Home Blog Page 5909

மதுவிலக்கு 2 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

 
 
 
2 கட்டங்களாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் முழு மது விலக்கு அமல் இல்லை என்றும், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்தார்.
 
அதன் காரணமாக அந்த கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன்படி, அங்கு தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 26–ந் தேதி நடந்த மதுவிலக்கு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்ர் நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதியில் இருந்து, பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
 
தற்போது நிதிஷ்குமார் அரசு பல்டி அடித்துள்ளது. ஒரே கட்டமாக அங்கு முழு மது விலக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி மாநில கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:–
 
மாநிலத்தில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 1–ந் தேதி முதல் உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
 
6 மாதங்கள் கழித்து இரண்டாவது கட்டமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
 
நகர்ப்புறங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் (பி.பி.சி.எல். என்றழைக்கப்படும் பீகார் மதுபான கழகம்) வெளிநாட்டு மது பானங்கள் அரசு கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
 
மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் நடத்துவதற்கு உரிமம் வழங்கும் முறை ஒழித்துக்கட்டப்படும் என்று அப்துல் ஜலில் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்

 
 
பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாநில வர்த்தக அணி செயலாளர் இல.ராஜேந்திரன், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
 
கண்டன ஆர்ப்பாட்டத்திக்கு பின் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பா.ஜ.க. மற்ற கட்சிகளை விடவும் பலம் பொருந்திய கட்சி. சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பழிவாங்கிதான் அரசியல் நடத்தவேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. விளம்பரத்துக்காக நரேந்திர மோடியை தரக்குறைவாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
 
மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ளார். மக்கள் தலைவரை எந்தவொரு மக்கு தலைவர்களும் தரக்குறைவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. காங்கிரஸ் சார்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கும், மோடியை தரக்குறைவாக பேசியதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் பொருளாதார நிலையும், சிறு, குறு தொழில்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்யலாம் என்று மோடி உத்தரவின்பேரில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று (19-12-2015)பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
 
ஆம்பூரில் பா.ஜ.க. தொண்டர்களை ஆம் ஆத்மி போர்வையில் மர்ம ஆசாமிகள் சிலர் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு ஒருதலைபட்சமாக காவல் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்
 
 
 
 

சென்னை விமான நிலைய சுங்கப் பிரிவில் முறைகேடுகள்!: சிபிஐ 7 மணி நேரம் சோதனை

சென்னை:

சென்னை விமான நிலைய சுங்கத் துறை பிரிவில் முறைகேட்டுப் புகார்கள் வந்ததை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்படும் தங்கத்தில், குறைந்த அளவு மட்டுமே பறிமுதல் செய்யப்படுவதாகவும், சுங்க தீர்வை குறைவாக போடப்படுவதாகவும் சரக்ககப் பிரிவிலும், சுங்கத் தீர்வை போடுவதிலும் முறைகேடுகள் நடப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை சி.பி.ஐ. சூப்பிரண்டு ரூபா தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் உள்ள சுங்க இலாகா பிரிவுக்குச் சென்றனர். இன்னொரு பிரிவு விமான நிலைய சரக்ககப் பிரிவுக்கு சென்றது. சுங்க இலாகா பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு, சூப்பிரண்டு, ஊழியர்கள் என அனைவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர்.

பின்னர் அங்கே போடப்படும் சுங்கத் தீர்வை ஆவணங்கள், முறையாக சுங்கத் தீர்வை வசூலிக்கப்பட்டதா?, அதிகாரிகளிடம் அப்போது இருந்த பணம் முறையாக அவர்கள் வைத்திருந்ததுதானா என ஆய்வுகளை மேற்கொண்டனர். விமான நிலையத்தில் அதுவரை பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு எவ்வளவு? அதற்கான கணக்கு என்ன என்பதையும் கேட்டறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவற்றை சரி பார்த்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய காலை 8 மணி வரை நடந்தது. இதில் சி.பி.ஐ. அதிகாரிகள் சில ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சோதனைக்குப் பின்னர் யாரும் கைது செய்யப்படவுமில்லை.

மழை வெள்ளத்துக்கு பின்னர் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கவில்லை என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் சென்னைக்கு தங்கம் கடத்திவரப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றதாம்.

விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சோதனை செய்வது வழக்கம். இவர்களில் ஒரு சில அதிகாரிகளுக்கு, கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதை கண்காணிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நள்ளிரவு முதல் காலை வரை சோதனை செய்துள்ளனர். பன்னாட்டு முனையங்களில் துபாய், பக்ரைன், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வரும் இரவு நேரத்தில் சோதனை நடத்தினால், அப்போது கொண்டு வரப்படும் பொருட்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் எப்படி சுங்க தீர்வை போடுகின்றனர் என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்தனராம்.

இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் செல்போன்களை அணைத்து வைக்கப்பட்டது, தரைவழி இணைப்பு போன்கள் அனைத்தும் விமான நிலைய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. விமான நிலைய சுங்க இலாகா பிரிவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறதா? : கருணாநிதி

 
 
தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறது என்று வைகோ தெரிவித்த கருத்துக்கு, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைகோ உணரவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருணாநிதி கூறியுள்ளார்.
 
கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
நால்வர் அணி
 
கேள்வி:- தற்போதைய மழைநீர் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு சிலர் தி.மு.க. ஆட்சியையும் சேர்த்துக் குறைசொல்கிறார்களே?. குறிப்பாக “நால்வர்” அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே?.
 
