Home Blog Page 5901

ரூ.50 லட்சத்துடன் மாயமான ஏடிஎம்

 வேன் ஊழியர்
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் ஏடிஎம் பணத்தைக் கொண்டு சென்று நிரப்புகின்ற வேனின் ஊழியர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை எடுத்துக் கொண்டு மாயமானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம்: விகடன் குழுமத்துக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை:

திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது, தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என்று விகடன் குழும தலைவர் பா.சீனிவாசனுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஏற்கெனவே, விகடன் நிறுவனத்தை திமுக வாங்கிவிட்டது, கையகப் படுத்தி விட்டது, பங்குகளை வாங்கியிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரப்பப் பட்டு வரும் நிலையில், இத்தகைய அறிவுரைக் கடிதத்தை ராமதாஸ் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதம்:

அன்புள்ள திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கு…
வணக்கம்!

விகடனின் அடையாளமாய் வாழ்ந்து மறைந்த தங்களின் தந்தை எஸ். பாலசுப்ரமணியனின் முதல் நினைவு நாளையொட்டி ஜூனியர் விகடன் இதழில், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் எழுதியிருந்த ‘ஞானத் தகப்பன்’ என்ற தலைப்பிலான நினைவாஞ்சலிக் கட்டுரையைப் படித்தேன். அமரர் எஸ். பாலசுப்ரமணியன் மீதான எனது மரியாதை மேலும் அதிகரித்தது.

‘பாலு’ என் இனிய நண்பர். படப்பையில் உள்ள அவரது பறவைப் பண்ணைக்கு என்னை அழைத்துச் சென்று பல வகையான பறவைகளை காட்டியதுடன், அவற்றின் சிறப்புகளையும் விளக்கியிருக்கிறார். பழகுவதற்கு மென்மையானவரான அவர், ஊடக ஆசிரியர் என்ற முறையில் துணிவின் சிகரமாக திகழ்ந்தார். வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக கூறிக் கொண்டவர்களையெல்லாம் தரைமட்டத்திற்கு சரித்த துணிவுக்கு சொந்தக்காரரான ‘பாலு’வால் உருவாக்கப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட ஜூனியர் விகடன் இதழ் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அடக்குமுறைக்கு அஞ்சியதில்லை. கடந்த நான்கரை ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த அவலங்கள், ஊழல்கள் பற்றிய உண்மைகளை தைரியமாக மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த பெருமை விகடனுக்கு உண்டு. இதை நானே பல தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்; பாராட்டியும் இருக்கிறேன்.

ஆட்சியின் தவறுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவதுடன் முடிந்து போவதில்லை மக்கள் நலன் விரும்பும் ஒரு பத்திரிகையின் பணி. தவறுகளும், ஊழல்களும் நடக்காத நல்லாட்சியை எந்தக் கட்சித் தரும் என்பதை அடையாளம் காட்டுவதும் ஒரு நல்ல நான்காவது தூணின் பணி தான். விகடன் குழுமம் அதன் கடமையில் முதல் பாதியை சிறப்பாக செய்யும் அதேவேளையில் இரண்டாவது பாதியை அதன் மனசாட்சிப்படி கூட சரியாக செய்யவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

ஒரு காட்டில் ஆபத்தான இரு பள்ளங்களும், பாதுகாப்பாக வாழ்வதற்காக ஓர் இல்லமும் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பள்ளத்தில் விழுந்த அப்பகுதி மக்களால் இன்னும் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. ஒரு பள்ளத்தில் இருந்து மீண்டு வரும் மக்கள், அருகில் உள்ள இன்னொரு பள்ளத்தில் வீழ்வதும், அந்தப் பள்ளத்திலிருந்து ஐந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு மீண்டு, பின்னர் அடுத்த பள்ளத்தில் வீழ்வதும் வாடிக்கையாகி விட்டது. 50 ஆண்டுகளாக அனுபவித்தது போதும், இந்த முறையாக மீண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் ஏங்குகின்றனர். அந்த இடத்தில் இருக்கும் வழிகாட்டி தான், அங்குள்ள இரு பள்ளங்களைத் தாண்டி பாதுகாப்பான ஒரு இல்லம் இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும். ஆனால், பாதுகாப்பான இல்லத்துக்கு செல்லும் பாதையை வழிகாட்டியே மறைத்து, தஞ்சம் தேடும் மக்களை மாற்றி மாற்றி குழிக்குள் தள்ள துடிக்கிறாரோ? என்ற ஐயம் சில காலங்களாகவே எனக்குள் உருவெடுத்திருக்கிறது. இதில் வரும் மக்கள் தான் தமிழக மக்கள் என்பதும், இரு பள்ளங்களும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சி என்பதும், பாதுகாப்பான இல்லம் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்பதும், இவற்றுக்கெல்லாம் மேலான வழிகாட்டியாக செயல்படுவது ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் தான் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை நான் உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிலும் குறிப்பாக, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கடந்த நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் ஜூனியர் விகடன் வெளியிட்ட 4 கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது எனது ஐயம் அதிகரித்திருக்கிறது. ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சி ஆட்சி எனும் துயரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சி தான் தொடர வேண்டும் என்று 57.19% மக்கள் விரும்புவதாகக் கூறி ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டு, தமிழக மக்கள் தீய சக்திகளாக கருதும் இரு திராவிடக் கட்சிகளையும் தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள்.

இன்னொரு கருத்துக் கணிப்பில், தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்ற வினாவை முன்வைத்திருந்தீர்கள். அதில் கலைஞருக்கு ஆதரவாக 41.70% பேரும், விஜயகாந்துக்கு ஆதரவாக 13.81% பேரும், வைகோவுக்கு ஆதரவாக 13.43% பேரும், எனக்கு ஆதரவாக 6.58% பேரும், இளங்கோவனுக்கு ஆதரவாக 3.96% பேரும், மற்றவர்களுக்கு ஆதரவாக 20.52% பேரும் வாக்களித்திருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். மூன்றாவதாக அடுத்த வாரிசு யார்? என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பு. உட்கட்சி அமைப்பில் நடத்தப்பட வேண்டிய வாக்கெடுப்பை பொது வெளியில் நீங்களே நடத்தி, கலைஞர் முதலமைச்சர் வேட்பாளராகக் கூடாது; ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ஒரு கருத்தை திட்டமிட்டு உருவாக்கினீர்கள்.

கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க.வுக்கு இன்னும் 3% வாக்குகள் மட்டுமே தேவைப்படுவதாகவும், மற்ற கட்சிகளுக்கு குறிப்பிடும்படியாக செல்வாக்கு இல்லை என்று பொருள்படும்படியாகவும் ஒரு கணிப்பை ஜூனியர் விகடன் திணித்திருந்தது. நடுநிலை இதழ் என்று கூறிக்கொள்ளும் விகடன் குழுமம் தி.மு.க.வை இவ்வளவு வெளிப்படையாக ஆதரிக்கும் என்றோ, முரசொலியே கூச்சப்படும் அளவுக்கு கருத்துக்கணிப்புகளை வெளியிடும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி, அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மற்ற கட்சிகள் வளரவே கூடாது என்ற தி.மு.க.வின் விருப்பத்திற்கு உரம் போடும் வேலையையும் விகடன் குழுமம் சிறப்பாக செய்கிறது.

