Home Blog Page 5903

போகி அன்று தேர்வா?: ரத்து செய்து விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை

போகி அன்று தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்துமுன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கையில், 

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் காரணமாக தமிழக அரசு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையளித்து தேர்வுகளை ஒத்தி வைத்தது. கிறிஸ்துமஸ் மற்றும் மிலாடிநபி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் தொடர் விடுமுறை அளித்துள்ளது.

ஆனால் தமிழர் பண்டிகையான போகி பண்டிகையன்று தேர்வு நடத்துகின்றது.

தமிழகத்தில் 10% கூட இல்லாத கிறிஸ்தவ முஸ்லீம் பண்டிகைக்கு விடுமுறை தரும் தமிழக அரசு பெரும்பான்மை தமிழர் கொண்டாடும் போகிபண்டிகையன்று தேர்வு நடத்துவது மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் நாட்டை ஆண்ட பொழுது ஆங்கிலேய கிறித்தவ ஆட்சி காலத்தில் கிறிஸ்துவர்களுக்காக கிறிஸ்துமஸ் மற்றும் கிறித்தவ புத்தாண்டு கொண்டாட்த்திற்கு விடப்பட்டதை போல இன்னும் விடுமுறை தருவதை விடுத்து நமது பாரம்பரிய பண்டிகையையும் நிணைவில் கொண்டு போகி பண்டிகை நாளன்று தேர்வை ரத்து செய்து விடுமுறை தர வேண்டுமென இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்… 

என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

பக்குவப்படாதவர்கள்!

இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ?

இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு… அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்…. அதனால், நிருபர் அவரிடம் இதுதான் சந்தர்ப்பம் என்று கேள்விக் கணை தொடுத்தார்… இதில் நிருபர் தரப்பில் எந்தக் குற்றமும் இல்லை! அடிக்கடி சந்திக்கக் கூடிய நபராகவோ.. அல்லது வைரமுத்து போல் தானாக முன்வந்து கொட்டும் கருத்து கந்தசாமிகளாக இருப்பவர்களாகவோ எனில் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை நிருபர் கேட்டிருக்க மாட்டார். மேலும், அன்னக்கிளி, ஆத்தா ஆத்தோரமா வாரீயான்னு பாட்டு கொடுத்து ஒரு சமுதாய வீழ்ச்சியின் துவக்க நிலையில் இருந்தவர் என்பதால்… அவரிடம் சிம்பு குறித்த பாடலுக்கான கருத்தைக் கேட்பது முற்றிலும் நியாயமே! இசையமைப்பாளர் என்ற வகையில் அவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்?

பரபரப்பையும் விவாதங்களையும் முன்வைத்தே ஊடகங்கள் இயங்குகின்றன… இது உண்மை. அந்த மாதிரியாக வளர்க்கப்பட்ட செய்தியாளர், அவருடைய பணியை செய்கிறார். அவருடைய கேள்வியால், இளையராஜா ஏதாவது பதில் சொல்லியிருந்தார் என்றால்… அது சிம்பு விவகாரத்துக்கு மேலும் வலு சேர்த்திருக்கும். அல்லது நீர்த்துப் போகச் செய்திருக்கும். இளையராஜாவின் கருத்து வேறு திசையில் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கலாம் அல்லது ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கலாம்.

பொதுவாக, வளர்ந்த நிலையில்  உள்ளவர்களிடம் கேள்வி கேட்பதே, ஓர் அறிவுரையை அவர்கள் வழங்குவார்கள், அல்லது இந்த இளைய சமுதாயத்தின் போக்கு சரியில்லை, மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்துதான்! அந்த நிருபருக்கும் அத்தகைய எண்ணம் இருந்திருக்கக் கூடும். சிம்பு செய்த தவறுக்கு இளையராஜா ஏதாவது அறிவுரை கூறுவார், அல்லது இளைய சமுதாயம் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார் என்பதை எதிர்பார்த்துதான் அவர் கேள்வி எழுப்பியிருக்கக் கூடும். ஆனால், இந்த விஷயத்தில் அவர் கருத்து சொல்வதும் சொல்லாததும் அவரின் விருப்பம். உரிமை. 

