Home Blog Page 5900

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-3

சென்னை மட்டுமில்ல… தமிழ்நாட்ல பல பகுதிகள்ல மழை வெள்ளம் வந்து, இவ்ளோ சேதம் ஏன் தெரியுமா?
என்ன சொல்ல வர்றீங்க…?
இங்கே கும்பாபிஷேகம் பண்ணாங்கள்ல…! அது ரொம்ப தப்பும் தவறுமா நடந்துச்சு. ஆகம விரோதம்தான். தட்சிணாயனத்துல வேணாம்னோம். கேக்கல. உத்தராயண துவங்கி, பங்குனில செஞ்சிருக்கலாம். ஆனா, இவங்க வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு காசு பாக்கணும்கிற ஒரே குறிக்கோள்ல முன்னாடியே மூலவர் கும்பாபிஷேகம் செஞ்சிட்டாங்க. இதனால், ஆட்சி செய்பவருக்கு பாதகம்னு எவ்வளவோ சொன்னோம்… அதான் பாருங்க, முதலமைச்சருக்கு எவ்ளோ அவப் பெயர் வந்து…. அடுத்து பாருங்க… ஆட்சில தொடர முடியாது …
***
நம்ம கோயிலுக்கு வரக்கூடாதுன்னே முடிவு கட்டி இயங்கறானுங்க… போலீஸ்காரங்க இத்தன பேரு தேவையா? எல்லாம் ஒரு பக்கம் எங்கயோ உக்காந்துகிட்டு… டூட்டி பாக்கறாங்களாம். இவங்கதான் அதிகமா கோயிலை அடைச்சிருக்கிறது…!
***
எத்தன பேரு இங்க லால்குடி, நத்தம், வாளாடி, துறையூர்ன்னு வருவாங்க! இப்ப பாருங்க அவங்கள எல்லாம் கோயில்ல அதிகம் பாக்க முடியல… இப்ப மூணு வருசமா… எல்லாரும் ஸ்ரீரங்கம் கோயில்ல இந்த மூணு நாள் நமக்கு இல்லன்னு முடிவு பண்ணிட்டாங்க. மூணு நாளும் போலீஸ்காரங்கதான் கன்ட்ரோல்னு தெரிஞ்சிக்கிட்டு சுத்திமுத்தி இருக்கற திவ்ய தேச கோயில்களுக்கு போயிடறாங்க…. காசு உள்ளவன் மட்டும் இங்க ராத்திரி உள்ள பூந்துக்கிறான்…
****
இப்படித்தாங்க… நேத்து ராத்திரி சுத்துப்பட்டு சனங்க எல்லாம் வந்தாங்க. அவங்கள ராத்திரி 11 மணி வரை நிக்க வெச்சி, கோயில்ல இனி நீங்க போக முடியாது… எல்லாம் ஃபுல். அப்டின்னு அனுப்பிட்டாங்க. ஆனா வழக்கமா காலங்காலமா அவங்கல்லாம்… அந்த மணல் வெளில தங்கியிருந்து, மத்யானம் போய் பரமபத வாசலையும் ரங்கநாதரையும் சேவிச்சுட்டு வருவாங்க… திடீர்னு 11 மணிக்கு மேல பாவம்… அவங்க என்ன செய்வாங்க? தங்குறதுக்கு இடமும் இல்லை. எங்கயும் ரூம், சத்திரம் எதுவும் இல்ல… இதுனாலயே பயங்கர கூட்டம்.. ரங்கா ரங்கா கோபுர வாசல்ல….
******
யாராயிருந்தா என்ன? எவரையும் விட முடியாது….ங்கிறான் அவன். ரெண்டு வருசம் முன்னே ஒரு கூத்து நடந்தது தெரியுமா? அப்போ கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் இருந்தாங்க. அவங்க வழக்கமா வர்ற மாதிரி சுடிதார்ல, வீட்டுக்காரர் புள்ளைங்கள கூட்டிட்டு வந்திருந்தாங்க. இங்க இருந்த ஒரு டிஎஸ்பி, அவங்களை ஓரமா நிக்கவெச்சிட்டார். அவங்க.. ஐயா நான் கலெக்டருங்க.. அப்டின்னார். எந்த மாவட்ட கலெக்டருங்க..? யாராயிருந்தா என்ன என்று பேசியிருக்கிறார். பின்னர் பின்னால் எங்கோ கூட்டத்தில் வந்து கொண்டிருந்த உதவியாளர் வந்து, சார் இவங்கதான் திருச்சி கலெக்டர் என்று சொன்ன பின்னர், ஸாரி கேட்டு ஒதுங்கியிருக்கிறார் அந்த வேற்று மாவட்ட டிஎஸ்பி.
அட நீங்க வேறங்க..இங்க ஜேஸியவும் நிக்க வெச்சாங்க… போன வருசம்!
– இப்படியாக பேச்சு காதில் விழுந்தது. இடம் : திருவரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் போற வழியில் வரிசையில் நின்னபோது… பக்தர்கள் கிட்டேயிருந்து!

