Home Blog Page 5866

ஈரான் தூதரகம் மீது தாக்குதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவோம் என சவுதி கூட்டணி அறிவிப்பு

ரியாத்:

ஏமனில் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக விசாரித்து வருவதாக சவுதி அரேபியா கூட்டணி அறிவித்துள்ளது.

சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி அரேபியா. இதற்கு கண்டனம் தெரிவித்து, ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதை அடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது.

இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகின்றன. குறிப்பாக, பக்ரைன், சூடான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், குவைத், கர்த்தார் ஆகியவை ஈரானில் இருந்து தங்கள் நாட்டு தூதர்களைத் திரும்ப பெற்றுள்ளன.

ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சனாவில் ஈரான் தூதரகத்தை குறிவைத்து சவுதி அரபியா கூட்டணி படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏமனில் உள்ள சவுதி அரேபியா கூட்டணி விசாரித்து வருகிறது என்று கூட்டணிபடையின் செய்தித் தொடர்பாளர் அகமது அஸ்செரி கூறியுள்ளார்.

லிபியா போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் குண்டுவெடிப்பு; 65 பேர் பலி

திரிபோலி:

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஜிலிட்டென் நகரில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் லாரியில் நிரப்பப்பட்ட குண்டுகளை வெடிக்கச் செய்ததில், 65 பேர் பலியானதாக அந்நாட்டில் இருந்து வந்த தகவல் தெரிவிக்கிறது.

ஜிலிட்டென் போலிஸ் பயிற்சிக் கல்லூரி அருகே நேற்று லாரி நிறைய வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர், அவற்றை வெடிக்கச் செய்துள்ளார். லாரியில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், அந்த பகுதியே குலுங்கியது. இதில் 65 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதை அடுத்து, அவர்களைக் காக்க, பொதுமக்கள் ரத்த தானம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிபியாவில் கடாபி அகற்றப்பட்ட பின்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கைவரிசை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

டிரைவர் துாங்கியதால் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10பேர் பலி : 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, பிளாக்கோட்டைபாறையில் தனியார் சொகுசுப் பேருந்து சாலை தடுப்பு தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாயினர். டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என விசாரனையில் தெரியவந்துள்ளது.
20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நெல்லை- நாகர்கோவில் நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையில் தனியார் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

நெல்லை :

நெல்லை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற அந்த தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பணகுடியை அடுத்த பிளாக்கோட்டை பாறையில் சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் அனைவரும் நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து, மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் நெல்லை-நாகர்கோயில் செல்லும் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிசொல்பவர் போல் வந்து செல்போன் திருட்டு: 3 பேர் கைது

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே குறி சொல்பவர்கள் போல் வந்து செல்போன் திருடிச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே திருவயலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அர்ஜுனன்(45). இவர் புளியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர், வியாழன் அன்று காலை வயலில் வேலை செய்யச் சென்றபோது, வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தாராம். இந்நிலையில், அவரது வீட்டுக்கு குறி சொல்பவர்கள் போல், காலை 3 பேர் வந்துள்ளனர். வெளியில் யாரும் இல்லாததை அறிந்த அவர்கள், சுவரில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறிசொல்வதாக மூன்று பேர் வந்ததாக மனைவி கூறியதையடுத்து, அர்ஜுனன் போச்சம்பள்ளி பேருந்து நிலையம், கல்லாவி சாலை, சந்தூர் சாலை அகிய இடங்களில் தேடிப் பார்த்ததில் மூன்று பேர் சந்தூர் சாலையில் நடந்து சென்றது தெரிய வந்தது. அதையடுத்து, அவர்களிடம் இருந்த தனது செல்போனை பறிமுதல் செய்த அர்ஜுனன், அவர்களை போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர்கள் மூவரும் கிருஷ்ணகிரி அருகே சிக்காரிமேடு பகுதியைச் சேர்ந்த சக்காரட்டி மகன் பிரபுதேவா (24), கரிசந்திரம் பேரிகை பகுதியைச் சேர்ந்த நம்பியார் மகன் சில்வேசா (28), அதே பகுதியைச் சேர்ந்த கிராமரெட்டி மகன் கோவிந்தராஜ் (24) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போச்சம்பள்ளி நடுவர் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.

கொள்முதல் விலை உயர்த்தி வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் மறியல்: 108 பேர் கைது

மதுரை:
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரி மதுரையில் மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 108 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இப் போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். போராட்டம் குறித்து அவர் கூறியபோது,

கரும்பு சாகுபடி அதிக செலவு ஏற்படக்கூடியது. நாடு முழுவதும் ஏறத்தாழ 5 கோடி விவசாயிகள் கரும்பு விவசாயத்தை நம்பியுள்ளனர். நாடு முழுவதும் 530 சர்க்கரை ஆலைகள் உள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு சர்க்கரை உற்பத்தியில் மட்டுமின்றி மதுபான உற்பத்திக்கான மொலாசஸ், காகித ஆலைக்கான சர்க்கரை கழிவு, எத்தனால், மின்உற்பத்தி என உபதொழில்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. அதேநேரம் கரும்பு சாகுபடிக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை. மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் என்ற நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை ஏற்கப்படவில்லை. சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்குத் தொகை அளிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நிலுவைத் தொகையை வழங்கவும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நஷ்டத்துக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.

