Home Blog Page 5867

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர 12,624 சிறப்புப் பேருந்துகள்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:
பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் பொங்கல் பண்டிகையின் போது கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன.

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற் றுள்ளது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை யட்டி, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்து களை இயக்க நான் உத்தர விட்டுள்ளேன்.

அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத் திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 9.1.2016 அன்று 482 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 504 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 365 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 539 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 1,345 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 1,447 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 4,682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இது தவிர மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து 9.1.2016 அன்று 516 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 608 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 621 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 892 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 2,080 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 3,225 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.மொத்தத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 9.1.2016 முதல் 14.1.2016 வரை 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 15.1.2016 முதல் 19.1.2016 வரை இயக்கப்படும்.

மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். காணும் பொங்கல் நாளான 17.1.2016 அன்று மெரினா கடற்கரை, வண்டலூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் ஷ்ஷ்ஷ்.tஸீstநீ.வீஸீ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள லாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக., அரசின் ஊழல் பட்டியல்: 26 ஊழல்களை வெளியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை:
அதிமுக அரசின் 26 ஊழல்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டார். அவரது பட்டியல் குறித்து ஆதாரங்களைக் கேட்டால், தனியாக வாருங்கள் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், கிரானைட் ஊழல் உள்ளிட்ட 26 ஊழல்களை பட்டியலிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், 

1. செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை

2. மின் கொள்முதலில் ஊழல்
3. கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல்
4. உயர்கல்வித் துறையில் ஊழல்
5. பள்ளிக்கல்வித் துறையில் ஊழல்
6. ஆவின் பால் கலப்பட ஊழல்
7. லேப்டாப் ஊழல்
8. நெடுஞ்சாலைத்துறை ஊழல்
9. பாதாளச் சாக்கடை ஊழல்
10. ஊழலால் ரத்துசெய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்
11. டாஸ்மாக் ஊழல்
12. நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல்
13. தொழிற்துறைகளில் ஊழல்
14. மின்சார வாரிய ஊழல்
15. செய்தித்துறையில் ஊழல்
16. போக்குவரத்துத்துறை ஊழல்
17. நூலகத் துறையில் ஊழல்
18. மருத்துவத் துறையில் ஊழல்
19. பத்திரப் பதிவுத் துறை ஊழல்
20. ரியல் எஸ்டேட் ஊழல்
21. வணிக வரித் துறை ஊழல்
22. கிரானைட் ஊழல்
23. மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல்
24. இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல்
25. பொது விநியோகத் துறையில் ஊழல்

 ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த ஊழல் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மீதான 26 ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை ஏற்கெனவே தமிழக ஆளுநரிடம் அளித்துள்ளேன், ஆனால் அதுகுறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்தோம். 26 ஊழல் பட்டியலில் முத்துக்குமாரசாமி தற்கொலை மீதும், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். மற்ற ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஊடகங்கள் முன்பு இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளோம் எனக்கூறினார் இளங்கோவன்

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே விரைவில் மக்கள் முன்பாகவும் இந்த ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்றார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நான் அளித்த ஊழல் பட்டியல் புத்தகத்தைப் படித்து பாருங்கள், அதில் ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் போதவில்லை என்றால் தனியாக வாருங்கள் நாளை தருகிறேன் என்றார்.

மேலும், ஜெயா டிவி ரிப்போர்ட்ர்ஸ் வந்திருப்பீங்க.. என்னை கோபப்படுத்தினாலும் நான் கோபப்படமாட்டேன். அடிச்சாலும் நான் அமைதியாத்தான் இருப்பேன் என்றார்.

தமிழக அரசு மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியல் விவரத்தை அவர்களின் இணையத்தில் ஏற்றியிருக்கிறார். அந்த சுட்டி… இங்கே…

 

தனியார் கல்லூரிகளில் முதுநிலை பயிலும் அரசு டாக்டர்களுக்கு முழு ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை:

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் அரசு டாக்டர்களுக்கு முழு ஊதியமும், படிப்புக்கால விடுப்பும் வழங்கிட வேண்டும். தமிக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் முதுநிலை மருத்துவம் பயின்று வருகிறார்கள்.
அவர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க மறுத்துவருகிறது.அவர்களது படிப்புக்கால விடுப்பை சர்வீஸ் காலமாக ஏற்கவும் மறுக்கிறது .இது வருத்தமளிக்கிறது.
முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் டிப்ளமோ படிப்பிற்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறத்தாழ 1200 இடங்கள் உள்ளன.இவற்றில் 50 விழுக்காட்டு இடங்களை ,அதாவது 600 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கி வருகிறோம்.

அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் அரசு மருத்துவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு இல்லை.
தமிழகத்திற்கான 50 விழுக்காடு இடங்களில் , அதாவது அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கியது போக மீதி உள்ள 600 இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் மட்டுமே ( 300 இடங்கள்) அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

மிகக் குறைவான இடங்கள் மட்டுமே அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.

இது அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரத்தை பாதிப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய மக்களையும் பாதிக்கிறது.பல அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு முதுநிலை மருத்துவ இடங்களை வழங்கி வருகின்றன.அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களும் சேர்ந்து படிக்கிறார்கள்.இது அரசு மருத்துவமனைகளுக்கும். ஏழை எளிய மக்களுக்கும் நன்மை பயக்கும்.

எந்த அளவிற்கு கூடுதலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அரசு மருத்துவமனைகளில் சேவை செய்கிறார்களோ அந்த அளவிற்கு பொதுமக்களுக்கு நல்லது.நன்மை பயக்கக்கூடியது.

ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் அரசு டாக்டர்களுக்கு உதவ மறுக்கிறது, தமிழக அரசு.இது வேதனையளிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியத்தையோ, விடுப்பையோ வழங்கிட தமிழக அரசு மறுத்து வருகிறது.இதனால், அந்த மருத்துவர்கள் பொருளாதார ரீதியா சிரமப்படுவதோடு, படிப்புக் காலத்தின் சர்வீஸையும் இழக்கின்றனர்.இதனால்,அவர்களது பணி மூப்பும் பாதிக்கப்படுகிறது.

எனவே, அரசு மருத்துவர்கள் எந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தாலும் அவர்களுக்கு முழுமையான ஊதியத்தையும், ஊதியத்துடன் கூடிய படிப்புக்கால விடுப்பையும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்புக் காலத்தை சர்வீஸ் காலமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடையே சர்வீஸ் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவம் பயில்வதை ஊக்கப்படுத்தினால் தான், நமது புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க முடியும்.புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க முடியும்.அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையும்,சிகிச்சையும் இலவசமாக கிடைக்கும்.

அரசு மருத்துவர்களுக்கு முழு ஊதியத்துடன், படிப்புக்கால விடுப்புடன் முதுநிலை மருத்துவம் பயில வாய்ப்பளிப்பதை செலவீனமாக கருதாமல் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தப் போடும் முதலீடு எனக் கருதி அரசு செய்பட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 விழுக்காட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள் அரசால் நிரப்பப்படுகிறது.இந்த மாணவர்கள் பயிற்சி பெற முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களும் உதவுகிறார்கள்.

மத்திய அரசு மருத்துவர்கள்,மற்றும் இ.எஸ்.ஐ.சி மருத்துவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயின்றாலும் முழு ஊதியத்துடன் படிப்புகால விடுப்பு வழங்கப்படுகிறது.அந்த உரிமையை தமிழக அரசு டாக்டர்களுக்கு தமிழக அரசு வழங்க மறுப்பது நியாயமல்ல.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலும், அரசு மருத்துவர்களின் நலன் கருதி , தமிழக அரசு இப்பிரச்சனை குறித்து காலம் தாழ்த்தாமல் உடனடி முடிவை எடுக்க வேண்டும்.

சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு முதுநிலை மருத்துவ இடங்களை வழங்கும் போது, சில முக்கிய படிப்புகளுக்கான இடங்களை வழங்குவதில்லை. மருத்துவ சிகிச்சை சாராத இடங்களைத்தான் வழங்குகின்றன.இந்தக் குறைபாட்டையும் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலும் உரிய மாற்றங்களை , இவை குறித்து செய்திட வேண்டும்.

அரசுக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
என்று, டாக்டர்.ஜி.ஆர்.இரவீந்திரநாத் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மோசடி கருத்துத் திணிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

மோசடி கருத்துத் திணிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கை:

கோயில் திருவிழாக்களின் போது கோவிலைச் சுற்றிலும் புதிது புதிதாக கடைகள் தோன்றுவதைப் போல, தேர்தல் காலத்தில் புதிது புதிதாக கருத்துக்கணிப்புக் கடைகள் முளைப்பது வழக்கமாகிவிட்டது. இதைவிட ஆபத்து என்னவெனில், மக்களால் தண்டிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டோரின் கூலிப்படையாக அவை மாறி, திரிக்கப்பட்ட கணிப்பைக் கூறி, மக்கள் மனநிலையை மாற்றுவதற்கு முயல்வது தான்.