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-2

காலை 6 மணிக்கு மேல்தான் பரமபத வாசல் செல்லும் இலவச தரிசன வரிசை அனுமதிக்கப்படும் என்று முந்திய தின இரவே போலீசாரால் சொல்லப்பட்டு விட்டதால், வழக்கமாக நாங்கள் செல்லும் வடக்கு வாசல் வழியாக நுழைந்தோம். தாயார் சந்நிதி முன்னுள்ள வடக்கு வாசல் பிரதான நுழைவுப் பகுதியில் கம்புகள் கட்டப்பட்டு, வழி அடைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் அதிகம் தென்பட்டார்கள். காலை சுமார் 7.30 அளவில் அங்கே திரண்டிருந்த பக்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் தற்போது டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்றிருக்கும் திருவாளர் கந்தசாமி.

சரி… வழக்கமான வாக்குவாதம்தானே! என்று கவனித்துக் கொண்டிருந்தேன். உள்ளூர் மாமிகள், வயதானவர்கள், பெரியவர்கள் என … அங்கே கூடியிருந்தார்கள். எல்லோரையும் ரங்கா ரங்கா வாசல் வழியாகத்தான் விடுவோம். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று அதட்டிக் கொண்டிருந்தார் திருவாளர் கந்தசாமி. ஆனால் அவர்களோ… ஐயா.. வழக்கமாக நாங்கள் செல்லும் வழி இது. நாங்கள் பெருமாள் முத்தங்கி சேவைக்கு செல்லவில்லை. ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போக வேண்டும். உற்ஸவரை ஸேவிக்க… இதற்காக நாங்கள் அந்த வாசலுக்குச் சென்று எப்படி திரும்பவும் இதே இடத்துக்கு வர முடியும் என்று கேட்டார்கள். கத்திக் கொண்டிருந்த கந்தசாமி, நீங்கள்லாம் மனுசங்கதானா? சொன்னா புரியாதா? உள்ளே கூட்டம் அதிகம் இருக்கு. எல்லாரையும் வெளியேத்திட்டுதான் உங்களை எல்லாம் விட முடியும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து … மனுசங்களா இருந்தா மண்டைல ஏறும் என்றார்…
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மண்டையில் ஜிவ் என்று ஏறியது!
பொதுவாக நான் போலீஸ்காரர்களை விரோதிகளாகப் பார்ப்பதில்லை. காவல்துறையினருக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணுபவன். ஆனால்… அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களை இப்படி ஆலயப் பணிக்கு அனுப்பி வைத்தால்.. இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று எண்ணும் படியாய்… மோசமான அணுகுமுறைகள்.
என் செல்போனில் இதை க்ளிக்கினேன். ஐயா டிஎஸ்பீயார் பார்த்துவிட்டார். ஓடி வந்து, என்ன வீடியோவா புடிக்கிற என்று செல்போனை பறித்துக் கொண்டார். எப்போதுமே என் அடையாளத்தை எங்கேயும் நான் சொல்லிக் கொள்வதோ, PRESS அடையாள அட்டையைக் காட்டுவதோ இல்லை. அதன் மூலமான சலுகையை எங்கும் எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால்… இப்போது இந்தக் கட்டாயச் சூழல் ஏற்பட்டதால், அடையாள அட்டையைக் காட்டினேன். அடுத்த நொடி செல்போனை கையில் கொடுத்தார். சார் உங்களால் முடிஞ்சத பாத்துக்குங்க என்றார். சிஎம் செல்லுக்கு வேணா அனுப்பறேன் என்று நான் புன்னகைத்தேன். அடுத்து அமைதியாக அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். சற்று நேரம் ஆனது. மக்களின் நெருக்கடியே வென்றது. அதே வழியில் அடைக்கப்பட்டிருந்த கட்டைகளை எடுத்து ஓரிருவராக வரிசையில் வரச் சொல்லி உள்ளே விட்டனர்.