பதில்:- தி.மு.க.வை பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே சாட்டுகின்ற குற்றச்சாட்டு இது. அ.தி.மு.க. அரசு தி.மு.க. ஆட்சியின் பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதன் விளைவுதான் சென்னை பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே தவிர, தி.மு.க. ஆட்சி மீது எந்தத்தவறும் சொல்ல முகாந்திரம் சிறிதும் இல்லை. எனினும் அ.தி.மு.க. அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், தி.மு.க.வை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உள்நோக்கமும் கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து வருகிறது. நால்வர் அணியின் கருத்துகளுக்கு இதுவரை நான் பதிலளிக்காமல் தான் இருந்தேன். ஆனால் குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பது சரியல்ல அல்லவா?.
 
அ.தி.மு.க. அனுதாபி
 
கேள்வி:- சென்னைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியர்களைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்களே?.
 
பதில்:- சில மாதங்களுக்கு முன்பு கூட மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பேராசிரியர் ஒருவரைப் பணியில் இருந்து துணைவேந்தர் நீக்கி, அதனால் மாணவர்கள் போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. இப்போதும் தாக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படலாம் என்றும் செய்திவந்துள்ளது. பல்கலைக்கழகத் துணை வேந்தராக, அ.தி.மு.க. அனுதாபி ஒருவரை நியமித்ததன் காரணமாகவே பிரச்சினைகள் எழுவதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளாமல் மாணவர்களின் கல்வியோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.
 
நிதி சுமை ரத்து?
 
கேள்வி:- பெட்ரோல், டீசலுக்கு திடீர் என வரி உயர்வு செய்யப்பட்டிருக்கிறதே?.
 
பதில்:- பெட்ரோல், டீசலுக்கு விலை குறைக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை முதல் நாள் ஏற்படுத்திவிட்டு, அடுத்த நாள் பெட்ரோல் லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 1.17 பைசாவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும். எனவே, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமார் 2,500 கோடி ரூபாய் நிதிச் சுமையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
மக்கள் நினைப்பதை…
 
கேள்வி:- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “எங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது, இன்றைக்கு மக்கள் மத்தியில் தி.மு.க. செல்வாக்கு இழந்து வருகிறது” என்று கூறியிருக்கிறாரே?.
 
பதில்:- “வைகோ”வைப் பொறுத்தவரையில் அவரை நான் நன்கறிவேன். நல்ல பேச்சாளர், ஆனால் நாட்டிலே என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கட்சியில் இருந்து வரிசையாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் விலகி, தி.மு.க.விலே தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் வைகோ அவருடைய கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும், தி.மு.க. செல்வாக்கை இழந்து வருவதாகவும் கூறுகிறார் என்றால் அவரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?. அதுமாத்திரமல்ல; அவருடைய கட்சியினரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் ஏதோ வலியுறுத்தி அழைத்து வருவதைப் போலவும், எனக்குத் தெரியாமல் அந்தச் சம்பவங்கள் நடைபெறுவதைப் போலவும் வைகோ பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
அதுவும் தவறான எண்ணம். எனக்குத் தெரியாமல், தி.மு.க.வில், இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை என்பதை அனுபவத்தின் அடிப்படையில் வைகோ அறிவார். அரசியலில் நாகரிகம் இல்லாமல், ம.தி.மு.க. நண்பர்களை தி.மு.க.வில் கட்சித் தலைமை இணைத்துக் கொள்வதாகவும் வைகோ பேட்டியளித்திருக்கிறார்.
 
ஒரு கட்சியில் இருந்து விலகி வருபவர்களை, மற்றொரு கட்சியிலே இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல. வைகோ உள்ளிட்ட அனைவருமே தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று இணைந்து கொண்டதுதானே ம.தி.மு.க. அது மட்டும்தான் நனி நாகரிகமா?. என்று
கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கேள்விக்கென்ன பதில்

ஆலய அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் நீங்கள் ஏது கருத்து ஒன்றும் சொல்லவில்லை என்று நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விஜாரித்தார்கள்.

கருத்து சொல்லும் அளவுக்கு இந்த ‘சின்னப்பயலை’யும் ஒரு பெரிய பய ரேஞ்சுக்கு உசத்தி வைத்திருக்கும் மாண்புமிகு நட்பு வட்டாரங்களுக்கு மாபெரும் நன்றி.

ஆன்மிகவாதியாக, சமூக சேவகராக, ஆரோக்கியமான சமூகத்தை விரும்புபவராக தன்னை வடிவமைத்துக் கொண்டு செயல்படும் இசைஞானி இளையராஜாவிடம் அப்படி ஒரு கேள்வியை அந்த செய்தியாளர் கேட்டுவிட்டு அவர் அறிவிருக்கா, அறிவிருக்கா என்று கேட்டது போலான ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது இல்லைதான்!

பாவம்…! ரமணருக்கும் சங்கரருக்குமாக, இன்னும் பல தெய்வங்களுக்குமாக பாடல்களையும் பாட்டையும் எழுதிவிட்டு அவர் படும் பாடு, அறிவுள்ளவர்களுக்குத்தான் தெரியும்!

அப்பன் வழியில் இன்றி தப்பிப் போன தறுதலைகள் வீட்டில் இருந்துவிட்டால், தகப்பன் படும் பாடு எப்படிப்பட்டது என்பதை அறிவுள்ளவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்!

வீட்டில் ஓர் இழப்பைச் சந்தித்து விட்டவனுக்கு, விடு-கதைகளில் மனசு செல்லாதுதான்!

அந்த உணர்ச்சியின் வேகத்தில் ‘அறிவிருக்கா’ என்று அவர் கேட்டு விட்டதை, ‘அறிவுள்ள’ ஊடகங்கள்தான் அது தங்களுக்கு மிக மிக அதிகம் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கும்!

இப்படி எனக்கும் கூட இப்படி சிலரிடம் கேள்விகள் கேட்டு,‪#‎அறிவிருக்கா‬ பட்டம் வாங்கிக் கொள்ள ஆசைதான்! அதை அவரவர்களின் ஊடகங்கள் எப்படி ஒளிபரப்பும் என்பதையும் கண்டுவிட ஆசைதான்!

* கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாதே என்பதற்காகத்தான் என்று சொல்லி, கொல்லைப்புற வழியாக மோதிரம் காட்டி, மாட்டி அறிவாலய மடாதிபதியாகிவிட்ட திருவாளர் திருக்குவளையார்…

* சாகும்வரை ஒரே ஆசிரியர், தலைவர் என்று ஓர் அமைப்பை ஜனநாயக மயமாக்கியிருக்கும் மானமிகு ஆசிரியர் வீரமணியார்,

* மாணவர்கள் பலரை மெண்டலாக்கிவிட்ட பேராசிரியர் சுபவீயார்,
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு உழைத்தே தீருவேன் என்று விடாப்பிடியாய் தன்னை சிலுவையில் காட்சிப் படுத்திக் கொண்ட பரம ஏழை முதல்வர்,

* வெள்ளத்துக்கு காரணம் ஆக்கிரமிப்பு என்று அதற்கு அனுமதி கொடுத்த அதிகார வர்க்கத்தை பச்சை பச்சையாய் வறுத்தெடுக்கும் அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனர்…

* வைகுண்டத்தைப் போல் எமக்கு புனிதமான தாமிரபரணியையே ஆட்டயப் போட்டு விட்டு, அதைத்தவிர மத்த செய்தியெல்லாம் நீதிபதி ரேஞ்சுக்கு கேள்வி கேட்கும் ஒரு சேனலை வைத்துக் கொண்டு… நீயெல்லாம் ஒரு திருநெல்வேலிக்காரனாடா… என்று கேள்வி எழுப்பும்படியாய் இருக்கும் அந்த ‘வெள்ள’ வேட்டிக்காரர்!

இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டேதான் போகிறது! இதில் ஒரு நாளிதழ் பத்திரிகை ஆசிரியர், ஒரு டிவி செய்தி ஆசிரியர், இன்னும் எழுத்தாள பத்திரிகையாள வர்க்கத்தில் சிலர் என சிலவும் அடக்கம்! பட்டியல் முழுமை பெற நாளாகும். ஆனால் என்ன செய்வது..?

ஆகம விதிப்படி என்று சொல்லிவிட்டதால், ஆகமத்துக்குள் அமர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேனே!
ஆகமத்தை மட்டுமே கேள்விக்கு உள்ளாக்கி விட்டதால், ஆகுமா ஆகுமா என்று மண்டையைப் பிராய்ந்து கொண்டிருக்கிறேனே….
எப்படி கருத்து சொல்வது?
என்ன செய்வது? என்று இயலாமையை வெளிப்படுத்த நான் ஒன்றும் ‘ஞானி’ இல்லையே!

– செந்தமிழன் சீராமன்

ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஒன்பதாம் திருநாள்

பகல் பத்து 9 ம் திருநாள் விவரமும் (19-12-15)
கட்டுவிச்சி (குறத்தி)குறி சொல்லுதலும்….
திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்தலும்…

நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு
மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்…

அத்யயன உற்சவத்தின் (பகல்பத்து)9ம் திருநாளான இன்றும் இரண்டு அரையர் சேவைகள் நடைபெறும்.
“தெள்ளியீர் தேவர்க்கும் தேவர்திருத்தக்கசீர்” என்ற பெரியதிருமொழியின் பதிகம் தொடங்கி,”ஒருநல் சுற்றம்”
ஈறாக 300 பாட்டுக்கள் சேவிக்கப்படும்….

முதல் அரையர் சேவை….

“தெள்ளியீர் தேவர்க்கும்” என்பதற்கு அபிநய
வியாக்கியானங்கள் சேவிக்கப்படும்.

இரண்டாம் அரையர் சேவை….

நம்பெருமாள் அலங்காரம் அமுது செய்த பிறகு,
“குறத்துக்கு அருளப்பாடு”என்று “முத்துக்குறிக்கு”,
அருளப்பாடு சாதிக்கபடும்.”10ம் திருநாளின் ”
திருநெடுந்தாண்டகம் பாசுரம் முதல்பாட்டு “மின்னுருவாய்”என்னும் பாசுரத்திற்கு,அபிநய வியாக்கியானங்கள்,மற்றும் பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்கியானங்கள் 9 ம் திருநாளான இன்றே சேவிக்கப்படும்.

” திருநெடுந்தாண்டகம் ” 11 பாடல்களுக்கும்,
பதினொன்றாவதில் “கட்டுவிச்சி(குறத்தி) குறி சொல்வது” தம்பிரான் படி வியாக்கியானத்தில் இருந்து சேவிக்கப்படும்.

10 ம் திருநாளின் இரண்டாம் சேவையில்,”முத்துக்குறி”
மற்றும் “ராவண வதம்” இரண்டும் சேவிக்க நேரம் இருக்காது என்பதால்,இன்றே அதாவது 9 ம் திருநாளன்றே “முத்துக்குறி” சேவிக்கப்படும்.”முத்துக்குறிக்காக”அரையர் இன்று ஒருநாள் மட்டுமே,அரங்கனின் தீர்த்தம் மற்றும் ஸ்ரீசடாரியினை அடியார்கள்அனைவர்க்கும் சாதிப்பார்.

ஆற்றாமையினால் “முதலானாய்”(திருநெடுந்தாண்டகம் -10)
என்றார் திருமங்கையாழ்வார்.அந்த உள்ள வெப்பத்தால்,
ஆணாக இருந்த “திருமங்கையாழ்வார்” பெண் நிலையை அடைந்தார்,அந்தப் பெண்ணான நிலையிலும்,தம் வாயாலே கூப்பிடுவதற்கு உரிய,தகுதியற்ற மயக்கமுறவே,மற்றவர் வாயாலே கூப்பிட்டுப் பேசும் படியான ,விதத்தில் அமைந்து உள்ளது இந்த பாசுரம்.