கருத்துக் கணிப்புகள் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்துடன் தொடர்புடையவை என்பதால் கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்ட போதிலும் அக்கோரிக்கையை பா.ம.க. ஆதரித்ததில்லை. ஆனால், ஊடகங்களும், பாரம்பரியம் மிக்க நிறுவனங்களும் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தி வந்த நிலை மாறி, இப்போது யார் வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பை நடத்தலாம்; யார் பெருந்தொகை தருகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கலாம் என்ற மலிவான கலாச்சாரம் பரவி விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி சென்னை லயோலா கல்லூரியின் பெயரைப் பயன்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் தான் இதற்கு உதாரணம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு அபத்தமானவையாகவும், நகைப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன. முதலமைச்சர் ஆக வாய்ப்புள்ளவர் யார்? என்ற கேள்விக்கு ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒருவர் மட்டுமே முன்னிறுத்தப் படுவது வழக்கம். ஆனால், இந்தக் கணிப்பில் ஒரே கட்சியிலிருந்து இருவர் முன்னிறுத்தப்பட்டதுடன், அதில் சாத்தியமே இல்லாத ஒருவருக்குத் தான் அதிக செல்வாக்கு இருப்பதாக கூறியதிலிருந்தே அந்த கருத்துக்கணிப்பு யாருக்காக, யாருடைய செலவில் நடத்தப்பட்டிருக்கும் என்பது புரிந்து விட்டது.

அதன்பின், கடந்த 4&ஆம் தேதி இன்னொரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டது. முந்தைய கருத்துக்கணிப்பே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு, இதன் பின்னணியில் இருப்பவர்களை அப்பட்டமாக அடையாளம் காட்டும் அளவுக்கு அமைந்திருந்தன இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள். இந்த கருத்துக் கணிப்பு யாருக்காக யாரால் நடத்தப்பட்டது என்பது சமூக ஊடகங்களில் கேலியும் , கிண்டலுமாக அம்பலப்படுத்தப்பட்டது. இந்த இரு கணிப்புகளிலும் கருத்து கேட்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3500&க்கும் குறைவு. ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர் என்ற அளவுக்கும் குறைவானவர்களிடம் கருத்துக் கேட்பது மிகப் பெரிய மோசடி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த இரு கருத்துக் கணிப்புகளும் தமிழ்நாட்டு அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படவுள்ள கட்சியை தூக்கி நிறுத்த திட்டமிட்டு நடத்தப்பட்டவை தான். இப்படி செய்வதைவிட மோசமாக இந்திய ஜனநாயகத்தை யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது.

இதுபோன்று திட்டமிட்டு கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்கும்போது அவை தேவையா? என்ற வினா எழுவதை தவிர்க்க முடியவில்லை. கருத்து சுதந்திரம், மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பெரும்பாலானோரின் மனநிலை கருத்து கணிப்புக்கு எதிராகவே உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி தேர்தலின் போது கருத்துக்கணிப்புகள் நடத்துவதால் ஜனநாயகத்துக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு யாராலும் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. இந்தியாவில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் அறிவியல் பூர்வமானவை அல்ல; அவை மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிப்பதில்லை; மாறாக அவை ஜனநாயகத்தை காயப்படுத்துகின்றன. அறிவியல்பூர்வமாக கருத்துக்கணிப்பு நடத்துவதன் மூலம் மக்களின் மனநிலையை ஓரளவு சரியாக கணிக்க முடியும் என்ற போதிலும், அதற்காக பெருமளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால், அத்தகைய உண்மையான கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு எந்த நிறுவனமும் தயாராக இல்லை.

மாறாக ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பை நடத்தி, அதற்காக அந்தக் கட்சியிடம் இருந்து பெருமளவில் பணம் வசூலிக்கலாம் என்ற எண்ணம் தான் இப்போது மேலோங்கியிருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற தேர்தல் கருத்துக்கணிப்பாளர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். கருத்துக் கணிப்புகள் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவை.‘‘ கருத்துக்கணிப்பு நடத்தும் சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை அணுகுகின்றன.அவை முறையாக கருத்துக்கணிப்பு நடத்தினாலும், அதன் முடிவுகள், கருத்துக் கேட்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக மாற்றி வெளியிடுகின்றன. இதற்காக அந்தக் கட்சியிடமிருந்து பெருமளவில் பணம் பெற்றுக் கொள்கின்றன’’ என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய துப்பறிவில் (ஷிtவீஸீரீ ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீ), சி&வோட்டர்ஸ் என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு முடிவுகளை எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாற்றித் தர தயாராக இருப்பதாக ஒப்புக் கொண்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா டுடே இதழ் ரத்து செய்தது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் திரிக்கப்பட்டவை என்பதை தேர்தல் முடிவு அம்பலப்படுத்தியது.