இருப்பினும், கனத்த இதயத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.. அதில் இப்படி ஓர் கேள்வி தேவையா என்று எண்ணினால்… அந்தச் சூழல் சம்பந்தப்பட்ட நபருக்குத்தானே ஒழிய செய்தியாளருக்கு அல்ல… அவர் சூழ்நிலைகளின் தாக்கத்துக்குள் புகுந்து கொண்டு, அவரும் சூழலோடு ஒத்திருந்தார் எனில், செய்தி வெளியே வராது. சூழலோடு தாமரை இலைத் தண்ணீர் போல் விலகியே இருக்க வேண்டும்… அதுதான் நிருபருக்கான லட்சணம். அதை அந்த நிருபர் சரியாகத்தான் செய்தார். தவறு இல்லை! 

மனிதாபிமான அடிப்படையில் அவசர கால உதவிகளைச் செய்யலாமே ஒழிய, முதல் வேலை செய்தி சேகரிப்பதும், அதை அளிப்பதும்தான்!

இந்த நிலையில், சூழலியலைப் புரிந்து கொண்டு, இளையராஜா “நோ கமென்ட்ஸ்”, “இந்த இடத்தில் இந்தக் கருத்து சொல்ல விரும்பவில்லை”, “தேவையற்ற கேள்வி” என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். அல்லது, மௌனமாக அந்த இடத்தை விட்டு சென்றிருக்கலாம். ஏனெனில் அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு, நகரப் போகும் நிலையில்தான் இருந்தார். அவர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நகர்ந்திருப்பாரேயானால் இந்த அளவுக்கு சர்ச்சை வந்திருக்காது. ஊடகத்தில் வளரும் நிலையில் அல்லது, ஓரளவு முகம் அறிந்த நபராகவே இருந்தாலும், அவரைப் பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது. ஒரு குழந்தையைப் பார்த்துக் கூட அவ்வாறு முட்டாப் பயலே, அறிவு கெட்டவனே என்று சொல்லித் திட்டுவது, பெரியவர்களுக்கு அழகில்லை. சக மனிதரைப் பார்த்து, அல்லது வளர்நிலை இளைஞரைப் பார்த்து அவ்வாறு கேட்பது, வளர்ந்துவிட்ட மனிதருக்கு அழகில்லைதான்! அதை வளர்ந்த நிலையில் இருக்கும் இளையராஜா செய்து விட்டார்.

அந்த நிருபரும் சூழலியலைப் புரிந்து கொண்டு, விலகியிருக்கலாம். மேலும் மேலும் விவாதம் செய்யும் நோக்கில் முன்னேறிச் செல்லும் நிலையைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், இதை மீடியாக்கள் பெரிது படுத்துவதாக பார்வையாளர்கள் கருதினால், மீடியாக்களின் பணியையும் நெருக்கடியையும், தற்போதைய போட்டி உலகையும் கருத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். வாசகர்கள் வாசகர்களாகவே தங்கள் கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்ளட்டும்! ஒரு பார்வையாளனுக்கும் செய்தியாளனுக்கும் உள்ள வேறுபாடு அது! அந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் போதும்! சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி வராது! மொத்தத்தில்… நாம் பக்குவப்படாதவர்கள்!

ஆக்கிரமிப்பு குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? : ஜி.ராமகிருஷ்ணன்

 
திமுக தலைவர் கருணாநிதி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து பேச மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் தயங்கியதில்லை. திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கண்ட காலத்திலேயே கூட தவறுகளை சொல்லுகிற நேர்மையும், துணிவும் வெளிப்பட்டது. வெள்ள பாதிப்புக்கு அதிமுக அரசே காரணம் என்பதையும் தெரிவித்துள்ளோம்.
 
இதையும் தாண்டி கூவம், அடையாறு உள்ளிட்ட நீர் நிலைகள் பல அரசியல் செல்வாக்குள்ள நபர்களின் கல்வி நிறுவனங்களாகவும், வீடுகளாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பெருநிறுவனங்களின் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளின் கொள்ளளவும், போக்கும் மாறியிருப்பது ஓர் அடிப்படைக் காரணம். இவையனைத்தும் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டுமே நடந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறகிறாரா?
 
