Home Blog Page 5874

கிராம தபால் நிலைய ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை:

கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கிராம தபால் நிலைய ஊழியர்களாக சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கிராம தபால் நிலைய ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். குறிப்பாக கிராமப் புற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் 90 சதவீதம் கிராம அஞ்சல் நிலைய ஊழியர்கள் பல ஆண்டுகாலமாக தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்,
பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென போராடி வருகின்றனர். 7-வது ஊதியக் குழுவில் இவர்களது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது இவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

எனவே மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று வாசன் தெரிவித்துள்ளார்.

ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்ட இல்லம், பள்ளியை சீர்செய்யும் செலவை அ.தி.மு.க. ஏற்கும்: ஜெயலலிதா

சென்னை:

சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் இல்லத்தையும், அங்குள்ள பள்ளியையும் சீர்செய்வதற்கான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

எம்.ஜி.ஆர். நினைவாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கென ஒரு இல்லமும், மேல்நிலைப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளி சேர்த்து வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மிக அதிக அளவிலான கனமழை கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பெய்தது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில இடங்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்த பெருமழை வெள்ளத்தின் போது ‘டாக்டர் எம்.ஜி.ஆர் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி’ வளாகத்தின் முதல் மாடி வரை வெள்ளநீர் புகுந்து விட்டது. அதன் காரணமாக, அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மொட்டை மாடிக்குச் சென்று, தங்களைக் காப்பாற்றும்படி உதவி கோரினர். இது பற்றிய தகவல் எனக்கு கிடைத்தவுடன் நான், தலைமைச்செயலாளர் மற்றும் அரசின் ஆலோசகர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் சிக்கியுள்ள இல்ல மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டேன்.

அதன்படி, இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கியிருந்த மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். அவர்கள் சத்யா ஸ்டூடியோவில் தங்கவைக்கப்பட்டனர். சத்யா ஸ்டூடியோவில் அவர்கள் தங்கி இருந்த 5 நாட்களுக்கும் சுமார் 100 பேருக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள எனது இல்லத்தில் இருந்து உணவு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அந்த இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டது.

டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் லதா ராஜேந்திரன் தற்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குழுக் காதொலிக் கருவி, எப்.எம். காதொலிக் கருவி, மென் பலகை மற்றும் எல்.சி.டி. ஆகியவை மிகவும் பழுதடைந்துவிட்டன என்றும், அவை புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கணினிகள், அலுவலக அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள் ஆகியவை சேதமடைந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். இதுவன்றி, மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, குளிர்பதனப் பெட்டிகள், ஸ்டவ்கள் ஆகியவையும் புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சுவர், உட்புறச் சாலை, முன்வாயில் போன்ற கட்டமைப்புகளும் இந்த இல்லத்தில் சீர் செய்யப்பட வேண்டும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரால் நடத்தப்படும் டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எனது கடமை என நான் கருதுகிறேன். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு செய்யப்படும் நன்றி கடனாகவே நான் கருதுகிறேன்.

எனவே, டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி முழுவதையும் சீர்செய்வதற்கு தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும்.

கோவை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும்: கல்ராஜ் மிஸ்ரா

கோவை :

கோவை மாவட்டத்தில் குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு செய்துதரும் என சிறு, குறு தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.

கோவையில் ஜூலை மாதம் நடைபெற உள்ள அக்ரி இண்டெக்ஸ் 2016 என்ற விவசாய கண்காட்சிக்கான சிற்றேடுகளை மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இக்காண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதன் மூலம் புதிய தொழில் முதலீடுகள் அமைய வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பின்பு பொருளார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. கருப்புப் பணத்துக்கு எதிரான நிலைப்பாடு, விவசாயம் ஊக்குவிப்பு, தொழில் துறை மேம்பாடு, வேலை வாய்ப்பை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கொடுக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடனாக இருக்கிறது. அவற்றை மீட்க குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாராக் கடன்களுக்கான காரணம் கண்டறியப்படும். தொழில் துறையை மேம்படுத்த மேலும் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறு தொழில் மேம்பாட்டிற்காக இதுவரை முத்ரா வங்கியின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தனித்தனியாக 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை நடுத்தர நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கான தொகையினை தாமதமின்றி தொழில்முனைவோருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கல்ராஜ் மிஸ்ரா.

