ஈரான் தூதரகம் மீது தாக்குதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவோம் என சவுதி கூட்டணி அறிவிப்பு

ரியாத்:

ஏமனில் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக விசாரித்து வருவதாக சவுதி அரேபியா கூட்டணி அறிவித்துள்ளது.

சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி அரேபியா. இதற்கு கண்டனம் தெரிவித்து, ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதை அடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது.

இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகின்றன. குறிப்பாக, பக்ரைன், சூடான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், குவைத், கர்த்தார் ஆகியவை ஈரானில் இருந்து தங்கள் நாட்டு தூதர்களைத் திரும்ப பெற்றுள்ளன.

ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சனாவில் ஈரான் தூதரகத்தை குறிவைத்து சவுதி அரபியா கூட்டணி படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏமனில் உள்ள சவுதி அரேபியா கூட்டணி விசாரித்து வருகிறது என்று கூட்டணிபடையின் செய்தித் தொடர்பாளர் அகமது அஸ்செரி கூறியுள்ளார்.