இந்த கணிப்புகள் எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்பதை கடந்த காலங்களில் விகடன் குழுமம் வெளியிட்ட சில புள்ளி விவரங்களில் இருந்தே விளக்க விரும்புகிறேன். கடந்த ஏப்ரம் மாதத்தில் விகடன் டாட் காம் வாசகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் 48% வாக்குகளுடன் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப் பட்டிருந்தது. கலைஞர் 42% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், 10% வாக்குகளுடன் விஜயகாந்த் மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக விகடன் டாட் காம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில்,‘‘மீத்தேன் திட்ட பிரச்னை, தேனி நியூட்ரினோ ஆய்வு திட்ட எதிர்ப்பு, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிரான குரல்கள், தமிழக மின்வாரியத்தில் நடைபெறுவதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள், உடன்குடி மின் திட்டம் ரத்தான பிரச்னை என எந்த பிரச்னையாக இருந்தாலும், முதல் அறிக்கை ராமதாஸிடமிருந்துதான் வருகிறது. அதிலும் மின்வாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த பாமக, அடுத்ததாக தமிழக அரசு இணைய தளங்களில் ஜெயலலிதா இன்னமும் முதல்வராகவே சித்தரிக்கப்பட்டு, அவரது புகைப்படம் இருப்பதையும், தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், நிதி நிலையின் அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும், சொல்லும் ‘அம்மா’வின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டி, பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கு மாறாக நடந்து கொண்டதாக கூறி அதிமுக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒரு மனுவை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பி உள்ளது. தற்போது உடன்குடி மின் திட்டம் ரத்தான பிரச்னையையும் பாமக தீவிரமாக எடுத்துக்கொண்டு கொடுக்கும் குடைச்சல்தான் அ.தி.மு.க. அரசுக்கு தீரா தலைவலியாக உருவெடுத்துள்ளது’’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்தது.

அதே கட்டுரையில்,‘‘திமுக தலைவர் கருணாநிதியும் இத்தகைய பிரச்னைகளை கையில் எடுத்தாலும், கடந்த காலங்களை போன்று முதல் குரலாக வரவில்லை. போராட்டக்களத்திலும் முன்னணியில் இல்லை. அதிலும் மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்பதால், இந்த பிரச்னையில் திமுகவின் எதிர்ப்பு சுரத்தில்லாமல் போனது மட்டுமல்லாது, ‘உங்கள் ஆட்சி காலத்தில்தானே ஒப்புதல் அளித்தீர்கள்’ என்று எதிர்ப்பு, அக்கட்சிக்கு எதிராகவே பூமராங்காக திரும்பியது’’ என்று கூறப்பட்டிருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஒரு எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்படவில்லை என்று விகடன் குழுமத்தால் விமர்சிக்கப்பட்டிருந்த கலைஞர் இப்போது சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகியிருப்பதும், சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக பாராட்டப்பட்ட நான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் எப்படி? என்பது உங்களின் ஆசிரியர் குழு மட்டுமே அறிந்த இரகசியம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் லயோலா கல்லூரி சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தி.மு.க.வுக்கு சாதகமாக, குறிப்பாக மு.க. ஸ்டாலினை முன்னிலைப் படுத்தும் வகையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமின்றி, பா.ம.க.வின் வலிமை குறைத்து காட்டப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அது ஸ்டாலினுக்காக அவரது ஆதரவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு என்பது அம்பலமானது. பா.ம.க.வுக்கு சாதகமான பல அம்சங்களை நாங்கள் வெளியிடாமல் மறைத்து விட்டோம் என்பதை கருத்துக்கணிப்பை நடத்திய பேராசிரியர் இராஜநாயகம் ஒப்புக்கொண்டார். இப்போது விகடன் வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அப்படிப்பட்ட ஒன்றே என்று பலரும் பேசுகின்றனர்.

விகடன் நடுநிலை தவறாத இதழ் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், நடுநிலை என்பது அ.தி.மு.க.வுக்கு ஒரு செய்தி போட்டால் தி.மு.க.வுக்கு ஒரு செய்தி போட வேண்டும் என்பது அல்ல. எத்தனை செய்தி போட்டாலும் அது மக்களுக்கு நலன் பயப்பதாக இருக்க வேண்டும் என்பது தான் நடுநிலை ஆகும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பெரும் சீரழிவை சந்தித்து வரும் நிலையில், அதற்கு மாற்று தி.மு.க. தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது நடுநிலை அல்ல. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி செய்த போது தமிழகம் எத்தகைய சீரழிவுகளை சந்தித்தது என்பதையும் ஆய்வு செய்து, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் செழிக்கும் என்பதை ஒவ்வொரு கட்சியும் முன்வைத்துள்ள செயல்திட்டம் மற்றும் அவற்றின் கொள்கை அடிப்படையில் தீர்மானித்து மக்களிடம் முன் வைப்பது தான் நடுநிலை ஆகும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட விகடன் போன்ற ஊடகங்கள் இதைத்தான் முதல் கடமையாக கருத வேண்டும்.

அ.தி.மு.க. அரசின் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க.வுக்கே வலிக்காத அளவுக்கு உங்கள் விமர்சனம் அமைந்திருந்தது. 1991&96 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு புலனாய்வுக் கட்டுரை வெளியாகும். செல்வாக்கு மிக்க ‘சக்தி’ சென்னையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மாற்றார் சொத்துக்களை மிரட்டி வளைத்தது குறித்து ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவரும். அப்போது அ.தி.மு.க.வின் ஊழல்களை அம்பலப் படுத்தி ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கியதில் விகடனுக்கு பெரும்பங்கு உண்டு. இவையெல்லாம் எனது நண்பர் ‘பாலு’வின் இதழியல் துணிச்சலுக்கு உதாரணம். அப்போது விகடன் குழும இதழ்களுக்கு அவர் தான் ஆசிரியராக இருந்தார். 1991-96 காலத்தை விட 2001-06 காலத்தில் அ.தி.மு.க.வின் ஊழல்கள் 10 மடங்கு அதிகரித்தது. 2011-16 காலத்தில் 100 மடங்கு அதிகரித்தது. ஆனால், 1991-96 காலத்தில் 100% ஆக அ.தி.மு.க. ஊழல்கள் குறித்த விகடனின் விமர்சனம் 2001-06 காலத்தில் 10% ஆகவும், 2011-16 காலத்தில் 1% விழுக்காடாகவும் குறைந்து விட்டது.