அவரிடம், கோவையில் பொதுத்துறை தொழிற்சாலை அமைக்க வேண்டும், அரசு நிறுவனக்களுக்காக சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் 20 சதவீத பொருள்களை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழில் துறையினர் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்தியாவில் நிலநடுக்கம் : ஒருவர் பலி : 8 பேர் காயம்

 
இந்தியா-மியான்மர் எல்லையருகே மணிப்பூரை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தையடுத்து இம்பால் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.அசாம், பீகார், அருணாசல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், இம்பால் நகருக்கு மேற்கு-வடக்கே 33கி.மீ., தொலைவில் மையம் கொண்டதாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலநடுக்க நிலவரம் குறித்து வீசாரித்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று மாலை ஏ.பி.பரதன் உடல் தகனம்: கட்சியினர் அஞ்சலி

புது தில்லி:

மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் உடல் தகனம் தில்லியில் இன்று மாலை நடக்கிறது. ஏ.பி.பரதனின் உடல் தில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு வைக்கப்படுகிறது. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏ.பி.பரதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் மதியம் 1.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு நிகாம்பாத் மின்மயானத்துக்கு செல்கிறது. அங்கு மாலை 3 மணிக்கு உடல் தகனம் நடக்கிறது.

92 வயதான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 7ஆம் தேதி தில்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ஏ.பி.பரதன் மரணம் அடைந்தார்.

சக்தி மிகுந்த ஹனுமன் மந்திரம்

hanuman - 2026

ஸ்ரீராம ஜெயம்

===========

ஸ்ரீஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய| 
யசோல க்ருதாய|
அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|
கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|
ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|
குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா| 
ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி 
சர்வ க்ரஹ ப்பூதாநாம்|
ஸாகிநீ டாகிநீநாம்|
விஷம துஷ்டாநாம்| ஸர்வேஷா மாகர்ஷ யாகர்ஷய|
மர்த்தய மர்த்தய| ச்சேதயச் சேதய| 
மர்த்தியா ந்மாரய மாரய|
சோஷய சோஷய| ப்ரஜ்வல ப்ரஜ்வல|
ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|
ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர| சாதுர்த்திகஜ்வர| 
ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா| விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|
ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி| 
அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|
ஹட்சி ஸூலே குன்மஸூலே| 
பித்த ஸூலே ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி |
ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா|

ஓம் நமோ ஹனுமதே பவன புத்ர வைஸ்வாநகமுக 
பாபத்துருஷ்டி ஷோடாத்ருஷ்டி ஹனுமதேகா 
ஆங்ஞாபுரே ஸ்வாஹா|


என்னுடைய பாட்டனார் வீரகேரளம்புதூர் ராம ஐயங்கார் ஹனூமத் உபாசகராகத் திகழ்ந்தவர். அப்பாவும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால் நானோ தடம் மாறி சுதர்ஸன உபாஸனையை கைக் கொண்ட்டேன். 

எங்கள் இல்லத்தில் இந்த ஹனூமத் மந்திரம் அச்சடிக்கப்பட்டு, கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் இரண்டாவது கட்டு நிலைப்படியில் மாட்டப் பட்டிருக்கும். தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஒரு ச்லோகம் இது. இந்த மந்திரத்தை எழுதியோ அச்சடித்தோ கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் வாசல் நிலைப்படியில் தொங்கவிட்டால், வீட்டுக்கு எந்த தோஷமும் வராது என்றும், திருஷ்டி ஏற்படாது; பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவுகள் வராது என்றும் இந்த ச்லோகத்தின் அடிக்குறிப்பில் இருந்தது. 

பொது நன்மை கருதி அதனை இங்கே அடியேன் அப்படியே தருகிறேன். ஹனுமான் அருளால் அனைவருக்கும் சகல நலன்களும் கிடைக்கட்டும்.

ரூ.326 கோடியே 85 லட்சம் செலவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதலமைச்சர் ஜெயலலிதா

 
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.326 கோடியே 85 லட்சம் செலவி வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
எனது தலைமையிலான தமிழக அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் இன்றியமையாப் பணியினை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கள் பணிகளை செம்மையாக செய்திட ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ் மற்றும் சிறப்பு மிகை ஊதியம், அதாவது சிறப்பு போனஸ் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு ஆகியவை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி,
1. 2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
2. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்,
கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு 326 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சரத்குமார் கட்சியில் இருந்து மாவட்டச் செயலர் அதிரடி நீக்கம்: கனிமொழியை சந்தித்தது காரணம்?