இந்த மறியலில் ஈடுபட்ட 108 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகு விப்பு உழல் மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

 
முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு உழல் மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி மாற்றப்பட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை வருகிறது .
உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முதலில் விசாரித்து வந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இணைய தளத்தில் இந்த வழக்கு விசாரணை குறித்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீதிபதி ஆர்.கே.அகர்வால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமிதவ ராய் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே இனிமேல் நீதிபதிகள் பினாகி சந்திரகோசும், அமிதவ ராயும் மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பார்கள்.
சொத்துகுவிப்பு உழல் வழக்கின் மேல்முறையீட்டில் மு
முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கடந்த ஆண்டு மே 11–ந்தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பிலும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, லெக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 6 நிறுவனங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கர்நாடக அரசு தரப்பிலும், அன்பழகன் தரப்பிலும் எதிர்பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இப்படி பதில் மனு மற்றும் எதிர்பதில் மனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது முழு அளவிலான இறுதி விசாரணைக்கு வழக்கு தயாராக உள்ளது.
கடந்த நவம்பர் 11–ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது, அடுத்த விசாரணைக்கான தேதியை முடிவு செய்த பிறகு அன்றாட அடிப்படையில் இறுதி விசாரணையை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். எனவே, இன்று முதல் வழக்கு விசாரணை தினந்தோறும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

நெல்லை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை

திருநெல்வேலி:

திருநெல்வேலியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி 21 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. கொள்ளையடித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதித் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவர், டவுன் பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். வேறு ஓர் அறையில் அவரது தாய் மூக்கம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மாடி வழியாக மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து, மூக்கம்மாள் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றுள்ளார். கண் விழித்த அவர் மர்ம நபருடன் போராடியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், மூக்கம்மாளின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி, 21 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு மாடி வழியாகவே தப்பியோடிவிட்டார்.

மூக்கம்மாளின் அலறல் கேட்டு ஆனந்தவேலும், குடும்பத்தினரும் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர் அடுத்தடுத்த வீடுகளின் மாடி வழியாக குதித்து தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த மூக்கம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் ஆனந்தவேல் புகார் செய்தார்.

மாநகர காவல் துணை ஆணையர் ராஜன் மேற்பார்வையில், உதவி ஆணையர் சின்னையா, ஆய்வாளர் சோமசுந்தரம், போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் என கூறப்படுகிறது.

விஐபி தரிசனத்துக்கு போலி அடையாள அட்டை: சபரிமலையில் சென்னை நபர் கைது

திருவனந்தபுரம்:

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனத்துக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் போலி அடையாள அட்டை தயாரித்து பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்த சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைதிறப்பு என்பதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர் கூட்டம் அதிகம் என்பதால், விரைந்து தரிசனத்தை முடித்துத் திரும்ப, சிலர் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து சிபாரிசுக் கடிதத்துடன் வருகின்றனர். இப்படி வருபவர்கள் சிலர் போலியான கடிதத்துடன் வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிபாரிசுக் கடிதங்களை தீவிரமாக பரிசோதிக்க, பாதுகாப்பு அதிகாரி ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சிபாரிசுக் கடிதங்களை போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்யத் தொடங்கினர். அப்போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த 5 பேர் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அடையாள அட்டையுடன் சபரிமலைக்கு வந்ததையும், அவர்களின்அடையாள அட்டையைப் பரிசோதித்த போது, அது போலியானது என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் விசாரித்த போது, சன்னிதானத்தில் வைத்து ஒருவரிடம் ரூ.4,050 கொடுத்து அடையாள அட்டையை வாங்கியதாக அவர்கள் கூறினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ராஜேந்திரன் (49), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை தாம்பரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த சில வாரங்களாக சன்னிதானத்தில் தங்கியிருந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் போலி அடையாள அட்டையை தயாரித்து வந்ததும் தெரியவந்தது. ஒரு அடையாள அட்டைக்கு ரூ.4,050 பணம் வசூலித்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு போலி அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ரூ.2 லட்சம் வரை வசூலித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பின் ராஜேந்திரனை ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போக்கிரி ராஜா படக்குழுவிற்கு பிரியாணி விருந்தளித்த ஜீவா!

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா.

இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான் இசையமைத்துள்ள “ரெயின்கோ ரெயின்கோ” என்ற பாடலுக்கு ஜீவா, ஹன்சிகா நடனமாடும் வித்தியாசமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைத்து வருகிறார்.

இப்பாடல் காட்சி ஜீவா பிறந்தநாளன்று படமாக்கப்பட்டு வந்த நிலையில் போக்கிரி ராஜா படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியதுடன் படக்குழுவில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார் ஜீவா.

இவ்விழாவில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், ஹன்சிகா, நடன இயக்குனர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் உடன் இருந்தனர்.