நானும் வரிசையில் நின்று கொண்டேன். ஒரு கிறிஸ்துவ போலீஸ்கார அம்மணி, வயதான மாமிகளை விரட்டி, வரிசை வரிசை என்று கத்தினார். கூடவே, இப்படியே போங்க.. பெருமாள் கூட்டுட்டுப் போவார் என்று இளக்காரமாகப் பேசினார். என்னைப் பார்க்காததுபோல் முகத்தை திருப்பிக் கொண்டு… ஒழுங்கா சொன்னா கேக்க மாட்டீங்க.. சொன்னா வீடியோ எடுத்துக்கிட்டு வம்பு பண்ணுவீங்க.. போங்க போங்க போய்ச் சேருங்க என்றார்.
ஆமாம்…
இதே மனநிலையில்தான்…
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க
செயல்படும் டிஎஸ்பி கந்தசாமியின் பேச்சை
வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டேன்….
ஸ்ரீரங்கத்தில் உள்ளோர் போலீஸ் அராஜகம் ஒழிக என்றார்கள்!
நானோ … ஆலயங்களை விட்டு அரசை விரட்டுவோம் என்று சொல்லிக் கொண்டேன்.

இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் : சுப்பிரமணியசுவாமி

 
 
இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
 
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது : –
 
 
இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன..’ பாடலை தேர்தெடுப்பதா அல்லது ‘வந்தே மாதரம்’ பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில், அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949ம் ஆண்டு நவ., 26ம் தேதி, ஓட்டெடுப்பு நடத்தாமலேயே ‘ஜன கண மன..’ பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். அப்போது பிற்காலத்தில் பார்லி., உறுப்பினர்களிடம் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தி தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம் எனவும் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
 
மேலும் ‘ஜன கண மன’ பாடல் பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டது எனும் குற்றச்சாட்டு உள்ளதால், பாடலின் 95 சதவீதத்தை அப்படியே வைத்துக்கொண்டு மீதமுள்ள 5 சதவீதத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சேர்க்க வேண்டும். இது தொடர்பாக பார்லியில் ஒருமித்த கருத்தை எட்டுவதும் அவசியம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ கீதத்தில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளையும், தேசிய கீதத்தில் இணைத்து மாற்றம் செய்யலாம் என்று சுப்பிரமணியசுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளார் .
 
 
 

 

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-1

இந்த வருட வைகுண்ட ஏகாதசி தரிசனம்… மேலும் சில அனுபவங்களைத் தந்தது. 