இன்னொரு புறம் தி.மு.க. புனிதமான கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜூனியர் விகடன் குழுமம் ஈடுபட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தி.மு.க. மிக மோசமான ஆட்சியைத் தான் வழங்கியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு… இல்லை…இல்லை மறைத்து விட்டு அக்கட்சியை விகடன் வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலைக்கு விகடன் குழுமம் தள்ளப்பட்டது ஏன்? தி.மு.க. தமிழகத்தின் ஆகச்சிறந்த நல்ல கட்சியாக மாறி விட்டதா? தி.மு.க. இதுவரை எந்த ஊழலையும் செய்யவில்லையா? தி.மு.க. அரசு மீதான 28 குற்றச்சாற்றுக்கள் குறித்து விசாரணை நடத்திய சர்க்காரியா கமிஷன்,‘‘விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் தி.மு.க. கைதேர்ந்தது என சான்று அளித்ததே?’’ மறந்து விட்டதா?

உலகின் மிகப்பெரிய ஊழலாக கருதப்படும் 2-ஜி ஊழலின் சூத்திரதாரி தி.மு.க.வும், தி.மு.க. தலைவரின் குடும்பமும் தானே. 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.இராசா 469 நாட்களும், கலைஞரின் மகள் கனிமொழி 193 நாட்களும் பிணை கூட கிடைக்காமல் தில்லி திகார் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்களே?

முந்தைய தி.மு.க. அரசின் அமைச்சர்களாக இருந்தவர்களில் 16 பேர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்களே?

இவை அனைத்திலும் இருந்து தி.மு.க. புனிதம் பெற்று விட்டதால் அக்கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு காரணம் யார்? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தானே? ஏரிகளையும், நீர்வழிப் பாதைகளையும் இரு கட்சியினரும் ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவாகத் தானே மழை நீர் ஓட வழியில்லாமல் சென்னையை சூழ்ந்தது.

50 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த அனைத்து சீரழிவுகளையும் தொடங்கி வைத்ததுடன், முதன்மை பங்குதாரராகவும் திகழ்ந்தது தி.மு.க. தானே? அதை மறுக்க முடியுமா? இத்தனை உண்மைகளையும் உணர்ந்திருந்தும் முரசொலியை விட அதிகமாக தி.மு.க. புராணம் பாடுகிறீர்களே? விகடன் இதழ்களில் விகடன் தாத்தா படத்திற்கு பதிலாக கலைஞரின் படத்தை போடாதது மட்டும் தான் பாக்கி. அந்த அளவுக்கு விகடன் குழுமத்தை தி.மு.க.வின் குடும்ப இதழ்களாக மாற்றி விட்டீர்களே…இது சரியா?

அ.தி.மு.க. ஊழல் பெருங்கடல் என்றால், ஊழலில் ஊற்றுக்கண் தி.மு.க. ஆகும். கலைஞர் என்பவர் வேட்டி கட்டிய ஜெயலலிதா. ஜெயலலிதா என்பவர் சேலை கட்டிய கலைஞர். அவ்வாறு இருக்கும் போது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டிய கட்சிகள். அவ்வாறு இருக்கும்போது விகடன் குழுமம் தி.மு.க.வுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பது தமிழகத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஒருபுறம் தி.மு.க.வை உயர்த்திப் பிடிக்கும் நிலையில், இன்னொருபுறம் பாட்டாளி மக்கள் கட்சியை இருட்டடிப்பு செய்கிறீர்கள். தமிழகத்தின் நலனுக்காக எவ்வளவோ பணிகளை பா.ம.க. செய்தாலும் அவை மக்களிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் கலைஞரை விட நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததைத் தவிர பாட்டாளி மக்கள் கட்சி எந்த தவறையும் செய்யவில்லை. அதேநேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அந்த கட்சியின் தவறுகளை தட்டிக்கேட்கத் தயங்கியதில்லை. 1991 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க. தான். பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 8 மாதங்களில் 7 மண்டல மாநாடுகளை வெகு சிறப்பாக நடத்தியிருக்கிறோம். பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழகம் முழுவதும் பலமுறை பயணம் மேற்கொண்டு கோடிக்கணக்கான மக்களை சந்தித்திருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்கள் பா.ம.க.வில் தாமாக முன்வந்து இணைந்திருக்கின்றனர். மதுவிலக்கு உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைக்காகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக படித்தவரை அறிவித்திருக்கிறோம். அவர் இளைஞர். மத்திய அமைச்சராக இருந்த போது உலகமே வியக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். அவரது முயற்சியில் தயாரித்து வெளியிடப்பட்ட வரைவுத் தேர்தல் அறிக்கையில் தமிழகம் எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வலிமையான தீர்வுகளை முன்வைத்திருக்கிறோம். ஓர் ஊடகமாக இவற்றையெல்லாம் தமிழக மக்களிடம் விகடன் கொண்டு சென்றிருந்தால் மக்கள் நலனில் அது கொண்டிருக்கும் அக்கறையை புரிந்து கொள்ள முடியும். ஆனால், அப்படி செய்ய விகடன் குழுமம் தவறிவிட்டது. இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் பா.ம.க.வை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்படி நான் கோரவில்லை. மாறாக அனைத்து கட்சிகளின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தான் கோருகிறேன். ‘பாலு’ அவர்கள் இருந்திருந்தால் இதைத் தான் செய்திருப்பார்.

மறைந்த ‘பாலு’ அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்ட நாளில் இருந்தாவது தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்று அரசை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்கும்படி கோருகிறேன்.

அதைவிடுத்து தி.மு.க.வின் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றும் கருவியாக விகடன் குழுமத்தை மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விகடனை வளர்த்தெடுத்த ‘பாலு’ பறவைகள் மீது பற்று கொண்டவர். அதன்காரணமாக பறவைப் பண்ணை அமைத்து அவற்றுடன் காலத்தை கழித்தவர். பறவைகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அவற்றை அவர் அடைத்து வைத்ததில்லை. அப்படிப்பட்டவர் தனது குழந்தையைப் போல வளர்த்தெடுத்த ஊடகங்கள், தமிழகத்தை சிதைத்த, சீரழித்த ஒரு கட்சியின் பிடியில் அடைபட்டு கிடப்பதை விரும்பமாட்டார்.

– என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பன்னாட்டு வல்லுநர் குழு விசாரணை?

சென்னை:

சென்னை வெள்ளத்துக்கு ஏரி திறப்பு தான் காரணம்:மத்திய அரசு – அப்படியென்றால் இதுகுறித்து பன்னாட்டு வல்லுனர்குழு விசாரணைக்கு ஆணையிட தயக்கம் ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது டிவிட்டர் பதிவு:

தமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் மாணவர் தற்கொலையைத் தடுப்பதற்கான திட்டங்கள் தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட அவரது அறிக்கை:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது தான் அந்த செய்தி ஆகும். அது அதிர்ச்சி மட்டுமல்ல, கவலையும் அளிக்கும் செய்தியாகும்.

