சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட வழக்குரைஞர்களுக்கு தடை !
மலேஷியா விமான நிலையத்தில் நயன்தாராவிற்கு நடந்தது என்ன ? இருமுகன் படக்குழுவினர் விளக்கம்
விக்ரம் – நயன்தாரா நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கி வரும் “இருமுகன்” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக மலேஷியா சென்ற நயன்தாரா திரும்பி வரும்போது விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட விவரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போதைப்பொருள் வைத்திருந்ததாக நடிகை நயன்தாராவின் பெயர் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டு வந்தது.
இதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது.
அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், நயன்தாராவின் பாஸ்போட் நகல் அந்நாட்டு இணையதளங்களில் வெளியானது குறித்து, மலேஷியா காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்தை தயாரிக்கும் லைகா
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தை தயாரிக்கும் லைகா productions. திரைப்பட தயாரிப்பில் தன்னிகரற்று வளர்ந்து வரும் லைகா productions நிறுவனம் தரமான கதைகளையும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறக் கூடிய நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் வைத்து படம் தயாரித்து வருகின்றனர்.
நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, தொடரும் வெற்றிகளால் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ள விஜய் ஆண்டனியை தங்களது அடுத்த தயாரிப்பான ‘எமன்’ படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர். வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கரே இந்தப் படத்தையும் இயக்க இருப்பதுக் குறிப்பிடத்தக்கது.
கதாநாயகனாக நடிப்பதோடு, இசை அமைக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. கதை இயற்றுவதோடு, ஒளிப்பதிவு செய்வதோடு, இயக்கவும் செய்கிறார் ஜீவா ஷங்கர். செல்வாவின் கலை வண்ணத்தில், வீர செந்தில் படத்தொகுப்பு செய்ய, ஷெரிப் நடனம் அமைக்க, திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
விஜய் ஆண்டனியுடன் இணைவது என்பது என்னை பொறுத்த வரை தாய் வீட்டுக்கு வருவதை போன்றது தான். ‘நான் ‘திரை படத்தில் இருந்து இன்று வரை அவருடைய அசுரத் தனமான வளர்ச்சி என்பது அவரது உழைப்புக்கு சான்று.
எமன் படக் கதை ‘நான்’ படம் இயக்கும் போதே என்னிடம் தயாராக இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அந்தக் கதையை நான் நல்ல மாஸ் இமேஜ் உள்ள ஸ்டார் நடிகருக்கு செய்து வைத்து இருந்தக் கதை. இன்று அந்தக் கதைக்கு முற்றிலும் பொருத்தமாக விஜய் ஆண்டனி வளர்ந்து இருப்பதே அவரது வெற்றிக்கு அத்தாட்சி.
‘எமன்’ தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். நாம் பொதுவாக எண்ணுவதைப் போல் எமன் என்பவர் மரணத்துக்கு மட்டுமே கடவுள் அல்ல. அவர் தர்மத்தை காக்கும் கடவுளும் ஆவார். இந்தப் படத்தின் கதைக் கரு வரும் நாட்களில் பேசப்படும் படமாக இருக்கும்.
‘எமன்’ முற்றிலும் ஜனரஞ்சகமான, எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். தமிழ் திரை ரசிகர்களுக்கு தரமான பொழுது போக்குப் படங்களை தர வேண்டும் என்று தீர்மானமான முடிவுடன் இருக்கும் லைகா productions நிறுவனத்தினருக்கு முற்றிலும் ஏற்றப் படமாக இருக்கும் ‘எமன்’ என்றுக் கூறினார் இயக்குனர் ஜீவா சங்கர்.
மணமக்கள் நெற்றியிலும் ‘அம்மா ஸ்டிக்கர்’… அதிமுகவினர் நடத்திய திருமணம்!
மு தல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மெகா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 68 திருமண ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட (பட்டம்) கட்டப்பட்டிருந்தது திருமணத்திற்கு வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியபோதிலும், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்தன. அப்படி வந்த நிவாரணப் பொருட்களில், அதிமுகவினர், முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது அதிமுக அரசின் ஆட்சிக்காலம் முடிய இருக்கும் தருவாயில், தங்களுடைய ஐந்தாண்டு ஆட்சியை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில், எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அச்சிடுவது வாடிக்கையாகி விட்டது.அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி, 68 ஜோடிகளுக்கு தனது தலைமையில் இலவச திருமணம் செய்து வைத்தார் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இலவச திருமணத்தை நடத்தி, சீர்வரிசைகளை வழங்குவது வழக்கம்தான். ஆனால் இந்த முறை எங்கு பார்த்தாலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அதகளப்படுத்தி விட்டனர் அதிமுகவினர்.
