Home Blog Page 5865

ஜல்லிகட்டுக்கு அனுமதி: அரசியல் நாடகம் என்கிறார் குஷ்பு

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது, ஓர் அரசியல் நாடகமே என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

அவர் இது குறித்துக் கூறியபோது,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த ஆண்டு நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது மகிழ்ச்சிதான். ஆனால் பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலை முன்நிறுத்தி நடத்தும் நாடகம் இது. கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்தபோதும் சிறப்பு அனுமதி பெற்று காங்கிரஸ் அரசு நடத்தியது.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதை நடத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல் கடந்த ஆண்டும் அனுமதி வாங்கியிருக்கலாமே. தேர்தல் வரும்போது மக்களை கவர்வதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்

சென்னை:

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘‘ஜல்லிக்கட்டு’’ போட்டியை நடத்த வழி வகை செய்யும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசாணை வெளியிட்டதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினை குறித்து நான் உங்கள் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு வந்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகளுக்கும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கும் பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் 7.8.2015 அன்று நான் உங்களிடம் கொடுத்த அறிக்கையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டப்பூர்வமாக வழிகாண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு, தேவைப்படும்பட்சத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நான் உங்களுக்கு 2015 டிசம்பர் 22–ந்தேதியன்று கடைசியாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து இருப்பதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு அனுமதியால் தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரிய கலாச்சார சிறப்பு மிக்க பழக்கம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது – என குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு: வழக்கு தொடர முடிவு

புது தில்லி

ஜல்லிக்கட்டு போட்டி நடக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு பீட்டா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அது முடிவு செய்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத நிலையில், அவசர சட்டம் பிறப்பித்தாவது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு பகுதிகளில் காளைகளையும் தயார் செய்தனர்.
இதனால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்து அட்டார்னி ஜெனரலுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கி மத்திய அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன. இருப்பினும், மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களை ஆலோசிக்காமல் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், மத்திய அரசு வெளியிட்ட ஆணை செல்லாது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்றும், பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.

பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறக்க ஜெயலலிதா உத்தரவு

சென்னை:

பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 30–11–2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஏற்கெனவே ஆணையிட்டேன்.

அவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் கால அளவு 8–1–2016 உடன் முடிவதால் கால நீட்டிப்பு செய்து வழங்குமாறு மேற்கண்ட மாவட்டங்களிலுள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு கால நீட்டிப்பு செய்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பதியில் கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய காங்கிரஸ் தொண்டர்!

திருப்பதி:

திருமலை திருப்பதி கோயிலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தனது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியானது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெரபுரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சுரேஷ் (36) சோனியா, ராகுல் காந்தியின் வெறித்தனமான ரசிகராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சோனியா, ராகுல் காந்திக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தச் செய்தி, சுரேஷ் மனதை பெரிதும் வேதனைப்படுத்தியதாம்.

இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமின் கிடைக்க வேண்டும் என்றும் அவ்வாறு கிடைத்தால் தனது கை விரலை வெட்டி காணிக்கையாகத் தருகிறேன் என்றும் திருப்பதி ஏழுமலையானிடம் சுரேஷ் வேண்டிக்கொண்டுள்ளார். அவரது வேண்டுதல் நிறைவேறியதால், சுரேஷ் கடந்த மாதம் 25ஆம் தேதி திருப்பதி சென்று, அங்கு தனது இடது கை சுண்டு விரலை வெட்டி உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

முன்னதாக துண்டித்த கையை புகைப்படம் எடுத்துக் கொண்டார். விரலுடன் ரூ.1000 மற்றும் தனது முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் கூடிய கடிதம் ஒன்றையும் இணைத்து உண்டியலில் போட்டுள்ளார்.