முன்பெல்லாம்…. நள்ளிரவு நேரத்தில் ஆலயத்தின் உள்ளே செல்வோம். அமர்ந்து கொள்வோம். அதிகாலை பெருமாள் எழுந்தருளச் செய்யும் போது… சற்று அனுபவித்து… பரமபத வாசல் திறந்த பின்னர் காத்திருந்து… பின்னர் வெளிவருவோம். ஆயிரங்கால் மண்டபத்தில் பெருமாள் வீற்றிருப்பார். தரிசிப்போம்… நம்பெருமாள் திருமேனி அழகை அனுபவித்தபடி! திருப்பவள செவ்வாயின் இரு புறமும் பள்ளம் விழ, பெருமாள் உதடு குவித்து சிரிப்பது போலே வாவென்று அழைப்பார். பேசும் பெருமாள்தான்!
எதிரே மற்றும் அடுத்து உள்ள மணல் வெளியில் பக்தர்கள் இரவு நேரத்தில் ஆற அமர ஓய்வு எடுத்து பின்னர் செல்வார்கள். எல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் அரங்கனின் அசையாத பக்தர் குழாங்கள். இப்போது அந்த அப்பாவி முகங்களை அதிகம் பார்க்க முடியவில்லை! பேசும் பெருமாள் முன்னும் சற்றும் நிற்க முடிவதில்லை!
***
வைகையில் இருந்து இறங்கி, ஞாயிறு நேற்று மாலை திருவரங்க நகருக்குள் நுழையும்போதே… போலீஸ் கெடுபிடி இருப்பதை உணர்ந்தேன்! நண்பர் விஜயராகவன் கிருஷ்ணனை அழைத்தேன். தெற்கு கோபுரம் வந்து வண்டியில் அழைத்துச் சென்றார். பஜ்ஜி காபி உபசாரம் வேறு! பேசிக் கொண்டிருந்துவிட்டு, இருவரும் அரங்கன் ஆலயத்துக்குள் சென்றோம். வெளியில் இருந்த கெடுபிடியும் கூட்டமும் உள்ளே இல்லை என்பதை உணர வெகு நேரம் பிடிக்கவில்லை! மோஹினி அலங்கார தரிசனத்தை கண்குளிரக் கண்டு, ஆசார்ய சுவாமிகளுக்கு பரிவட்டம், மாலை சாற்றியும், ஆழ்வார்களுக்கு அரங்கன் கொடுக்கும் மரியாதையும் கண்டு திருப்தியுற்றவனாய் வெளியில் வந்தேன்.
***
உள்ளே கூட்டம்… பயங்கர கூட்டம்… போகாதீங்க! இருங்க ! காலைல வாங்க! இப்போ ரூ. 3 ஆயிரம் டிக்கெட் வாங்கினவங்க மட்டுமே உள்ளே போலாம்.. இலவச தரிசனம்லாம் காலை 6 மணிக்கு மேல்தான். கோயிலில் கூட்டம் நிறைஞ்சாச்சு… இனிமே உள்ளே போக வழியில்லை என்றெல்லாம் போலீஸார் சொல்லிக் கொண்டும், மக்களை உள்ளேயே விடாமல் செய்து கொண்டும் இருந்தார்கள்.
இத்தனைக்கும் கோயில் பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீஸார். கோயிலுக்கு உள்ளேயே 2,500க்கும் மேற்பட்ட போலீஸார். ஆனால், உள்ளே பக்தர் கூட்டமே வழக்கமான கூட்டத்தில் 3ல் 2 பங்குதான்! ஏன் இவ்வளவு போலீசார் என்று விசாரித்தால்… ஏதோ வெடி குண்டு மிரட்டலாம்… 3 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு என்று அனுமதித்து, மிரட்டல் காரணத்தால் கூடுதலாக ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு அமர்த்தப் பட்டார்களாம்…
எங்கு நோக்கினும் காக்கிச் சட்டைகளே தெரிந்தார்கள் – கோயில் என்பதால் இருக்க்க வேண்டிய காவித் துண்டுகளுக்கு பதிலாக! ‘
***
உள்ளூர் மக்கள் பெரும்பாலும் கோயிலுக்கு உள்ளே செல்வதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்கள். நாங்கள் நாளை அல்லது ராப்பத்து நாளில் போய் பார்த்துக் கொள்கிறோம் என்று ஒதுங்கியிருந்தார்கள். நண்பர்கள் ஓரிருவரை உடன் அழைத்தேன். மறுதலித்தார்கள். சரி என்று, இரவு தங்கிக் கொள்ள சிற்றப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டேன்!

