Home Blog Page 5906

ஒல்லிக்குச்சியா இருக்கீங்களா? எனில் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க முடியாது: பிரான்ஸில் அதிரடி

பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் ஒல்லிக்குச்சி மாடல் அழகிகள் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கென ஒரு சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாடல் அழகிகள், பேஷன் ஷோக்களில் பங்கேற்கும் போது, அவர்களது வயது, உடல் அமைப்புக்கு ஏற்ப எடை இருக்கிறது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்து சான்று அளிக்க வேண்டும்.

ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதற்காக பெண்கள் பலர், உணவு சரியாக உண்ணாமல், வயிற்றைப் பட்டினி போட்டு, எலும்பும் தோலுமாக மாற்றி, இதன்மூலம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இத்தகைய பெண்களைப்  பார்க்கும் இளம் பெண்கள் தாங்களும் அதுபோல ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு நரம்பு தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது பெரிய பிரச்னையாக வடிவெடித்துள்ளதால், பிரான்ஸ் நாடு ஒல்லிக்குச்சி மாடல் அழகிகளுக்கு தடை விதித்தது. இதையும் மீறி ஃபேஷன் ஷோக்களில் எலும்பும் தோலுமாக மாடல் அழகிகள் பங்கேற்றால், அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை, ரூ.55 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டம் அண்மையில் அந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற சட்டம் ஏற்கெனவே இஸ்ரேல், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் நாடுகளில் உள்ளது.

பீப் பாடல் சிம்பு, அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்

 

கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல் சமீபத்தில் வெப்சைட்டில் வெளியாகி, பெண்கள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேவலமாக பாடப்பட்டிருப்பதாக கூறி இந்திய மாதர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், கடந்த 12ம் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தினர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன், சிம்பு, அனிருத்தை பிடிக்க கோவை போலீசார் முயற்சி செய்தனர். அனிருத் கனடாவில் இருப்பதாக தெரியவந்தது. சிம்பு எங்கேயிருக்கிறார் என தெரியவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் போலீசார் இன்றைக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சிம்பு ஆஜராக சம்மன் கொடுத்தனர். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ராகவேந்திராவிடமும் போலீசார் சம்மன் கொடுத்தனர்.

இதையடுத்து சிம்பு, அனிருத் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. சிம்பு, அனிருத் சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. சிம்புவின் சார்பில் அவரது தந்தை கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

இதில் சிம்பு தற்போது உள்ள நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுபோல் அனிருத் தந்தை ராகவேந்திரா சார்பில் அளித்த கடிதத்தில் அனிருத் இந்த பாடலுக்கு இசை அமைக்கவில்லை. அனிருத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் நேரில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு, அனிருத் காவல் நிலையத்தில் ஆஜரானால் விசாரணைக்கு பிறகு கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆஜரானால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால்தான் சிம்பு ஆஜராகவில்லை என்று தெரிகிறது.

கோவை மாநகர போலீஸ் துணை ஆணையாளர் நிஷாபார்த்திபன் கூறுகையில், ‘‘ சிம்பு, அனிருத் தரப்பில் கொடுக்கப்பட்ட கடிதம் பெறப்பட்டது. அவர்களை உடனடியாக கைது செய்ய திட்டமில்லை. சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை, என்ன காரணம் என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சுப்ரமணிய சுவாமி பிரதமர் மோடியின் முகமூடி : காங்கிரஸ் குற்றசாட்டு

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் முகமூடி தான் சுப்ரமணிய சுவாமி, என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது.
 
மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் பயந்துவிடாது. இந்த தடைகளை எல்லாம் தகர்த்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஆசாத் கூறினார்.
 
மேலும் இந்தியா இதுவரை இதுபோன்ற அரசியலைப் பார்த்ததில்லை. இந்த பழிவாங்கும் அரசியலை எதிர்த்துப் போராடுவோம். காங்கிரஸ் கட்சியினரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவோரை பாரதிய ஜனதா கட்சி அரசு கௌரவிக்கிறது.
 