புகழ்பெற்ற கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளே இந்த லட்சனத்தில் இருக்கும் போது, தமிழகத்தில் விரக்தியின் விளிம்பில் இருக்கும் சில கட்சிகள் கூலிப்படைகளை அமைத்து நடத்தும் கருத்துக்கணிப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். இத்தகைய கருத்து திணிப்புகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஆனால், அதை குலைக்கும் வகையில் தான் திட்டமிட்டு கருத்துத் திணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இவை ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை என்பதால், அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்புகளைத் தவிர மற்ற கருத்துத் திணிப்புகளை சட்டப்படியாக தடை செய்ய மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முப்தி?

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் முதல் பெண் முதலமைச்சராக மெஹாபூபா முப்தி பதவியேற்க உள்ளார். இதனை அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான முஸாபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத்( வயது 79) இன்று காலை 7.30 க்கு காலமானார். அதைத் தொடர்ந்து அடுத்த முதலமைச்சராக அவரது மகள் மெஹபூபா முப்தி பதவியேற்க உள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான முஸாபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார். மக்கள் ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவே இறுதியாக அமையும் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க. தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் கிளம்பாது என்றே எதிர்பார்க்கபடுகிறது.

ஜன.20ல் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு தீவிரம்

ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 20ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஜனவரி 20ஆம் தேதி ராமேசுவரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் பகுதி பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் தீவுக்கு பாம்பன் வழியாக வரும் வாகனங்களை வரும் ஜன.15 ஆம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் வைத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.

கோயில் அருகே முக்கிய பிரமுகர்களின் கார்களை நிறுத்த 2 இடங்களில் நிறுத்தமும், 1000 வாகனங்களை நிறுத்தக் கூடிய வகையில் பொது நிறுத்தமும் தயார் நிலையில் உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலைச் சுற்றிலும் 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

முதியோர் இல்லம் : தவறை உணர்த்திய மகா பெரியவர்

 

பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.

” என்ன?” என்பது போல் பெரியவா பார்த்தார்.

” இல்ல….வந்து….எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல……”

பெரியவா எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“… வாஸக்கதவை தொறந்து போட்டுட்டு எங்கியாவது போய்டறா! அப்றம் அங்க இங்க அலஞ்சு தேடி கண்டு பிடிக்க வேண்டியிருக்கு! ஆத்துல வேற யாருமே இல்ல….அதுனால,……….”

“அதுனால?…..”

“அம்மாவ….மடத்துல கொண்டு வந்து விட்டுடலாமா?……” இழுத்தார்.

“நல்லவேளை….எங்கியாவது கண்காணாத காட்டுல கொண்டு போய் விட்டுடலாமான்னு கேக்காம, அந்த மட்டுல, எங்கிட்ட கொண்டு வந்து விடலாமான்னு கேக்கத் தோணித்தே ஒனக்கு!”

பெரியவா சற்று கடுமையாகவும், வேதனையோடும் கூறினார்.

“பாரு ….தாயார்ங்கறவ தெய்வம்! ‘தாயாருக்கு மேல் தெய்வமில்லே; ஏகாதஸிக்கு மேல் வ்ரதமில்லே’ன்னு பழமொழியே உண்டு. என்ன பண்ணறது? தாயார்கள் பாடு இந்த மாதிரி ஆயிடுத்து!.” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே போய் விட்டார்.

பக்தரோ….”ச்சே! என்ன செஞ்சுட்டேன்! பெரியவாகிட்டயா இப்டி பேசிட்டேன்!” தவித்துவிட்டார்! அதோடு, தன் தவறை உணர்ந்தும் விட்டார்.

பெரியவா கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.

“பெரியவா க்ஷமிக்கணும். எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டேன்” கெஞ்சினார்.

ஶாந்தரூபமான பெரியவா அவரை முன்னிட்டு, நம் எல்லோருக்கும் [முக்யமாக, ‘பெரியவாதான் எல்லாம்! ‘ என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களுக்கும்] முக்யமான உபதேஸத்தை அருளினார்.

“வயோதிக காலத்ல பெத்தவாளை காப்பாத்த வேண்டியது பிள்ளேளோட கடமை; அம்மா, அப்பா ஶாபம் குடுத்தா……… பின்னால வர்ற குடும்பமே வீணாப் போய்டும்! தனியா ஒன்னால அம்மாவை கவனிச்சுக்க முடியலேன்னா…ஒரு ஆஸாமியை ஒத்தாஸைக்கு வெச்சுக்கோ…. ! பத்து கொழந்தேள்னாலும், அம்மாக்காரி கஷ்டமோ, நஷ்டமோ வளக்கலையா? பாவம் ஏதோ கர்மா….புத்தி ஸ்வாதீனத்ல இல்லேன்னா….தொரத்தி விட்டுடுவேளா எங்கியாவது? மனுஷாளுக்கும், ம்ருகத்துக்கும் அப்றம் என்ன வித்யாஸம்? இதே நீ பெத்த கொழந்தைன்னா….இப்டி கேப்பியா?”