திருமண விழாவில் மணமக்களுக்கு 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, பட்டுசேலை, பட்டு ஜாக்கெட், பட்டு வேட்டி, பட்டு துண்டு, பட்டு சட்டை, கட்டில், மெத்தை, தலையணை செட், பீரோ, பெரிய அண்டா, குக்கர் உள்பட வழங்கப்பட்ட 68 பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியிருந்தனர். சரி பொருட்களில்தானே என மணமக்கள் பக்கம் திரும்பினால், மணமகன், மணமகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் ( அம்மா ஸ்டிக்கர் ) ஒட்டப்பட்ட ‘பட்டம்’ கட்டப்பட்டிருந்தது. மேலும். கையில் கொடுக்கப்பட்ட பூங்கொத்திலும் அம்மா படத்தையொட்டி விசுவாசத்தை காட்டியிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்.
மணமக்களின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட பட்டம் கட்டப்பட்டிருந்ததை பார்த்த மணமக்களின் உறவினர்கள் சற்று வியப்படைந்தபோதிலும், அவர்கள் கட்சிக்காரர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்பதால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த விழாவில் மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய செய்தியை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாசித்தார். அதில் ‘அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு ஆற்றிவரும் அரும்பணிகளை பலருக்கும் எடுத்து சொல்லி, கழகத்தின் வெற்றிக்கு உங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சீரும் சிறப்புமாக இந்த திருமண விழாவை நடத்திட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது பாராட்டுகள். தங்களுடைய கழகப்பணிகள் இத்தகைய ஆக்கப்பூர்வமான வழிகளில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். மணமக்கள் வாழ்க பல்லாண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே சமயம் இந்த திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, எதெதற்குதான் ‘ அம்மா ஸ்டிக்கர்’ என்பதற்கு ஒரு வரைமுறை கிடையாதா? என்ற ரீதியில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இயலாதவர்களுக்கு உதவும் சேவையாக நடக்க வேண்டிய திருமண விழாவை தேர்தல் வேலையாக பார்த்தால் இப்படி எல்லாம் நடக்கும். நல்லவேளை தாலியில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டாமல் போனார்களே என்றெல்லாம் பொங்கி தீர்க்கிறார்கள் நெட்டிசன்கள்!
(விகடன் தளத்தில் ரசித்துப் படித்தது)
டார்லிங் 2 பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன்!
தன்னை நிரூபித்து வென்ற ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கி வந்து ரசிகர்களை மகிழ்விப்பது சந்தோஷமான பெருமைக்குரிய விசயம் அல்லவா ?
சென்ற வருடம் அப்படி வென்ற படங்களில் மிக அட்டகாசமான வெற்றியைப் பெற்ற படம் டார்லிங். மீண்டும் ஒரு முறை அவராலேயே எழுதப்பட இருக்கிறது டார்லிங் -2 படம் மூலமாக .!
ஜின் என்ற பெயரில் உருவாகத் துவங்கிய படம்தான் இது, ஜின் எப்படி டார்லிங் 2 ஆனது ?
இதற்கு வெற்றிப் புன்னகையோடு பதில் சொல்லும் ஞானவேல் ராஜா “ஒரு பெயரோடு தொடர் பட வரிசையில் வரும் இரண்டாவது படம் கதையிலோ நடிக நடிகையரிலோ முதல் படத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்பது கட்டாயமில்லை. படத்தின் குணாதிசயத் தன்மை ஒன்றாக இருந்தாலே போதும்.
இந்த டார்லிங் 2 படத்தை இயக்கி இருப்பது அறிமுக இயக்குனரான சதீஷ் சந்திர சேகரன்.
ஐந்து நண்பர்கள் பேய் பிடித்த ஒரு நண்பனோடு சேர்ந்து ஒரு பயணம் போகிறர்கள் என்ற ஒற்றை வரியே என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியிலும் திகிலோடு நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்ட திரைக்கதை, இது கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கட்டியம் கூறியது.
மெட்ராஸ் புகழ் கலையரசன், மற்றும் காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ்காந்த், ‘மெட்ராஸ்’ ஜானி போன்றவர்களோடு அறிமுகங்களான ரமீஸ் ராஜா மற்றும் மாயா.. என்று திறமை மிக்க கலைஞர்களின் கூட்டணி இந்தப் படத்தில் இருந்தது இன்னும் பலம் சேர்த்தது.
அதோடு ஜின் என்ற பெயரை டார்லிங் -2 என்று மாறுவது பற்றிய யோசனை சிறு தயக்கமும் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அடுத்த மாத துவக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப் படம் ரசிகப் பெருமக்களின் டார்லிங் ஆக இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை” என்கிறார் உறுதியாக
சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில, படத்தின் இசையமைப்பாளருக்கு மனதாரப் புகழ் மாலைகள் சூட்டுகிறார் இயக்குனர் சதீஷ் சந்திர சேகரன்.