மேலே 10 பாசுரங்களில்,எம்பெருமானாகிய தலைவனைக்கூடி,
பின் பிரிவாற்ற தாளாகிய தலைவி ஒருத்தியிடம், மயக்கமும்,தெளிவும் முதலிய நிலை வேறுபாடுகள்,
ஒருகால் தோன்றுவனவாகவும்,அவைதாம்
முறை மாறியும் நிகழ, உறவினர் குழாத்தவரும்,
“இந்நிலைகள் இவளுக்கு ஏற்றனவா? ஏலாதனவா?என்று
முடிவு செய்து,மனங்கொள்ள மாட்டாமல் குழம்பியிருக்க,

தலைவிக்கு ஏற்பட்ட, இந்நோயின் காரணம் அறியாமல்,
மருந்து வழங்கும் மருத்துவரும், மந்திரவாதிகளும் புகுந்து,
இவள் உடல்நலனுக்குப் பரிகாரம் செய்வதில் முனைய,அந்நிலையில் எம்பெருமானிடம் பெரிதும்
ஈடுபாடுடைய, கட்டுவிச்சி (குறத்தி) என்னும் குறி சொல்பவள், “இவளின் நோயின் காரணத்தை நீங்கள் யாரும்உண்மையில் அறியவில்லை,இவளுக்கு வந்துள்ள இந்நோய்,எம்பெருமான் காரணமாக வந்ததாகும்.என்று உரைக்கும் நிகழ்ச்சியே
இன்று நடைபெறும் “முத்துக் குறி”ஆகும்.

அதோடு இந்த நோயும் எம்பெருமானாலேயே நீங்க வேண்டியதாகும். என்று கட்டுவிச்சி (குறத்தி)
சொல்லியதைக் கேட்ட,அந்த பெண்ணின் தாயார்,
தம்முடைய மகளின் உடல்நிலையைப் பற்றி வினவ வந்தவர்களுக்கு,இந்தப் பெண்ணினுடைய நிலைமையையும்,கட்டுவிச்சி (குறத்தி)சொல்கிற வார்த்தைகளையும்,சொல்லுகிற பாசுரத்தாலே,
இவ்வாழ்வார் (திருமங்கையாழ்வார்)
தன்னுடைய நிலையை அருளிச் செய்கிறார்….

ஒரு வயது வந்த பெண்ணின் மனதிற்குள்,
எம்பெருமான் மீது ஏற்பட்ட தீராக் காதல்நோயயையும்,
அதனால் அந்த பெண்ணின்உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும்,அவளின் தாயார், அந்த பெண்ணை அவளின் மனதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளவும்,அந்த பெண்ணின் மனதில் உள்ளேபுகுந்து அவளை ஆட்கொண்ட காதலுக்கு காரணமான எம்பெருமானையும் பற்றியும்,

இது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத,எம்பெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் (அவன் மீதுஏற்பட்ட அளப்பரிய காதல்தானே) விவரத்தையும்,ஒரு குறத்தி தன்னுடைய பாடல் மூலம் விளக்குவதாக திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பற்றி
பாடிய பாடல்களையும்,அதன் விளக்கங்களையும் இன்று அரையர்கள் சேவையில் காணலாம்….

இந்த “கட்டுவிச்சி(குறத்தி) குறிசொல்லுதல்”என்னும் நிகழ்வு,வாழ்வில் ஒருமுறையாவது,நாம் கேட்க வேண்டிய ,கண்ணால் கண்டு இன்பமாய் கழிக்க வேண்டிய முக்கிய நிகழ்ச்சியாகும்.

நம்மைப் போன்ற,நிலையில்லாவாழ்வைப் பெற்ற, சாதாரண மனிதர்களின் (மனிதர்கள்) மனதில்,எதை எதையோ
நினைத்துக் கொண்டு,அதை அடைய முழுமையாக கூட முயலாமல், இறுதியில் இந்த உலகை விட்டு ,உடம்பை விட்டு,உயிர் நீங்கும்வரை ,எதை எதையோ தேடிக்கொண்டே அலைகின்றோம்.

ஆனால்,இந்த உலகில்,மனிதனாகப் பிறந்து,முரட்டு வீரனாக வளர்ந்து,அரசனாகப் பதவியும் அனுபவித்து, மங்கையின் மீது காதல் கொண்டு,அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது தீராக்காதல் கொண்டு,பரம வைஷ்ணவனாக மாறி,அரச பொறுப்பைத் துறந்து,அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்”ஆகி,எம்பெருமானையே நேரில் வரவழைத்து, அவன் திருவாயினாலே”ஓம் நமோ நாராயணாய”என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்று,

அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி,அரங்கனை மகிழ்வித்து, அவனிடமேஆழ்வார்களின் தமிழுக்கு ஒருவிழா வேண்டி, இன்றுவரை,இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில்,இந்த உற்சவம் நடைபெறக் காரணமான,திருமங்கையாழ்வார் மனதில் எத்தகைய காதல் இருந்திருந்தால்,இந்த பக்தி நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை என்னும்பொழுது,நாமும் இந்த நிலையை அடைய முயற்சிக்க வேணும் என்ற ஒரு பெரிய,தீரா ஆசை ஏற்படுகிறது
என்றால் அது மிகையாகாது….

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்…..

 கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு

 

ஶ்ரீரங்கம் பகல் பத்து -எட்டாம் திருநாள்

அரங்கனின் பகல் பத்து 8 ம் திருநாள் (விவரமும்)….
அரையர்களின் சேவையும் …

நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து
உற்சவத்தின் 8 ம் திருநாளில் (18-12-15) காலை
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி,
மேலைப்படி மரியாதை ஆகி, சேனைமுதலியாருக்கும், மரியாதைகள் நடந்து,கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,
துலுக்க நாச்சியாருக்கு சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு,

அரையர்களின் தாளத்துடன் பகல்பத்து மண்டபத்தில்
(அர்ஜுன மண்டபத்தில்) ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,
அரங்கனின் அடியார்கள் புடைசூழ,வீற்றிருப்பார்.
ஸ்ரீ வைகுண்டத்தில், எம்பெருமான் எவ்வாறு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,முமுக்ஷுக்கள்,நித்யசூரிகள் புடைசூழ,
நாலாயிர திவ்ய பிரபந்தத்தினை கேட்டு மகிழ்வானோ,
அவ்வாறே, பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும்,
இந்த பகல்பத்து விழா நடைபெறும் அர்ஜுனமண்டபத்தில், அரங்கனும் வீற்றிருப்பார்…

இன்றும் இரண்டு அரையர் சேவைகள் நடைபெறும்.”பெரிய திருமொழியில்” “பண்டை நான்மறை” பதிகம் தொடங்கி,
“சிலையிலங்கு பொன்னாழி” பதிகம் ஈறாக,250 பாசுரங்கள் சேவிக்கபடும்…

8 ம் திருநாளின் முதல் அரையர் சேவை….

“பண்டை நான்மறை” பதிகத்திற்கு அபிநய வியாக்கியானங்கள் ஆகி, “ஆராமம் சூழ்ந்த அரங்கம்” அணி பொழில் சூழ்ந்த அரங்கம்”
என்று திவ்ய பிரபந்தத்தில்,அரங்கமென்று முடியும், வாக்கியங்கள் 64 சேவிக்கப்படும்.

“அரங்கமாநகர் அமர்ந்தானே” என்ற வாக்கியத்திற்கு மட்டும்,அநேகம் தடவை அபிநயம் நடைபெறும்.

“மாயிருங்குன்ற மொன்று மத்தாக” என்ற “திருப்பாற்கடல்” கடைந்த நிகழ்ச்சியை,இந்தப் பாசுரச் சொற்றொடர் நினைவூட்டுவதால்,இந்த இடத்தில் “அம்ருத மதனத்தை” நடிப்பதற்க்காகவே,அத்திருமொழி பாட்டுகளை நிறுத்தி,
மற்றைத் திருமொழிப் பாசுரங்களை சேவிப்பார்கள்.

8 ம் திருநாளின் இரண்டாம் அரையர் சேவை….

தம்பிரானடி சேவித்து,”அம்ருத மதனத்தை” நடித்து,அத்திருமொழியில் நிறுத்திய பாசுரங்களை
அரையர்கள் சேவிப்பார்கள்.

அரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டு
மகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.
நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு,
ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”
தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,
“பத்தி உலாத்துதல்” ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.
பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்….

 

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு

ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஏழாம் திருநாள்

பகல் பத்து -7 ம் திருநாள் விவரமும்…(17-12-15)
மார்கழி முதல் நாள் உடையவர் சந்நிதி கோஷ்டியும்…..

மார்கழி மாதம் பெரியபெருமாள் அமுதுசெய்யும் பிரசாதமும்,அதையே அமுது செய்யும் உடையவரும்…

அரங்கனின் 4 ம் திருநாளைப்போலவே,இன்றும் 2 அரையர் சேவைகள் நடைபெறும்.”பெரிய திருமொழி” “தூவிரிய மலர் உழக்கி “பதிகம் தொடங்கி,
“கைம்மான மழகளிற்றை கடல் கிடந்த கருமணியை” பதிகம் ஈறாக,மொத்தம் 210 பாசுரங்கள் சேவிக்கப்படும்.

அரையர் முதல் சேவை….

“தூவிரிய மலருழக்கி ” பாசுரத்திற்கு,அபிநய
வியாக்கியானங்கள் ஆகி, அத்திருமொழி 5 ம் பாட்டில்,” மண்ணளந்த தாளாளா “பாசுர சொற்றொடருக்கு இணங்க,எம்பெருமாள் எடுத்த,வாமன அவதாரத்தை நடிப்பதற்காக,அந்த “பெரிய திருமொழி” யின் மேற்கொண்ட பாட்டுக்களை சேவியாமல்,மற்றைய திருமொழிப்
பாசுரங்களை சேவிப்பார்கள்…

அரையர் இரண்டாம் சேவை…(வாமன அவதாரம்)

அரையர்கள் “தம்பிரான் படி” சேவித்து,வாமனாவதார வைபவத்தை,அரங்கன் முன்பு நடித்துக் காட்டிய பிறகு,
“பெரிய திருமொழி” யில் முன்பு நிறுத்திய பாசுரங்களை சேவிப்பார்கள்…

ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஸ்ரீ பராசர பட்டரால்,
திருத்திப் பணிகொள்ளப்பட்ட,ஸ்வாமி “நஞ்சீயர்” என்பவர்,திருவரங்கத்தில் 36 ஆண்டுகள்,
ஆச்சார்ய பீடத்தில் எழுந்தருளி இருந்தார்.

இன்றைய 7 ம் திருநாளில்,அபிநயத்தோடு சேவிக்கப்படும்,
“தூவிரிய மலருழக்கி ” பாசுரத்தினைப் பற்றிய நிகழ்வு ஒன்று,நம்பிள்ளையின் சீடரான”பெரியவாச்சான் பிள்ளை” அருளிச்செய்த,பெரிய திருமொழி
விரிவுரையில் காணப்படுகிறது.

