Home Blog Page 5828

கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

 
நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக பிரமுகருமான கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி (76) மாரடைப்பால் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
 
சமூக சேவகரான மறைந்த பிரிஜ் பேடி, போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெற்றோர்களின் குழந்தைகளுக்காக சிறப்புப் பள்ளியொன்றை நடத்தியுள்ளார். இதைத் தவிர பல்வேறு சமூக நலப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
 
சிறுநீர்ப் பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரிஜ் பேடி, டெல்லி அமிருதசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில்,தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரிஜ் பேடிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
 
பிரிஜ் பேடியின் மறைவுக்குபல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

14 திருமணங்களை ஒரே மேடையில் நடத்தி வைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா !

ஒரே மேடையில் நடத்தி வைக்கும் 4 அமைச்சர்கள் உள்பட 14 அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணங்களை சென்னையில் வருகிற 10-01-2016 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.
 
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, வருகின்ற 10-2-2016 புதன்கிழமை காலை 11 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பின்வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்ல திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைக்க உள்ளார்.
 
அதன் விவரங்களாவது :-
 
1) அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் மகள் திருமணம்.
 
2) திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜின் மகன் திருமணம்.
 
3) தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள் திருமணம்.
 
4) திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியனின் மகன் திருமணம்.
 
5) அ.தி.மு.க. விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.வைரமுத்துவின் மகள் திருமணம்.
 
6) கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமியின் மகன் திருமணம்.
7) நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், உதகமண்டலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான புத்திசந்திரனின் மகள் திருமணம்.
 
8) திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் மு.ராஜனின் மகள் திருமணம்.
 
9) காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.ராமச்சந்திரனின் மகன் திருமணம்.
 
10) வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய செயலாளரும், வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோவி.சம்பத்குமாரின் மகன் திருமணம்.
 
11) திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் ஒன்றிய செயலாளரும், வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செய்யாவூர் வே.குணசீலனின் மகன் திருமணம்.
 
12) மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையாவின் மகள் திருமணம்.
 
13) வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜா ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், திருப்பாற்கடல் ஊராட்சி மன்றத் தலைவருமான எம்.ஜி.கே.தனஞ்செழியனின் திருமணம்.
 
13) திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலின் மகள் திருமணம்.
 
என அந்த அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில்வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை !

 
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தவிக்காலம் வருகிற மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது.இதேபோல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய இருக்கிறது.
 
இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் இன்று (01-02-2016) ஆலோசனை நடத்துகிறது.
 
எனவே தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விவரம் இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கட்சிகள் விருப்பமனுக்களை பெற்று வருகின்றன.
 
தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
 
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.
 
தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு தேவையாம் !

 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா அரசின் கனவு திட்டமான, 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கோவை, சென்னை உட்பட, 20 நகரங்களின் முதல் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மும்பை தனியார் துறையின் அதிகமான பங்களிப்புடன் கனவு உருவாக உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதில் ரூ.80 லட்சம் கோடி தனியார் பங்களிப்பாக இருக்கும் என் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
 
ஸ்மார்ட் சிட்டி சர்வதேச ஆய்வு நிறுவனமான டெலோய்ட்டியின் இந்தியக் கிளை மூத்த இயக்குனர் சுதர்சன் கூறியதாவது:
 
ஸ்மார்ட் நகரங்களுக்கு நிதி ஏற்பாடு செய்ய வேண்டியது முக்கியமானது என்றாலும், இத்திட்டத்தின் மேலாண்மை, அதன் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் கவனம் செலுத்துவது, ஒழுங்குமுறை நிர்வாகம் போன்றவையும் பெரும் சவாலாக விளங்கும்.
 
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 20 ஸ்மார்ட் நகரங்களில், முதல் கட்டமாக, வை-பை வசதி ஏற்படுத்த ரிலையன்ஸ், பார்தி, வோடாபோன் போன்ற நிறுவனங்கள் இந்தாண்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் பேஸ்புக் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 
நாட்டிலுள்ள 400 ரயில் நிலையங்களில் வை-பை வசதி கிடைக்க கூகுள் நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதுபோல், சேவை அளிக்கும் நிறுவனங்களும் அதிகமான முதலீடு செய்ய உள்ளது. இவைதான் ஸ்மார்ட் நகரங்களின் முதுகெலும்பாக அமையும். இதற்காக, சேவை துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் துறைகளுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபடும். ஆக மொத்தம், பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி நிதி தேவைப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் ஸ்மார்ட் நகரங்கள் உருவானதும், அவை நாட்டின் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பொருளாதார, சமூக மையங்களாக விளங்கும்.
 
இவ்வாறு சுதர்சன் கூறினார்.நாட்டிலுள்ள 500 நகரங்களை தரம் உயர்த்தும் ‘அம்ரூத்’ எனப்படும் அடல் ஊரக மறுசீரமைப்பு புத்தாக்கம் திட்டம் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் திட்டங்களுக்காக தொடக்க நிதியாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்று சுதர்சன் தெரிவித்துள்ளார்
 
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, 20 நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 உறுப்பினர்கள் நியமனம் ! : கவர்னர் ரோசய்யா உத்தரவு

 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து கவர்னர் ரோசய்யா ஆணையிட்டுள்ளார்.
 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக கவர்னர் ரோசய்யா நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களும் வரும் புதன்கிழமை பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக 10 உறுப்பினர்களின் இடங்கள் காலியாக இருந்தது. இந்த நிலையில்,
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை கவர்னர் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.
 
