Home Blog Page 5829

ராஜபக்சே குடும்பத்தில் 2-வதாக கைதாக போவது யார்?

இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்பு முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கை அமைச்சர் ராஜித சேனாரட்ன சமீபத்தில் சமீபத்திய வெளியிட்ட தகவலில், இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகவேண்டும் என்று தனது சகோதரன் யோசிதவிடமும், தாயார் சிராந்தியிடம் ராஜபக்சே கூறியிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிராந்தி ராஜபக்சேவை நாளை விசாரணை குழு முன்பு ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்

லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மின்டனில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் இன்று நடந்த இறுதி போட்டியில் குவாங் யுசியாங்கை, ஸ்ரீகாந்த் எதிர் கொண்டார். இந்த போட்டியில் 21-13, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் குவாங் யுசியாங்கை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் ரசிகரை தண்டனையில் இருந்து மீட்க கோஹ்லி முடிவு

இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டு சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது ரசிகருக்கு, கோஹ்லி உதவ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில், வசிக்கும் உமர் ட்ராஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான நடந்த 2வது டி20 போட்டியில் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை பார்த்த உற்சாகத்தில் இந்திய தேசிக் கொடியை தனது வீட்டின் மேல் பறக்கவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறை தண்டனை பெற்றுள்ள தனது ரசிகருக்கு கோலி உதவி செய்யப் போவதாக கூறப்படுகிறது.
இது பற்றி கோஹ்லியின் சகோதரர் விகாஸ் தெரிவித்தாவது:
சிறை தண்டனை பெற்றுள்ள ரசிகருக்கு உதவ, சரியான ஆட்களை சந்தித்து பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்தை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

வாழ்க்கைக் கப்பலின் மாலுமி!

ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார்.

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்…..அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், ” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!…..அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணிய ஒடனே  எங்கிட்ட அனுப்பு…” என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.

“ரமணி….கண்ணு…..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நவராத்ரி கொலு வெக்கணுமாம்…..ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!..”

“அம்மா…பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?….”

இருவருமே இது வெறும் கனவுதான்! என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால்  போறுமே ! விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே?

“பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்…”

                                                 
விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும்,  அனுஸரணையோடும் இருப்பார்கள்.

“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம்.
ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்……இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம்  எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் !
செரியா?….” சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட, “மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு,  ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி
பண்ணிட்டார் !…எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடியை நோக்கி..”வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..” என்றதும்

“இதோ வரேன் சித்தப்பா!…” என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

“அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை  பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல  கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா…ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”

அம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர் !

இது, பெரியவா போட்ட அடுத்த “ஆனந்த குண்டு” !

“அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து……

“அதான் பெரியவா…!” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் !

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி ! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே…எனக்கு உள்ள வேலையிருக்கு…..பெரியவாளை
தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா….வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், “இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நா…பெரியவாளைப் பாக்கறது!” என்ற  மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து,  குதித்ததுதான் மிச்சம்!

“செரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்” என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு  “ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்…..

“நீதானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…..”

முழித்தான்!”

இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.. “

ரமணிக்கு இது “மூணாவது ஆனந்த குண்டு”
                                    

“என்னடா? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..” என்று சொல்லி,
அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்,
ஒரு பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ,
கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில்
சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து
ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.

இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும்,
“பெரியவா!……ஓ!….என்னோட பெரியவா!” என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்…..

“ரமணி!….அழாதேப்பா…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…”

தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

“பெரியவா……எங்கப்பா தர்மகர்த்தா….அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்…..என்னோட நாலு அண்ணாக்களையும்
அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா…..மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும்,
சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா…..

……பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல
விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு  பேசறா! நா…..படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்…..
அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா……”

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான் !

பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா…..

“அழாதே……கண்ணைத் தொடச்சுக்கோ! நா…..சொல்றதக் கேளு…..

நாலாவது “ஆனந்த குண்டு”……

                               

“….இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ;
நவராத்ரி பூஜையும் பண்றதில்ல…அப்டித்தானே?”