சென்னை:
சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.வின் உத்தரவுப்படி, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இதுவரை செயல்பட்டு வந்த சி.உதயகுமார் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகிற காரணத்தினால் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருடன் கட்சி தொடர்பாக எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் – என்று கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார் தலைமையிலான ச.ம.க.,வில், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக உள்ளனர். இதனால், ‘அக்கட்சியில் சமத்துவம் இல்லை; ஜாதி ஆதிக்கம் உள்ளது’ என, குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து, கட்சி நிர்வாகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் குறிப்பிட்ட ஜாதியினர் இருந்த முக்கிய பதவிகளை, இதர ஜாதியினருக்கும் அளித்தார் சரத்குமார். இதனால், அந்த ஜாதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தக் காரணத்தை முன்னிட்டு, கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி.உதயகுமார் தலைமையில், அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம், கனிமொழியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இத்தகவல் தெரிந்து, அவரை சரத்குமார் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலையணிவிப்பு

 
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே சூரக்குளத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது நினைவு மண்டபத்தில் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் நேற்று (03-01-2016) மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி உள்ளிட்ட ல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் வேலுநாச்சியார் சிலைக்கு மாலையணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை, காரைக்குடி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
 

தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்சினைக்குத் தீர்வு என்ன? : முக்கிய பிரமுகர்கள் கருத்து