தமிழக அரசு தலைமை செயலாளராக சகாயம் ஐ.ஏ.எஸ் நியமனம் ?

 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர். “எங்களின் முதல்வர் சகாயம்” என்ற கோஷத்துடன் இளைய தலைமுறையினர் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னையில் எழுச்சிப் பேரணி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அரசியல் கட்சியினரும் அரசியல் ஆதாயம் பெறும் நோக்குடன் சகாயம் ஐ.ஏ.எஸ்-ன் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக அரசு தலைமை செயலாளராக சகாயம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்படுவார் எனும் தோற்றத்தை இன்றைய இளைய தலைமுறையினர் மனதில் உருவாக்கி அவர்களின் ஆதரவையும் பெற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தை மையமாக வைத்து ஒரு முயற்சியிலும் தேமுதிக-வினர் செயல்பட்டு வருகின்றனர்.
 
தேமுதிக-வினர் நேர்மையான ஆட்சி எனும் தலைப்பில் ..
விஜயகாந்த் புகைப்படத்தை போட்டு முதல்வர் என்றும் சகாயம் ஐ.ஏ.எஸ். புகைப்படத்தை போட்டு தலைமை செயலாளர் என்றும் பதிவிட்டு அதனை ஒரே புகைப்படமாக உருவாக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக பரவ விட்டுள்ளனர்.
images india 12404372 547216932121801 587985576 n - 2026
 
அந்த புகைப்படத்துடன் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
முதல்வர் கேப்டன் விஜயகாந்த்
தலைமை செயலாளர் சகாயம் IAS
 
இது சாத்தியா? என்றால் இதுதான் சாத்தியம் என்றே தோன்றுகிறது, காரணம் ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை அழிப்பேன் என நாம் எதிர்பார்க்கும் அரசியலை தருவேன் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…
 
லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்று நாம் எதிர்பார்க்கும் அதிகாரியாக திகழ்கிறார் சகாயம் IAS
 
ஒவ்வொரு தனி மனிதனும் சுய வேலை வாய்ப்பின் மூலம் தன் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் சுயதொழில் உபகரணங்களை மாவட்டம்தோறும் மக்கள் பணி என்ற கோஷத்துடன் கொடுத்து நல்ல அரசியல் தலைவராக திகழ்கிறார்…
 
மாவட்ட ஆட்சி தலைவராக உழவர் உணவகம் மூலம் ஏர் ஓட்டும் விவசாயிகளை கார் ஓட்ட செய்து சிறந்த அரசு ஊழியராக திகழ்கிறார்…
 
எதிர்க்கட்சி தலைவராய் அரசின் அத்துமீறல்களை, அலட்சியங்களை தட்டிக் கேட்டதால் பல அவதூறு வழக்குகளை சந்தித்து நீதிமன்றங்களில் உண்மையை நிலைநாட்டினார்…
 
தனது கடமையை செய்யக் கூட நீதிமன்றங்களின் தயவை நாட வேண்டியுள்ளது…
 
சரி, விஜயகாந்த் முதல்வர் என்றால் சகாயம்தான் தலைமை செயலாளர் என்பதற்கு என்ன உறுதி?
 