“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம்’-னு நிரூபிச்சுட்டாரே!”
அதிர்ந்து போனான் ரமணி.

“ஆமா…….பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”

“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம்.
அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”

என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை
விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.

“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே!
நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா…காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…”
என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார்.

அவரும் ரமணியிடம்,

“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!…” என்றதும், சின்னப் பையன்தானே!
அதே ஜோரில் பெரியவாளிடம், “என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா….இன்னிக்கே கெளம்பிப்
போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…” அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு
பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு,
அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்

“கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? ‘இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?’-ன்னு கேட்டியாமே !

அந்த “இதுக்குத்தானா” குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா
சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப…..செரி செரி ….ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு….பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி
புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! “

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது
கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்

“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ!
[ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட
முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்
…. பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே
அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு !

“என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?…..” இப்படியாக ஒரே கேள்வி மயம்!

” அம்மா…அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட
கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்!

பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது…ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு
போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம,
ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு
நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்’-ம்மா!”

“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு….அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு… வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?…

“பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல….இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்…நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா! அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா!
கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”

ஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், ‘போறாது, போறாது’என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை!

பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி,
விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும்,
லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

காரணம்?

“நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே……”
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.

அதோ…..மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!”

அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்….எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்”

அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்……

அதில் பொம்மை இல்லை! ஆனால்…..இதென்ன? ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது!

பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப்
பார்த்தாலே புரிந்தது.

“என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா….இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”

“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”

“உங்கள் பாரம் எனதே! ” என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால்
, “ஓடு! பெரியவாளிடம்!..” என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்!

முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை! அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு
முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி? தெளிவு?

” நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான்,
மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்!”

“என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை? பயம்?……ஆனந்தமோ ஆனந்தம் மட்டுமே!”

இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்!

வேறு எதுவுமே இல்லை!

பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்…?

ரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார்.

சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!

பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம்
ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.

“ஸரஸ்வதி மஹால்…அங்கெல்லாம் விஜாரிச்சியோ?..”

“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட
விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா…..அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே,
அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு…. எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட
போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா!
ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது…. இதான் என்னோட ப்ரார்த்தனை!….”

கண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,

“வாடா! கொழந்தே! வா….வா” என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா
முன்னால் நின்றான். தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா… “

என்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும்,

“ம்ம்….நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு! “

இது ஐந்தாம் ஆனந்த குண்டு!

                            

” இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா…… நீங்க படிக்க வேணாமா?…”
என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.”

“நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்…..அது! “

என்னது! அவரோ வாய்விட்டு அழுதேவிட்டார்!

“ஓ ….பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா?
இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல பெரியவா…!”

இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……”

என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்…..
அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்…”

அழகாக சிரித்துக் கொண்டே….” ஏது? ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே!…” என்று
சொல்லிவிட்டு, ரமணியிடம்,

“இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!…. இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப்
போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!…”

“ஹா……!! பெரியவா…! நா…ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?…”

கூடவே ரமணியும் கபடில்லாமல் “அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?…”

பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

“செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார்.
ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!…”

அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், “ப்பூ!…” என்று ஊதித் தள்ளப்பட்டது ! நவராத்ரி ஆரம்பித்த
நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான “ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர” ஸரஸ்வதி !

ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் “ஶங்கரா” என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி!

அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்!  நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்!

வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார்.

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

 

பெட்ரோல் டீசலுக்கான் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரிகளை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
 
பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் வீதமும், டீசலுக்கான கலால் வரியை 1 ரூபாய் 50 காசுகள் என்ற வீதமும் தற்போது மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது ஆகும் என்றார்.
 