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்கள் விவரம் வருமாறு:-
 
ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, மு.ராஜாராம் ஐ.ஏ.எஸ். (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்). ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசு மண்ணைக் கவ்வும் என நான் கூறவில்லை : யஷ்வந்த் சின்ஹா

 
இந்திரா காந்திக்கு ஏற்பட்டதுதான் மோடி அரசுக்கும் ஏற்படும் என்று நான் கூறவில்லை என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா விளக்கம் தெரிவித்துள்ளார்
 
கோவாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாக, “விவாதம் என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெரும் பலமாகும். ஆனால் தற்போது (மத்திய அரசில்) விவாதம் என்பதற்கு இடமே கிடையாது. இந்தியாவில் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை இந்தச் சமூகம் மண்ணைக் கவ்வ வைக்கும்.
 
நாட்டில் நெருக்கடி நிலைக்குப் பின், கடந்த 1977-ல் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. அப்போது காணப்பட்டதைப் போன்ற விவாதங்களை அலட்சியப்படுத்தும் தன்மையானது மத்திய அரசை இன்னும் 19 மாதங்கள் மட்டுமே நீடிக்க வைக்கும்.” என்று கூறினார். இது கடும் சர்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சகிப்பின்மையோடு நடந்துக்கொள்வது, விவாதத்தை நசுக்குவது போன்ற செயல்கள் இந்தியாவின் ஆன்மாவிலேயே இல்லை. அதனால்தான் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். நமது நாட்டில் மாற்று கருத்துகள் தொடர்பான விவாதமும், ஜனநாயகமும் உயிருடன் உள்ளது என்று தான் கூறினேன்” என்று கூறி புது விளக்கம் அளித்துள்ளார்

இடஒதுக்கீடு கோரி வன்முறை போராட்டம் – ரயிலுக்கு தீ வைப்பு

 
‘காபூ’ ஜாதியினர், இடஒதுக்கீடு கோரி ஆந்திராவில் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தீ வைத்ததில், எட்டு பெட்டிகள் எரிந்து, சாம்பலாயின. மேலும் உள்ளூர் காவல் நிலையம் ஒன்றுக்கும், காவல் துறைக்குச் சொந்தமான 8 வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
 
இதையடுத்து, கிழக்கு கோதாவரி பகுதியில் சென்று கொண்டிருந்த ரத்னாஞ்சல் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரையாகின. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வன்முறைச் சம்பவங்களால் ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
 
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த காவல் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
காபூ சமூகத்தை பிற்படுத்த வகுப்பினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தங்களது கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றும், அதுதொடர்பாக அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் காபூ சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
 
அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாகவும் தெரிகிறது. இதனிடையே, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டி மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக விவாதித்தார்.

பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் அமைதி பேச்சுக்கு பாதிப்பு : நவாஸ் ஷெரீஃப்

 
பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்
 
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் அரங்கேற்றியதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது.
 
மேலும், இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ள அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மெüலானா மசூத் அசார் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது.
 
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைத் துறையின் கூடுதல் ஐ.ஜி. தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை அமைத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில், பதான்கோட் விவகாரம் தொடர்பாக அவர், லாகூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் பாகிஸ்தான் வருகைக்குப் பின்னர், இந்தியாவுடனான பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி சரியான திசையில் பயணித்துக் கொண்டிருந்தது.
 
இந்த நிலையில், எங்களது இம்முயற்சியை சீர்குலைக்கும் நோக்கில், பதான்கோட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டிருந்தால், அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தண்டிக்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் பொறுப்பாகும்.
இதனைக் கருத்தில்கொண்டு பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பான பாகிஸ்தான் தரப்பு விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, அதுதொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் என்று நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
 
இதனிடையே, பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது குறித்து, பஞ்சாப் மாகாண சட்டத் துறை அமைச்சர் ராணா சானாவுல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
 
அதற்கு, “பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று செய்தியாளர்களிடம் சானாவுல்லா பதிலளித்தார்.

அதிமுக அரசாங்கத்தை கண்டித்து தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று பூட்டு போட்டு போராட்டம் !

 
அதிமுக அரசாங்கத்தை கண்டித்து தமிழக இன்று பள்ளிகளில் ஜாக்டோ அமைப்பின் இன்று அனைத்து பள்ளிகளையும் பூட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர் சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த மாதம் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அறிவித்தது. முதல்நாளான நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் இந்த தொடர் மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். நேற்றும் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 
தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் பூபாலன் நேற்றைய போராட்டத்தை தொடங்கி தலைமை தாங்கி வைத்து பேசியதாவது:
 
தமிழகத்தில் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 15 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நான்கு கட்ட போராட்டத்தை நடத்திவிட்டனர். இதுவரை அரசோ, அமைச்சர்களோ ஆசிரியர்களை அழைத்து பேசவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும், அழைத்து பேசுவோம் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
 
அதைத்தான் நாங்கள் நிறைவேற்ற கேட்கிறோம். ஆனால் இந்த அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை ஏமாற்றி வருகிறது. கடந்த கால போராட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்துப் பார்க்க வேண்டும். இனிமேலும் காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்று கேட்டோம். 7வது ஊதியக் குழுவும் வந்துவிட்டது. எங்களை ஏமாற்றும் வேலையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பூபாலன் கூறினார். இதையடுத்து காவல் துறையினர் ஆசிரியர்களை கைது செய்தனர். இரண்டாவது நாளான நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தீவிரமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இந்த போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் பிஆர்டி, பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் இன்று பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்றும், எந்தப் பள்ளியில் ஆசிரியர் இல்லையோ அந்த பள்ளிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
மேலும், மறியல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளின் சாவிகளை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது தொடக்க கல்வித்துறையை பொறுத்தவரையில் இன்று 75 சதவீத பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓராசிரியர், ஈராசிரியர் உள்ள 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை அரசு அழைத்து பேசாத நிலையில் பள்ளிகளை தாங்களே பூட்டப் போவதாக நேற்று ஜாக்டோ என்று முக்கிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

2016ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: பயிர் காப்பீடு திட்டத்துக்கு முக்கியத்துவம்!