2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 8068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1191 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த 853 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டில் 866 மாணவர்களும், 2012 ஆம் ஆண்டில் 795 மாணவர்களும், 2011 ஆம் ஆண்டில் 849 மாணவர்களும் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் மாணவர்கள் தற்கொலை அதிக அளவில் நடந்திருப்பதை அறிய முடிகிறது.
மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களில் முதலிடம் பிடித்திருப்பது ‘தேர்வில் தோல்வி’ ஆகும். 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 853 பேரில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 247 பேர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கிராமப்புற மாணவர்கள் ஆவர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பெரிய நகரங்களில் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 29 மட்டுமே. மீதமுள்ள மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டின் மோசமான கல்வி முறையும், குழந்தைகளின் குறைகளை கேட்க முடியாத, ஆனால் குழந்தைகள் மிக அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோரும் தான் இத்தனை தற்கொலைகளுக்கும் காரணம் ஆவர். கல்வி என்பது வாழ்வதற்கான பல்வேறு தேவைகளில் ஒன்று என்பதை மறைத்து, தேர்வில் தோல்வியடைந்து விட்டால் வாழ்க்கையே போய்விடும் என்ற அர்த்தமற்ற எச்சரிக்கை சிறுவயதில் இருந்தே மாணவர்களின், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மனதில் விதைக்கப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் இனி வாழ்ந்து எதை சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தியில் தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

இன்னொருபுறம் மாணவர்களின் மன அழுத்தம் அவர்களை மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், தமிழக பாடத்திட்டம் மனப்பாடத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது; சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக இல்லை. சிந்தனையைத் தூண்டும் கல்வியாக இருந்தால் அது சுகமான அனுபவத்தைக் கொடுக்கும்; சிந்தனையின் போக்கில் பல புதிய விஷயங்களைப் படிக்கத் தூண்டும். ஆனால், மனப்பாட கல்வி முறையால் பள்ளியிலும், பள்ளி முடிந்த பின் வீட்டிலும் எந்த நேரத்திலும் புரியாத, பிடிக்காத பாடத்தை படிக்க வேண்டியிருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தத்திற்கு பெற்றோரிடம் வடிகால் தேட மாணவர்கள் முயலும் போது, அதை பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. இதனால் நம்பிக்கை இழக்கும் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மாணவர்களைப் போலவே வேலையில்லாதோரும் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்தவர்களில் 1730 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1509 பேரும், 2012 ஆம் ஆண்டில் 1938 பேரும், 2011 ஆம் ஆண்டில் 2234 பேரும் வேலையற்ற இளைஞர்கள் ஆவர். மாணவர்களின் தற்கொலைகளுக்கு கூறப்பட்ட அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். படிப்பதில் உள்ள சிரமமும், படித்தபின் வாழ்வதில் ஏற்படும் பிரச்சினைகளும் ஆண்டுக்கு சுமார் 2500 பேரின் தற்கொலைகளுக்கு வழி வகுக்கின்றன என்றால் அது ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்லும் விஷயமல்ல. நடைமுறைக்கு உதவாத பாடத்திட்டம் தான் இவ்வளவுக்கும் காரணம் ஆகும். அதை புறம்தள்ளிவிட்டு சுகமான, சிந்தனையைத் தூண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க கூடிய கல்வி முறையையும், எளிமையான தேர்வு முறையையும் அறிமுகம் செய்வது தான் இத்தகைய தற்கொலைகளை தடுக்க உதவும். இதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்கள் சமுதாயத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

குழந்தை அம்மா என அழாவிடாலும் அவதூறு வழக்கு?: ராமதாஸ் கிண்டல்

சென்னை:
பிறந்த குழந்தை அம்மா என அழாவிட்டாலும் அவதூறு வழக்கு போடுவார்களோ என்று கிண்டல் அடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்,
டிராபிக் ராமசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு: பிறந்த குழந்தை ‘அம்மா’ என்று அழா விட்டால் அதற்கும் அவதூறு வழக்கு போட்டாலும் போடுவார்!

 

தில்லி விமான விபத்து; மோடி இரங்கல்

புது தில்லி:
புது தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாயினர். சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்தார். விமானத்திலிருந்த 10 பேரும் பலியானதை விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா உறுதி செய்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தனது இரங்கலை மோடி தெரிவித்துள்ளார்.
விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் எல்லை பாதுகாப்புப் படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தில்லியில் எல்லைப் பாதுகாப்பு விமானம் விழுந்து நொறுங்கி 10 பேர் பலி

தில்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர்.

இது குறித்து தில்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

இன்று காலை தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான அந்த விமானத்தில் பைலட் உட்பட 10 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார் செய்யுமாறும் கோரினார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளை செய்தோம். ஆனால் சில வினாடிகளிலேயே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், காலை 9.50 மணி அளவில் விமான நிலையத்துக்கு அருகேயே விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்திலிருந்த 10 பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன – என்று தெரிவித்தனர்.

கனமழை குறித்து எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி:

சென்னையில் கனமழை பெய்யும் என்பது குறித்து 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம்; ஆனால் மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.
மேலும், சென்னையில் ஏற்பட்ட அந்த அளவு பெரும் பாதிப்புக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் பெருமளவு நீர் திறக்கப்பட்டு அடையாறில் வெள்ளம் ஏற்பட்டதும் காரணம் என தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்ற மாநிலக்களவையில் வறட்சி, இயற்கை பேரிடர் குறித்த விவாதம் நடைபெற்றபோது, காங்.எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், சென்னையில் வெள்ள பாதிப்பின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக வெள்ள காலங்களில் விடுக்கப்படுகிற மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் பேரிடர் மேலாண்மையின் தோல்வியால் 400 உயிர்கள் வரை பலியாகியுள்ளன. தற்போது ஏதோ ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைப் போல மத்திய அரசு தவணை முறையில் நிதி உதவி வழங்குகிறது; இயற்கைப் பேரிடரை சமாளிக்க தமிழக அரசிடமும் எந்த ஒரு திட்டமுமே இல்லை என்றார்.
சி.பி.எம். எம்.பி ரங்கராஜன், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

விவாதங்களுக்குப் பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்,
அக்டோபர்- டிசம்பர் மாத காலம்தான் தமிழகம், புதுச்சேரிக்கு அதிக மழை கிடைக்கும். வழக்கமான மழை அளவை விட 115% கூடுதலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சென்னை பேரழிவுக்கும் குளோபல் வார்மிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. குடியிருப்புகள் முறையான திட்டமிடலுடன் கட்டப்படவில்லை. இயற்கையான நீர்வழித் தடங்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டதும் சென்னை பாதிக்கப்பட ஒரு காரணம்.
சென்னையில் கனமழை பெய்யும்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசை மத்திய அரசு எச்சரித்தது. இவ்வாறு பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார். மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படவில்லை; செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் திறப்பால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.

