படும் கால தாமதம் மற்றும் பொருள் இழப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஏற்றுமதியாளர்கள் எண்ணூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம்,  ஆந்திர மாநிலத்திலுள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகம் மூலம் தங்களின் உற்பத்திப் பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை அனுப்ப 5 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், சென்னையிலிருந்து 188 கி.மீ. தொலைவிலுள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் அதிகபட்சமாக 12 மணி நேரத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு திரும்ப முடிவதே இதற்கு காரணமாகும்.
ஏற்கனவே, சென்னை துறைமுகத்திலிருந்து நிலக்கரி, இரும்புத்தாது போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களை கையாள உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டதால்  துறைமுகத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டு, 5 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருகிறது. மற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை அதிகரிப்பதன் மூலம் இந்த இழப்பை ஈடுகட்ட சென்னை துறைமுகம் திட்டமிட்டிருந்த நிலையில், பறக்கும் பாலம் திட்டம் முடங்கியதால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. இதனால் திருப்பெரும்புதூர் பகுதியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும், சென்னை துறைமுகத்திற்குள் ரூ.10,000 கோடியில் மேற்கொள்ளவிருந்த விரிவாக்கத் திட்டங்களையும் துறைமுக நிர்வாகம் கைவிட்டு விட்டது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் துறைமுகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும். அது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமையும்.

அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தை விட கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏற்றதாக இருப்பதால் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் ஆந்திரத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். இதைத் தடுக்க மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்தை செயல்படுத்தி சென்னை துறைமுகத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏற்றதாக மாற்றுவது தான் ஒரே வழியாகும். எனவே, மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்று பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். அ.தி.மு.க. அரசு  அவ்வாறு செய்யாத பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆம் தேர்தலுக்கு பிறகு அமையும் பா.ம.க. ஆட்சியில் இத்திட்டத்திற்கு எதிரான அனைத்து தடைகளும் விலக்கப்படும்.

அமெரிக்காவில் முதல் தமிழ் குறும்படப் போட்டி

 

சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): தமிழர்களின் கனவு தேசமான சிலிக்கான் வேலியில் முதன் முறையாக அமெரிக்கத் தமிழர்களுக்கான குறும்படப் போட்டி நடைபெறுகிறது.   

நடுவராக பங்கேற்க இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பரத்பாலா மற்றும் நடிகர் நெப்போலியன் பங்கேற்கின்றனர்.  

சான் ஃப்ரான்சிஸ்கோ – சான் ஓசே பகுதியில் செயல்பட்டு வரும் விரிகுடாக் கலைக்கூடம் சார்பில் பிப்ரவரி 6ம் தேதி சனிக்கிழமை மாவை 5 மணிக்கு, குப்பெர்டினோ டெ அன்சா   கல்லூரி (De Anza College) அரங்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினராக மாவீரன் நெப்போலியன்

இறுதிப் போட்டியில் இடம்பெறும் ஆறு படங்களிலிருந்து வெற்றியாளர்களை, கார்த்திக் சுப்பராஜ், வந்தே மாதரம், மரியான் புகழ் பரத் பாலா தேர்ந்தெடுக்க உள்ளனர்.  

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். 

மாலை ஐந்து மணிக்கு ரெட் கார்பெட் வரவேற்புடன் தொடங்கும் நிகழ்ச்சியில், 6 மணி அளவில் படங்கள் திரையிடப்படுகின்றன. உணவு இடைவேளைக்குப் பிறகு 8:30  மணி அளவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு  நடைபெறும்.

இறுதிச் சுற்றில் 6 இளம் படைப்பாளிகள்

அமெரிக்கா முழுவதிலிருந்தும் 22 பேர் போட்டியில் பங்கேற்று படங்களை சமர்ப்பித்தனர். அவற்றிலிருந்து பதினைந்து படங்கள் முதல் சுற்றபில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் சமர்ப்பித்த 15 படங்களிலிருந்து ஐந்து படங்களும், Wild card  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படமும்  மொத்தம் 6 படங்கள் நேரடியாக அரங்கத்தில் திரையிடப்படுகிறது.