சுப்ரமணியன் சுவாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இல்லை, அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை, காங்கிரஸ் தலைவர்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்ததற்காகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது,

அரிசி, மண்எண்ணைய் கூடுதலாக வழங்க உத்தரவிட பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

 
 
அரிசி, மண்எண்ணைய் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க உணவு அமைச்சகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் உத்தரவிட பிரதம பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
 
ஜெயலலிதா இன்று மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட அதிக அளவு பெய்து இருப்பதை தாங்கள் அறிவீர்கள். இந்த பலத்த மழையால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது.
 
மக்களின் இயல்பு வாழ்க் கையில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை மத்திய அரசு மிகப் பெரிய இயற்கை பாதிப்பு என்று அறிவித்துள்ளது.
 
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசின் படை களுடன் ஒருங்கிணைந்து மீட்புப்பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது. குடிசை இழந்தவர்கள், கால் நடை இழந்தவர்கள் மற்றும் உயிரிழப்பை சந்தித்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
 
பலத்த மழையால் வீடு களுக்குள் வெள்ளம் புகுந்த தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் பல நாட்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. அவர்களது உடமைகளுக்கு கடும் சேதம்
ஏற்பட்டுள்ளது.
 
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு 7,150 நிவாரண முகாம்களை திறந்தது. இதன் மூலம் 19.63 லட்சம் பேருக்கு தினமும் உணவு வழங்கப் பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.35 கோடி உணவுப் பொட்டலங்களை மாநில அரசு வினியோகம் செய்தது. பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளது. அவர்களுக்கு மாநில பேரழிவு நிதி உதவி விதியின் கீழ் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
நிவாரண முகாம்களில் வழங்கப்பட்ட உணவு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்ட உணவு மற்றும் வெள்ள நிவாரண திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள அரிசி அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழக்கமாக வழங்கப்படும் அரிசி அளவை விட நிவாரண பணிகளுக்கான இந்த கூடுதல் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும்.
 
தற்போதைய அவசர தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் பொது வினியோக திட்டத்துக் காக இருப்பு வைக்கப்பட் டுள்ள அரிசியை எடுத்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் பணியை தொடங்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
 
எனவே தாங்கள் உடனடியாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தை அறிவுறுத்தி, தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக, வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர் களுக்கு வழங்கும் விலையில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
பெரும்பாலான மக்கள், குறிப்பாக நகர்ப்பகுதிகளில் குடிசைகளில் வாழ்பவர் களும், கிராமங்களில் வாழ்பவர்களும் சமையல் செய்ய பெரும்பாலும் மண் எண்ணையை பயன்படுத்து கிறார்கள். வெள்ளப்பெருக்கு காரணமாக பலரது வீடு களில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை இழந்து விட்டனர். தொடர்மழை காரணமாக அவர்கள் சமையல் செய்ய விறகுகளும் கிடைக்க வில்லை.
 
இந்த நிலையில் தமிழ் நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப் படும் மண்எண்ணை அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, குறிப்பாக சமையல் கியாஸ் சிலிண்டர் களை இழந்தவர்களுக்கு போதுமான அளவுக்கு மண் எண்ணை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் சுமார் 38.20 லட்சம் வீடுகளில் சமையல் கியாஸ் இணைப்பை இழந்துள்ளனர். இந்த 38.20 லட்சம் குடும்பங்களுக்கும் 19,100 கிலோ லிட்டர் மண்எண்ணை கூடுதலாக தேவைப்படுகிறது.
 
எனவே தாங்கள் உடனே பெட்ரோலியம் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, தமிழ் நாட்டுக்கு வழக்கமாக பொது வினியோக திட்டத் துக்கு வழங்கும் மண் எண்ணை அளவை விட கூடுதலாக 19,100 கிலோ லிட்டர் மண்எண்ணையை ஒதுக்கீடுக்கு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கூடுதல் மண்எண்ணை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டவிலையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் அரிசி மற்றும் கூடுதல் மண்எண்ணை ஒதுக்கீடு செய்ய உணவு அமைச்சகத் துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் தங்கள் உத்தரவிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா

40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
உத்தரவிட்டுள்ளார்.
 