தமிழகத்தில் ஏற்பட்ட கனமழைக்கு பருவ நிலை மாறுபாடு காரணமா, இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரகாஷ் ஜாவ்டேகர் அளித்த விளக்கம்…

இந்திய வானிலையின் இயற்கையான மாற்றங்கள் காரணமாகவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் நாட்டில் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதாக சில ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்தியாவில் பெய்யும் கனமழைக்கும் சர்வதேச பருவநிலை மாற்றத்துக்கும் ஒரு சிறிதும் தொடர்பில்லை. தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை பெய்கிறது. கடந்த நவம்பரில் 3 முக்கிய வானிலை மாற்றங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது.

தமிழகத்தில் கனமழை பெய்ததால், நீர்ப் பிடிப்பு பகுதி, நீர்நிலைகளில் வெள்ளம் புகுந்தது. இந்தப் பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக கனமழை தொடர்பாக 3 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டது.

வெள்ள பாதிப்பு அபாயம் நிறைந்த நகரங்கள், தொழிற்பகுதிகள், கடலோர, நதியோர மாவட்டங்களில் நகர வடிவமைப்பு, கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் வடிகால் ஆகியவற்றில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும் முக்கிய பிரச்சினையாக உள்ளன.

சென்னையில் பெய்த கனமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது ஆகியவற்றால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன என்றார்.

வரலாறு காணாத அளவில் சென்னையில் பெருமழை பெய்வது குறித்து போதுமான முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை; இது இயற்கைப் பேரிடரே என்கிறது தமிழக அரசு. ஆனால் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசுதான் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டது; செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென அதிக அளவு நீர் திறக்கப்பட்டது; ஆகையால் இது செயற்கைப் பேரிடர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரகாஷ் ஜாவ்டேகர் இந்தக் கருத்தைத்தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் நடத்திய கூத்து !

 
 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நேற்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் பக்தர்களுக்கு கொடுத்த இடையூறுகள் பற்றிய ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தீவர பக்தரின் குமுறல் பதிவு:-
 
இந்த வருட வைகுண்ட ஏகாதசி தரிசனம்…
மேலும் சில அனுபவங்களைத் தந்தது.
 
முன்பெல்லாம்…. நள்ளிரவு நேரத்தில் ஆலயத்தின் உள்ளே செல்வோம். அமர்ந்து கொள்வோம். அதிகாலை பெருமாள் எழுந்தருளச் செய்யும் போது… சற்று அனுபவித்து… பரமபத வாசல் திறந்த பின்னர் காத்திருந்து… பின்னர் வெளிவருவோம். ஆயிரங்கால் மண்டபத்தில் பெருமாள் வீற்றிருப்பார். தரிசிப்போம்… நம்பெருமாள் திருமேனி அழகை அனுபவித்தபடி! திருப்பவள செவ்வாயின் இரு புறமும் பள்ளம் விழ, பெருமாள் உதடு குவித்து சிரிப்பது போலே வாவென்று அழைப்பார். பேசும் பெருமாள்தான்!
 
எதிரே மற்றும் அடுத்து உள்ள மணல் வெளியில் பக்தர்கள் இரவு நேரத்தில் ஆற அமர ஓய்வு எடுத்து பின்னர் செல்வார்கள். எல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் அரங்கனின் அசையாத பக்தர் குழாங்கள். இப்போது அந்த அப்பாவி முகங்களை அதிகம் பார்க்க முடியவில்லை! பேசும் பெருமாள் முன்னும் சற்றும் நிற்க முடிவதில்லை!
 
வைகையில் இருந்து இறங்கி, ஞாயிறு நேற்று மாலை திருவரங்க நகருக்குள் நுழையும்போதே… போலீஸ் கெடுபிடி இருப்பதை உணர்ந்தேன்! நண்பர் விஜயராகவன் கிருஷ்ணனை அழைத்தேன். தெற்கு கோபுரம் வந்து வண்டியில் அழைத்துச் சென்றார். பஜ்ஜி காபி உபசாரம் வேறு! பேசிக் கொண்டிருந்துவிட்டு, இருவரும் அரங்கன் ஆலயத்துக்குள் சென்றோம். வெளியில் இருந்த கெடுபிடியும் கூட்டமும் உள்ளே இல்லை என்பதை உணர வெகு நேரம் பிடிக்கவில்லை! மோஹினி அலங்கார தரிசனத்தை கண்குளிரக் கண்டு, ஆசார்ய சுவாமிகளுக்கு பரிவட்டம், மாலை சாற்றியும், ஆழ்வார்களுக்கு அரங்கன் கொடுக்கும் மரியாதையும் கண்டு திருப்தியுற்றவனாய் வெளியில் வந்தேன்.
 
உள்ளே கூட்டம்… பயங்கர கூட்டம்… போகாதீங்க! இருங்க ! காலைல வாங்க! இப்போ ரூ. 3 ஆயிரம் டிக்கெட் வாங்கினவங்க மட்டுமே உள்ளே போலாம்.. இலவச தரிசனம்லாம் காலை 6 மணிக்கு மேல்தான். கோயிலில் கூட்டம் நிறைஞ்சாச்சு… இனிமே உள்ளே போக வழியில்லை என்றெல்லாம் போலீஸார் சொல்லிக் கொண்டும், மக்களை உள்ளேயே விடாமல் செய்து கொண்டும் இருந்தார்கள்.
 
இத்தனைக்கும் கோயில் பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீஸார். கோயிலுக்கு உள்ளேயே 2,500க்கும் மேற்பட்ட போலீஸார். ஆனால், உள்ளே பக்தர் கூட்டமே வழக்கமான கூட்டத்தில் 3ல் 2 பங்குதான்! ஏன் இவ்வளவு போலீசார் என்று விசாரித்தால்… ஏதோ வெடி குண்டு மிரட்டலாம்… 3 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு என்று அனுமதித்து, மிரட்டல் காரணத்தால் கூடுதலாக ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு அமர்த்தப் பட்டார்களாம்…
எங்கு நோக்கினும் காக்கிச் சட்டைகளே தெரிந்தார்கள் – கோயில் என்பதால் இருக்க்க வேண்டிய காவித் துண்டுகளுக்கு பதிலாக! ‘
 
உள்ளூர் மக்கள் பெரும்பாலும் கோயிலுக்கு உள்ளே செல்வதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்கள். நாங்கள் நாளை அல்லது ராப்பத்து நாளில் போய் பார்த்துக் கொள்கிறோம் என்று ஒதுங்கியிருந்தார்கள். நண்பர்கள் ஓரிருவரை உடன் அழைத்தேன். மறுதலித்தார்கள். சரி என்று, இரவு தங்கிக் கொள்ள சிற்றப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டேன்!
 