31.1.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் இது, மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த முறை பல விஷயங்களை எடுத்துரைத்தாலும், இயற்கைப் பேரிடர், பயிர்க்காப்பீடு குறித்து மோடி விரிவாக எடுத்துரைத்தார். மேலும், மொபைல் போன் மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலி, சென்னை நிலையத்தில் இருந்து ஒலிபரப்பான நிகழ்ச்சியில் ஒலி வடிவம்…

 

எனதருமை நாட்டு மக்களே,

2016ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இது. மனதின் குரல் என்னை எந்த அளவுக்கு உங்களோடு பிணைத்திருக்கிறது என்று சொன்னால், நான் எந்த விஷயத்தைப் பார்க்க நேர்ந்தாலும், மனதில் எந்த ஒரு கருத்து உதித்தாலும், அதையெல்லாம் உங்கள் முன்பு வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நேற்று மரியாதைக்குரிய காந்தியடிகள் நினைவிடத்துக்கு என் அஞ்சலிகளைச் செலுத்த ராஜ்காட் சென்றிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தியாகிகளை நினைவு கூர இது நடைபெறுகிறது. சரியாக 11 மணிக்கு 2 நிமிடங்கள் வரை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது; இது நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மஹான்கள், தீரர்கள், உன்னதமான தியாகிகள், தவசீலர்களுக்கு நமது மரியாதைகளைச் செலுத்த அமைந்திருக்கும் ஒரு வாய்ப்பு.

பார்க்கப் போனால் நம்மில் பல பேர் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்படி மரியாதையைக் காணிக்கையாக்குவது நம்முடைய இயல்பாகவே மாற வேண்டாமா? இதை நாம் நமது தேசியக் கடமையாக கருத வேண்டும். எனது ஒரு மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக மட்டுமே மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நான் கருதவில்லை. ஆனால் நான் நேற்று உணர்ந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன், பகிர்ந்தேன். இவை போன்றவை தாம் நாட்டுக்காக நாம் வாழ வேண்டும் என்ற கருத்தூக்கத்தை நமக்கு அளிக்கின்றன. கற்பனை செய்து பாருங்கள்!! ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30ம் தேதி சரியாக 11 மணிக்கு, 125 கோடி நாட்டு மக்களும் 2 நிமிடம் வரை மௌனத்தைக் கடைப்பிடித்தால் இதில் எத்தனை பெரிய சக்தி அடங்கியிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நமது சாத்திரங்கள் கூட, சங்கச்சத்வம், சம்வதத்வம், சம்வோ மனாஸி ஜானதாம் என்று கூறியிருக்கின்றன; அதாவது நாமனைவருமாக இணைந்து பயணிப்போம், ஒரே குரலில் பேசுவோம், நமக்கெல்லாம் ஒரே கருத்தாக இருக்கட்டும். இது தானே நாட்டின் உண்மையான பலம்? இந்த பலத்துக்கு உயிர் ஓட்டம் கொடுக்கும் பணியை இது போன்ற நிகழ்வுகள் தாம் செய்கின்றன.

எனதருமை நாட்டு மக்களே,

சில நாட்கள் முன்பாக, நான் சர்தார் படேல் அவர்களின் கருத்துக்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனம் சில விஷயங்கள் மீது படிந்தது. அதில் அவரது ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தியாவின் சுதந்திரம், நாகரீகம், உன்னதமான தர்மமான அகிம்ஸை ஆகியன கதரில் தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, நாட்டின் எந்த விவசாயியிடத்தில் நாம் உணர்வு பூர்வமான தொடர்பு கொண்டிருக்கிறோமோ, அந்த விவசாயியின் நலனும் கூட கதராடைகளில் தான் இருக்கிறது என்று கதராடைகள் தொடர்பாக கூறியிருக்கிறார் படேல் அவர்கள். எளிமையான மொழியில் நச்சென்று தம் கருத்துக்களைக் கூறுவதில் சமர்த்தர் படேல் அவர்கள். மிக அருமையாக கதராடைகளின் மஹாத்மியத்தை உரைத்திருக்கிறார் சர்தார்.