திமுக ஆட்சியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகாரத்தில் இருந்தோரால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவரால் மறுக்க முடியாது. ஆ கவே தான் அவர் ஆக்கிரமிப்புகள் பற்றிப் பேச மறுக்கிறார் என்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நிலையை தெளிவாக்குங்கள்: மத்திய மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், தில்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சிதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இவை ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றன.
 
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தடை விதித்தது. தமிழக அரசின் சார்பில் உடனடியாக  சீராய்வு மனு தாக்கல் செய்து, காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை விசாரணையின் போது  நிரூபித்திருந்தால் கடந்த ஜனவரி மாதமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியிருக்க முடியும். ஆனால்,  19.05.2014 அன்று மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் கடந்த ஜனவரி மாதம் வரை அம்மனுவை விசாரணைக்கு கொண்டு வரவில்லை. அதனால் தான் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. அதன்பிறகாவது மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு கொண்டு வந்திருந்தால் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
 
மற்றொரு புறம், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி சட்டம் இயற்றினால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்பதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், கூட்டத் தொடர் முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்து, அதன்பின் 2 அவைகளிலும் சட்டத் திருத்த முன்வடிவை 3 நாட்களில் நிறைவேற்றுவது சாத்தியமற்றது.
 
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரியும். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் இதே கருத்தை தெரிவித்து வந்தார். இதற்கெல்லாம் மேலாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கடந்த 17 ஆம் தேதி பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்ற பிரதமரும், இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். எனினும் அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் கண்களுக்கு புலப்படவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசுக்கு  ஓராண்டுக்கும் மேலாக அவகாசம் இருந்தது. ஆனால், அதை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு தொடர்பான சிக்கலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல தமிழக அரசு நடந்து கொள்கிறது. கடந்த ஓராண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக  தமிழக முதலமைச்சர் ஒரே ஒரு முறை மட்டும் தான் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இம்முறை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வாய்ப்பில்லா விட்டாலும் அவசர சட்டத்தை கொண்டு வந்தாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதுகுறித்த தங்கள் நிலையை இரு அரசுகளும் அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டால், அடுத்த ஆண்டு தேர்தலில்  தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.

விலங்குகளைப் படம் எடுத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

கோவை:
வால்பாறையில் வனப் பகுதிகள், சாலைகளில் தேயிலை தோட்ட பகுதிகளில், வன விலங்குகளைப் படம் எடுப்பது, வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(35), மனைவி ரம்யா (22), இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. இதில், மகிழன் (4), லிஷா (2) என இரு குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், ரம்யா தனது இரண்டு குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர், அதிகாலை 2 மணி முதல், தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பண வசூல்: இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக, மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

கெட்ட வார்த்தை தப்பில்லை: சிம்பு விளக்கம்

பாடலில் கெட்ட வார்த்தை தப்பில்லை என்று சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில், கெட்டவார்த்தை தப்பில்லை. தமிழ் மக்களுக்காக 30 ஆண்டுகளாக முட்டி போட்டு நடித்தேன் . அனிருந்திற்கும் பீப் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. பீப் பாடல் பெண்களுக்கு ஆதரவாக பாடியது. ஆனால் அதனை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

வள்ளியூர் அருகே குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள குளம் உடைந்தது. ஊருக்குள் தண்ணீர் புகுந்து, சாலைகளிலும் வீடுகளிலும் பெருக்கெடுத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயருக்கு உள்ளாகினர்.

