Home Blog Page 5907

சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:
சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கோரியுள்ளார்.
அவர்வெளியிட்ட அறிக்கை:

தமிழ்த் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும் பாடல்கள் பாபநாசம் சிவன் போன்றவர்களால் படைக்கப்பட்டன. அதற்கடுத்து உடுமலை நாராயண கவியின் பேனாமுனையில் சிந்தனையைத் தூண்டும் சீர்திருத்தப் பாடல்கள் சிறப்பாக வெளிப்பட்டன. சென்ற தலைமுறையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் தத்துவப் பாடல்கள் திரைப்பாடல்களின் தரத்தை உயர்த்தின. இளமையிலேயே காலம் அவரைக் களவாடிவிட்ட நிலையில் கண்ணதாசனின் இலக்கியச் செழுமை மிக்க இனிய பாடல்கள் உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அவரது சம காலத்தில் வாலியும் புலமைப் பித்தனும் முத்துலிங்கமும் எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் அற்புதமான பாடல்களைத் தமிழுக்குத் தந்து மகிழ்ந்தனர். இளையராஜாவும் வைரமுத்துவும் கைகோத்த போது சாகாவரம் பெற்ற நல்ல பாடல்கள் பல இசை ரசிகர்களின் காதுகளைக் கௌரவித்தன.

ஆனால், இன்றைய இளந்தலைமுறையைச் சீரழிப்பதற்காகவே மிகவும் தரம் தாழ்ந்த திரைப்பாடல்கள் வரிசையாக வலம் வருகின்றன. கானாப் பாடல்கள், குத்துப்பாடல்கள் என்ற பெயரில் விகாரமான உணர்வுகளை உசுப்பிவிடும் அருவருப்பான பாடல்கள் அடுத்தடுத்துப் படையெடுத்த போது சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்கள் மௌனப்பார்வையாளர்களாகச் செயலற்றுக் கிடந்ததன் விளைவுதான் இன்று சிம்பு-அனிருத் கூட்டணியில் வெளிப்பட்டிருக்கும் அருவருப்பும் ஆபாசமும் நிறைந்த மிகக் கேவலமான ‘பீப்’ பாடல். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எந்த ஆண்மகனும் பெண்மையைப் பழிக்கும் இழிந்த வார்த்தைகளை எந்த நிலையிலும் பயன்படுத்த மாட்டான்.

குத்துப் பாடல்களுக்கும் கானாப் பாடல்களுக்கும் திரையுலகம் முற்றாக விடை தர வேண்டிய தருணம் வந்துவிட்டது. சிம்புவும் அனிருத்தும் பெண்மையை இழிவு படுத்திய சமூக குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப் படவேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டணையின் மூலமாவது சீரழிந்து கிடக்கும் சினிமா உலகத்தின் விழிகள் திறக்கப்பட வேண்டும்…

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?

 புண்ணியங்களையா ..?

பாவங்களையா ……….?

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்…!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்…!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !

நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் “இந்த நோய், உங்கள் அப்பா அம்மா – தாத்தா பாட்டிக்கு இருந்ததா?’ என்று.

நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.

தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.

நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க …
என்பதே மெய்ஞ்ஞானம்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.

ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் …!

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ……..3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ….5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ………………..5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ……………. 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ……………………………………6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ……..7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் ……………..9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்…!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை:
எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24ஆம் தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். அவரது நினைவு நாளான டிசம்பர் 24 அன்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துவதுடன், உறுதி மொழியும் எடுத்து வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்த உள்ளார். இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 28-ஆவது ஆண்டு நினைவு நாளான வருகிற 24-ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதைத்தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளும், அமைச்சர்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

எப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்? சாஸ்திரம் சொல்வது என்ன?

எப்படி சாப்பிட வேண்டும் என்பதில், சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க!

தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும்.

இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள்.

பால்சோறு சாப்பிடலாம்.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.
மேற்கு நோக்கினால் பொருள் சேரும்.
தெற்கு நோக்கினால் புகழ் வளரும்.
வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும்.

சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது.

கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பஸ் மோதியதில் ஆம்புலன்ஸில் வந்த 4 பேர் பலி

சென்னை:
காஞ்சிபுரம் அருகே பஸ், ஆம்புலன்ஸ் மோதியதில், ஆம்புலன்ஸில் வந்த டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்பத்தூர் – காட்ராம்பாக்கம் சந்திப்பு அருகே தனியார் மருத்துவமனைக்குச் செந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில் மார்பு வலியால் துடித்த ராஜேந்திரன் என்பவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அவர், மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மனைவி விஜயா, அவர்களின் மகன் சத்யநாராயணன் ஆகியோரை ஏற்றிக் கொண்டு வந்த இந்த ஆம்புலன்ஸ், காஞ்சி – ஸ்ரீபெதும்புதூர் சாலையில் வந்த போது, பஸ் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த பெரியசாமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆயினர்.
ஸ்ரீபெரும்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயகுமார், ஆய்வாளர் பாலு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் டோக்கன் வாங்காமல் சென்ற மீன்பிடி படகுகள்!

ராமேஸ்வரத்தில் 3 மீன்பிடி படகுகள் டோக்கன் வாங்காமல் இன்று அதிகாலை சென்றுவிட்டது. அதனால் இதர படகுகளுக்கு மீன் துறை அலுவலகம் அனுமதி டோக்கன் கொடுக்க மறுத்தது. இதை அடுத்து, தற்போது 2 படகுகள் திரும்ப வந்துவிட்டன. டோக்கன் வாங்காமல் சென்ற படகுகில் மீனவ சங்க தலைவர் தேவதாஸ் படகும் அடங்கும். அவை திரும்ப வந்ததால், தற்போது அனுமதி கொடுத்து அனைத்து படகும் செல்கின்றன.

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

சென்னை:
சென்னை திருவொற்றியூர் தேரடி வடக்கு மாடவீதி வடிவுடையம்மன் கோயில் அருகே மார்கழி மாதம் என்பதால், சனிக்கிழமை இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மூதாட்டி லலிதா (70). அப்போது, அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலியை முகத்தில் கர்சீப் மூடி பைக்கில் டிரிபிள்ஸ் வந்த ஆசாமிகள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக, திருவொற்றியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதிகாரிக்கான பாராட்டு விழா ரத்து; கடமை என்கிறார் ஆட்சியர்

கிருஷ்ணகிரி:
சனிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணகிரி முன்னாள் SSA CEO பொன்.குமாருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்,. இது தொடர்பாக கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தார். அரசின் திட்டங்களை செயல்படுத்துவது அதிகாரியின் கடமை என்று கூறிய ஆட்சியர், இது தொடர்பான ரத்து உத்தரவை பிறப்பித்தாராம்.

வெள்ள சேதத்தைப் பார்வையிட இன்று சென்னை வருகிறார் அருண் ஜேட்லி

சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் பார்வையிடவும் இன்று மாலை சென்னை வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சனிக்கிழமை இன்று மாலை சென்னை வருகிறார். அவர் முதல்வர் ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை நாளை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சென்னை கிண்டி தொழிற்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆலைகளை, மத்திய சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா சனிக்கிழமை இன்று காலை சென்னை வந்து, அவற்றைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாலை 5.45 மணி அளவில் சென்னை வருகிறார். அவரும் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு அவர் புதுதில்லிக்குத் திரும்புகிறார். அதற்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கனடா நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழ்ப் பெண்மணி நியமனம்

சென்னை:
கனடா நாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர், தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றார்.

தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார். மேலும் இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார்.

வக்கீல் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை வள்ளியம்மை பயிற்றுவித்தார். வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்களை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி இருக்கின்றன.