நேற்று 30ம் தேதி வணக்கத்துக்குரிய காந்தியடிகளின் நினைவு நாளன்று கதராடைகள் மற்றும் கிராமத் தொழில்களோடு தொடர்புடைய எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ, அவர்களோடு எல்லாம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். வணக்கத்துக்குரிய காந்தியடிகள் அறிவியல் நாட்டம் மிக்கவராக இருந்தார், நானும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகளோடு தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன். கதராடைகள் இன்று ஒரு அடையாளமாகி இருக்கின்றது, அதற்கென ஒரு தனி முத்திரை ஏற்பட்டிருக்கிறது. இப்போது கதராடைகள் இளைய சமூகத்தைக் கூடக் கவரக் கூடியதாக இருக்கிறது. அதுவும் சிறப்பாக, யாருக்கெல்லாம் இயற்கை வழி வேளாண் பொருட்கள், முழுமையான சிகிச்சை முறை ஆகியவை மீது ஈடுபாடு இருக்கிறதோ, அவர்களுக்கு எல்லாம் இது அருமையான ஒன்றாக ஆகி இருக்கிறது. ஒப்பனை ஆடைத் துறையிலும் கூட கதராடைகளுக்கென ஒரு தனியிடம் ஏற்பட்டிருக்கிறது. கதராடைகளில் நவீனங்களைப் புகுத்த கதராடைகள் தயாரிப்பில் தொடர்புடைய அனைவருக்கும் என் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார அமைப்பில் சந்தைகளின் பங்கைப் புறந்தள்ளி விட முடியாது. அந்த வகையில் கதராடைகள் உணர்வு பூர்வமாக நம் மனங்களில் இடம் பிடித்திருப்பதைப் போலவே, சந்தைகளிலும் ஓரிடம் பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. பல வகையான துணிகளை நீங்கள் பயன் படுத்தும் அதே வேளையில், கதராடைகளுக்கு எனவும் ஒரு இடம் அளிக்க வேண்டும் என்று நான் மக்களிடம் கேட்டுக் கொண்டேன். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் முழுமையாக கதராடைகளைப் பயன்படுத்த முடியாது என்றாலும் கூட, பல வகையான துணிமணிகளுக்கு இடையே கதராடையும் ஒன்றாக இருக்கும் என்று உணர்ந்தார்கள். இது ஒரு புறம் இருந்தாலும், அரசிலும் கதராடைகள் தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகள் முன்பாக அரசில் கதராடைகள் பயன்பாடு முழுமையாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல நவீனமயமாதல் காரணமாக இந்தப் பயன்பாடு முடிந்து போனது, விளைவாக கதராடைகள் தயாரிப்பது தொடர்புடைய ஏழைகளின் வேலைகள் பறி போயின. கதராடைகள் தயாரிப்பில் கோடிக்கணக்கான பேர்களுக்கு வேலை அளிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக இரயில்வே அமைச்சகம், காவல் துறை, இந்திய கப்பற்படை, உத்தராகண்ட்டின் தபால் துறை என பல அரசுத் துறைகள் கதராடைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல நல்ல முனைப்புக்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக, அரசின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே, கூடுதலாக 18 இலட்சம் பணி நாட்கள் அளவுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இது மிகப் பெரிய ஒரு வளர்ச்சி இல்லையா? மரியாதைக்குரிய காந்தியடிகள் கூட எப்போதுமே தொழில்நுட்ப மேம்பாடு குறித்து மிகவும் ஆர்வமும் துடிப்பும் கொண்டவராக விளங்கினார். அந்த வகையில் தான் இராட்டை தொழில்நுட்ப வளர்ச்சி இந்த அளவுக்கு அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் இராட்டையை இயக்க சூரியசக்தியைப் பயன்படுத்தும் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. இதனால் உடல் உழைப்பு குறைந்து உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதோடு, தர மேம்பாடும் காணப்பட்டிருக்கிறது. சிறப்பாக சூரிய சக்தியில் இயங்கும் இராட்டை தொடர்பாக பலர் எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.

இராஜஸ்தான் மாநிலத்தின் தௌஸா மாவட்டத்தைச் சேர்ந்த கீதா தேவி, கோமல் தேவி, பீஹார் மாநிலத்தின் நவாதா மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா தேவி ஆகியோர் சூரிய சக்தியால் இயங்கும் இராட்டையால் தங்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கடிதம் வாயிலாக எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் வருமானம் இரட்டிப்பாகியிருக்கிறது, எங்கள் இழைகள்பால் மக்களின் ஈர்ப்பும் அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. ஜனவரி மாதம் 30ம் தேதியன்று நாம் மரியாதைக்குரிய காந்தியடிகளைப் பற்றி நினைவு கூரும் வேளையில், நான் மீண்டும் இந்த விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். நம்மிடம் ஏராளமான ஆடைகள் இருந்தாலும் கூட, அவற்றில் ஒன்றிரண்டாவது கதராடையாக இருக்க வேண்டும் என்பது தான் அது.

எனதருமை நாட்டு மக்களே,

ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசுப் புனித நாளை நாம் மிகவும் உற்சாகத்தோடும், துடிப்போடும் கொண்டாடினோம். தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்படலாம் என்ற கவலை நம்மை பீடித்திருந்த வேளையிலும் நாட்டு மக்கள் தங்கள் மனவுறுதியையும்,  நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள், மிகவும் கோலாகலத்தோடு, பெருமிதம் பொங்க குடியரசுத் திருநாளைக் கொண்டாடினோம். ஆனால் சிலரோ சற்று வித்தியாசமாக செயல்பட்டார்கள். சிறப்பாக, ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் மிகவும் சிறப்பான ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில், அந்தந்த கிராமங்களில் அதிகம் படித்த பெண்ணைக் கொடியேற்றத் தேர்ந்தெடுத்தார்கள். ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் பெண்ணுக்கு மகத்துவம் அளித்தார்கள், அதிலும் கல்வியறிவு பெற்ற பெண்களுக்கு சிறப்பு மரியாதை அளித்தார்கள். பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கல்வியளிப்போம் என்பதை செயல்படுத்தும் வகையில் அமைந்த மிகவும் அருமையான செய்தி இது. நான் இந்த இரண்டு மாநிலங்களின் செறிவான கருத்துக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் திருநாளன்று கொடியேற்றும் அற்புதமான வாய்ப்பு கிட்டிய அனைத்துப் பெண்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்ல, ஹரியாணா மாநிலம் வேறு ஒரு சிறப்பான முயற்சியிலும் ஈடுபட்டது. கடந்த ஓராண்டுக் காலத்தில் யாருடைய குடும்பங்களில் எல்லாம் பெண் குழந்தை பிறந்ததோ, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் குடியரசுத் திருநாளன்று சிறப்பான அழைப்பு விடுக்கப்பட்டு, மிக முக்கியமான நபர்கள் என்ற அந்தஸ்த்தில் அவர்களுக்கு கொண்டாட்டங்களில் முன்னணி இடம் அளிக்கப்பட்டது. இது மிகவும் பெருமிதம் அளிக்கும் ஒன்று. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் இயக்கத்தை நான் ஹரியாணா மாநிலத்தில் தான் தொடங்கி வைத்தேன் என்பதை நான் இந்த வேளையில் பெருமையோடு நினைவு கூருகிறேன். ஏனென்றால் ஹரியாணா மாநிலத்தில் பாலின விகிதாச்சாரத்தில் பெருமளவு கோளாறு ஏற்பட்டிருந்தது. ஓராயிரம் ஆண்களுக்கு நிகராக பெண்களின் விகிதம் மிகவும் குறைந்து போயிருந்தது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது, சமுதாய அளவிலான சமநிலை சீர்குலைந்து போயிருந்தது. நான் ஹரியாணா மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த போது, அதிகாரிகள் எல்லாம் வேண்டாம் ஐயா, அங்கே இந்த விஷயத்தில் மிகவும் எதிர்மறையான மனோநிலை நிலவுகிறது என்று கூறினார்கள். இதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை, தொடர்ந்து முன்னேறினேன், இன்று நான் ஹரியாணா மாநிலத்துக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தக் கருத்தைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். விளைவைப் பாருங்கள், இன்று பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அங்கே சமூக வாழ்வில் உண்டாகியிருக்கும் மிகப் பெரிய மாற்றத்துக்கு நான் சிரம் தாழ்த்துகிறேன்.

கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் இரண்டு விஷயங்கள் பற்றித் தெரிவித்திருந்தேன். குடிமகன் என்ற முறையில் நாம் ஏன் தேசத் தலைவர்களின் சிலைகளைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடக் கூடாது என்பது ஒன்று. தலைவர்களுக்கு சிலை எடுப்பதில் நாம் உணர்வு பூர்வமான ஈடுபாடு உடையவர்கள் இல்லையா? ஆனால் சிலையமைத்த பின்னர் நாம் அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. நாம் எப்போதும் நமது உரிமைகளைப் பற்றியே பேசி வந்திருக்கிறோம், ஏன் நமது கடமைகளைப் பற்றி இந்தக் குடியரசுத் திருநாளை ஒட்டிப் பேசக் கூடாது என்பது தான் இரண்டாவது விஷயம். நாட்டின் பல இடங்களில் பல குடிமக்கள், பல சமூக அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், சில ஆன்மீகப் பெரியோர்கள் என பலர் முன்வந்து தேசத் தலைவர்கள்-மஹான்களின் திருவுருவச் சிலைகளைத் தூய்மைப்படுத்தினார்கள், அதைச் சுற்றியிருக்கும் இடங்களைச் சுத்தம் செய்தார்கள், இது ஒரு நல்ல முயற்சி. இது வெறும் தூய்மைப்படுத்தும் இயக்கம் மட்டுமல்ல, இது மரியாதை செலுத்தும் ஒரு இயக்கமும் கூட. நான் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்த செய்திகள் எனக்கு மிகவும் நிறைவை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, சிலர் இதை விளம்பரப்படுத்தவில்லை. நீங்கள் தூய்மைப்படுத்தியிருக்கும் திருவுருவச் சிலைகளின் புகைப்படங்களை mygov தகவில் எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உலகத்தோர் அதைப் பார்த்து, பெருமிதம் கொள்ளட்டும். இதே போல, ஜனவரி 26ம் தேதி தொடர்பாக என் கடமைகளும் என் உரிமைகளும் என்பதைப் பற்றி நான் உங்கள் கருத்துக்களை வேண்டியிருந்தேன். பல்லாயிரம் பேர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே,