இந்தத் தகவல் 15 நாட்களுக்குப் பிறகுதான் வெளியே தெரிய வந்தது. ஆனால் கைவிரல் காணிக்கை உண்டியலில் விழுந்தது குறித்து திருப்பதி கோயில் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பொது மக்கள் அவதி

 

புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஐதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய வங்கிகள், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்த சரத்துகளை மீறி ஊழியர்களுக்கு எதிரான பணிமுறைகளை திணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் மூன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகள் தொடர்ந்து 3 நாள்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மோடி பொங்கல் கொண்டாடலாம்; ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என்றும், இந்த வருட பொங்கல் விழாவை மோடி பொங்கல் என்று கொண்டாடலாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் நம்மிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் அரசின் குறிப்பை வெளியிட்டுள்ளது என்றார். மேலும், இதற்காக குரல் கொடுத்த, திமுக தலைவர் கருணாநிதி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாவிட்டால் தன்னை பதவி விலகக் கோரி ஊக்கம் கொடுத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும், இந்த வருடம் தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து பாடுபட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனவே இந்த வருட பொங்கலை ”மோடி பொங்கல்” என்று கொண்டாட இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதை அடுத்து, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அவரது டிவிட்டர் செய்திகள்:

 

 

 

 

 

மத வன்முறையைத் தூண்டும் கருத்து: வாட்ஸ் அப் அட்மின் மீது வழக்கு

முசாபர்நகர்:

மத வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துகளைப் பரப்பிய வாட்ஸ் அப் குழு மற்றும் அட்மின் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் பல பயன்கள் இருந்தாலும், பாதகமான அம்சங்கள் இருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. இத்தகைய சமூக வலைதளங்களை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்க கூடிய பல கருத்துக்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இதனால், வீண் பரபரப்புகளும் பதற்றமான சூழலும் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற வதந்திகளை பரப்புவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் குரலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள கந்தலா டவுன் பகுதியில் வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக, வாட்ஸ் அப் குழு அட்மின் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அப்பகுதி நபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153( மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு கேடு விளைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல்) 153 ஏ, மற்றும் 295 ஏ (வேண்டும் என்றே தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம்:

கச்சத்தீவு கடல் பகுதியில் புதன்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் அன்று காலை 509 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் 100-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுற்றி வளைத்து, மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

பின்னர் பகல் முழுவதும் அப்பகுதியிலேயே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதால் மீனவர்களால் மீன்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அவர்கள் படகுகளை ராமேசுவரம் கடல் பகுதியில் நங்கூரமிட்டுக் காத்திருந்தனர். பின்னர் அப்பகுதியிலிருந்து இலங்கை கடற்படையினர் சென்றதும், கடலில் வெட்டி வீசப்பட்ட தங்கள் வலைகளை சேகரித்துக் கொண்டு ராமேசுவரம் கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பினர்.

ஈரான் தூதரகம் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதாக சவுதி கூட்டணி அறிவிப்பு

 
சவுதி அரேபியா கூட்டணி ஏமனில் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துஉள்ள தகவல் தொடர்பாக விசாரித்து வருவதாக அறிவித்து உள்ளது.
சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனையை சவுதி அரேபியா நிறைவேற்றியது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது. இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகிறது.
ஐக்கிய அரபு எமிரெட்சும், குவைத் மற்றும் பக்ரைன், சூடான் , கர்த்தார், ஈரானில் இருந்து தங்கள் நாட்டு தூதரை திரும்ப பெற்று உள்ளது. சவுதி அரேபியா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்நாடுகள் தூதர்களை திரும்ப பெற்று உள்ளது.
இந்நிலையில் சனாவில் ஈரான் தூதரகத்தை குறிவைத்து சவுதி அரபியா கூட்டணி படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டிஉள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏமனில் உள்ள சவுதி அரேபியா கூட்டணி விசாரித்து வருகிறது என்று கூட்டணிபடையின் செய்தித் தொடர்பளர் அகமது அஸ்செரி கூறிஉள்ளார்.
சனாவில் கூட்டணிபடை போர் விமானங்கள் நேற்று இரவு கடும் தாக்குதல்களை நடத்தியது, சவுதி அரேபியாவின் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை லாஞ்சர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் தூதரகங்கள் உள்பட உள்கட்டமைப்பு நிறைந்த கட்டிடங்களை பயன்படுத்துகின்றனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தகவலின்படி, ஈரான் குற்றச்சாட்டை சுமத்திஉள்ளது, அதில் நம்பகத்தன்மை இல்லை.என்றும் கூறியுள்ளார்.
ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்திவருகிறது என்பது குறிப்பிட தக்கத்து