விஜயகாந்த் அவர்களின் வார்த்தை வெளிப்பாடுகளில் தெளிவு சிதறினாலும் அவர் கூறும் கருத்துக்கள் சிந்திக்கக் கூடியதாக, நல்ல நிர்வாகத்திற்கு அடையாளமாக இருப்பதை நாம் புறந்தள்ள முடியாது,
 
செப்டம்பர் 27ம் நாள் தனது முகநூலில் திரு. விஜயகாந்த் அவர்கள் DMDK will support the honest officials for ever என்று குறிப்பிட்டுள்ளதோடு அல்லாமல் 2016ல் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தில் ஊழலற்ற நேர்மையான அதிகாரிகளை இனம் கண்டு துணையாக இருப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்…
 
பொதுவாக விஜயகாந்த் எவரையும் குறையோ பாராட்டோ எளிதில் வெளிக் காட்டுவதில்லை. ஆனால் திரு. சகாயம் அவர்களை பாராட்டியதோடு தனது இயக்கம் துணை நிற்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்…
 
எனவே இல்லாத அரசியல்வாதி சகாயத்தை பூதக்கண்ணாடி போட்டு தேடுவதைவிட, இருக்கின்ற நல்ல தலைவரான விஜயகாந்த் அவர்களை தேர்ந்தெடுத்து நாட்டினை சீர்செய்வோம்…
 
மக்கள் விரும்புகின்ற நேர்மையான அரசியலுக்கு, வெளிப்படையான நிர்வாகத்திற்கு…
 
முதல்வர் விஜயகாந்த்..
தலைமை செயலாளர் சகாயம்…
 
மக்களின் எண்ணமாக, இளைஞர்களின் கோஷமாக மாறவேண்டும்…
 
விஜயகாந்த் அவர்களை தேர்ந்தெடுத்து “தெறி”க்கவிடுவோம்…
 
எனக் கூறி தகவலை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர் தேமுதிக-வினர்.

சாராயம் ஒரு போதை வஸ்து அல்ல: சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

 

சாராயம் ஒரு போதை வஸ்து அல்ல என்றே நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார் பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் சுர்ஜித் குமார் ஜ்யானி.

சாரயத்தை ஒரு போதை வஸ்துவாகக் கருதவில்லை, ஆல்கஹாலை போதைப்பொருள் என்று கூறமுடியாது, இதை ராணுவத்தினரும், பார்ட்டிகளிலும் கொண்டாட்டடங்களிலும் உட்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார் அவர்.

சாராயம் தயாரிப்பதற்கு அரசு தயாரிப்பாளருக்கான உரிமத்தை வழங்குகிறது. நாம் ஏலத்தை நடத்துகிறோம். இவ்வாறு பார்க்கும்போது, சாராயத்தை போதைப்பொருள் கூறக்கூடாது என்று ஜ்யானி செய்தியாளர்களிடம் கூறினார். பாதல் தொகுதியில், போதையால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியிருந்தார்.

பஞ்சாப், மதுவுக்கு அடிமையான மாநிலமாக பெரும் பிரச்னைகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்த தனது விமர்சன சர்ச்சைக்கு இளங்கோவன் வருத்தம்

சென்னை:
பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையோ அல்லது கரகாட்டம் ஆடுகிற கலைஞர் பெருமக்களையோ புண்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கமல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜக வின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற தமிழிசை சவுந்தரராஜன் எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும், சோனியா காந்தி மீதும் பழிபோட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மத்திய பாஜக அரசு மீது விமர்சிக்கின்ற போதெல்லாம் அதற்குரிய பதிலை சொல்லாமல் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவது குறித்து பலமுறை விமர்சனம் செய்திருக்கிறோம்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப ஒருவர் கூறுவதைப் போல ஒரே மாதிரியாக நடன அசைவுகளைக் கொண்டு திரும்பத் திரும்ப ஆடுகிற கரகாட்டக்காரர்கள், பொய்கால் குதிரை ஆட்டக்காரர்களைப் போல தமிழிசை சவுந்தரராஜனுடைய கருத்து ஒரே மாதிரியாக இருப்பதாக மேற்கோள் காட்டி பேசினேன்.

