லிபியா போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் குண்டுவெடிப்பு; 65 பேர் பலி

திரிபோலி:

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஜிலிட்டென் நகரில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் லாரியில் நிரப்பப்பட்ட குண்டுகளை வெடிக்கச் செய்ததில், 65 பேர் பலியானதாக அந்நாட்டில் இருந்து வந்த தகவல் தெரிவிக்கிறது.

ஜிலிட்டென் போலிஸ் பயிற்சிக் கல்லூரி அருகே நேற்று லாரி நிறைய வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர், அவற்றை வெடிக்கச் செய்துள்ளார். லாரியில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், அந்த பகுதியே குலுங்கியது. இதில் 65 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதை அடுத்து, அவர்களைக் காக்க, பொதுமக்கள் ரத்த தானம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிபியாவில் கடாபி அகற்றப்பட்ட பின்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கைவரிசை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.