இந்த மாதம் மட்டும் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 12 காசுகள் வீதமும், டீசலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 காசுகள் வீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது வரை பெட்ரோலுக்கான கலால் வரியை 11 ரூபாய் 77 காசுகள் என்ற அளவிலும், டீசலுக்கான கலால் வரியை 13 ரூபாய் 57 காசுகள் என்ற அளவிலும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
 
மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்துவது நியாயமானது அல்ல.
 
கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைப்பதன் மூலம் இவை மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படும். அதன் மூலம் பொருளாதாரம் மலர்ச்சி அடையும். எனவே, மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி என்ற நீண்ட கால கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த கலால் வரி உயர்வுகளை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

கருணாநிதி என்ற உயிர்ப்புள்ள வசனகர்த்தா

பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திமுக., தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சரிதான்!  வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! தாக்குதல் அல்ல…; கடந்த காலத்தில் தாக்குதல்களை நிகழ்த்தப் படக் காரணமாக அமைந்தவர், இன்று கண்டனங்களைத் தெரிவிப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!

கடந்த 2007 ம் ஆண்டில் சேது சமுத்திர திட்டத்திற்காக இராமர் பாலம் இடிப்பதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு முயற்சி செய்த போது தமிழகத்தில் இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் , பா.ஜ.கட்சி போராட்டம் நடத்தியது.

அப்போது இராமர் பாலத்தை கட்டிய ராமன் எந்த கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன் என்றெல்லாம் பேசினார். இது வடஇந்திய ஊடகங்களில் எதிரொலித்தது.

இதையறிந்த அயோத்தி எம்.பி. டாக்டர் ராம்விலாஸ் வேதாந்தி அவர்கள் இராமபிரானை இழிவாக பேசிய கருணாநிதியின் நாவை  அறுத்து, தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவித்தார்.

இந்நிலையில் 24.09.2007ம் தேதி காலையில் சென்னை தி.நகர் வைத்யராமன் தெருவில் இருக்கும் பாஜக மாநில தலைமை அலுவலகத்தை திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நடத்த அறிக்கை விட்டது ஆர்க்காடு வீராச்சாமி.
தாக்குதல் நடத்தியது திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை செயலாளர் பலராமன், சைதை கிட்டு மற்றும், சேப்பாக்கம் சுரேஷ்குமார், சைதைசம்பத், திருவல்லிக்கேணி செழியன்,புளியந்தோப்பு தமிழ் வேந்தன்,கவுன்சிலர் முருகேசன், கபாலிதோட்டம் சண்முகசுந்தரம் மற்றும் அடையாளம் தெரியாத திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலவரம் செய்தனர்.

அதில் 100 பேர் உருட்டுக்கட்டை, இரும்பு ராடுகள், கற்களுடன் அலுவலகத்தில் புகுந்து தாக்கினர். இந்தத் தாக்குதலில் அப்போதைய மாநில பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன், புஷ்பகலா, ராஜசிம்மன், சதீஷ்குமார், வில்லிவாக்கம் ரமேஷ் ஆகியோர் ரத்தக்காயம் அடைந்தனர். மேலும் கொடிகள், கதவுகள்,
ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதில் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப் பட்டன.இந்தத் தாக்குதலை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக தூண்டி
விட்டனர்.

அலுவலகத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. காவல்துறை முன்னிலை
யிலேயே இத்தனையும் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரை பதிவு செய்துள்ள போலீசார் சட்டப் பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 337 (காயம்ஏற்படுத்துதல்), 427, 7(1)ஏ (சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேநாள், அதே நேரத்தில்  சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில்  திமுக 79வது வட்டச் செயலாளர் சாய்குமார்,திமுகவை சேர்ந்த முரளி, பாலாஜி,முருகேசன், சரவணன், ரத்தினம் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தில், சென்னையில் பட்டப்பகலில் திமுக வைச் சேர்ந்தவர்களால் பா.ஜ.க அலுவலகம் மற்றும் இந்துமுன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது.

ஆனால் தற்போது பழ.கருப்பையா வீடு தாக்குதல் சம்பவத்தை கருணாநிதியார் கண்டித்து இருக்கிறார். மேலும் அதிமுக வினரால் தாக்கப்பட்டடோர் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார்.