“நா ச காரே சா.. என்று துவங்கும் பாடலைக் கேட்ட பிறகு, அதைப் படமாக்குவதற்கு முற்றிலும் புதுமையான ஒரு ஐடியாவே தோன்றியது. பாடலுக்கான தன்மை, லொக்கேஷன், உடைகள் என்று எல்லாவற்றையும் அந்த மெல்லிசைப் பாடலைக் கேட்ட பிறகு வேறு மாதிரியாக திட்டமிட முடிந்தது. அந்த அளவுக்கு அது சிறப்பான பாடல். பாடல் மட்டுமல்ல, படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.
அதுவும் ஸ்டுடியோ கிரீன் என்கிற மாபெரும் நிறுவனத்துடன் இணைந்து வருவது எங்களுக்கு மிக மிக உற்சாகம் தரும் அரிய வாய்ப்பாக இருக்கிறது. இந்த டார்லிங் -2 திரைப்படம் முதல் படமான டார்லிங்கின் பொருத்தமான தொடர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை” என்கிறார் நம்பிக்கையோடு.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்று இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.
கெத்து – திருப்புகழ் – செம்மொழி
கருணாநிதியின் பேரன் உதயநிதி நடித்த திரைப்படம் “கெத்து” பற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு :
கெத்து என்ற சொல் திருப்புகழில் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழ்த் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை இந்தப் படத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார் உதயநிதியின் வழக்கறிஞர்.
நமக்கு ஒரு டவுட்டு !
திருப்புகழை மேற்கோள் காட்டி வரிவிலக்கு கேட்கும் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு திருப்புகழின் பெருமை இப்போதுதான் தெரிந்ததா?
கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் திருப்புகழுக்கு இடமில்லையே…….
கருத்து: சுப்பு மணியன்
சிவனே உயிர்கள் அனைத்தும்: கவிதை
சிவபிரதோஷம்
சிவனே உயிர்கள் அனைத்தும்
(மீ.விசுவநாதன்)
ஏதோ ஏதோ தேடுகிறேன் – அது
எதிர்வந்த போதோ ஓடுகிறேன் !
தீதோ நன்றோ தெரியாமல் – சினத்
தீப்பிடியில் சிக்கி வாடுகிறேன் !
தேதி கிழிக்கும் போதினிலே -நாள்
தேய்ந்தங்கு போன நிலையறிந்தேன் !
பாதி கிணறு தாண்டித்தான் -சிவன்
பாதத்தின் பெருமை உணர்ந்திட்டேன் !
கண்கள் தெரியும் போதினிலே -சிவனைக்
காணாமல் வாழ்தல் சரியாமோ ?
மண்ணில் வந்த பதிவுக்கு -சிவ
மானபொரு ளன்பு புரியாதோ ?
நட்சத் திரங்கள் எல்லாமே – சிவ
நாட்டியத்தின் வெளிச்ச விழியன்றோ !
வெட்ட வெளியின் ஒலியின்பம் – அவன்
வேதத்தின் நுட்ப மொழியன்றோ !
சிவனே உயிர்கள் அனைத்துமென – என்
சிந்தைக்குள் ஒளியாய் வரவேண்டும் !
யமனே வந்து நின்றாலும் – அன்பு
அரனேதா னென்ற மனம்வேண்டும் !
( வாய்பாடு: மா,மா,காய், காய்,மா, காய்)
(இன்று சனிப் பிரதோஷ தினம் : 06.02.2016)
சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்!
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.
கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இத்தகு கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். தினப் பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். இந்த தினப் பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப் பிரதோஷ சம்பவத்தினால் தான் உருவானது. மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பல கோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம், நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்ச மாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்து விடும்.(பொய் சொல்லுதல், கொலை செய்தல், பேராசைப்படுதல், வீணான அபகரித்தல், குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்ச மாபாதகங்கள்) எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிக பட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;
பிரதோஷம் விளக்கும் கோட்பாடு:உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஐந்து வகைப் பிரதோஷம் :
1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
சோமசூக்தப் பிரதட்சணம்:
சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும் பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
ஆலகால விஷம் வெளிப்பட்ட போது தேவர்கள் இங்கும் அங்கும் அலைந்ததை நினைவு கூறும் விதமாக இந்த பிரதட்சணம் செய்யப்படுகிறது. பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும்.
சனிக்கிழமை சிவாலயங்களில் சனி மஹா பிரதோஷம் விசேசமாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக!
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்து வரும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் மிதிவண்டி பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கவுகாத்தியில் நடக்கும் போட்டியில் 30 கிலோ மீட்டர் பிரிவில் விஜயலட்சுமி தங்க பதக்கம் பெற்றார். சோபாதேவி வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தானின் சபியா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி
நியூசிலாந்து – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 281 ரன்கள் எடுத்தது, 282 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி, 46.3 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்த நிலையில், வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 98 ரன்களும் மார்ஷ் 69 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 8-ம் தேதி ஹமில்டனில் நடக்க உள்ளது.