மதுரையில் மீனவர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் “தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்சினைக்குத் தீர்வு என்ன?” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நேற்று (02-01-2016) நடைபெற்றது.
மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய “மீனவர் கடல்சார் பழங்குடியினரா?” என்ற தலைப்பிலான சிறு நூலை கடிகை ஆன்டனி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவர்களது கருத்துகளை கூறினர்.
தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு பேசியதாவது :-
” கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்குக் கொடுத்தது என்றால் அது (கச்சத்தீவு) இந்தியாவிற்கு உரியது என்றுதானே அர்த்தம். தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை தமிழக அரசிடம் கூட கேட்காமல் வழங்கப்பட்டது.
தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை நீங்கள் எப்படி கொடுக்கலாம் என எந்த தமிழக முதலமைச்சரும் இந்திய அரசைக் கேட்கவில்லை. அப்போதே இது “அறநெறிக்குப் புறம்பான ஒப்பந்தம்” என அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது. இந்தியாவுடன் ஒரு நாட்டை இணைத்துக் கொள்ளவேண்டுமானால், சட்டத்திருத்தம் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
ஆனால் இந்தியாவின் ஒருபகுதியை பிறருக்குக் கொடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. கோடிக் கணக்கான மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் செய்யப்பட்டது எப்படி சரியாக இருக்கமுடியும்? கோட்பாடு அடிப்படையில் கச்சத்தீவைத் திரும்பப்பெறமுடியும்.
பண்டைகாலத்தில் செய்து வந்தத் தொழிலை, அதே இடத்தில் இருந்து செய்து வருகிறவர் பழங்குடியினர் என அடையாளம் கூறலாம். அந்த அடிப்படையில் மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர். மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை தயாராக இல்லை. அதாவது அக்கறை இல்லை. ஓட்டுப்போடும் போது மட்டும் இந்தியர்கள். சிங்களக் கடற்படையால் சுடும்போது தமிவக மீனவர்கள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீனவர்களுக்காக என்ன செய்தார்கள்? கையேந்தி நின்று ஒரு இனம் பிழைக்கமுடியுமா? கட்சிகளைக் கடந்து மீனவர்கள் ஒற்றுமை பேணவேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் இன உணர்வோடு இணையவேண்டும். தமிழக மீனவர்கள் சிக்கல் என்பது தமிழர்களுக்கான இனச்சிக்கல். அரசியல்வாதிகள், ஓட்டு கேட்க வரும்போது “எங்களை காக்க வராதவர்களுக்கு ஓட்டு போடமாட்டோம்” எனக் கூறுங்கள். அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். இளைஞர்களுக்கும் அதனைப் புகட்ட வேண்டும் என்றார்.
நிரபராதி மீனவர் சங்கத்தின் அமைப்பாளர் பாம்பன் அருளானந்தம் பேசியதாவது :-
“1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மீனவர் மீதான தாக்குதல் பிரச்சினையை இலங்கை கடற்படை துவங்கியது. இன்னும் அது தொடர்ந்து வருகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் மாறி வந்தாலும் இந்தச் சிக்கலுக்கு தீர்வுக்காணப்படவில்லை. இன்னும் 91 தமிழக மீனவர்களும் 71 படகுகளும் இலங்கையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.. ஆனால் தமிழகத்தில் 12 இலங்கை மீனவர் படகுகள் மட்டுமே பிடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
மீனவர்கள் பழங்குடியினர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அரசியல் செல்வாக்கு இல்லாததால் அவர்கள் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழக மீனவர்கள் கடலில் காணாமல் போனால் அவரைத் தேடுவதில் அரசுகள் அதிக அக்கறை காட்டுவதில்லை.
கடல் குறித்து அறிந்திடாத அதிகாரிகள் தான் பொறுப்பில் இருக்கிறார்கள். அடிவாங்குவதும் சுடுவதும் தொடர்ந்தாலும் கடலுக்குச் செல்கிறோம். மீனவர் பிரச்சினை உரிமை பிரச்சினை இதனைத் தீர்க்கவேண்டியது அரசு என்றார் அருளானந்தம்.
எழுத்தாளர் குறும்பனை பெர்லின் பேசியதாவது :-
“கடல் குறித்துத் தெரியாதவர்கள் மீனவர்களுக்கான சட்டத்தையும் உத்தரவையும் பிறப்பிக்கிறார்கள். இதனை எப்படி அனுமதிக்கமுடியும்?
கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மீனவ மக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கொண்டு வராதீர்கள் என்றால் கடலோர மக்களை தேச விரோதிகளாக அரசு கருதுகிறது. மீனவர்களின் பழைய உரிமைகளைச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்” என்றார்.
குமரி மாவட்ட அருட்திரு சர்ச்சில் பேசியதாவது :-
” மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்போதுதான் மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர் என்ற கோரிக்கையை நாம் நம்மிடம் ஓட்டுகேட்க வரும் அரசியல்வாதிகளிடம் வற்புறுத்த முடியும். கடலோடு போராடும் நாம் இப்போது அரசாங்கத்திடம் போராடவேண்டியதிருக்கிறது என்றார்.
தூத்துக்குடி அருட்திரு எஸ்.டி. செல்வராஜ் பேசியதாவது :-
“இதுவரை மத்தியில் ஆட்சிகள் மாறி மாறி வந்திருக்கின்றன. நாமும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மத்திய ஆட்சியில் பண்புநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள் உரிமையை மட்டுமல்ல, அனைவரது உரிமைகளும் காக்கப்படவேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் பேசியதாவது :-
மீனவர் உரிமைக் கூட்டமைப்பானது, மீனவர் சங்கங்கள் மற்றும் இயக்கங்களை இணைப்பதிலும், ஒற்றுமைப்படுத்துவதிலும், மீனவர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சாதி, மதங்களைக் கடந்து மீனவர்களை, உரிமைக் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சுருக்கமாகச் சொல்வதெனில் மீனவ இன மக்கள் இணைந்து, ஒற்றுமையுடனும் அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழ்வதற்கானப் பணிகளை மீனவர் உரிமைக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் ஐந்து மாநில மாநாடுகளை பகுதி சார்ந்த மீனவர் சங்கங்கள், இயக்கங்கள், மீனவர் பிரதிநிதிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நடத்தியுள்ளோம். மீனவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கப்படவேண்டும்.
மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர் என அறிவிக்கப் படவேண்டும், இலங்கை கடற்படை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்கவேண்டும். மீனவர்களுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்படவேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களை சந்திப்பது என்றும் அரசியல்கட்சிகள் இந்தக் கோரிக்கைகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மீனவர் சங்கங்களுடன் இணைந்து புறக்கணிக்க முடிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. என்று கருத்தரங்கில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவர்களது கருத்துகளை கூறினர்.
நிகழ்ச்சியில் தங்கச்சிமடம் சின்னத்தம்பி, காணிக்கைதாஸ், வழக்கறிஞர் கதிர்வேல், ரவி, தங்கச்சிமடம் இருதயமேரி, பத்திரிகையாளர் ப. திருமலை உள்ளிட்ட பலர் பேசினர். சவேரியார் சாவடி போஸ்கோ நன்றி கூறினார்.
வழக்கறிஞர், சி.சே. இராசன்,
செய்தியாளர் ( தினசரி தமிழ் செய்தித் தளத்தின் வாசகர் )