திமுகவினரால் தாக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்டால். மதுரையில் இந்திரா காந்தியை தாக்கியது, சட்டசபையில் எம்ஜிஆர் மீது செருப்பு வீச்சு, அதே சட்ட சபையில் ஜெயலலிதாவை தாக்கி சேலை கிழித்தது,

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் உதயகுமார், பூலாவரி சுகுமாறன், வத்தலகுண்டு ஆறுமுகம் ஆகிய அதிமுக தொண்டர்கள் முதல் திமுக மந்திரி தா.கிருஷ்ணன் வரை பட்டியலிட்டால் ஏட்டில் அடங்காது.

இதே பழ.கருப்பையா வீடு கடந்த  திமுக ஆட்சியிலும் தாக்கப்பட்டதே! கருணாநிதியைப் போல் நேரத்திற்கு தக்க பேச உலகத்தில் ஆளில்லை. ஏனென்றால் அவர் நல்ல வசனகர்த்தா… கதை வசன கர்த்தா அல்ல.. கதை விடுவதில் நல்ல வசன கர்த்தா!

கூட்டணியை தலைமை முடிவு செய்யும்: பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா

தமிழக தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, பிப்ரவரி 2-ம் தேதி வருகிறார். அன்றைய தினம் கொடிசியா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கும் இந்த பொதுக்கூட்டம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும். மோடியின் டிஜிட்டல்மயம் திட்டத்தால் மத்திய அரசுத் துறைகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் மத்தியில் ஊழல் இல்லா அட்சி நடைபெறுகிறது.
இதேபோல், தமிழகத்திலும் ஊழல் இல்லா ஆட்சி வேண்டும். அதற்கு, பாஜக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். தமிழக தேர்தலைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவும் எடுக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் எல்லாம் தேர்தலின்போது தகர்த்தெறியப்படும். தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக மூத்த அமைச்சர்கள் 10 பேர் வர உள்ளனர் என்றார்.

கண்ணதாசனும் கைத்தட்டல் கவிதையும்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது
மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

ஜனவரி.31: நாகேஷ் நினைவு தினம்

ஜனவரி.31 – நாகேஷ் நினைவு தினம் – 25 நினைவுகள்..

நாகேஷ்… மாறும் உடல் மொழி… ஏறி இறங்கும் குரல் ஜாலம்… தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!…

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் – குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்… தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் ‘தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். ‘மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!

* ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். ‘இதுதான்யா ஃபீஸ்’ என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் ‘நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* ‘திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, ‘நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; ‘நீர்க் குமிழி’ குணச்சித்திரம், ‘சர்வர் சுந்தரம்’ ஹீரோ, ‘அபூர்வ சகோதரர்கள்’ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* ‘அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, ‘சியர்ஸ்’ என்று சொல்ல… படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் ‘டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், ‘எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* ‘சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* ‘நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* ‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், ‘கோழி இன்னும் சாகலையாப்பா?’

* ‘தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், ‘என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!’

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது – செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்க வைத்த இந்தக் கலைஞனுக்கு ‘நம்மவர்’ படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது

மகனை கைது செய்த அதிர்ச்சியில் ரஜாபக்‌ஷே திடீர் மரணம் அடைந்ததாக முகனூலில் தீயாய் பரவும் புகைப்படம் !

 
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.
 
இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்தபோது, சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
 
இதையடுத்து, சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியான நிஷாந்தா ரணதுங்க, யோஷித உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ராஜபட்சவுக்கு யோஷித, நமல், ரோஹித் என 3 மகன்கள் உள்ளனர். இந்த அதிர்ச்சியில் ராஜபட்சே இறந்து கிடப்பதைப் போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவும் இந்த புகைப்படத்தால் சிங்கள முகநூல் பிரியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
 
மகிந்தவுக்கு நரகலோகத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என தமிழ் முகநூல் பிரியர்கள் ஆண்டவனை கும்பிடுவது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.