ஒரு விஷயத்தில் எனக்கு உங்களின் பேருதவி தேவைப்படுகிறது. கண்டிப்பாக நீங்கள் எனக்கு உதவி செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நமது நாட்டில் விவசாயிகள் தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்கள் கூறப்படுகின்றன. நான் இதிலெல்லாம் ஈடுபட விரும்பவில்லை. இயற்கைப் பேரிடர் ஏற்படுத்தும் நாசம் காரணமாக அயராது உழைத்த விவசாயியின் உழைப்பு வீணாகி விடுகிறது, இது தான் அவனது மிகப் பெரிய சங்கடம். ஒட்டு மொத்த ஆண்டும் வீணாகிப் போகிறது. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு உபாயம் தோன்றுகிறது. அது தான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம். 2016ஆம் ஆண்டு மிகப் பெரிய பரிசாக இந்திய அரசு விவசாயப் பெருமக்களுக்கு இந்தத் திட்டமான,  பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அளித்தது. ஆனால் இந்தத் திட்டம் மூலமாக பிரதமருக்கு வாழ்த்துப்பா பாட வேண்டும், பரணி பாட வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. பல காலமாக இது ஏதோ வகையில் செயல்பட்டு வந்தாலும், சுமார் 20-25 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதனால் பலனேதும் கிடைக்கவில்லை. இனி வரும் 2-3 ஆண்டுகளில் நாம் நாட்டின் குறைந்த பட்சம் 50 சதவீத விவசாயிகளையாவது இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்ள முடியாதா? இதில்தான் எனக்கு உங்களின் உதவி தேவையாக இருக்கிறது. ஏனென்றால், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தோடு விவசாயி தன்னை இணைத்துக் கொண்டால், பேரிடர்க் காலங்களில் விவசாயிக்கு மிகப் பெரிய உதவியாக இது அமையும்.  பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிட்டியிருக்கிறது, பரவலாக்கம் ஏற்பட்டிருக்கிறது, இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது, இதில் ஏகப்பட்ட தொழில்நுட்ப உள்ளீடுகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்ல, பயிர் அறுவடை முடிந்து 15 நாட்கள் கழித்துக் கூட மகசூலுக்கு ஏதும் குந்தகம் ஏற்பட்டால், அதற்கும் வழிவகை இந்தத் திட்டத்தில் செய்யப் பட்டிருக்கிறது. தொழில்நுட்பப் பயன்பாடு மூலமாக எப்படி காப்பீட்டுத் தொகை பயனாளிக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கப்பட முடியும் என்பது பற்றியெல்லாம் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய விஷயமென்னவென்றால், காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகை இந்த அளவுக்கு குறைவாக இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது. புதிய காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கான அதிகபட்ச ப்ரீமியம் தொகை, முன்பட்டப் பயிர்களுக்கு 2 சதவீதமும், குறுவைப்பட்டப் பயிர்களுக்கு 1 ½ சதவீதமாகவும் இருக்கும். நமது விவசாய சகோதரர் யாருக்காவது இதன் பயன்கள் கிடைக்காமல் இருந்தால், இது எத்தனை பெரிய இழப்பாக இருக்கும், சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் விவசாயியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் என் மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்களால் என் மனதின் குரலை விவசாயிகளிடம் எடுத்துச் செல்ல முடியாதா? ஆகையால் தான் நீங்கள் இதை அதிகமாக விளம்பரப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வானொலி மூலமாக, தொலைக்காட்சி மூலமாக, என் மனதின் குரலில் நீங்கள் இந்தத் திட்டம் பற்றியெல்லாம் கேள்விப்பட்டாலும் கூட, பின்னர் இதை மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கென ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைல் வாயிலாகக் கூட என் மனதின் குரலைக் கேட்க முடியும், எப்போது வேண்டுமானாலும் கேட்க முடியும். உங்கள் மொபைல் மூலமாக ஒரு மிஸ்ட் கால் தாருங்கள், மனதின் குரலுக்கான மொபைல் ஃபோன் எண் 81908 81908. எட்டு, ஒன்று ஒன்பது, பூஜ்யம், எட்டு-எட்டு, ஒன்று, ஒன்பது, பூஜ்யம், எட்டு. நீங்கள் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால், எப்போது வேண்டுமானாலும் மனதின் குரலைக் கேட்டுக் கொள்ளலாம். இன்றைய அளவில் இது ஹிந்தியில் இருக்கும், ஆனால் விரைவாகவே இது உங்கள் தாய் மொழியில் கூட கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக எனது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

எனதருமை இளைய சகோதரர்களே,
 
நீங்கள் அற்புதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். ஜனவரி மாதம் 16ம் தேதி start up திட்டம் தொடங்கிய போது, நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களிடத்திலும் என்னால் புதிய சக்தி, புதிய எழுச்சி, புதிய உற்சாகம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இலட்சக்கணக்கானவர்கள் இதில் பங்கெடுக்க பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் இடம் இல்லாத காரணத்தால், கடைசியில் விஞ்ஞான் பவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் இடமின்மை காரணமாக பங்கு கொள்ள இயலாமல் போயிருக்கலாம், ஆனால் ஆன்லைன் மூலமாக இதில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டீர்கள்.  இது போல ஒரு நிகழ்ச்சி, இலட்சக்கணக்கான இளைஞர்களின் கவனத்தை இத்தனை ஆழமாகக் கொள்ளை கொண்டது என்பது மிக்க ஆச்சரியத்தை அளிக்கும் விஷயம். ஆனால் ஸ்டார்ட் அப் என்றால் அது தகவல் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையது, மிகவும் நுணுக்கங்கள் நிறைந்த வேலை என்று சாமான்ய மக்களின் மனங்களில் ஒரு பதிவு ஏற்பட்டிருப்பதை என்னால் காண முடிகிறது. ஆனால் இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் அந்த தவறான கருத்து மறைந்து போனது. தகவல் தொழில்நுட்பத்தோடு ஸ்டார்ட் அப்புக்கு இருக்கும் தொடர்பு என்பது ஒரு சிறிய அம்ஸம் தான். வாழ்க்கை என்பது விசாலமானது, அதில் தேவைகள் என்பன ஏராளமானவை. ஸ்டார்ட் அப் எண்ணிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒரு திட்டம்.

சில நாட்கள் முன்பாக நான் சிக்கிம் மாநிலம் செல்ல வேண்டியிருந்தது. நாட்டின் இயற்கை வழி விவசாயம் முழுமையாக நடைபெறும் மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் அனைத்து விவசாயத் துறை அமைச்சர்களையும், செயலர்களையும் அங்கே வருமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். அங்கே இரண்டு இளைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்திய மேலாண்மைக் கழகம், IIMஇல் கல்வி பெற்ற இவர்களில் ஒருவர் அனுராக் அக்ரவால், மற்றொருவர் சித்தி கர்ணானி. இவர்கள் இருவரும் ஸ்டார்ட் அப்பைக் கைக்கொண்டவர்கள். இவர்கள் வடகிழக்கில், விவசாயத் துறையில் பணியாற்றுகிறார்கள். மூலிகைப் பயிர்கள், இயற்கை விவசாய விளைபொருட்கள் ஆகியவற்றை உலக அளவில் சந்தைப்படுத்துகிறார்கள். எத்தனை அருமையான விஷயம் பாருங்கள்!!