அந்த அடிப்படையில் தான் அந்த ஒப்பீடு இருந்ததே தவிர, சகோதரி தமிழிசை சவுந்தரராஜனையோ அல்லது அத்தகைய ஆட்டத்தை ஆடுகிற கலைஞர் பெருமக்களையோ புண்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கமல்ல.

தனிப்பட்ட முறையில் தமிழிசை சவுந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததோடு, அவர்மீது அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கிறேன். நான் பேசிய ஒப்பீட்டை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் அவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

குடியரசு தினத்தில் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி

புது தில்லி:

வரும் 2016 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள 18 லட்சம் போலீஸாருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தது:

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரும் குடியரசு தினத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து போலீஸாருக்கும் எஸ் எம் எஸ் மூலம் வாழ்த்து தெரிவிக்க, விருப்பம் தெரிவித்தார். அதனை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரையிலான அனைவரின் செல்பேசி எண்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பிரதமர் ஒருவர், நாட்டில் உள்ள அனைத்து போலீஸாரையும் தொடர்பு கொள்வது இதுவே முதல்முறை. மேலும், காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தினமும் யோகாசனப் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், தேவை ஏற்பட்டால் காவல் நிலையங்களில் யோகா பயிற்சியாளர்களை அமர்த்துமாறு யோசனை தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு போலீஸார் தயக்கம் காட்டக் கூடாது என்று கூறிய மோடி, காவல்துறை பற்றிய தவறான எண்ணம் விலகும் விதத்தில், பத்திரிகையாளர்களுடன் போலீஸார் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் பதவி- எங்கள் நிலையில் மாற்றம் இல்லை: தினமணி செய்தி தவறானது என பாமக விளக்கம்

 

முதல்வர் பதவி விவகாரத்தில், எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ள பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமணி செய்தி தவறானது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

இன்றைய தினமணி நாளிதழின் அரசியல் அரங்கம் பகுதியில் ‘பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’ என்ற தலைப்பில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. அந்த நேர்காணலில் ‘‘உங்களை மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும்?’’ என்று என்னிடம் வினா எழுப்பப்பட்டதாகவும், அதற்கு,‘‘கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்!’’ என்று நான் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நான் தில்லியில் இருந்த போது தினமணி நாளிதழின் செய்தியாளர் என்னை சந்தித்து நேர்கண்டார். அப்போது முதலமைச்சர் வேட்பாளர் குறித்த வினாவுக்கு விடையளிக்கும் போது,‘‘ இரு விஷயங்களில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள தயாராக இல்லை. முதலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. இரண்டாவதாக முதலமைச்சர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கனவே அறிவித்து, கடந்த 10 மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நிலையில், அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. அதேநேரத்தில் துணை முதலமைச்சர் பதவி, கூட்டணி ஆட்சி ஆகியவற்றுக்கு பா.ம.க. தயாராக இருக்கிறது. இதுபற்றியெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’’ என்று தான் நான் குறிப்பிட்டேன்.

‘‘பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையையும், மருத்துவர் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா பலமுறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இது தான் பா.ம.க.வின் உறுதியான நிலைப்பாடு. இதில் எவ்வித மாற்றத்திற்கும், சமரசத்திற்கும் இடமில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
– என்று அதில் கூறியுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: வாணியம்பாடி அருகே பரிதாபம்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரி கிராமத்தில் வசித்த தம்பதி சேகர் (45), விஜயலட்சுமி (39). இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள். ஸ்ரீவித்யா (22), பிரவீனா (20), நிவேதா (17), வனிதா (15).

இவர்களில் முதல் இரண்டு பெண்களான ஸ்ரீவித்யா மற்றும் பிரவீனா காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் அடுத்திருந்த நிவேதா மற்றும் வனிதா காதல் திருமணம் செய்துகொண்டால் குடும்ப மானம் போய்விடும் என்று எண்ணி நிவேதா மற்றும் வனிதாவை கை, கால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, தம்பதியினரான சேகர், விஜயலட்சுமி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.