Home Blog Page 5910

ஶ்ரீரங்கம் பகல் பத்து -நான்காம் திருநாள்

பகல் பத்து -நான்காம் திருநாள் (14-12-15 விவரம்)
2 அரையர் சேவைகளும்,கம்சவதமும்…..

நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு
மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்…

இன்றைய பகல் பத்து நான்காம் திருநாளில்,2 அரையர்
சேவைகள் நடைபெறும்.”நாச்சியார் திருமொழி”
பாசுரங்களில் (13 ம் பதிகம்)
“கண்ணன் என்னும் கருந்தெய்வம்”தொடங்கி,(14 ம் பதிகம்)
20 பாடல்களும் சேவிக்கப் பெற்று,”குலசேகர ஆழ்வார்” அருளிச்செய்த, “பெருமாள் திருமொழி” 105 பாசுரங்களும்
“திருமழிசையாழ்வார்” அருளிச்செய்த, “திருச்சந்தவிருத்தம்”
120 பாசுரங்களும்,ஆக மொத்தம் 245 பாசுரங்கள் ,அரையர் ஸ்வாமிகளால்,அரங்கன் முன்பு சேவிக்கப்படும்.

இவற்றில்”கண்ணன் என்னும் கருந்தெய்வம்”எனத் தொடங்கும் “நாச்சியார் திருமொழி” பாசுரத்திற்கும்,”இருளிரிய” எனத் தொடங்கும், “குலசேகர ஆழ்வார்” அருளிச்செய்த,
“பெருமாள் திருமொழி” ஆகிய இந்த இரண்டு பாசுரங்களுக்கும், அபிநய வியாக்கியானங்கள் செய்யப்படும்.
“திருச்சந்த விருத்தத்தில்” ஒரு பாட்டிற்கு கூட
வியாக்கியானம் சேவிக்கப்படுவது,இல்லை….

இன்று இரண்டு அரையர் சேவை நடைபெறும் …அதில்

முதல் அரையர் சேவையில்…

“கஞ்சைக் காய்ந்த கருவில்லி”என்ற “நாச்சியார் திருமொழி” பாசுரத்தில்,கஞ்சனைப்(கம்சன்) பற்றிய குறிப்பு வரப்பெற்றதால்,
கம்ஸ வாதத்தை நடிப்பதற்காகவே, அத்திருமொழி பாட்டுக்கள் எட்டினை விட்டுவிட்டு,மற்றைய பாட்டுக்கள் சேவிக்கப்படும்.

“இருளிரிய” எனத் தொடங்கும், “குலசேகர ஆழ்வார்” அருளிச்செய்த, “பெருமாள் திருமொழி”முதல் பாட்டு, வியாக்கியானம் பூர்த்தியானதும்,அரையர் ஸ்வாமிகளுக்கு
“குலசேகர ஆழ்வார்”சந்நிதியில் இருந்து, பஹுமாணம் (மரியாதைகள்) வரும்…

இனி இரண்டாம் அரையர் சேவை…..(கம்ஸ வதம்)

கம்ஸவத விசயமான, “தம்பிரானடி”வியாக்கியானங்கள் சேவித்து,கம்ஸவதத்தினை நடித்து,முதல் அரையர்
சேவையில் விட்ட, “நாச்சியார் திருமொழி “யின் எட்டு பாட்டுகளும் சேவிக்கப்படும்.

பிறகு வழக்கம்போல் நிவேதனம்,ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் புறப்பாடு,கண்டருளியபிறகு,நம்பெருமாளும் புறப்பாடு கண்டருளி,பத்தியுலாத்துதல் ஆகி, சர்ப்பகதியில் கர்ப க்ருஹம் எழுந்தருளுவார்…

பண்டைய காலங்களில் அரையர்கள்,ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி,மகிழ்வித்தபோது கொண்ட அனுபவங்களை,”நம்பிள்ளை”என்னும் ஆச்சாரியர்,தமது “திருவாய்மொழி” உரையில் குறிப்பிட்டு உள்ளார்…

தற்பொழுது சில குறிப்பிட்ட பாசுரங்களுக்கு மட்டுமே,
அரையர்களால்,அபிநயமும், விரிவுரையும் சேவிக்கப்பட்டு வருகிறது.ஆனால் பூர்வச்சாரியர்களின் காலத்தில்,அவர்கள் நியமித்தருளிய பாசுரங்களுக்கு மட்டுமே,அபிநயம் நடைபெற்றது….

“ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர்” ஸ்வாமி என்பவர்,
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா மடிமை செய்யவேண்டும் நாம்” என்ற பாடலை இசைக்கும் போதெல்லாம்,
ஒழிவில் காலமெல்லாம் என்ற தொடரை வெகுநேரம் பாடி, மேலே பாடமுடியாமல்,அத்தோடு பாசுரங்களை நிறுத்திப் போவாராம்.அந்த அரையர் நம்மாழ்வாருக்கு,எம்பெருமானின் மீது,இவ்வளவு பக்தியும்,ஆழ்ந்த ஞாணமும் இருந்ததை நினைத்து மனமுருகி பாசுரங்களை மேலே பாடமுடியாமல் மெய்மறந்து நிறுத்தி விடுவாராம்…

இதே போல் பிள்ளை திருநறையூர் அரையர், என்பவர், திருவாய்மொழியை அனுபவிக்கத் தொடங்கும்போதே,பக்தி மேலிட்டு,மனமுருகி ,கண்ணீர் ததும்ப நிற்பாறாம்.இந்த நிகழ்வை “நஞ்சீயர்” நேரில் கண்டு,அதை தம்முடைய சீடரான,”நம்பிள்ளை” ஸ்வாமிக்கு சொன்னதாக வரலாறு கூறுகிறது..