காலை 6 மணிக்கு மேல்தான் பரமபத வாசல் செல்லும் இலவச தரிசன வரிசை அனுமதிக்கப்படும் என்று முந்திய தின இரவே போலீசாரால் சொல்லப்பட்டு விட்டதால், வழக்கமாக நாங்கள் செல்லும் வடக்கு வாசல் வழியாக நுழைந்தோம். தாயார் சந்நிதி முன்னுள்ள வடக்கு வாசல் பிரதான நுழைவுப் பகுதியில் கம்புகள் கட்டப்பட்டு, வழி அடைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் அதிகம் தென்பட்டார்கள். காலை சுமார் 7.30 அளவில் அங்கே திரண்டிருந்த பக்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் தற்போது டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்றிருக்கும் திருவாளர் கந்தசாமி.
 
சரி… வழக்கமான வாக்குவாதம்தானே! என்று கவனித்துக் கொண்டிருந்தேன். உள்ளூர் மாமிகள், வயதானவர்கள், பெரியவர்கள் என … அங்கே கூடியிருந்தார்கள். எல்லோரையும் ரங்கா ரங்கா வாசல் வழியாகத்தான் விடுவோம். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று அதட்டிக் கொண்டிருந்தார் திருவாளர் கந்தசாமி. ஆனால் அவர்களோ… ஐயா.. வழக்கமாக நாங்கள் செல்லும் வழி இது. நாங்கள் பெருமாள் முத்தங்கி சேவைக்கு செல்லவில்லை. ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போக வேண்டும். உற்ஸவரை ஸேவிக்க… இதற்காக நாங்கள் அந்த வாசலுக்குச் சென்று எப்படி திரும்பவும் இதே இடத்துக்கு வர முடியும் என்று கேட்டார்கள். கத்திக் கொண்டிருந்த கந்தசாமி, நீங்கள்லாம் மனுசங்கதானா? சொன்னா புரியாதா? உள்ளே கூட்டம் அதிகம் இருக்கு. எல்லாரையும் வெளியேத்திட்டுதான் உங்களை எல்லாம் விட முடியும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து … மனுசங்களா இருந்தா மண்டைல ஏறும் என்றார்…கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மண்டையில் ஜிவ் என்று ஏறியது!
 
பொதுவாக நான் போலீஸ்காரர்களை விரோதிகளாகப் பார்ப்பதில்லை. காவல்துறையினருக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணுபவன். ஆனால்… அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களை இப்படி ஆலயப் பணிக்கு அனுப்பி வைத்தால்.. இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று எண்ணும் படியாய்… மோசமான அணுகுமுறைகள்.
 
என் செல்போனில் இதை க்ளிக்கினேன். ஐயா டிஎஸ்பீயார் பார்த்துவிட்டார். ஓடி வந்து, என்ன வீடியோவா புடிக்கிற என்று செல்போனை பறித்துக் கொண்டார். எப்போதுமே என் அடையாளத்தை எங்கேயும் நான் சொல்லிக் கொள்வதோ, PRESS அடையாள அட்டையைக் காட்டுவதோ இல்லை.
 
அதன் மூலமான சலுகையை எங்கும் எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால்… இப்போது இந்தக் கட்டாயச் சூழல் ஏற்பட்டதால், அடையாள அட்டையைக் காட்டினேன். அடுத்த நொடி செல்போனை கையில் கொடுத்தார். சார் உங்களால் முடிஞ்சத பாத்துக்குங்க என்றார். சிஎம் செல்லுக்கு வேணா அனுப்பறேன் என்று நான் புன்னகைத்தேன். அடுத்து அமைதியாக அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். சற்று நேரம் ஆனது. மக்களின் நெருக்கடியே வென்றது. அதே வழியில் அடைக்கப்பட்டிருந்த கட்டைகளை எடுத்து ஓரிருவராக வரிசையில் வரச் சொல்லி உள்ளே விட்டனர்.
 
நானும் வரிசையில் நின்று கொண்டேன். ஒரு கிறிஸ்துவ போலீஸ்கார அம்மணி, வயதான மாமிகளை விரட்டி, வரிசை வரிசை என்று கத்தினார். கூடவே, இப்படியே போங்க.. பெருமாள் கூட்டுட்டுப் போவார் என்று இளக்காரமாகப் பேசினார். என்னைப் பார்க்காததுபோல் முகத்தை திருப்பிக் கொண்டு… ஒழுங்கா சொன்னா கேக்க மாட்டீங்க.. சொன்னா வீடியோ எடுத்துக்கிட்டு வம்பு பண்ணுவீங்க..
போங்க போங்க போய்ச் சேருங்க என்றார்.
 
 
ஆமாம்…
இதே மனநிலையில்தான்…
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க
செயல்படும் டிஎஸ்பி கந்தசாமியின் பேச்சை
வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டேன்….
ஸ்ரீரங்கத்தில் உள்ளோர் போலீஸ் அராஜகம் ஒழிக என்றார்கள்!
 
நானோ … ஆலயங்களை விட்டு அரசை விரட்டுவோம் என்று சொல்லிக் கொண்டேன்.
 
சென்னை மட்டுமில்ல… தமிழ்நாட்ல பல பகுதிகள்ல மழை வெள்ளம் வந்து, இவ்ளோ சேதம் ஏன் தெரியுமா?
என்ன சொல்ல வர்றீங்க…?
 
இங்கே கும்பாபிஷேகம் பண்ணாங்கள்ல…! அது ரொம்ப தப்பும் தவறுமா நடந்துச்சு. ஆகம விரோதம்தான். தட்சிணாயனத்துல வேணாம்னோம். கேக்கல. உத்தராயண துவங்கி, பங்குனில செஞ்சிருக்கலாம். ஆனா, இவங்க வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு காசு பாக்கணும்கிற ஒரே குறிக்கோள்ல முன்னாடியே மூலவர் கும்பாபிஷேகம் செஞ்சிட்டாங்க. இதனால், ஆட்சி செய்பவருக்கு பாதகம்னு எவ்வளவோ சொன்னோம்… அதான் பாருங்க, முதலமைச்சருக்கு எவ்ளோ அவப் பெயர் வந்து…. அடுத்து பாருங்க… ஆட்சில தொடர முடியாது …
 
நம்ம கோயிலுக்கு வரக்கூடாதுன்னே முடிவு கட்டி இயங்கறானுங்க… போலீஸ்காரங்க இத்தன பேரு தேவையா? எல்லாம் ஒரு பக்கம் எங்கயோ உக்காந்துகிட்டு… டூட்டி பாக்கறாங்களாம். இவங்கதான் அதிகமா கோயிலை அடைச்சிருக்கிறது…!
 