அமெரிக்க தமிழர்களான அஞ்சலி பத்மநாபன், அறிவு மாணிக்கம், குகன் வைத்தியலிங்கம், கமல் பிரேம்தாஸ், விவேக் கிருஷ்ணன், விவேக் இளங்கோவன் ஆகிய ஆறு பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்கள். இவர்களில் ஒருவர் பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத் தமிழரின் நம்பிக்கை இயக்குநர் விருது

நேரடியாக அரங்கத்தில் திரையிடப்படும் ஆறு படங்களிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அவருக்கு ‘அமெரிக்கத் தமிழரின் நம்பிக்கை இயக்குநர்’  விருதை கார்த்திக் சுப்பராஜ் வழங்க உள்ளார். விருதுடன் ஐந்தாயிரம் (ரூ 3 லட்சம்) டாலர் பரிசுத் தொகையும் உண்டு. இவ்வளவு பெரிய பரிசுத் தொகையுடன் நடக்கும் முதல் குறும்படப் போட்டி இதுவே. 

மேலும் 14 பிரிவுகளில் வெவ்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பரிசுக் கேடயங்கள் அனைத்தும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற நிறுவனத்திலிருந்து தருவிக்கப்படுகின்றன. 

முதன் முறையாக…

அமெரிக்காவில் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக திரையிடப்பட்டு தேர்வு செய்யப்படும் முதல் குறும்படப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தகவல்களுக்குhttps://bayareafinearts.org/shortfilm2016.phpஎன்ற இணையத் தளத்தில் காணலாம்.

போட்டி மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகளை விரிகுடாக் கலைக்கூடத்தின் நிறுவனரும், அமெரிக்கத் தமிழ் நடிகருமான திருமுடி துளசிராமன் தலைமையில் செய்து வருகின்றனர்.

முதன் முறையாக கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் “முத்துராமலிங்கம்”

 
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”.
 
இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
 
மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் வாயிலாக பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.
 
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.
 
குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி A.செல்வம்.

தைவான் நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலி

தைவான் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் தைனான் சிட்டி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வடகொரியா ராக்கெட் ஏவியதற்கு ஐநா கண்டனம்; அவசர கூட்டத்திற்கு ஐ.நா. அழைப்பு

வடகொரியா சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

இதுவரை 3 முறை அந்த நாடு அணுகுண்டு சோதனைகளையும், பல முறை அணு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், அதிக சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அந்த நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜாங் அன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம் 6-ம் தேதி புங்க்யே ரி நகரில் உள்ள அணு ஆயுத சோதனைத்தளத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நீண்ட தூரம் பயணிக்கும் திறன்கொண்ட வடகொரியாவின் இந்த ராக்கெட், தேவையான சமயத்தில் ஏவுகணையாக மாற்றி பயன்படுத்தும் வகையில் வடகொரியா வடிவமைத்து உள்ளது.

ரயில்வே வளர்ச்சிக்கு தனியாக கூட்டு நிறுவனம் அமைக்க கோரி முதல்வர்க்கு பயணிகள் சங்கம் கோரிக்கை

தமிழக ரயில்வேத்துறை வளர்ச்சிக்கு மாநில அரசும் மத்திய ரயில்வேதுறையும் இணைந்து தனியாக கூட்டு நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது

   தமிழ்நாடு ரயில்வே துறையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 3885 கி.மீ தூரம் ரயில் இருப்புபாதை வழி தடம் உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பாதைகளில் சுமார் 70 சதவிகிதம் ஒரு வழி இருப்பு பாதையாகவே உள்ளது.  இதை போல் தமிழகத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 3000 கி.மீ அளவுக்கு புதிய இருப்புபாதை அமைப்பதற்கு சர்வே செய்யப்பட்டு செயல்படுத்தபடாமல் உள்ளது. தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளம் ரயில்வே துறையில் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் – காசரகோடு ரயில் வழி தடம் இருவழிபாதையாகவும் மின்சார ரயில்பாதை முடியும் தருவாயில் உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் ரயில்வே வளர்ச்சியில் ஐம்பது சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை திட்ட கமிஷனிடம் அனுமதி வாங்கி செயல்படுத்தி வருகிறது. தென் இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் ரயில்வே துறை வளர்ச்சியில் படுவேகமாக முன்னேறி வருகிறது. கேரளா ஆந்திரா மாநிலங்களில் ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற அம்மாநில அரசுகளுடன் சேர்ந்து ரயில்வே சமீபத்தில் கூட்டு நிறுவனங்களை துவக்கியது. ஒடிசா மஹாராஷ்டிரா மாநிலங்களும் கூட்டு நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.

தனியாக கூட்டு நிறுவனம் அமைத்தல்:

          தமிழத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீட்டர் கேஜ் பாதைகளை அகலபாதைகளை மாற்றுதல் ஒருவழிபாதையாக உள்ள பாதைகளை இருவழிபாதையாக மாற்றம் செய்தல் புதிய ரயில்பாதைகளை அமைத்தல் ரயில்பாதைகளை மின்மயமாக மாற்றுதல் புதிய முனைய வசதிகளை ஏற்படுத்துதல் புதிய ரயில்வே தொழிற்சாலைகளை அமைத்தல் ஆகிய முக்கிய திட்டங்கள் போதிய நிதி இல்லாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இது போன்ற ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் இணைந்து ஐம்பது சதவிகித நிதியையும் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமா ரயில்வேதுறைக்கு கொடுத்தால் இந்த திட்டங்கள் விரைவாக நிடைபெறும். மற்ற மாநிலங்கள் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூட்டு நிறுவகங்களை துவங்கியது போல தமிழகமும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரயில்வேத்துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உடனடியாக துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்ட்டது.

வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 100 சதவிகிதம் முன்னுரிமை:

        தமிழகம் ரயில்வேத்துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனம் துவங்கி பணிகளை செய்யும் போது அந்த பணிகளால் உருவாக்கப்படும் ரயில்வே வேலைவாய்ப்பில் 100 சதவிகிதம் தமிழர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஐம்பது சதவிகித நிதியை கொடுப்பதால் இந்த கூட்டு நிறுவனம் துவங்கும் போது அதில் தமிழக அரசு ரயில்வேதுறையுடன் போடப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதாவது தமிழ் மொழியை ஒரு மொழிபாடமாக படித்தவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த வேலைவாய்ப்புகளுக்கு என போட்டி தேர்வுகள் நடத்தும் போது தமிழ்மொழியில் கேள்விதாள் இருக்க வேண்டும் என்று  ஒப்பந்தத்தில் ஓர் சரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர் நியமிக்க கோரிக்கை:

      தமிழகம் ரயி;ல்வே துறையில் வளர்ச்சி பெறுவதற்கும் தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள்  இயக்குதல் தமிழக்தில் உள்ள ரயில்பாதையை இருவழிபாதையை அதிகப்படுத்துவதற்கும் புதிய ரயில் இருப்புபாதைகள் அமைக்கவும் தற்போது மிட்டர் கேஜ் ரயில்பாதைகளை அகல ரயில்பாதைகளாக மாற்றும் பணியை துரிதப்படுத்துதல் என பல ரயில்வே திட்டங்கள் நடைமுறைபடுத்தட வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர் நியமிக்க வேண்டும். 1050 கி.மீ தூரம் இருப்புபாதை கொண்ட கேரளாவில் தற்போது இது போன்ற ஒரு அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கேரளா அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் ரயில் பட்ஜெட்டுக்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொகுத்து மிக பெரிய கோரிக்கை பட்டியல் தயார் செய்து மத்திய ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து அவர்கள் மாநில கோரிக்கையை சாதித்து கொள்கின்றனர். இதை போல் தமிழகத்திலிருந்து ஒர் மாநில ரயில்வே அமைச்சர் இருந்தால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

        தமிழக முதல்வர் அவர்கள் இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழக ரயில்வே வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாஜக.,வினால் ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும்: தமிழிசை உறுதி

 

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியை தர முடியும் என்று பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க., தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், தலைவர் பதவிக்கு மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்த தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால், கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. தேர்தல் பிரசாரத்தில், மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்வர் என்று கூறினார்.