ஶ்ரீரங்கம் பகல் பத்து -மூன்றாம் திருநாள்

பகல்பத்து-மூன்றாம் திருநாள்…(விவரமும்)
நம்மாழ்வார் சந்நிதியில் மதுரகவியாழ்வார் ,மூலமாக ஆழ்வார்கள்,ஆச்சாரியர்களுக்கு,நடைபெறும் மரியாதைகளும்…

நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து
உற்சவத்தின் 3 ம் திருநாளில் (13-12-15) காலை
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி,
மேலைப்படி மரியாதை ஆகி, சேனைமுதலியாருக்கும், மரியாதைகள் நடந்து,கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,
துலுக்க நாச்சியாருக்கு சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு,அரையர்களின் தாளத்துடன் பகல்பத்து மண்டபத்தில் (அர்ஜுன மண்டபத்தில்) ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,அரங்கனின் அடியார்கள் புடைசூழ,வீற்றிருப்பார்.

ஸ்ரீ வைகுண்டத்தில், எம்பெருமான் எவ்வாறு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,முமுக்ஷுக்கள்,நித்யசூரிகள் புடைசூழ,
நாலாயிர திவ்ய பிரபந்தத்தினை கேட்டு மகிழ்வானோ,
அவ்வாறே, பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும்,
இந்த பகல்பத்து விழா நடைபெறும் அர்ஜுனமண்டபத்தில், அரங்கனும் வீற்றிருப்பார்…

இன்றைய தினம்,அரையர் சேவையில்,
பெரியாழ்வார் திருமொழி இறுதிப்பதிகமான,
“சென்னியோங்கு” பதிகம் மற்றும்”நாச்சியார் திருமொழியில்”,
12 ம் பதிகம் ஈறாக,சேவிக்கபடும்.

“சென்னியோங்கு” (பெரியாழ்வார் திருமொழி) மற்றும்
மார்கழித் திங்கள் (ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவையின் 1ம்பாடல் )ஆக, இரண்டு பாசுரங்களுக்கும், அபிநய வியாக்கியானங்கள்.நடைபெறும்.அரையர் ஸ்வாமிகளால் “மார்கழித் திங்கள்” பாசுரத்திற்கு வியாக்கியானம் ஆகும் போது,கோஷ்டியார் நின்றுகொண்டு இருப்பார்கள்..

“சென்னியோங்கு” பாசுரங்களுக்கு,அபிநய வியாக்கியானங்கள் ஆகி,அபிநயம் முன்னதாகவும்,பாசுரம் பின்னதாகவும்,அந்தத் திருமொழி முழுவதும் சேவிக்கப்படும்.

“சென்னியோங்கு” 7 வது பாசுரத்தில்,
“திருப்பொலிந்த சேவடி எஞ்சென்னியின் மேல்பொறித்தாய்” என்பது வரை,அரையர் ஸ்வாமிகள் சேவித்து, நிறுத்தி, நம்பெருமாள் திருவடிகள், தலைமேல் ஸ்தாபிக்கப்பெற்ற, பெரியாழ்வார் பெற்ற பேறு, அடியார்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு,அரங்கனைப் பிரார்த்தித்து, அரையர் ஸ்வாமிகள், நம்பெருமாளின்(ஸ்ரீசடாரி) திருவடிகளைத் தம்முடைய ஸிரஸில் தரித்து வந்து, ஆழ்வார் ஆச்சாரியர்கள், கோஷ்டிக்கும், மற்றையோருக்கும் சாதிப்பார்கள்.இன்று அரையர்கள் தீர்த்தம் சாதிப்பது இல்லை.

(பெரும்பாலும்இந்த பகல்பத்து இராப்பத்து உற்சவங்கள் மார்கழி மாதத்தில் தொடங்கப்பெறும், இந்த மன்மத வருடம் போல்,
(2015) சில சமயங்களில்,மார்கழிமாதம் தொடங்கி 1 வாரத்திற்குள் “வைகுண்ட ஏகாதசி” வந்து விடுவதால், கார்த்திகை கடைசி வாரத்தில் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கப்படும்.காரணம் 20 நாட்கள் கொண்ட இந்த உற்சவத்தின்,11 வது நாளில்,வைகுண்ட ஏகாதசி ,கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவே)

பிறகு,மார்கழித்திங்கள் பாசுரத்தின் வியாக்கியானம் பூர்த்தியானதும்,ஆண்டாள்நாச்சியாரின் மனோரதத்தினைப் பூர்த்தி செய்து,”கோயிலண்ணர்” “திருப்பாவைஜீயர்” என்று பிரஸித்தி பெற்ற,ஸ்வாமி ராமானுஜர் சந்நிதியில் இருந்து,
பகல்பத்து மூன்றாம் திருநாளான இன்று,அரையர் ஸ்வாமிகளுக்கு “பஹுமாணம்” அனுப்பி வைக்கப்படும்.

அதுதவிர,திருப்பாவை பிரபந்தத்துக்கு ஏற்ப்பட்ட
“விட்டவன் விழுக்காடு”பகல் பத்து மூன்றாம்திருநாளான
இன்று “உடையவர்”சந்நிதிக்கே அனுப்பபடும்…

பிறகு வழக்கம் போல் நிவேதனம்.. விநியோகம்,,, ஆழ்வார்களும்,ஆச்சாரியர்களும் ஸ்ரீசடகோப (ஸ்ரீ சடாரி) மரியாதை ஆகி,உத்தர தினசரியா,பராங்குச பஞ்சவிம்சதி,
நக்ஷத்ர மாலிகா,முதலான ஸ்தோத்தர பாட கோஷ்டியோடு,
பகல் பத்து மண்டபத்தில் இருந்துபுறப்பட்டு,நம்மாழ்வார் சந்நிதிக்குப் போவார்கள்.

அங்கே நம்மாழ்வார் மாத்திரம்,தம்முடைய சந்நிதிக்குள் சென்று,தம்முடைய ஆஸ்தானத்தில் எழுந்தருளுவார். நம்மாழ்வார் சந்நிதியின் வெளியே நின்று சேவை சாதிக்கும், மற்றைய ஆழ்வார்களுக்கும்,ஆச்சாரியர்களுக்கும் மதுரகவியாழ்வார் செய்து வைக்கும் பாவனையாக,
கற்பூர ஆரத்தி நடைபெறும்.

பிறகு நம்மாழ்வாரின் பூமாலையில் ஒன்றைப்
பெரியாழ்வாருக்கு சாதிப்பார்கள்.எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும்,நம்மாழ்வாரின் ஸ்ரீ சடரியான
மதுரகவிகள் சாதிக்கப்படும்..

உடனே பெரியாழ்வார்,உடையவர்,கூரத்தாழ்வான்,
பிள்ளை லோகாச்சாரியார் இவர்கள் நால்வர் தவிர,
இதர ஆழ்வார்கள்,ஆச்சாரியர்கள் அவர்களின்
சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்…

இந்த நால்வரும் புறப்பட்டு,கார்த்திகை கோபுர வாசலுக்கு வெளியே,(ஆலய அலுவலகத்தின்அருகில்) கிழக்கு முகமாக எழுந்தருளும் பெரியாழ்வார் ,எதிரில்,கூரத்தாழ்வான்,
பிள்ளை லோகாச்சாரியார்களுக்கு மத்தியில், மேற்கு முகமாக இருக்கும் உடையவருக்கு, நம்மாழ்வார் தமக்கு சாதித்த பூமாலையை,சாதித்தபிறகு, பெரியாழ்வார் தம்முடைய
சந்நிதிக்கு எழுந்தருளுவர்.

பிறகு உடையவர்,கிழக்கு முகமாகத் திரும்பி,தமக்கு முதலில் நம்மாழ்வாரும்,பிறகு பெரியாழ்வாரும்,சாதித்த மாலைகளில், ஒன்றை ,கூரத்தாழ்வானுக்கு சாதித்து,அவரை சந்நிதிக்கு
அனுப்பி வைப்பார்…

பிறகு உடையவர்,மற்றொரு மாலையை பிள்ளை லோகாச்சாரியாருக்கு சாதித்து,அவரோடும்,ஸ்தோத்தர பாட கோஷ்டியினரோடும்,புறப்பட்டு, தங்களுடைய சந்நிதிக்கு உடையவரும்,பிள்ளை லோகாச் சாரியரும் எழுந்தருளுவார்கள்.

உடையவர் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளிய பிறகு,
அடியார்களின் கோஷ்டிக்கு,தீர்த்த பிரஸாத விநியோகம் ஆகும். இதுவரை பெருமாள்,அன்றைய உபயதாரர்களுக்கு சேவை மரியாதை அணுக்ரஹித்து,தோளுக்கினியானில் (பல்லக்கு) எழுந்தருளி,உடையவர் கோஷ்டியில் இருந்து,
சேவார்த்திகள் மற்றும் கைங்கர்ய பரர்கள் வரும்வரை
காத்திருந்து,அதன்பிறகே வழக்கம் போல் புறப்பட்டு,பத்தி உலாத்துதல் ஆகி, ஸர்ப்ப கதியில்,மூலஸ்தானம் திரும்புவார்…..

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு

ஶ்ரீரங்கம் பகல் பத்து -இரண்டாம் திருநாள்

இன்று பகல் பத்து -இரண்டாம் திருநாள் …(விவரம்)
அரங்கன் மகிழும் அத்யயன உற்சவம் ….

அத்யயன உற்சவத்தின் (பகல் பத்து ) முதல் திருநாளினைப் போலவே,அனைத்து வைபவங்களும் நடைபெறும்.இந்த
இரண்டாம் திருநாளில் (12-12-15) மாற்றம் என்னவென்றால், நம்பெருமாள் சாற்றிக்கொள்ளும் திருவாபரணங்களும்,
(நகைகள்) அரையர் சேவை பாசுரங்கள் மட்டுமே…

இந்த பகல் பத்து உற்சவம் முழுவதும்,நம்பெருமாள்
ஒருநாளுக்கு ஒருஒரு விதமான,கபாய்(அங்கி) சாற்றியும்,
பல விதமான திருவாபரணங்கள் சாற்றிக்கொண்டும்,கிரீடம்
அல்லது குல்லாய், ராஜமுடி அல்லது சவுரிமுடி, வைரமுடி இவைகளையும்,

செங்கழுநீர் பூக்களாலும்,கதிர்பச்சை இலைகள் கலந்த பூச்செண்டை,பின்புறம் முடிச்சில் திருக்குழல் கற்றையாக சாற்றிக்கொண்டு,மதுரகவிஸ்வாமிகளின் ,பிருந்தாவனத்தில்
இருந்து மட்டுமே அரங்கனுக்காக,நியமத்தோடும்,பக்தியோடும்
தயார் செய்யப்படும் பூமாலைகளையும் சாற்றிக்கொண்டு
சேவை சாதிப்பார்….

நம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ,இந்த உற்சவத்தின் ஒவ்வொருநாளும் சாற்றிக்கொண்டு,சிம்ம கதியில் கருவறையில் (காயத்ரி மண்டபத்தில்) இருந்து புறப்பாடு கண்டருளுவார்.

(சிம்மம்-சிங்கம்.ஸிம்ஹ கதி- சிங்கநடை )

அவ்வாறு புறப்பாடு கண்டு வெளியில் வரும் சமயம், சந்தனமண்டபத்திற்கு,எழுந்தருளியவாறே,இரண்டடி ஒய்யார நடையிட்டு,தன்னுடைய பரத்வத்தை வெளிபடுத்துகிறார்…

நம்பெருமாள் சிம்ம கதியில்(சிங்கநடை போட்டு)
மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தனமண்டபத்திற்கு
வரும் முன்,வேத்ர பாணிகளாகிய,(பாதுகாவலர்கள்)
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் கட்டியம் சேவிப்பர்….

(கட்டியம் = கட்டு + இயம். மன்னர் மரபு, அவரின் வெற்றி, புகழ் முதலியவற்றைக கட்டிக் கூறுதல்.அரங்கன் ஸ்ரீ ரங்கராஜன் ஆகையாலே,அரங்கனுக்கும் கட்டியம் கூறப்படுகிறது )

முதலில் வடமொழியான ஸம்ஸ்க்ருதத்தில் ஒருகட்டியமும்,
பிறகு தமிழ்மொழியில் ஒருகட்டியமும் சேவிப்பார்கள்….
அந்த கட்டியம் இதோ…..

“ஸ்ரீ யதி புரந்தராபராவதாரபூத ஸ்ரீவரவரமுநி ஸமுபந்யஸ்த

த்ராமிட ப்ரம்ஹ ஸம்ஹிதா ஸஹஸ்ர ஸாகா வ்யாக்யாந ஸ்ரவண ப்ரகுணித பரமாநந்த

பாரவஸ்ய ப்ரக்யாபித ததாசார்யபாவ ரங்கேஸ்வரா
எச்சரீகை…|

மன்னியசீர் மணவாளமாமுனி ஈடுரைப்பது கேட்டு
பின்னொரு ஸ்ரீசைலேசா எனப்பேசுமரங்கா, எச்சரீகை ||

என்று கட்டியம் கூறுவார்கள் ….

பிறகு ,மேலைப்படியில் கோயிலின் ஸ்தலத்தார்களுக்கும்,
தீர்த்த மரியாதை உரிமை உடையவர்களுக்கும்,மரியாதைகள் நடைபெறும்.

பிறகு நம்பெருமாள் மேலைப்படியை விட்டு கீழே இறங்கி,
வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார்.அப்போது அரங்கனின் அரையர்களை நோக்கி,
“இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்ற “அருளப்பாடு” சாதிக்கப்படும்.பெருமாளின் அனுமதி பெற்ற பின்னரே இது தொடங்கும்.இந்த அனுமதிக்கு அருளப்பாடு என்று பெயர்.
இது கிடைத்தவுடன் அரையர்கள் “நாயிந்தே’ என்று கூறி,
உடனே அரையர் ஸ்வாமிகள், தாளத்தோடு,இசையை தொடங்குவார்கள்…

இதன்பிறகு,நம்பெருமாள் சேனைமுதலியார் சந்நிதியின்,
முன்புறம் எழுந்தருளி, சேனை முதலியாருக்கு மரியாதைகள் நடைபெறும்.பிறகு பகல்பத்து (அர்ஜுன)மண்டபத்தின்
முன் பகுதியில் உள்ள, கிளிமண்டபத்தில் நம்பெருமாள்
படியேற்ற சேவை ஆகும்.

கிளிமண்டபத்தில் “சாரீயோம்” என்ற அருளப்பாடு சாதிக்கப்பட்ட உடனே, நட்டு முட்டு வாத்தியங்கள் முழங்கப்படும்.

“சாரீயோம்” என்ற அருளப்பாடு,நல்ல குரல்வளம் படைத்த நட்டுவாங்கனை நோக்கி கூறப்படுவதாகும்.ஒருகாலத்தில் (முற்காலங்களில்) கிளிமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியவுடன்,நல்ல குரல்வளம் மிக்க நட்டுவாங்கன் பாட, வாத்தியங்கள் முழங்க,தாஸிகள் நர்த்தனம் ஆடி வருவார்களாம்.
1953 ம் ஆண்டு,தாஸிகள் ஒழிப்புச் சட்டத்தின் படி,இத்தகைய இசையுடன் கூடிய நடனங்கள் நின்று போயிற்று…

(குறிப்பு- தாஸிகள் என்றால்,அரங்கனை தலைவனாக
ஏற்ற,அரங்கனுக்கு மட்டுமே கைங்கர்யங்கள் (சேவைகள்)
செய்கின்ற பெண் அடியார்கள்…ஆனால் காலப்போக்கில்
இதற்கு தவறான,அனர்த்தமான பொருளுடன், சில அர்த்தம் புரியாதவர்களால், வேறு அர்த்தங்கள் பரப்பப்பட்டது…
அரங்கனை அன்றைய துலுக்க ராஜாக்களிடம் இருந்து
காப்பாற்றியது “வெள்ளையம்மாள்”என்னும் பேரழகியான,
இந்த நடன கூடத்தினைச்சேர்ந்த ஒரு தாஸிதான் என்பது வரலாறு.அரங்கனை கொள்ளை அடிக்கவும்,ஆலயத்தை கைப்பற்றவும் வந்த துலுக்க அரசனை, கோபுரத்தின் மேலே அழைத்துச் சென்று,தள்ளிவிட்டு கொலைசெய்து,தானும்
உயிரை மாய்த்துக்கொண்ட,தாஸி வெள்ளையம்மாளின்
அரங்கனுக்காக செய்த,தியாகத்தையும் ,சேவையையும் ,
துலுக்க அரசனைக் கொன்று,தானும் தற்கொலை செய்து
கொண்ட,நிகழ்வை குறித்தே, அரங்கனின் கிழக்கு வாயிலின் கோபுரத்திற்கு “வெள்ளை கோபுரம்” என்ற பெயர் அன்றிலிருந்து இன்றும் அழைக்கப்படுகிறது.தாஸி என்பவர்கள்
எம்பெருமானுக்கு மட்டுமே ,சேவகம் செய்பவர்கள்
என்பதை மனதில் கொள்க.வேசி என்ற வார்த்தையும்,
தாஸி என்ற வார்த்தையும் வேறு உவமைகளைச் சொல்லும் )

பிறகு,நம்பெருமாள், கிளிமண்டபத்தில் இருந்து படியேற்றம் ஆகி, அர்ஜுன மண்டபத்தின் உள்ளே நுழைவார்..அதன்பிறகு
நம்பெருமாள் “சுரதானி” என்னும் துலுக்க நாச்சியார் சந்நிதிக்கு எதிரில்,படியேற்றசேவை சாதித்து,.அங்கே சித்திர ரூபமாக (ஓவியமாக) எழுந்தருளி இருக்கும்,”சுரதானி” என்னும்
துலுக்க நாச்சியார் முன்பு,சேவை சாதிப்பார்…அரையர்கள் கொண்டாட்டம் ஆனபிறகு,பகல்பத்து உற்சவம் நடைபெறும் அர்ஜுனமண்டபத்திற்கு ,நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார்.

நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் (பகல்பத்துமண்டபம்) எழுந்தருளியிருக்கும் போது,கீழ்க்கண்டவாறு,
ஆழ்வார்களுக்கும்,ஆச்சார்யர்களுக்கும்,அருளப்பாடு சாதிக்கப்படும்.

திருநாளுடையபிரான்,(கலியன்) ராமானுசன், பட்டர்பிரான், மதுரகவி,பொய்கை,பூதம்,பேயார்,சேரன்,பாணன்,
தொண்டரடிப்பொடி,மழிசை,நம்பி,ஆழ்வான்,
பிள்ளைலோகாச்சாரியாருக்கு அருளப்பாடு என்று,
அரங்கன் ஆலய ஸ்தாநீகர் அருளப்பாடு சாதிப்பார்….
ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்…

அதன் பிறகு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து,பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி” துக்கச்சுழலை” என்று தொடங்கும்,
பாசுரம் தொடங்கி,மொத்தம் 250 பாசுரங்கள், அரையர் ஸ்வாமிகளால்,அர்ஜுன மண்டபத்தில்,அரங்கன் கேட்டு மகிழ்வார்….

அந்த பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களில் “ஆற்றிலிருந்து” எனத்தொடங்கும் பாசுரத்திற்கும்,”தன்னேராயிரம்” எனத்
தொடங்கும் பாசுரத்திற்கும்,இந்த இரண்டு பாசுரங்களுக்கும்,
அரையர் ஸ்வாமிகள் அபிநயம் மற்றும் வியாக்கியானங்கள் சேவிப்பர்….

அரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டு
மகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.
நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு,
ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”
தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,
“பத்தி உலாத்துதல்” ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.
பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

அரங்கன் இந்த திருநாள்களில், காலையில் கருவறையில்
இருந்து, ஸிம்ஹ கதியில் புறப்படுவார்.
(ஸிம்ஹம்-சிங்கம்,ஸிம்ஹகதி-சிங்கநடை)

அரங்கன்(நம்பெருமாள்) அர்ஜுன மண்டபத்தில் இருந்து,
புறப்பாடு கண்டருளும்போது,கஜகதியில் பத்தி உலாவுவார்.
(கஜம்-யானை,யானையைப் போல் நடந்து சேவை சாதிப்பார்.
இதற்கு கஜகதி என்று பெயர்)

ஸர்ப்ப கதியில் நம்பெருமாள் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளுவார்..(சர்ப்பம்-பாம்பு-சர்ப்பகதி-பாம்பினைப்போல் ஊர்ந்து சேவை)..

ரங்கா ரங்கா ரங்கா…

அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி

 
 
அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் கூறியுள்ளதாவது :-
 
எப்பொழுது கூட வேண்டும் எங்கு கூட வேண்டும் என்ற அனைத்து கேள்விக்கும் தெளிவான விடை கொடுக்கும் பதிவு இதுதான் !!
 
சகாயம் அண்ணாவை அரசியல் அரியணையில் ஏற்றி விட்டால் நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை முடிந்துவிட்டது
 
அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் அது அனைத்தும் நாம் Facebook மற்றும் ,whats appல் இதை பேசிக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு இளைஞனும் இதை தனது கடமையாக என்னி ஒன்று கூடும் மிக பெரிய கூட்டத்தில்தான் உள்ளது
 
மாற்றம் வேண்டும் வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தால் Facebook version மாறுமே தவிற தமிழகம் மாறாது !
 
50 ஆண்டு கால கூட்டணி ஊழல் ஆட்சியிலிருந்து நம் தமிழகத்தை காப்பாற்ற…
 
வல்லரசு எனும் வார்த்தையை நாம் நாவினால் உச்சரிக்க……
 
சாலைகள் ஒலுங்காக அமைய ……
 
கட்டிடங்கள் உறுதியாக எழுப்ப…..
 
நீர் நிலங்கள் மற்றும் இயற்கை வளம் கொள்ளைகளை தடுக்க….
 
மாணவர்களுக்கு இலவச கல்வி அமைய ……..
 
இறுதியாக லஞ்சம் இல்லா தமிழகத்தை உருவாக்க 
சகாயம் ஐயாவிற்கான அவருடைய சிரிய நாற்காலியிலிருந்து அவரை எழ சொல்லி தமிழக முதல்வர் அரியணையில் நாம் அவரை ஏற்றி விடும் அந்நாளில் மேலே கூறிய அனைத்தும் தானாக நடக்கும்
 
அவரை அந்த அரியணையில் உட்கார நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவருக்க ஆதரவு கொடுக்கும் வகையில் மிக பெரிய அணியாக உருவாக வேண்டும் என்பதுதான் அதற்கான நேரம் தற்பொழுது வந்துள்ளது. 
 
வரும் ஞாயிறு 20.12.2015 அதாவது இன்னும் 5 நாட்களில் தமிழகமெங்கும் இருக்கும் இளைஞர்கள்.சென்னையை நோக்கி வரவேண்டும் காலை 10 மணிக்குள் R R ஸ்டேடியத்திற்கு வந்துவிடுங்கள் அங்கு உங்கள் அனைவரையும் வரவேற்க எனது நண்பர்களுடன் தயாராக இருப்பேன்.
 
மேலும் தகவலுக்கு கீழ் இருக்கும் இளைஞர்களை தொடர்புகொள்ளுங்கள் அவர்கள் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தர காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
+91 97104 44990
+91 99943 77753
+91 99 62 297517
+91 84283 64164
 
இளைஞர்களே 
இதையும் நாம் தவற விட்டுவிட்டோம் என்றால் இனி இது போன்ற ஒரு செயலை செய்ய நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.
 
வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என்று கூறி வேதனை பட்டுக்கொண்டிருந்தீர்கள். 
 
நீங்கள் அனைவரும் ஒன்றே ஒன்று செய்யுங்கள் 
நமக்கு மீடியா Support இல்லை ஆனால் இதை இன்னும் ஐந்து நாளில் பல இளைஞர்களிடம் கொண்டு செல்ல உங்கள் போனின் முன் பக்க கேமராவில் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடக்க இருக்கிறது அதில் போய் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என்றவாறு பேசி வீடியோ ரெக்கார்டிங் செய்து அதை நீங்கள் உங்களுக்கு சொந்தமான வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்
 
மாற்றம் என்பது எளிதில் கிடைப்பது அல்ல 
போராடி வெல்வது.
 
சென்னைக்கு வரும் ஒவ்வொருவரும் இளைஞர்கள் அல்ல தன் தாயகத்தை காக்க வரும் போர் வீரர்கள் !
 
தொடர்ந்து செய்திகளுக்கு இணைந்திருங்கள். என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி நடிகை ரோஜாவுக்கு ஓராண்டு தடை

 
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவுக்கு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா ஐதராபாத்தில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குறித்து விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அதிகாரிகள் தற்போது விஜயவாடாவில் தங்கியுள்ளனர். விஜயவாடாவில்தான் தற்போது 10 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அட்டகாசம் செய்யும் கும்பல் நடமாடி வருகிறது.
 
இந்த கும்பல் 10 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுப்பார்கள். வட்டிக்கு பணம் வாங்குபவரின் மனைவி மற்றும் மகள்களிடம் புரோ நோட்டில் கையெழுத்து வாங்குகிறார்கள். வட்டி அசலும் கட்டாவிட்டால் குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளுகிறார்கள். இதில் ஆளுங்கட்சிசட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது.
 
சந்திரபாபு நாயுடு இருக்கும் விஜயவாடாவிலேயே இது நடக்கிறது. ஆனால் இதில் ஈடுபட்டுள்ள தங்கள் கட்சியினரை காப்பாற்றும் முயற்சியிலேயே சந்திரபாபு நாயுடு ஈடுபடுகிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு சிகாகோ தேசிய பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெறும் தகுதி சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை.அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் அளவுக்கு அந்த பல்கலைக்கழகம் தரம் தாழ்ந்து விட்டதா? அராஜக ஆட்சிக்கு வேண்டுமானால் சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” என பேசியிருந்தார்.
 
இந்த நிலையில், முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவை ஒராண்டு இடை நீக்கம் செய்து சபாநாயகர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணே, மன்னிச்சிருங்கண்ணே: கவுண்டமணியிடம் கெஞ்சிய இளம் நடிகர்!

செகண்ட் இன்னிங்சில் 49ஓ படத்தின் அதிரடி வெற்றிக்கு பிறகு கவுண்டமணி நடித்துக்கொண்டிருக்கும் படம், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. ஜெயராம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், சௌந்தர்.

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்தவர் சௌந்தரராஜா. சௌந்தரராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார், மெட்ராஸ் பட புகழ் ரித்விகா. காமெடி கிங் கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொள்ளச் சொன்னால் கண்களை அகல விரித்து பிரமிப்பு காட்டுகிறார், சௌந்தரராஜா.

“கவுண்டமணி சார், எந்த டயலாக்கையும் வாசிக்க மாட்டார், வாசிக்கச்சொல்லி கேட்பார். ரெண்டு, மூணு தடவை வாசிக்கச்சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியாக டேக் போகலாம்ணு சொல்லிடுவார். ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக் ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும் இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான் அவர் இவ்ளோ பெரிய இடத்தில் இருக்க காரணம்.

அப்பேர்ப்பட்ட திறமைக்காரர் முன்னாடி, நான் பண்ணுன கூத்தைக்கேட்டா உங்களுக்கும் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல. ஒரு சீன்ல, கவுண்டமணி சார், நான் அப்புறம் ரித்விகா காம்பினேஷன். காட்சிப்படி கவுண்டமணி சார் ரொம்ப நக்கலா எங்களைப் பத்தி பேசிட்டிருப்பார். அதைக்கேட்டு, நான் சீரியஸா, செம கோபத்துல அவரை பார்த்து முறைக்கணும். கவுண்டமணி சார், நக்கலா பேசுறப்போ, அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன் நான்.

அசால்டா, அவர் ஸ்டைல்ல, செம கெத்தா நக்கலா பேசுனப்போ, நான் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, அவரோட நடிப்பையும் கெத்தான அவரோட ஸ்டைலையும் மெய்மறந்து ரசிச்சிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவரை மனசு ரசிச்சதுல அவர் மேல எனக்கு கோபம் வர மாதிரி நடிக்க முடியல. பட்டு பட்டுன்னு சிரிச்சிட்டேன். இதே கூத்து தான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது.

கவுண்டமணி சார், நான் அடிச்ச கூத்துல லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் தான், சுதாரிச்சிக்கிட்டு, ‘அண்ணே, மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக்கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம் தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார் கூட நடிச்சது எனக்கு பெரிய அனுபவம்”, என அனுபவிச்சு சொல்கிறார், சௌந்தரராஜா.

“எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”, படம் தவிர விஜயசங்கர் இயக்கும் “ஒரு கனவு போல” படத்தில் இராமகிருஷ்ணனுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார் சௌந்தரராஜா. சர்ப்ரைஸ் செய்தியாக அட்லி இயக்கும் “விஜய்59” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த 3 படங்களும் என்னோட சினிமா பயணத்தில் கண்டிப்பாக திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கையோடு சொல்கிறார், சௌந்தரராஜா.

தில்லி மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளி சிறுவனை விடுவிப்பதில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி:

தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த சிறுவனை விடுவிப்பதற்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தற்போது குற்றவாளி சிறுவனுக்கு வயது 21, ஆகும். அவன் வருகிற ஞாயிறு அன்று விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாணவி ஜோதி சிங்கின் தயார் ஆஷா தேவி, அவனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். “அவனை விடுதலை செய்தால், சமூகத்திற்கு நன்மையாக இருக்காது. அவனை விடுதலை செய்தால், அவனுடைய முகம் காட்டப்படவேண்டும்,” என்று கூறினார். இவ்விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அமைச்சர் மேனகா காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கண்காணிப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தார்.

இவ்விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுக்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

3 ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், இளங்குற்றவாளி திருந்தி விட்டான் என்றும், அவனால் சமூகத்துக்கு பிரச்னை ஏதும் இருக்காது என்றும் உறுதியாக தெரிகிற வரையில், அவனை விடுதலை செய்யக்கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அதன் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது. தற்போது சுப்பிரமணிய சாமி மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுக்கள் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சுப்பிரமணிய சாமி எழுப்பிஉள்ள கருத்துக்கு பாராட்டு தெரிவித்து உள்ள உயர் நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் புதுதில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.

குற்றவாளிகளில் மிகவும் கொடூரமான குற்றத்தை சிறுவன அரங்கேற்றியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. ”மற்றவர்களை விட சிறுவனே மிகவும் கொடூரமான முறையில் குற்றம் புரிந்து உள்ளான். அவனுக்கு பேய்குணம் உள்ளது. புனர்வாழ்வு நடவடிக்கையில் அவன் சரியாக மாட்டான். இந்நாட்டில் எல்லோருக்கும் சட்டத்தின் மீது பயம் இருக்கவேண்டும், ஆதலால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாரதீய ஜனதனா எம்.பி. ஹேமமாலினி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்-1 பயிலும் புனே மாணவியை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி: மீட்ட போலீசார்

மும்பை:
மூளைச் சலவை
மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு அல்ஐசீரா தொலைக்காட்சியில் சிரியா போர் தொடர்பான டாகுமெண்டரியை பார்த்துள்ளார். அதன் பிறகு தினமும் அல்ஐசீரா டி.வி. செய்திகளைப் பார்த்த அவர் மனதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் செய்த பிரசாரத்தால், அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத் தளத்தை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் அவர் தொடர்பு கொண்டுள்ளார்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவனின் நட்பு கிடைத்ததும், இந்தியாவைச் சேர்ந்த சிராஜுதீன் என்ற பயங்கரவாதியுடன் அந்த மாணவிக்கு தொடர்பு ஏற்பட்டதும், அவருடைய போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 200 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் அவர் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி பேசி வந்தார். அவர்கள் அந்த மாணவியிடம் தினமும் பேசியுள்ளனர். இதனால் அந்த மாணவி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடிமையாகவே மாறியுள்ளார். பயங்கரவாதிகள் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கினார். இதனால் அவரது எல்லா பழக்க – பழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டது. எப்போதும் ஜீன்ஸ் அணிந்து நவ நாகரீக மங்கையாக வந்தவர் அதை துறந்து பர்தா அணியத் தொடங்கினார். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவர் பெற்றோர் இதுபற்றி விசாரித்த போது அந்த மாணவி பதில் சொல்லாமல் எரிச்சலில் பேசியுள்ளார்.

இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதி சிராஜுதீன் அண்மையில் ராஜஸ்தானில் போலீசாரிடம் பிடிபட்டதால் அவன் மூலம் புனே மாணவி ஐ.எஸ். இயக்கத்துக்கு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அந்த மாணவியை கண்காணித்தனர். சமூக வலைத் தளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் அந்த மாணவி யார் – யாரிடம் எல்லாம் பேசி வருகிறார் என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற் பட்டது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் அந்த மாணவியை 2016-ல் சிரியாவுக்கு அழைத்துக் கொள்வதாக உறுதி அளித்திருந்தது தெரிய வந்தது. அதற்கு முன்பு அவருக்கு ரகசிய ஆயுத பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பியிருந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பதில் அனுப்பிய அந்த மாணவி டாக்டருக்குப் படிக்க தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதேநேரன்ம் தேவைப்படும் பட்சத்தில் தற்கொலை பயங்கரவாதியாக மாறுவதற்கு, தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், அரேபியா, கென்யா, துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனும் அவர் தொடர்பில் இருப்பது தெரிந்தது.

இதை அடுத்து, அந்த மாணவியை மீட்டு, நல்வழிப்படுத்த பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இந்த வாரத் தொடக்கத்தில் அவர்கள் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று விசா ரணை நடத்தினார்கள்.

அதன் பிறகே அந்த மாணவி ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் மகள் தற்கொலை பயங்கரவாதியாகும் அளவுக்கு மனம் மாறுவாள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று கதறியுள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவியிடம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் எத்தகைய கொடூர சிந்தனை கொண்டவர்கள் என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்த ஈவு இரக்கமற்ற கொலைகள் பற்றியும் கூறப் பட்டது.

ஆனால், இந்த விளக்கங்களை அந்த மாணவி ஏற்க மறுத்தார். இதை அடுத்து புனேயில் உள்ள ஒரு மௌல்வி உதவியுடன் மாணவியிடம் பேசினார். மருத்துவர்கள் மூலமாகவும் மனநல கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மாணவி சமரசம் ஆகி கொஞ்சம் தெளிவு கண்டார்.

விசா கட்டண இரட்டிப்பு முடிவு: ஒபாமாவிடம் பிரதமர் மோடி கவலை

புது தில்லி:

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி எச்-1பி மற்றும் எல்-1 விசாவுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்க அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை, 1.1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான செலவு மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. மேலும், எச்-1பி விசாவுக்கான சிறப்பு கட்டணத்தை 4 ஆயிரம் டாலராகவும் எல்-1 விசாவுக்கான சிறப்புக் கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்த்தவும் செனட் சபை முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு, இப்போதுள்ள கட்டணத்தைப்போல 2 மடங்கு ஆகும். இந்தச் செலவு மசோதா மீது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு 100 கோடி டாலர் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி, 2001-ம் ஆண்டு உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலில் (9/11) பாதிக்கப்பட்டவர்களின் சிகிச் சைக்காக பயன்படுத்தப்படும். அமெரிக்காவின் இந்த முடிவால் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், பாரீஸ் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடியை ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமெரிக்கா விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துவது குறித்து எடுத்துள்ள முடிவு கவலை அளிப்பதாக ஒபாமாவிடம் மோடி தெரிவித்தார்.

இந்தியா ரகசியமாக அணு ஆயுத நகரை எழுப்பி வருகிறது: அமெரிக்க பத்திரிகை

இந்தியா ரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தை கட்டமைத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த ‘ஃபாரின் பாலிசி’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன், லண்டன் நகரங்களை சேர்ந்த ராணுவ நிபுணர்களின் பல கட்ட ஆய்வுக்கு பின் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டதகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நகரம் தெற்காசியாவில் மிகப் பெரிய ராணுவ கேந்திரமாகவும், அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கப்படும் இடமாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களும் கொண்டிருப்பதோடு, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் கொண்ட பிரமாண்டமான அணு ஆயுத நகராக விளங்கும். இதில் ஹைட்ரஜன் குண்டுகளை தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரோனியம் சேமித்து வைக்கப்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த நகரம் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்றும் ‘ஃபாரின் பாலிசி’ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.