நஞ்சீயர் மிகவும் உடல் நலிவுற்றுக் கிடந்த போது,அவரைப்
பார்க்க வந்த,அவருடைய சீடரான “பெற்றி”என்பவர்,இப்போது தேவரீருக்கு என்னவேண்டும் ?எனக்கேட்க ,அதற்கு நஞ்சீயர்,
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த,”தூவிரிய மலருழக்கி ” பதிகத்தினை காதாரக் கேட்க வேணும் என்றும், நம்பெருமாள் புறப்பட்டு வரும்பொழுது,நம்பெருமாளின் பின்னழகும், முன்னழகும் சேவிக்க வேண்டும் எனவும் தன்னுடைய
சீடரிடம் விருப்பத்தினை தெரிவித்தார்…

நஞ்சீயர் விருப்பப்படியே நம்பெருமாள்,நஞ்சீயருக்காக, அவருடைய மடத்திற்கு,எழுந்தருளி சேவை சாதித்தார். “வரந்தரும்பெருமாள் அரையர்” என்பவரை அழைத்து வந்து,
“தூவிரிய மலருழக்கி ” என்கிற திருமொழியை சேவிக்கச் செய்ய,அதைக் காதாரக் கேட்டுக்கொண்டு இருந்த நஞ்சீயர்,

“தானாக நினையாமல் தன்னினைந்து நைவேற்கு ஓர் மீனாய கொடி நெடுவேள் செய்ய மெலிவேனோ” என்ற பாசுரத்தை,

(எம்பெருமான் தானாகவே என்னை நினையாமல் போனாலும்,அவனையே நினைத்துக் கொண்டு,
மனம் தளர்ந்து இருக்கின்ற என்னை,மன்மதன்
துன்பப்படுத்த நான் இப்படி இளைத்துப் போவேனோ?)

அரையர் பாடியபோது,உடல் நலிவதற்கு முன்பே,
எம்பெருமாள் வந்து உதவாமல் போனாலும்,அந்த நோயை நீக்கவாவது வந்தாலாகாதோ?என்றருளிச் செய்து,
மிகவும் தளர்ந்து வருந்தினாராம்.

மார்கழி முதல் நாள்,பெரிய பெருமாள் திருப்பள்ளியெழுச்சி கண்டருளி,ஆராதனங்களுக்குப் பிறகு,நிவேதனம் (அமுது) செய்விக்கப்படும்…

உடையவர் சந்நிதிக்காரர் ,உபகாரங்களோடு வந்து,பெரிய பெருமாளை சேவிப்பார்.பெரிய பெருமாள் அமுதுசெய்த,பிரசாதத்தை,அர்ச்சகர்,ஸ்தாநீகர்,மணியகாரர் முதலான பரிகரத்தார்,உடையவர் சந்நிதிக்கு,
மேள தாள வைபவத்தோடு கொண்டு போய்,
பெரிய பெருமாள் அமுது செய்த பிரசாதத்தினை ,
உடையவருக்கு அமுது செய்விப்பார்கள்.

பிறகு உடையவர் சந்நிதியில் கோஷ்டி நடக்கும்.ஆண்டாள் மார்கழி விரதம்அனுஷ்டித்த விவரத்தினை தெரிவிக்கும் திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தினை,அரங்கனுக்கு தனுர்மாதமான மார்கழி மாதத்தில்,அரங்கனின் திருவாராதனத்தில் சேர்த்தவர் ஸ்வாமி ராமானுஜர்.

ஆகையால்,திருப்பள்ளியெழுச்சி என்னும் பேரால்,மார்கழி
மாதம் முழுவதும்,பெரிய பெருமாள்,தான் அமுது செய்யும் பிரசாதத்தை,தினந்தோறும் உடையவருக்கும் அனுப்புகிறார்.
மார்கழி மாதத்தின்முதல்நாள் பிரஸாதம் மட்டும்,பெரிய கோயிலின் அர்ச்சகர் முதலானோரால் உடையவருக்கு
அமுது செய்விக்கப்படும்….

கட்டுரை விளக்கம்: ஶ்ரீரங்கம் மாலு

ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஆறாம் திருநாள்

பகல் பத்து – ஆறாம் திருநாள் விவரமும்..(16-12-15)
அத்யயன உற்சவத்தின் சிறப்புக்களும்…

நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து
உற்சவத்தின் 6 ம் திருநாளில் (16-12-15) காலை
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி மரியாதை ஆகி, சேனைமுதலியாருக்கும், மரியாதைகள் நடந்து, கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,துலுக்க நாச்சியாருக்கு
சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு,அரையர்களின் தாளத்துடன் பகல்பத்து மண்டபத்தில் (அர்ஜுன மண்டபத்தில்) ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,அரங்கனின் அடியார்கள் புடைசூழ,வீற்றிருப்பார்.

இன்று அரங்கன் திருமுன்பு,அரையர் ஸ்வாமிகளால் பாசுரங்களாகவும்,அபிநயங்களாகவும்,இசையுடன் வியாக்கியானங்களாகவும் சேவிக்கப்படும் பாடல்கள்
மதுரகவியாழ்வார் அருளிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு” 11 பாசுரங்களும்,இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த, “பெரிய திருமொழி”யில் 249 பாசுரங்களும்,ஆக மொத்தம் 260 பாசுரங்கள் சேவிக்கப்படும்.

பெரிய திருமொழியில் 3 ம் திருமொழி,6ம் பதிகம்,
“தூவிய மலர் உழக்கி” ஈறாக,”பெரிய திருமொழி” யின் 249 பாசுரங்களும்,இன்றுசேவிக்கப்படும்.

“கண்ணிநுண் சிறுத்தாம்பு” “வாடினேன் வாடி”
(பெரிய திருமொழி 1-1-1) இரண்டுக்கும்,அபிநய வியாக்கியானங்கள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும்.

