Home Blog Page 5908

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மனோஜ் பிரபாகர்

புது தில்லி: 

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 11 முதல் ஏப்ரல் 1 வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட இருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்ஹக் இருக்கிறார்.

தொழில் தொடங்க சிறந்த நாடுகள்: இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா, இலங்கை முன்னேற்றம்

நியூயார்க்:

தொழில் தொடங்க சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, சீனா, இலங்கை நாடுகள் முன்னேறியுள்ளன. இந்தியாவுக்கு 97-ஆவது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்க இதழான ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 144 நாடுகள் இடம் பிடித்துள்ளன.

தொழில் தொடங்க சுமுகமான சூழ்நிலை, ஊழல், வன்முறை போன்ற பிரச்னைகள் இல்லாதது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ”ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் சிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் டென்மார்க் முதலிடம் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் 97-வது இடம் பிடித்துள்ள இந்தியா குறித்து ”ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா உலகமயமாதல் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும், தன்னிறைவு, பிற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது என்ற கொள்கையையும் வைத்துள்ளது. அந்நாட்டில் இப்போது இளைஞர்கள் அதிகம் உள்ளனர். எனவே அங்கு நீண்டகால வளர்ச்சி சாத்தியமாக உள்ளது. எனினும், அங்கு வறுமை, ஊழல், வன்முறை, பெண்கள் மீதான பாலினப் பாகுபாடு, போதுமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத் திட்டமின்மை, போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பிரச்னைகள், அரசு நடைமுறைச் சிக்கல்கள், தரமான கல்வியின்மை என பல்வேறு பிரச்சனைகள் இப்போதும் உள்ளன.

இருப்பினும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளில் 41-வது இடத்திலும், தனிநபர் பாதுகாப்பில் 57-வது இடத்திலும், அறிவுசார் சொந்துரிமைப் பாதுகாப்பில் 61-வது இடத்திலும் இந்தியா உள்ளது.வர்த்தக சுதந்திரத்தில் 125-வது இடத்திலும், நிதிப் பரிமாற்ற சுதந்திரத்தில் 120-வது இடத்திலும், ஊழலில் 77-வது இடத்திலும், அரசு நடைமுறைச் சிக்கல்களில் 123-வது இடத்திலும் இந்தியா உள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து, நார்வே, அயர்லாந்து, ஸ்வீடன் ஆகியவை முறையே 2 முதல் 5-வது இடம் வரை பிடித்துள்ளன. சிங்கப்பூர் 8-வது இடத்திலும், பிரிட்டன் 10-வது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா 4 இடங்கள் பின்தங்கி 22-வது இடத்தில் உள்ளது. இலங்கை, சீனா ஆகிய நாடுகள் முறையே 91 மற்றும் 94-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. ரஷியா 81-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு 103-வது இடமும், வங்க தேசத்துக்கு 121-வது இடமும் கிடைத்துள்ளது.

சிபிஐ-யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து பழிவாங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

சென்னை:

சிபிஐ.,யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பழிவாங்குகிறது என்று காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பா.ஜனதா தலைமையிலான அரசு தேர்தலின்போது இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, எதிர்கட்சியினர் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது எடுக்கப்படும் இந்த பழிவாங்கும் செயல்களை காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டு குடிமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி பா.ஜ.க.வை சார்ந்த சில அரசியல் வியாபாரிகள் வழக்குகளை தொடர்ந்துள்ளது ஜனநாயக படுகொலையாகும்.

காங்கிரஸ் பேரியக்கமும், அதன் தலைவர்களும் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டார்கள். இளம் தலைவர் ராகுல்காந்தியின் பின்னால் லட்சோபலட்சம் தொண்டர்கள் எதையும் எதிர்கொள்ளும் உறுதியுடன் உள்ளனர். மோடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இத்தகைய இழிவான ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை

புது தில்லி:

மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப் பட்டதாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார். மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்த போதும், ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறுவது இன்னும் தொங்கலில் தான் உள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. இதனால் மிகவும் அர்த்தமுள்ள விவாதம் நடைபெற்றது. அவை சுமுகமாக நடத்த அனைவரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம். எனினும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் மற்ற எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன’ என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், “இதற்கு முன்பு நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட விஷயம்தான் இங்கும் கூறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிதாக ஒன்றும் விவாதிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஏற்கெனவே தீர்மானித்தபடி சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற கூட்டத்தில் சம்மதம் தெரிவித்தோம். ஜிஎஸ்டி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. அதில் கருத்தொற்றுமை ஏற்படாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுவரை நாடாளுமன்ற அலுவல் நேரம் பாதிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இனி வரும் நாள்களில் கூடுதலாக சில மணி நேரம் மாநிலங்களவையை நடத்த உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்’ என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தொடர்பாகக் கருத்தோற்றுமை ஏற்படவில்லை. எனினும் காங்கிரஸ் தவிர பிற எதிர்க்கட்சிகள் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
ஜிஎஸ்டி மசோதாவில் காங்கிரஸ் கூறும் சில மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு மறுத்து வருவதால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் அதனை நிறைவேற்றினால்தான் அடுத்த கட்டமாக அதனை மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர முடியும்.

மாநிலங்களவையை சுமுகமாக நடத்த உடன்பாடு: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி:
மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையை நடத்துவதில் இதுவரை நீடித்துவந்த முட்டுக்கட்டை விலகியுள்ளதாகக் கருதப் படுகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவ. 29 அன்று தொடங்கியது. கூட்டத் தொடர் துவங்கியது முதல், தாத்ரி சம்பவத்தை வைத்து, சகிப்பின்மை விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து பிரச்னை எழுப்பின. இதனால் இரு அவைகளும் கூச்சல் குழப்பத்துடன் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கிப் போயின.