எத்தன பேரு இங்க லால்குடி, நத்தம், வாளாடி, துறையூர்ன்னு வருவாங்க! இப்ப பாருங்க அவங்கள எல்லாம் கோயில்ல அதிகம் பாக்க முடியல… இப்ப மூணு வருசமா… எல்லாரும் ஸ்ரீரங்கம் கோயில்ல இந்த மூணு நாள் நமக்கு இல்லன்னு முடிவு பண்ணிட்டாங்க. மூணு நாளும் போலீஸ்காரங்கதான் கன்ட்ரோல்னு தெரிஞ்சிக்கிட்டு சுத்திமுத்தி இருக்கற திவ்ய தேச கோயில்களுக்கு போயிடறாங்க…. காசு உள்ளவன் மட்டும் இங்க ராத்திரி உள்ள பூந்துக்கிறான்…
 
இப்படித்தாங்க… நேத்து ராத்திரி சுத்துப்பட்டு சனங்க எல்லாம் வந்தாங்க. அவங்கள ராத்திரி 11 மணி வரை நிக்க வெச்சி, கோயில்ல இனி நீங்க போக முடியாது… எல்லாம் ஃபுல். அப்டின்னு அனுப்பிட்டாங்க. ஆனா வழக்கமா காலங்காலமா அவங்கல்லாம்… அந்த மணல் வெளில தங்கியிருந்து, மத்யானம் போய் பரமபத வாசலையும் ரங்கநாதரையும் சேவிச்சுட்டு வருவாங்க… திடீர்னு 11 மணிக்கு மேல பாவம்… அவங்க என்ன செய்வாங்க? தங்குறதுக்கு இடமும் இல்லை. எங்கயும் ரூம், சத்திரம் எதுவும் இல்ல… இதுனாலயே பயங்கர கூட்டம்.. ரங்கா ரங்கா கோபுர வாசல்ல….
 
யாராயிருந்தா என்ன? எவரையும் விட முடியாது….ங்கிறான் அவன். ரெண்டு வருசம் முன்னே ஒரு கூத்து நடந்தது தெரியுமா? அப்போ கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் இருந்தாங்க. அவங்க வழக்கமா வர்ற மாதிரி சுடிதார்ல, வீட்டுக்காரர் புள்ளைங்கள கூட்டிட்டு வந்திருந்தாங்க. இங்க இருந்த ஒரு டிஎஸ்பி, அவங்களை ஓரமா நிக்கவெச்சிட்டார். அவங்க.. ஐயா நான் கலெக்டருங்க.. அப்டின்னார். எந்த மாவட்ட கலெக்டருங்க..? யாராயிருந்தா என்ன என்று பேசியிருக்கிறார். பின்னர் பின்னால் எங்கோ கூட்டத்தில் வந்து கொண்டிருந்த உதவியாளர் வந்து, சார் இவங்கதான் திருச்சி கலெக்டர் என்று சொன்ன பின்னர், ஸாரி கேட்டு ஒதுங்கியிருக்கிறார் அந்த வேற்று மாவட்ட டிஎஸ்பி.
 
அட நீங்க வேறங்க..இங்க ஜேஸியவும் நிக்க வெச்சாங்க… போன வருசம்!
இப்படியாக பேச்சு காதில் விழுந்தது. இடம் : திருவரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் போற வழியில் வரிசையில் நின்னபோது… பக்தர்கள் கிட்டேயிருந்து!
 
கருட மண்டபத்தில் பெருமானை மோஹினி அலங்காரத்தில் சேவித்ததிலும் சரி… இன்றைய தின ஆயிரங்கால் மண்டப தரிசனத்திலும் சரி… மிக மிக திருப்தியுடன் இருந்தது பெருமாளின் திவ்ய ஸேவை. உள்ளே கூட்டம் இல்லை. வெறிச்சோடி இருந்தது பல இடங்கள். பரமபத வாசல், தாயார் சந்நிதி, ஆயிரங்கால் மண்டபம் எல்லாவற்றிலு விரைவில் சென்று தரிசிக்க முடிந்தது. பெருமாளின் முத்தங்கி சேவையை தவற விட்டாயிற்று. கொடிமரத்தின் அருகிலேயே மக்களை நிறுத்தி வரிசை கட்டி, டிக்கெட்டுக்கு விட்டிருந்தார்கள்.
 
இவ்வளவு விரைந்து ஸேவிக்க வழி ஏற்படுத்திய காவல் துறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாராட்டோ பாராட்டு அவ்ளோ பாராட்டு!!
 
கோயிலுக்கு வெளியிலேயே மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
 
செயின் பத்திரம், செல்போன் பத்திரம், கழுத்தில் கவனம் இருக்கட்டும். உங்கள் அருகிலேயே டிப் டாப் ஆசாமிகள் இருப்பர். அவர்கள் திருடனாகவோ திருடியாகவோ இருக்கலாம். பொருள் போன பிறகு அழுது பிரயோசனமில்லை. உள்ளே கூட்டம் அதிகம் உள்ளது. சொர்க்க வாசலுக்கு செல்பவர்கள் ரங்கா ரங்கா கோபுரம் வழியாக செல்லவும்.
 
ராமானுஜர் சந்நிதி வழியை அடைத்து விடுங்கள். அங்கே பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினர் கவனத்துக்கு.
 
– இப்படியாக ஓடிக் கொண்டிருந்தது அறிவிப்புகள்.
 
இதைக் கேட்ட உள்ளூர் அன்பர்கள் பெரும்பாலும் இந்த முறை ஓரங்கட்டி விட்டார்கள்.
 
காவல் துறை பாதுகாப்பு வேண்டும் தான்! ஆனால் இந்த அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ நிற்க வேண்டுமே என்று நின்று கொண்டிருந்தார்கள். பலர் செல்லில் ஜொள்ளிக் கொண்டிருந்தார்கள். பெண் காவலர்கள் சிலர் சாவஹாசமாக கால் நீட்டி அமர்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
இத்தனை இருந்தும், தங்கள் தலையிலேயே அடித்துக் கொண்டு, பக்த ஜனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டபடி, இதெல்லாம் தேவையில்ல சார் என்று கூறிய படியே புன் சிரிப்புடன் மக்களை நகர்த்திக் கொண்டிருந்த ஓரிரு காவலர்களையும் காண முடிந்தது. அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டபடியும் கட்டுப் படாத மனநிலையிலும் சிலர்….
 
உண்மையில், இத்தனை களேபரங்கள் தேவையில்லைதான்! கம்பு கட்டி விட்டிருக்கிறார்கள். வரிசையை ஒழுங்காக அமைத்து, தெற்கு, கிழக்கு, வடக்கு மூன்று வாசல்களிலும் மக்களை அனுமதித்து, அழகாக கூட்ட மேலாண்மையை அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கலாம்.
 
பரமபத வாசலா – வடக்கு வாசல்+ தெற்கு வாசல் வழி. பெருமாள் சேவையா – தெற்கு வாசல் + வடக்கு வாசல் வழி! ஆயிரங்கால் மண்டபமா – கிழக்கு கோபுர வழி… உள்ளே நுழைந்ததும், வரிசையை இரண்டாகப் பிரித்து, பரமபத வாசல் தனி, பெருமாள் சந்நிதி தரிசன வழி தனி என்று … இத்தனை நாட்கள் இருந்த நல்ல ஏற்பாடுதான்! ஆனால் இப்போது ஓரிரு வருடங்களாக மாற்றம் ஏனோ?
 