தேசியத் தலைவரான ராகுல் காந்தியை தமிழக முதல்வராகப் பார்ப்பதா?: ஜி.கே.வாசன் அதிர்ச்சி

 

சென்னை:
தேசியத் தலைவரான ராகுல் காந்தியை தமிழக முதல்வராகப் பார்ப்பதா?  என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து விவாதித்தார். பி9ன்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

மத்திய அரசு உயிர்காக்கும் 76 வகை மருந்துகளுக்கு இறக்குமதிக்கான வரிச் சலுகையை ரத்து செய்திருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் மருந்துகள் விலை உயர்ந்து நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இந்தியாவில் அதிக அளவில் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் எச்.ஐ.வி., புற்றுநோய், உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிக ரத்தக்கசிவு போன்ற பல்வேறு நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே உயிர் காக்கும் மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணம் தமிழக மீனவர் பிரச்னையில் நல்ல தீர்வினை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

ராகுல்காந்தி தமிழக முதல்வராக வரவேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி வருகிறார். ராகுல் காந்தியை ஒரு தேசிய தலைவராகத்தான் த.மா.கா பார்க்கிறது. மாநிலத் தலைவராக அல்ல என்று தனது அதிர்ச்சியை அப்போது வெளியிட்டார் ஜி.கே.வாசன்.

டி.கல்லுப்பட்டி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர்

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ்–லாரி மோதல் விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச்சாவடி அருகே இன்று (நேற்று) பிற்பகல் நெல்லையில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், கரூரில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த லாரியும் மோதியதில், பஸ்சில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்து குறித்து எனக்கு செய்தி கிடைத்தவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் நான் உத்தரவிட்டு உள்ளேன்.

இந்த சாலை விபத்தில் 32 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டு உள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

நாட்டறம்பள்ளி கல்லூரியில் மர்மப் பொருள் வெடித்த விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே, நாட்டறம்பள்ளியில் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்த மர்ம பொருள் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் கல்லூரி பஸ்சின் டிரைவர் உடல் கருகி பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். மர்மப் பொருள் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ‘டோல்கேட்’ பகுதியில் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 11 மணியளவில் வானத்திலிருந்து பறந்து வந்த ஒரு மர்மப் பொருள் பிரதான கட்டடத்துக்கு எதிரே உள்ள தோட்டப் பகுதியில் விழுந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. இந்த வெடிச்சத்தம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது. மாணவ, மாணவிகள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

வெடிபொருள் வெடித்துச் சிதறியபோது அருகே நின்றிருந்த கல்லூரி பஸ்சின் டிரைவர் கே.பந்தாரப்பள்ளியை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பவர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த பணியாளர்கள் முரளி (30), சந்தோஷ் (40), சசிகுமார் (45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காமராஜ் இறந்து விட்டார். மற்ற 3 பேரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் கல்லூரியில் சில அறைகளின் கண்ணாடிகள் நொறுங்கின. வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த 5 பஸ்களின் கண்ணாடிகளும் நொறுங்கின.

வெடிபொருள் விழுந்த இடத்தை நாட்டறம்பள்ளி தாசில்தார் செல்வராஜ் பார்வையிட்டபோது பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து புகையும் வெளிவந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு மர்மப் பொருளைச் சுற்றி வேலியிட்டு யாரும் நெருங்கிவிடாமல் தடுப்புகளை ஏற்படுத்தினர்.

மர்மப் பொருள் குறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுக்கும், வெடிபொருள் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி தலைவர் செல்வமும் அந்த இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.