அதிமுக., அரசின் ஊழல் பட்டியல்: 26 ஊழல்களை வெளியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை:
அதிமுக அரசின் 26 ஊழல்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டார். அவரது பட்டியல் குறித்து ஆதாரங்களைக் கேட்டால், தனியாக வாருங்கள் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், கிரானைட் ஊழல் உள்ளிட்ட 26 ஊழல்களை பட்டியலிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், 

1. செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை

2. மின் கொள்முதலில் ஊழல்
3. கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல்
4. உயர்கல்வித் துறையில் ஊழல்
5. பள்ளிக்கல்வித் துறையில் ஊழல்
6. ஆவின் பால் கலப்பட ஊழல்
7. லேப்டாப் ஊழல்
8. நெடுஞ்சாலைத்துறை ஊழல்
9. பாதாளச் சாக்கடை ஊழல்
10. ஊழலால் ரத்துசெய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்
11. டாஸ்மாக் ஊழல்
12. நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல்
13. தொழிற்துறைகளில் ஊழல்
14. மின்சார வாரிய ஊழல்
15. செய்தித்துறையில் ஊழல்
16. போக்குவரத்துத்துறை ஊழல்
17. நூலகத் துறையில் ஊழல்
18. மருத்துவத் துறையில் ஊழல்
19. பத்திரப் பதிவுத் துறை ஊழல்
20. ரியல் எஸ்டேட் ஊழல்
21. வணிக வரித் துறை ஊழல்
22. கிரானைட் ஊழல்
23. மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல்
24. இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல்
25. பொது விநியோகத் துறையில் ஊழல்

 ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த ஊழல் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மீதான 26 ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை ஏற்கெனவே தமிழக ஆளுநரிடம் அளித்துள்ளேன், ஆனால் அதுகுறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்தோம். 26 ஊழல் பட்டியலில் முத்துக்குமாரசாமி தற்கொலை மீதும், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். மற்ற ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஊடகங்கள் முன்பு இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளோம் எனக்கூறினார் இளங்கோவன்

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே விரைவில் மக்கள் முன்பாகவும் இந்த ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்றார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நான் அளித்த ஊழல் பட்டியல் புத்தகத்தைப் படித்து பாருங்கள், அதில் ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் போதவில்லை என்றால் தனியாக வாருங்கள் நாளை தருகிறேன் என்றார்.

மேலும், ஜெயா டிவி ரிப்போர்ட்ர்ஸ் வந்திருப்பீங்க.. என்னை கோபப்படுத்தினாலும் நான் கோபப்படமாட்டேன். அடிச்சாலும் நான் அமைதியாத்தான் இருப்பேன் என்றார்.

தமிழக அரசு மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியல் விவரத்தை அவர்களின் இணையத்தில் ஏற்றியிருக்கிறார். அந்த சுட்டி… இங்கே…