எல்லாருமே தெற்கு வாசல் வழியே மட்டுமே வர வேண்டும் என்று, ஒட்டு மொத்தமாக அனுப்பி, வரிசையை வடக்கு உத்தர வீதி வரை கொண்டு சென்று…
 
ஏன் இப்படி? என்ன சாதித்தார்கள் போலீஸார்?
 
இவர்களின் செயலால் கோயிலில் கூட்டம் அதிகம் என்ற கற்பனை வெளியில் பகிரப்பட்டது. ஆனால், உள்ளே எப்படி இருந்தது என்பதற்கு சில போட்டோக்களை பகிர்கிறேன்.
 
ஆக… எனக்குள் எழும் சந்தேகம் நிவர்த்தியாக வேண்டுமானால்… – யார் அந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது என்பதை காவல் துறை உடனே கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
 
கூட்டம் கூட்டம் என்று பூச்சாண்டி காட்டி… உள்ளே விட மறுத்து… இவர்கள் துரோகம் செய்தது – திருச்சி நகரைச் சுற்றியுள்ள சுத்துப்பட்டு கிராமத்து ஜனங்களைத்தான்!
 
அவர்கள் தான் உண்மையில் அரங்கனின் மேல் உயிரையே விடுபவர்கள். எத்தனை ஆசையுடன் பஜனை, ராம நாமம், ரங்க ரங்கா கோஷம் என அவர்கள் அந்த மணல் வெளியில் பொழுதைக் கழிப்பார்கள்??? அரங்கனை விட அந்த அடியார்களின் பக்தியைக் காண்பதில்தான் என்ன வோர் ஆனந்தம் இருந்தது.
 
ஆனால்… எல்லாம் பாழ் ! பாவம், அவர்கள் இரவு 11 மணிக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். காசு உள்ளவன் மூவாயிரத்தையும் கூடவே எதையும் கொடுத்து தன் டாம்பீகத்தை வெளிப்படுத்தி, நானும் பெருமாளை ஸேவித்தேன் தெரியுமோ? மூவாயிரம் ரூபா டிக்கெட்டாக்கும்… என்று பீற்றிக் கொள்வான். ஆனால் அந்தப் பரிசனங்கள்…?
 
தரிசனம் இன்றி தவித்துப் போனார்கள். !
 
எங்கு நோக்கினும், காகிகள்… உள்ளே வந்த வண்டிகள் அதிமுக கொடி கட்டிய பாஸ் வைத்த வண்டீகள், மற்றும் அத்தனை காவலர்களுக்கும் உணவுப் பொட்டலங்களை சுமந்து வந்த காவல் வண்டிகள். கோயில் உள்ளே பிரசாதங்கள் என்ற பெயரில் தேவஸ்தான கடைகளில் விற்கப்படும் புளியோதரை, பொங்கல், தயிர்சாதம், தோசை, தேங்குழல் வகையறாக்கள் மட்டுமே இருக்க்கும். ஆனால் இப்போதோ மண்டபங்களில் போலீஸ்காரர்கள் சாம்பார் பொட்டலங்களையும் சட்னி பொட்டலங்களையும் பிரித்து அங்கங்கே கொட்டிக் கொண்டிருந்தார்கள்…
 
காவல் துறை அதிகாரிகளுக்கு ஸ்ரீரங்க நகர்வாசிகள் போல் நானும் சொல்லிக் கொள்வது இதுதான்…! Crowd Management முறையாகக் கையாளுங்கள். இது அரசியல் கூட்டம் அல்ல. பக்தர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே!

பாவூர்சத்திரத்தில் நிர்வாக குழுவை அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகம்

பாவூர்சத்திரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு மாற்றம் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை

பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாற்றம் குறித்து பிரச்சனை ஏற்பட்டதால் இருதரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
  நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் 1984ம் ஆண்டு தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரிக்காக அந்தபகுதியைச் சேர்ந்த பலர் தங்களது நிலங்களை கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.
  கல்லூரிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் தரும் நன்கொடையாளர் விரும்பும் பெயரில் கல்லூரியும், மாணவர் விடுதி கட்டிடம் கட்டித் தரும் நன்கொடையாளர் விரும்பும் பெயரில் மாணவர் விடுதியும் செயல்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
 இதன் பேரில் கல்லூரிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் கொடுத்த நன்கொடையாளர் விருப்பத்தின் பேரில் கல்லூரிக்கு நாடார் மஹாஜன சங்கம் எம்.எஸ்.பி.வேலாயுதநாடார் – லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி என்றும், விடுதிக் கட்டிடம் கட்டிக்கொடுத்த நன்கொடையாளர் விருப்பத்தின் பேரில் எம்.கே.வி.கே.கந்தசாமிநாடார் ஆவுடைதங்கம்மாள் மாணவர் தங்கும் விடுதி என்றும் பெயர் வைக்கப்பட்டது.
 இதையடுத்து நாடார் மஹாஜன சங்கம் சார்பில் கல்லூரியின் தாளாளராக எம்.எஸ்.பி.வி.காளியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது.
  கல்லூரி தொடங்கிய 1984ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கல்லூரியில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நாடார் மஹாஜன சங்கத்தின் அனுமதி பெற்றே செயல்பட்டு வந்துள்ளது.
  இந்நிலையில் 2005ம் ஆண்டிற்கு பிறகு சங்கத்தை விட்டு விலகி அதன் தாளாளர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தனியாக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை சார்பில் செயல்பட தொடங்கியதாக கூறப்படுகிறது.
  இதையடுத்து கல்லூரியை மீண்டும் நாடார் மஹாஜன சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நாடார் மாஹாஜனசங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 27.ம் தேதி மதுரை நாகமலையில் நாடார் மஹாஜனசங்கம் ச வெள்ளச்சாமி நாடார் கல்லூயில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு தற்போது உள்ள எம்.எஸ்.பி.வி காளியப்பன் உள்பட சுமார் 23 பேர் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கல்லூரியை நிர்வகிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிர்வாகிகள் அனைவரும் நேற்று கல்லூரிக்கு சென்று நிர்வாக பொறுப்பு ஏற்க சென்றனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்தது இதனால் கல்லூரி நுழைவு வாயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. உடனே  டி.எஸ்.பி சங்கு, ஆய்வாளர் செந்தாமரைகண்ணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சங்க நிர்வாகிகளையும், கல்லூரி நிர்வாகத்தினரையும் அழைத்து பேசி இன்னும் ஒரு வாரத்திற்குள் இரண்டு தரப்பினரும் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும்  கொடுக் வேண்டும் அதில் யார்பக்கம் சரியான ஆவணங்கள் உள்ளதோ அதன்படி நிர்வகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அனைவரும்  சென்றனர்.  சங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கல்லூரி எப்படி தனியார் வசம் சென்றது என்பதுதான் பொதுமக்களின் பில்லியன் டாலர் கேள்வி