ஸ்டார் அப் தொடர்பான உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கடந்த முறை நான் கூறியிருந்தேன். பலர் எழுதியும் அனுப்பி இருக்கிறார்கள், ஆனால் மேலும் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். அதே சமயம் வந்திருக்கும் விஷயங்கள் மெய்யாகவே கருத்தூக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. விஷ்வாஸ் த்விவேதி என்ற ஒரு இளைஞர் ஆன்லைன் முறையில் சமையல் சேவையை அளிக்கிறார், மத்திய தட்டு மக்களுக்கு ஆன் லைன் முறையில் பெறப்படும் கேட்புக்களுக்கு ஏற்ப உணவு அளித்து வருகிறார். திக்னேஷ் பாடக் என்ற ஒரு இளைஞர் விவசாயிகளுக்காக, அதுவும் குறிப்பாக பசுக்களுக்கு அளிக்கப்படும் தீவனம் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகிறார். நமது நாட்டின் பசுக்களுக்கு நல்ல தீவனம் கிடைத்தால், அவை அதிக அளவு பால் தரும், இதன் மூலம் நமது நாட்டின் இளைஞர்கள் சக்தி பெறுவார்கள். மனோஜ் கில்டா, நிகில் ஆகியோர் விவசாய விளைபொருட்களை  சேமிக்கும் இடங்கள் தொடர்பான ஸ்டார்ட் அப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய விளை பொருட்களை மொத்த அளவில் சேமித்து வைக்கும் முறையை மேம்படுத்தி வருகிறார்கள். இப்படி ஏகப்பட்ட உள்ளீடுகள் வந்திருக்கின்றன. மேலும் அனுப்புங்கள். எப்படி ஒவ்வொரு முறையும் நான் தூய்மையான பாரதம் பற்றி என் மனதின் குரலில் கூறி வருகிறேனோ, அதே போல ஸ்டார்ட் அப்புக்களைப் பற்றியும் தொடர்ந்து கூறுவது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. ஏனென்றால் உங்கள் சாதனைகள் தாம் எங்களுக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன.

எனதருமை நாட்டு மக்களே,

சுத்தம் என்பது இப்போது சுந்தரத்தோடு இணைக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நாம் அசுத்தத்துக்கு எதிராக கோஷங்கள் போட்டு வந்திருக்கிறோம், ஆனால் இதனாலெல்லாம் அசுத்தம் அகலவில்லை. இப்போது நாட்டு மக்கள் அசுத்தம் பற்றிய பேச்சுக்களை விடுத்து, சுத்தம் பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதிலும் கூட குடிமக்கள் ஒரு படி முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் சுத்தம் செய்வது என்பதுடன், அழகையும் இணைத்திருக்கிறார்கள். ஒரு வகையில் மகுடத்தில் மணி பொறித்ததைப் போல அமைந்திருக்கிறது. அதுவும் சிறப்பாக இதை இரயில் நிலையங்களில் காண முடிகிறது. இப்போதெல்லாம் நாட்டின் பல இரயில் நிலையங்களில் எல்லாம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த குடிமக்கள், கலைஞர்கள், மாணவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இவற்றை அழகுபடுத்துவதில் ஈடுபட்டு வருவதை என்னால் பார்க்க முடிகிறது. வட்டாரக் கலையம்சங்களைத் தாங்கி, சுவர்களில் சித்திரங்கள், அழகான முறையில் பெயர்ப் பலகைகள் அமைத்தல், மக்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் அவற்றை உருவாக்குதல் என ஏராளமான வகைகளில் இவை செய்யப்படுகின்றன. பழங்குடியினப் பெண்கள், அவர்கள் வட்டாரக் கலையம்சத்தால் ஹஸாரிபாக் இரயில் நிலையத்தை மிக நேர்த்தியாக அழகுபடுத்தி இருக்கிறார்கள். டாணே மாவட்டத்தைச் சேர்ந்த 300 தன்னார்வலர்கள் king circle இரயில் நிலையத்தை அழகு படுத்தியிருக்கிறார்கள். மாடுங்கா, போரிவிலி, khar இவை தவிர இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து,  ஸவாய் மாதோபூர், கோடா, என ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நமது இரயில் நிலையங்கள் நமது பாரம்பரியத்தின் சின்னங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இரயில் பயணிகள் இனிமேல் சாளரங்கள் வழியாக தேநீர்-சிற்றுண்டி விற்பனையாளர்களைத் தேடாமல், இரயில் நின்று கொண்டிருக்கும் ஊரின் சிறப்பம்ஸம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் அங்கே இருக்கும் சுவர்களைப் பார்க்கத் தொடங்குவார்கள். இது இரயில்வே துறையின் முனைப்புமில்லை, நரேந்திர மோதியின் முயற்சியும் இல்லை, இது குடிமக்களின் முனைப்பு. குடிமக்கள் ஈடுபட ஆரம்பித்தால் மாற்றம் எவ்வளவு சிறப்பாக அமைகிறது பார்த்தீர்களா? இது தொடர்பாக எனக்கு சில படங்கள் வந்திருந்தாலும், நான் மேலும் படங்களையும் காட்சிகளையும் காண ஆவலாக இருக்கிறேன். தூய்மைப்படுத்துவதோடு சேர்த்து, அழகுபடுத்தும் விதமாகவும் நீங்கள் ஒரு இரயில் நிலையத்திலோ, வேறு ஒரு இடத்திலோ பணி புரிந்திருந்தால், அது பற்றிய விவரங்களையும் புகைப்படங்களையும் எனக்கு உங்களால் அனுப்ப முடியுமா? கண்டிப்பாக அனுப்புங்கள். நானும் பார்ப்பேன், மற்றவர்களும் பார்ப்பார்கள். இதன் மூலம் மற்றவர்களுக்கும் கருத்தூக்கம் ஏற்படும். இது இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோயில்களுக்கு அருகில், சர்ச்சுக்கு அருகில், மசூதிக்கு அருகில், பூங்காக்களில் என ஏகப்பட்ட இடங்களில் இதைச் செய்ய முடியும். இப்படிச் செய்ய யாருக்கு எண்ணம் ஏற்பட்டதோ, யார் இதை முன்னெடுத்துச் சென்றார்களோ, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ, அவர்கள் அனைவரும்  வாழ்த்தப்பட வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் செய்தவை பற்றி எனக்குக் கண்டிப்பாக புகைப்படம் எடுத்து அனுப்புங்கள், அதைக் காண நான் ஆவலாக இருக்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

ஃபிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை இந்தியா, விசாகப்பட்டினத்தில் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது எனக்கு மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது, இதில் உலக நாடுகள் அனைத்தும் பங்கெடுக்க இருக்கின்றன. அவர்களை வரவேற்று உபசரிக்க நமது கப்பற் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகின் பல நாடுகளின் போர்க்கப்பல்கள் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டின துறைமுகத்தில் கூடுகின்றன. சர்வதேச கப்பல் படை திறனாய்வு International Fleet Review இந்தியக் கரைகளில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் கப்பற்படைச் சக்தி, உலக நாடுகளின் கப்பற்படை சக்தி ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் முயற்சியாக இது அமையும். இதில் கூட்டுப் பயிற்சி ஒன்றும் நடைபெறும். மிகப் பெரிய சந்தர்ப்பம் இது. இனி வரும் நாட்களில் உங்களுக்கு இது தொடர்பான தகவல்கள் தொலைக்காட்சி, ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும். இந்தியா போன்றதொரு நாட்டுக்கு இது அதிக மகத்துவம் நிறைந்தது. இந்தியாவின் கடற்படை சரித்திரம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்து வந்துள்ளது. சம்ஸ்க்ருத மொழியில் கடலை, உததி அல்லது சாகர் என்று அழைப்பார்கள். அதாவது அளவில்லாத பரப்பு கொண்டது என்று பொருள். எல்லைகளோ, நிலப்பரப்போ நம்மை பிரிக்கலாம், ஆனால் நீர் நம்மை இணைக்கிறது. கடல் நம்மை ஒன்று படுத்துகிறது  நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகள் முன்பாகவே கூட உலகப் பயணம் மேற்கொண்டு இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அது சத்ரபதி ஷிவாஜி மஹராஜ் ஆகட்டும், சோழ சாம்ராஜ்ஜியமாகட்டும், கடற்படை சக்தி என்ற விஷயத்தில் அவர்கள் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.  கடலோடு தொடர்புடைய பல மரபுகளையும், கொண்டாட்டங்களையும் நாம் பல மாநிலங்களில் இன்றும் கூடக் காண முடிகிறது. உலக நாடுகளை நாம் வரவேற்கும் வேளையில், கடற்படையின் சக்தி வெளிப்படுத்தப்படுவது என்பது ஒரு அருமையான சந்தர்ப்பம். இந்த உலகளாவிய கடற்படைச் சந்திப்பில் பங்கெடுத்துக் கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இன்னொரு புறம், இந்தியாவின் கிழக்குக் கோடியில் அமைந்திருக்கும் கௌஹாத்தியில் தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்க வருகிறார்கள். இதுவும் கூட தெற்காசிய நாடுகளுடன் நம் உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

எனதருமை நாட்டு மக்களே,

என் மனதில் வருவனவற்றை உங்களோடு திறந்த முறையில் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் முன்னமேயே கூட கூறியிருந்தேன். இனி வரும் நாட்களில் 10வது, 12வது வகுப்புத் தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன. கடந்த முறை மனதின் குரல் நிகழ்ச்சியில், நான் தேர்வுகள் தொடர்பாக சில விஷயங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முறை, வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாளில் தங்கள் மனவழுத்தத்தை எப்படி எதிர்கொண்டார்கள், இதற்கு இசைவாக குடும்பத்தில் சூழல் எப்படி ஏற்பட்டிருந்தது, ஆசிரியர்களின் பங்களிப்பு என்ன, இது தொடர்பாக அவர்களே கூட என்ன முயற்சி மேற்கொண்டார்கள், மூத்த மாணவர்கள் அவர்களுக்கு அளித்த ஆலோசனை என்ன என்பது பற்றியெல்லாம் இனிமையான அனுபவங்கள் இருக்கலாம். இந்த முறை நீங்கள் உங்களது இந்த அனுபவங்கள் குறித்து எனக்கு narendramodi appஇல் எழுதி அனுப்புங்கள். இதில் இருக்கும் நல்ல விஷயத்தை நீங்கள் வரவிருக்கும் ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் உங்கள் ஊடகம் வாயிலாக கொண்டு செல்லுங்கள் என்று ஊடகத் துறையினரிடம் நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இதை நாடு முழுவதிலும் இருக்கும் மாணவர்கள் படிக்க நேரலாம், பார்க்க நேரலாம், மனவழுத்தமில்லாமல் எப்படி தேர்வுகளை எதிர்கொள்வது, மன மகிழ்ச்சியோடு எப்படி தேர்வுகளில் பங்கெடுப்பது என்பதற்கான உத்தி தெளிவாகும். கண்டிப்பாக ஊடக நண்பர்கள் இந்த விஷயத்தில் எனக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் அனுப்பினால் தானே அவர்களும் உதவி செய்வார்கள்! அனுப்புவீர்கள் இல்லையா? கண்டிப்பாக அனுப்புவீர்கள். மிகவும் நன்றி நண்பர்களே!!

மீண்டும் ஒரு முறை அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நாம் கண்டிப்பாக சந்திக்கலாம், மிக்க நன்றி.

குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன், சென்னை வானொலி!