தகவல்: எஸ்.எம்.எஸ் சங்கர்

திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்?: மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை:

தமிழக மக்களின் வெள்ள துயரத்திற்கு அதிமுக.,வும், திமுக.,வும் தான் காரணம்; ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:-

திமுக., தலைவர் கருணாநிதி 18-12-2015 அன்று பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில், ‘‘தற்போதைய மழைநீர் வெள்ள பிரச்சினைக்கு ஒரு சிலர் திமுக., ஆட்சியையும் சேர்த்து குறை சொல்கிறார்களே?, குறிப்பாக ‘‘நால்வர் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே’’ என்று கேள்வி எழுப்பி அதற்கு ‘‘அதிமுக., அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், திமுக.,வை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே அதிமுக.,வை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உள்நோக்கமும், கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து வருகிறது“ என்று பதிலும் சொல்லியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்றுள்ள மக்கள்நல கூட்டணியை, நால்வர் அணி என்று கூறியிருப்பதன் மூலம், திமுக., விரும்புகிற மாதிரி ஒரு கூட்டணியை அமைக்க முடியாது போய்விட்டதன் விரக்தி வெளிப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து 10-12-2015 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட அறிக்கையில், இந்த அரசாங்கத்தின் மீது கிரிமினல் நெக்லிஜென்ஸ் என்று குற்றம்சாட்டியது. முதல்-அமைச்சர்தான் ஏற்பட்ட பேரிடருக்கும், உயிரிழப்பிற்கும், பெரும் பொருள் இழப்பிற்கும், மக்களின் நீங்காத பயத்திற்கும் பொறுப்பு என்று நேரிடையாக விமர்சனம் வைத்தது. அதன் பிறகுதான் திமுக.,வே கூட அத்தகைய நிலைபாட்டை எடுத்தது.

அதைத் தொடர்ந்து அதிமுக., அரசாங்கம் பதவி விலக வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், அங்கம் வகிக்கும் மக்கள் நலக்கூட்டணியும் வலியுறுத்தியது. இதுவெல்லாம் ‘‘அதிமுக., அரசை நேரிடையாக விமர்சிக்க அஞ்சுபவர்கள்“ எடுத்த நிலைபாடு என்று கருணாநிதியால் கூறமுடியுமா?.

திமுக., ஆட்சியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகாரத்தில் இருந்தோரால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவரால் மறுக்க முடியாது. எனவே வெள்ளத்தின் பாதிப்பை குறைக்க தவறியது அதிமுக., அரசின் உடனடி குற்றம். ஆக்கிரமிப்புகளை அனுமதித்ததும், நீர்நிலைகளும், புறம்போக்குகளும், பெருநிறுவனங்களுக்காக பட்டா கொடுக்கப்பட்டதும் 2 ஆட்சியிலும் நடந்த கடுமையான குற்றங்கள். இவையெல்லாம் திமுக., ஆட்சியில் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா?. எனவேதான் கருணாநிதி அவருடைய அறிக்கையில் ஆக்கிரமிப்புகள் பற்றி பேச மறுக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புவது தமிழக மக்களின் இந்த துயரங்களுக்கு, வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு அதிமுக., உடனடி காரணம், அதிமுக.,வும், திமுக.,வும் தொடர்ச்சியான காரணம்.

கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பல கேள்விகளை பல்வேறு நேரங்களில் முன்வைத்திருக்கிறது. சேஷசமுத்திரம் தலித் மக்கள் குடிசைகளும், கோவில் தேரும் எரிக்கப்பட்ட போது கருணாநிதியும், திமுக.,வும் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டிருக்கிறோம். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறவில்லை என்று அரசு சொல்லும் போது அதை மறுத்து கூறாமல் இன்று வரையிலும் திமுக., மவுனம் காப்பது ஏன்? என்று கேட்டிருக்கிறோம். ஆற்று மணலும், தாது மணலும் திருடியவர்கள் மீது இந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, முன்பிருந்த திமுக., அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறோம்.

மேலும், கிரானைட் முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்துள்ளது என்றும் இதனால் அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆண்டு காலம் என்பதில் திமுக., ஆட்சியும் உண்டு. இந்த கேள்விகளுக்கும் கருணாநிதி மவுனம் சாதிப்பது ஏன் என்று கேட்டிருந்தோம். கருணாநிதி மவுனம் கலைத்து கருத்து கூறுவார் என்று நம்புகிறோம்.