” மன்னிச்சிடுங்கோ! பெரியவா மனஸை ரொம்ப நோக அடிச்சுட்டேன். அம்மாவை நல்லபடி பாத்துக்குவேன்…..”

“ஸந்தோஷம்….. லோகத்ல, எத்தனையோ கொழந்தேள் அனாதையா திரியறதுகள். அம்மாங்கறவ நம்மளுக்கு அந்த அனாதைப்பட்டம் கெடைக்காம பரம உபகாரம் பண்ணியிருக்கா…..அவளோட வ்ருத்த தஸைல, அவளை நல்லபடி கவனிச்சுக்கற பாக்யம் எல்லாருக்கும் கெடைக்காது….ஒனக்கு கெடச்சிருக்கு….”

ஆஸிர்வாதம் செய்தார். கண்களில் கண்ணீரோடு, தன் அம்மாவுக்கு நல்லதொரு பிள்ளையாக, திரும்பிப் போனார் அந்த பக்தர்.

இன்று பெரியவா ஸ்தூலமாக நம்மிடையே இருந்தால்??? இப்போதைய காலகட்டத்தில் ஓரளவு வஸதி படைத்த பல பெற்றோர்களும் கூட, ஸ்வதந்த்ரமாக, பிக்கு பிடுங்கல் இல்லாமல் வாழ விரும்புவதால், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று விட்டிருப்பாரோ என்னவோ? ஏனெனில் யாரையுமே குற்றம் சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும், கையில் காஸும் இல்லாமல், பெற்று வளர்த்த குழந்தைகளும் “இருக்கியா? செத்தியா?” என்று கவனிக்காமல், நம்முடைய ஸ்ரீமடம் மற்றும் சில நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் இலவஸ முதியோர் இல்லங்களில் தங்கள் கடைசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

– ஏ.பி.ராமன், சிங்கப்பூர்

அவரை உணர்: ஹனுமத் ஜயந்தி சிறப்பு கவிதை

“அவனையுணர்”
(மீ.விசுவநாதன்)
எதுபலமோ அதுவே அனுமன்
எதுநலமோ அதுவே அனுமன்
எதுசுகமோ அதுவே அனுமன்
எதுமருந்தோ அதுவே அனுமன்
எதுபணிவோ அதுவே அனுமன்
எதுதுணிவோ அதுவே அனுமன்
எதுதுணையோ அதுவே அனுமன்
இதுபுரிதால் அவனே மனிதன் !

எதுகனிவோ அதுவே அனுமன்
எதுஅழகோ அதுவே அனுமன்
எதுஉறவோ அதுவே அனுமன்
எதுஊயிரோ அதுவே அனுமன்
எதுகலையோ அதுவே அனுமன்
எதுசரியோ அதுவே அனுமன்
எதுஅறிவோ அதுவே அனுமன்
இதுஉணர்ந்தால் அவனே மனிதன் !

(ஸ்ரீ அனுமன் ஜெயந்தி தினம் – 09.01.2016)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா)

முப்தி முகமத் சயீத் மரணம்: ஒமர் அப்துல்லா இரங்கல்

ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.

முப்தி முகமது சயீத் உயிரிழந்தார் என்ற பயங்கரமான செய்தியை தற்போது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் வருத்தப் பட்டேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். இந்தக் கஷ்டமான நேரத்தில் சயீத் அவர்களின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்துக்கு என்னுடைய இதய பூர்வமான அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். அவர்களுக்காக நானும் என் குடும்பமும் பிரார்த்தனை செய்கிறோம்.
– இவ்வாறு ஒமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானார்

புது தில்லி:

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானார். அவருக்கு வயது 79.

காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக கடந்த 24 ஆம் தேதி தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த 30ஆம் தேதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுவதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரால் பேச முடிகிறது என்றும் தெரிவித்த மருத்துவர்கள், தொடர்ந்து உடல் நிலையைக் கண்காணித்து வந்தனர். சயீத்தின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. இந்நிலையில், முப்தி முகமது சயீத் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சயீத், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி பாஜக., வுடனான மக்கள் ஜனநாயகக் கூட்டணியின் உதவியில், ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றார்.
இவர் முன்னதாக, 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்தவர்.