இதனிடையே நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின. இதனால் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் தொடர்ந்தது.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்தது. நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர், வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவையை சுமுகமாக நடத்தும் நோக்கிலும், முக்கிய மசோதாவை நிறைவேற்ற கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி தலைமையில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்தவும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. முக்கியமாக, எஸ்சி/எஸ்டி (அடக்குமுறைகளில் இருந்து பாதுகாப்பு) திருத்த மசோதா, கடத்தலுக்கு எதிரான திருத்த மசோதா, அணுசக்தி திருத்த மசோதா, வர்த்தக நீதிமன்றங்கள் சிறப்புச் சட்ட மசோதா, சமரசத் தீர்வு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது.

சகிப்புத்தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள்: வாழும்கலை ரவிசங்கர்

புது தில்லி:
நாட்டில் சகிப்புத் தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் எங்கோ நடைபெற்றுவிட்ட ஓர் இரண்டு துரதிருஷ்டவசமான சம்பவங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவது நியாயமற்றது. சில குற்ற நடவடிக்கைகளை, சகிப்புத்தன்மையுடன் ஒப்பிடுவதும், அதை வைத்து மக்களின் மனநிலை பற்றிய முடிவுக்கு வருவதும் சரியானதல்ல என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கடிதம்

சென்னை:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரையும், 56 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்…

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 17-ந்தேதி எந்திரப்படகில் மீன் பிடிக்கச்சென்ற 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் 4 பேரும் இலங்கையில் உள்ள கங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் அணுகுவது துரதிருஷ்டவசமானது. பாக் நீரிணைப் பகுதியில் தங்களின் ஜீவாதாரமான மீன்பிடி தொழிலில் அமைதியாக ஈடுபடும் பாரம்பரிய உரிமையில் இலங்கை தலையிடுகிறது.

கடந்த சில வாரங்களில் 41 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது தமிழக மீனவர்களின் 56 படகுகள் இலங்கை வசம் உள்ளன. இந்திய-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை விவகாரம், இந்திய சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பது உங்களுக்குத் தெரியும்.

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால்தான் இலங்கைக்கு கச்சத்தீவு விடுவிக்கப்பட்டதோடு, கடல் எல்லை பிரச்சினையும் உருவானது இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து நான் தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடி தொழிலில் உள்ள நிர்ப்பந்தங்களை நிரந்தரமாக குறைப்பதற்காகவும், ஆழ்கடல் மீன்பிடியை விரிவாக்கம் செய்வதற்கும் எனது அரசு ரூ.51.3 கோடி செலவில் சில முன்னோடித் திட்டங்களை தீட்டியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்களை 50 சதவீத மானியத்தில், அதாவது அதிகபட்சம் ரூ.30 லட்சம்வரை மானியம் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிக்காக சிறப்பு ஒருங்கிணைந்த திட்டத்துக்காக ஆயிரத்து 520 கோடி ரூபாய் மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கை, கடந்த ஜூன் 3-ந்தேதி உங்களிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், அவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்வதுமாக, அதுவும் இந்த பண்டிகை காலத்தில் இலங்கை அரசு நடந்துகொள்வது, தமிழக மீனவர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக இந்தப் பிரச்சினையை நீங்கள் இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.

தமிழக மீனவர்களின் உணவுப் பூர்வமான இந்த பிரச்சினையில் தலையிட்டு, அவர்களின் துயரைத் துடைப்பதில் மத்திய அரசு உறுதியாக செயல்படவேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 மீனவர்கள் உட்பட 41 மீனவர்களையும், 56 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேசுவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்துங்கள்.

மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்பகுதியில் கடந்த 8-11-15 அன்று எந்திரப்படகு பழுதடைந்ததால், அங்கு தவித்துக்கொண்டிருக்கும் 4 மீனவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவதற்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். – என்று கோரியுள்ளார்.

சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ. மகள் மீட்பு: 3 பேர் கைது

சென்னை:
சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ.யின் மகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கலையரசி (23). பி.பார்ம் முடித்துள்ள இவர், சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

வியாழக்கிழமை பணிக்குச் சென்ற இவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மருந்துக் கடையும்க்கூட பூட்டப்பட்டிருப்பதும், கடைக்கு முன் கலையரசியின் இரு சக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ. ராமலிங்கத்தின் செல்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும், மதுராந்தகம் அருகே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே எண்ணுக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செல்போன் எண்ணை வைத்து கலையரசி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். உடனே செயலில் இறங்கி, அவரை மீட்டனர்.
கலையரசியைக் கடத்திச் சென்றதாக மருந்துக் கடை உரிமையாளர் சேகர், அவரது உறவினர்கள் டேவிட், கார்த்திக் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கலையரசியின் மருந்தாளுனர் உரிமத்தைப் பயன்படுத்தி மருந்துக் கடை தொடங்கப் பட்டதாகவும், வருவாயைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம்.,கள்: ஜெயந்த் சின்ஹா

புது தில்லி:
நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும், 1.25 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில்,ஏ.டி.எம்.,கள் மற்றும் குறு ஏ.டி.எம்.,கள் நிறுவும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், தொலை துார பகுதிகளில் வசிக்கும் மக்கள், எளிதில் பணம் எடுக்க முடியும். பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 38 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றிருந்ததால், 60 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.