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
 
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
 
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்க்காக  20.12.2015 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
 
இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி மற்றும் ஈரோடு வட்டங்களில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

 

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தேவை: ராமதாஸ்

திருச்சி :
டெல்டா விவசாய பகுதிகளை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவித்து மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் திருச்சியில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நெல்லை அருகே பாலத்தில் கார் மோதி தம்பதி பலி

நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார் குளம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் மீது இன்று அதிகாலை கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியைச் சேர்ந்த செந்தில் முருகன் (34) மற்றும், இவரது மனைவி வளர்மதி (26) என தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு கடிதம்

கோவை:

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு கோவை போலீஸ் சம்மன் அளித்துள்ளது.
இந்நிலையில், சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை; மேலும், கோவை காவல் நிலையத்திற்கு சிம்பு விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தாம் நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார் நடிகர் சிம்பு.

இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:
சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பீப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என தரக்குறைவாக பதில் கேள்வி கேட்ட இளையராஜா அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இசை மேதை, இசைஞானி என்றெல்லாம் போற்றக்கூடிய நீங்கள் ஒரு பொது தளத்தில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது உங்கள் துறை சார்ந்த கேள்வியினை உங்களிடம் கேட்காமல் வேறு எவரிடம் கேட்பார்கள்? ஊரே பற்றி எரியும் போது ஒரு மன்னன் பிடில் வாசித்தாராம். அதைப் போல சிம்பு அனிருத் என்ற இரு அரைவேக்காட்டு ஆசாமிகள் செய்த தவறை சுட்டிக் காட்டி ஒரு கண்டனத்தைக் கூட பதிவு செய்யாத உங்களிடம் அந்த செய்தியாளர் கேள்வி கேட்டதில் என்ன தவறு?

“நாய் விற்ற பணம் குறைக்கவா போகிறது” எனும் அடிப்படையில் பணமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு இந்த சமூகத்தை சீரழித்ததில் உங்களுக்கும் பங்குண்டு என்பதால் தான் அப்படி கோபப்பட்டீர்களோ?

இந்த ஜனநாயக இந்தியாவில் கேள்வி கேட்பதற்கு கூட தகுதியை எதிர்பார்க்கும் நீங்கள் அவரை ஒரு சாதாரண மனிதனாகக் கூட பார்க்க மறந்து போனீர்களே அப்போது உங்கள் கண்களை மறைத்தது புகழ் எனும் போதையா? அல்லது பணம் எனும் மாயையா? ஒரு நிமிடம் நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள்.

தரமான பாடல்களை தந்த நீங்கள் தான் தரமற்ற, கேட்கவே காது கூசுகின்ற பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றிகரமான இசை வியாபாரியாக உலா வந்தீர்கள். அதனால் தான் இன்று சிம்பு, அனிருத் என்ற தருதலைகளுக்கு ஆதரவு தரும் விதமாக அமைதி காக்கிறீர்கள். ஒரு வேளை இன்று கிளம்பும் எதிர்ப்புகள் அப்போதே உங்களுக்கு எதிராகவும் கிளம்பியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்காது.

மக்கள் எப்போதும் நீங்கள் தருவதை அப்படியே அள்ளி மடியில் கட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனை திருப்பித் தரத் தொடங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

எனவே தங்களின் தரக்குறைவான அந்த செயலுக்கு பொது மேடையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.

தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய 3 பேர் கைது : மகள் மீட்பு

 
 
தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய ருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து மகளை மீட்டனர்.
 
சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மகள் கலையரசி (23). மருந்தாளுனர் படிப்பு முடித்து, சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
 
அவர் வியாழக்கிழமை பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
மருந்துக் கடையும் பூட்டப்பட்டிருப்பதும், கடைக்கு முன் கலையரசியின் இரு சக்கர வாகனம் கேட்பாறின்றி நிறுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
 
அப்போது ராமலிங்கத்தின் கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும், மதுராந்தகம் அருகே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே எண்ணுக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது, அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சேலையூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
 
இந்த நிலையில் அவரை கடத்திச் சென்றதாக காவல் துறையினர் மருந்துக் கடை உரிமையாளர் சேகர், அவரது உறவினர்கள் டேவிட், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கலையரசியின் மருந்தாளுனர் உரிமத்தைப் பயன்படுத்தி மருந்துக் கடை தொடங்கப்பட்டதாகவும், வருவாயைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பரவலாக கூறப்படுகிறது.