“கண்ணிநுண் சிறுத்தாம்பில்” ஈடுபட்ட, ஸ்ரீமணவாளமாமுனிகள், சந்நிதியில் இருந்து, இன்று அரையர் ஸ்வாமிகளுக்கு பஹுமாணம் அனுப்பி வைக்கப்படும்.”வாடினேன்வாடி” பாசுரத்தின் அபிநயத்தின் பொழுது, கோஷ்டி நின்று கொண்டு இருக்கும்..

அத்யயன உற்சவத்தின் சிறப்புக்கள்….

ஸ்ரீ மணவாள மாமுனிகள்,ஸ்ரீரங்க நாதருக்கு வியாக்கியானங்கள்(விரிவுரைகள்) அருளிச் செய்தது முதல்,அரையர் சேவையிலும்,வியாக்கியானங்கள் சேவிக்கப்படுகின்றன…

ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு முற்பட்ட காலத்தில்,
“தம்பிரான் படி வியாக்கியானமும்”ஆச்சாரியர்கள் நியமித்து அருளிய,பாசுரங்களுக்கு மட்டும் அபிநயங்களும் நடைபெற்று வந்தன..

அரையர் வம்சத்திற்கு “தம்பிரான்மார்” என்ற பெயர் உண்டு.
அவர்கள் அருளிச்செய்த விரிவுரைகளே,பல ஆண்டுகளாக அரங்கன் ஆலயத்தில் சேவிக்கப்பட்டு வந்தபோதிலும்,
“திருவாய்மொழிக்கு” ஸ்வாமி “நம்பிள்ளை”ஈடு வியாக்கியானம்,
மற்றைய திவ்ய பிரபந்தங்களுக்கு ஸ்வாமி
“பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த வியாக்கியானங்கள்,
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானங்கள் கிடைக்காத சில
“பெரியாழ்வார் திருமொழி” பாசுரங்களுக்கு, ஸ்வாமி
” ஸ்ரீ மணவாள மாமுனிகள்” அருளிய வியாக்கியானங்கள்,ஆக இந்த மூன்று வியாக்கியானங்களே,”ஸ்ரீ கோசத்தை”பார்க்காமல்,(புத்தகம் பார்த்து படிக்காமல்),வரி தவறாமல் ,இன்றும் அரையர்களால் சேவிக்கப்பட்டு வருகிறது…

இந்த நிகழ்ச்சி “ஸ்ரீ மணவாள மாமுனிகள்” நம்பெருமாளுக்கு, அவற்றைக் காலக்ஷேபம் சாதித்த நிகழ்வை, நினைவூட்டுவதாகும்…

இந்த மூன்று வியாக்கியானங்களுடன்,அரையர்களின் முன்னோர்களால் சாதிக்கப்பட்ட, “தம்பிரான்மார்” வியாக்கியானங்களும் சேர்த்து,சேவிக்கப்படுகிறது.
வேறு எந்த வியாக்கியானங்களுக்கும் அரங்கன் ஆலயத்தில் சேவிக்க அனுமதி இல்லை….

பகல் பத்து இராப்பத்து திருநாட்களில்,அரையர் சேவையில் அபிநயம் பூர்த்தியானதும்,வியாக்கியானத்துக்கு முன்பாக, நம்பெருமாளின் நியமனம்(அனுமதி)பெற்று,ஆழ்வார்களிடம் வந்து,ஆழ்வார் கொண்டாட்டம் சேவித்து, அனுமதியுடன்
நம்மாழ்வார் மற்றும் எம்பெருமானாரின் மாலைகள் ,
படிகளைந்து இரண்டு அரையர்களுக்கும் சாதிக்கபடுகிறது…

அரையர் சேவை முடிந்ததும்,கோஷ்டியில் இருக்கும் அத்யாபகர்கள்,நம்பெருமாளைச் சென்று சேவிப்பார்கள்.அர்ச்சகர் அவர்களுக்கு ஸ்ரீசடகோபம் (சடாரி) சாதிப்பார்.பிறகு அலங்காரம் எனப்படுகின்ற திருப்பணியாரங்களும், தோசைப் பிரசாதங்களும் நம்பெருமாளுக்கு நிவேதனம் செய்ய, திரை சமர்ப்பிக்கப்படும்…

நம்பெருமாள் பிரசாதங்களை அமுது செய்த பிறகு,ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு, அமுது(நிவேதனம்) செய்யப்படும். அருளப்பாடு கிரமத்திலேயே,நிவேதனம் நடைபெறும். ஆனால், உடையவர்,பிள்ளை லோகாச்சாரியார்,கூரத்தாழ்வான் இவர்களுக்கு மட்டும்,”திருக்கச்சி நம்பிகள்” நிவேதனம் செய்த பிறகு செய்யப்படும்.நம்மாழ்வார் அமுது செய்த பிரசாதம், அரையர்களுக்கு உரியதாகையாலே,அந்த பிரசாதங்கள் அரையர்களின் திருமாளிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு,
ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”
தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,
“பத்தி உலாத்துதல்” ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.
பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு

ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஐந்தாம் திருநாள்

பகல் பத்து- ஐந்தாம் திருநாள் விவரமும்.. (15-12-15)
அரங்கன் கண்டருளும்,அரையர் திருவாராதனமும் …

அரங்கனின் அத்யயனஉற்சவத்தின் ஐந்தாம் திருநாளான
இன்று,”அரையர் திருவாராதனம்” என்னும் நிகழ்ச்சி,
அனைவரும் அவசியம் காணவேண்டிய நிகழ்ச்சியாகும்.

இன்றைய தினம் “திருமாலை” 45 பாசுரங்கள்,
திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்கள்,
அமலனாதிபிரான் 10 பாசுரங்கள்,ஆக மொத்தம் 65 பாசுரங்கள், அரையர் ஸ்வாமிகளால் அரங்கன் முன்பு சேவிக்கப்படும்…

“திருமாலையில்” ” காவலிற் புலனைவைத்து” என்ற பாசுரத்திற்கும்,அமலனாதிபிரானில் முதல் பாட்டிற்கும் அபிநய வியாக்கியானங்கள் சேவிக்கப்படும்…

“திருமாலை” 1 ம் பாட்டு தொடங்கி,6 ம் பாட்டு மூன்றாம் பாதம்
“அரங்கனார்க்கு ஆட்செய்யாதே” என்ற சொற்றொடர் வரை,அபிநயம் மட்டும் நடைபெறும்.

“அரங்கனார்க்கு ஆட்செய்யாதே” என்ற பாசுர சொற்றொடரை,அரையர்கள் அபிநயித்த பிறகு, நம்பெருமாளுடைய, “திருஅத்யயனஉற்சவத்தின்”
வைபவங்கள் அனைத்தையும், புறப்பாடு, திருவாராதனம், அருளப்பாடு, வேத விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள்
அபிநயித்த பிறகு,மற்றைய பாசுரங்கள் சேவிக்கப்படும்.

அரங்கன் ஆலயத்தில் ஒரு நாள்முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையும்,உத்சவ காலங்களில் நம்பெருமாள்,புறப்பாடு கண்டருளுவதற்கு முன்பு நடைபெறும் நிகழ்ச்சிகளையும், அரையர்கள் தங்களின் தாளமான “நாதமுனிகளையே” நம்பெருமாளாகப் பாவித்து ,இந்த நிகழச்சியை நடத்துவார்கள்..

நாடகக்கலை மூலம்,நிகழ்ச்சிகளை விவரித்திட, இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழின் வல்லுனர்களான, அரங்கன் ஆலய அரையர் ஸ்வாமிகளைக் கொண்டு,
அடியார்கள் அனைவரும் கண்டுகளித்திட,
ஏற்படுத்தப் பட்ட சிறப்பு மிக்க திருவிழாவாகும்….

திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களில் எந்த பாசுரங்களுக்கும் அபிநயமோ அல்லது விரிவுரையோ சேவிக்கப்படுவது இல்லை..
“தொண்டரடிப்பொடி ஆழ்வார்”சந்நிதியில் இருந்து,அரையர் ஸ்வாமிகளுக்கு இன்று மரியாதை செய்விக்கப்படும்…

பிறகு வழக்கம் போல்,இன்று மாலை நம்பெருமாள்,”அர்ஜுன மண்டபத்தில்”(பகல்பத்து மண்டபத்தில்) இருந்து,புறப்பாடு கண்டருளி, மேலைப்படி வழியாக,சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளிய பிறகு,”திருமடைப்பள்ளியில்”இருந்து
“தாஸிகள்” “தட்டி”எனப்படும்,தடித்த திரிகளினால் இரண்டு,
தீபத்தினைக் கொண்டு வருவார்கள்.1953 ம் ஆண்டு
தாஸிகள் ஒழிப்புச்சட்டம் வந்தபிறகு,கோயிலில் தாஸிகள் கைங்கர்யம் நிறுத்தப்பட்டது..ஆதலால் தற்பொழுது ஆலய கைங்கர்ய பரர்களே “தட்டி”தீபம் கொண்டு வருகிறார்கள்..

இதன்பிறகு, ஸ்தாநீகர் “பெரிய கோயில்நம்பி” என்று
அருளப்பாடு சாதிப்பார்.அப்போது “திருவரங்கத்தமுதனார்” வம்சத்தில் வந்தவர்கள், முன்னே வந்து,நம்பெருமாளுக்கு “திருவந்திக்காப்பு கட்டியம்” சொல்லுவார்கள்.

(இந்த அருளப்பாடு தற்பொழுது இல்லை,,பல ஆண்டுகளாக
இந்த “திருவரங்கத்தமுதனார்” வம்சத்தில் வந்தவர்கள், திருக்கோயிலில் தங்களின் கைங்கர்யங்களை விட்டுவிட்டு, வேறுபணிகளுக்கு சென்றதால் தற்பொழுது இல்லை என சொல்லப்படுகிறது)

பிறகு “மங்கள வாத்தியம்”என்று ஸ்தாநீகர் அருளப்பாடு சாதித்ததும்,நட்டு முட்டு வாத்தியங்கள் முழங்கும்,கடதீபம் ஏற்றப்பட்டு கீழே வைக்கப்படும்.

“ஸாமா நாயிந்தே ஸாமா”என்று ஸ்தாநீகர் சொல்ல,அதற்கு வைஷ்ணவன்”பேசாதே சத்து”(பேசாதே ..சப்தமிடாதே என்ற பொருளில்) என்று சாதிப்பார்கள்…

பிறகு அர்ச்சகர் பெருமாளுக்கு,அர்க்யம்,பாத்யம் சமர்ப்பித்து,
“திருவடி விளக்குவதேல்” என்று ஸ்தாநீகர் சொன்னதும், உட்சாத்தினால் (அர்ச்சகரின் தோளில் இருக்கும் வஸ்த்ரம்) நம்பெருமாளின்,”திருமுகத்தையும்,திருவடியையும்”
துடைத்து விடுவர்..

பிறகு ஸ்தாநீகர் “திருமணி பரிமாறுவான்” என்றதும்,கீழே வைக்கப்பட்ட “கடதீபத்தினால்” திருவந்திக்காப்பு(ஆரத்தி)
ஆகும்.பிறகு நம்பெருமாள்,ஸர்ப்ப கதியில் , கர்ப்ப க்ருஹத்திற்கு எழுந்தருளுவார்….

 

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு