Home Blog Page 5905

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

எதிர்பார்த்த படியே ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஒருநாள் அணிக்கு திரும்பினர். ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

வரும் 2016 ல் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் (ஜன., 12, 15, 17, 20, 23), மற்றும் 3 ‘டுவென்டி-20’ போட்டிகள் (ஜன. 26, 29, 31) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று டில்லியில் நடந்தது. சந்தீப் படேல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) டில்லியில் வீரர்களை தேர்வு செய்தனர்.

இந்திய அணி கேப்டனாக தோனி தொடர்கிறார். ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோஹ்லி, ரகானே ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர். அண்மையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட் சாய்த்த ஜடேஜா, 7 மாதத்துக்குப் பின்னர் ஒருநாள் தொடரில் இடம் பெற்றார்.

‘டுவென்டி-20’ அணியில் யுவராஜ் சிங், ஆஷிஸ் நெஹ்ரா சேர்க்கப்பபட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் : விஜயகாந்த்

 
 
தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் மனம் நொந்து போயுள்ளனர். நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கினால் மட்டும் பாதிப்பல்ல, நெற்கதிர் வரும் பருவத்தில் பெய்த கனமழையால், கதிர்களெல்லாம் பதராகமாறி விளைச்சலை பாதித்துள்ளதையும் அரசு பாதிப்பாக கருத வேண்டும். விவசாயத்துக்கு பாதிப்பில்லை என்பது போல் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
டெல்டா மாவட்டங்களில் 1 ஏக்கர் நெல் சாகுபடிக்கு சுமார் ரூ.30 ஆயிரம் செலவாகிறது. ஆனால், செலவு செய்த பணத்தைக் கூட பெற முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. கடலூரில் விவசாயம் செய்வதற்கு ஏற்றாற்போல் நிலத்தை சமன்படுத்தி வண்டல் மண் கொட்டி சீரமைப்பதற்கே ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 
டெல்டா மாவட்டம், கடலூர் மாவட்டம், மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களில், இதுபோன்ற பாதிப்புகளுக்கு தற்போது அதிமுக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ஒரு ஹெக்டேருக்கு 13 ஆயிரம் 500 ரூபாய் என்பது “யானைப் பசிக்கு, சோளப்பொறியாகத்தான்” உள்ளது.
 
விவசாய பயிர்களுக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை மிக்குறைவானதென்று பல இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே விவசாயப் பயிர்களுக்கான நிவாரணத்தொகையை அதிமுக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
 
மேலும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். நிவாரண உதவிகளை வருவாய்த்துறையினர் மூலம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பீப் பாடல் வெளியிட்ட சிம்பு – அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

திரைப்பட நடிகர் சிம்புவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பரவியதும், பெண்கள் அமைப்புகள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. பீப் சாங் என்று கூறப்படும் அதில் பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து உள்ளனர். இவர்களின் வக்கரித்துப்போன உள்ளம் எப்படிப்பட்டது என்பதை உணர முடிகிறது.

சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் மூழ்கிப் போய் இலட்சக்கணக்கான மக்கள் நாதியற்று நடுத்தெருவில் அலைந்து திரிந்த கொடுமை நேர்ந்த போது சிம்பு, அனிருத் இருவரும் இந்த ஆபாசப் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

உலக நாகரிகத்தின் தொட்டில் பூமியான தமிழகத்தில் பழம்பெரும் பண்பாட்டுச் சிறப்பும், பெண்களை உயர்வாக மதித்துப் போற்றும் இயல்பும் அற்றுப்போய் வருகிறது. திரைப்படங்களில் பெண்களை மோசமாக சித்தரிக்கும் அநாகரிக போக்கு வளர்ந்து வருவது வேதனை அளிக்கிறது.

ஒரு காலத்தில் திரை இசைப் பாடல்கள்தான் சமூகத்தைச் சீர்படுத்தவும், உயர் நெறிகளை வளர்க்கவும், நாட்டு விடுதலைக்காக போராடும் வீர உணர்ச்சியை ஊட்டவும் பயன்பட்டன. சமூகத்தில் உயர்தனிப் பண்புகளை உருவாக்கும் வகையில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் மருதகாசி, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன் போன்றோரின் பாடல்கள் எக்காலத்திலும் அழியாப் புகழ்மிக்க காவியங்களாக நிலைத்து இருக்கின்றன.

மகாகவி பாரதி தடம் அமைத்த தமிழ் இலக்கிய உலகில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வாணிதாசன், சுரதா, கவிஞர் முடியரசனார் போன்றோர் காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தனர். சிவகங்கை கவிஞர் மீரா, கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, கவிஞர் புவியரசு, கவியரசு வைரமுத்து போன்றோர் தமிழ்க் கவிதைச் சோலையில் புதுமைகள் படைத்துத் தமிழுக்கு ஏற்றம் தந்தனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் போன்றோர் படைத்த எரிமலைக் கவிதைகள் இன உணர்வுக் கனல் அணையாமல் தமிழ் மண்ணில் இளைஞர்களைத் தட்டியெழுப்பி வருகின்றன.இவ்வாறு வரலாறு பேசும் தமிழ்நாட்டில் சிம்பு, அனிருத் இயற்றியுள்ள பாடல் சமூகச் சீரழிவுக்கு வித்திட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக அரசு இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை!

சென்னை:
கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான்! பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதனால் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு, முன்னதாகவே சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை வழங்குதல் உள்ளிட்டவற்றால் திருப்தி செய்துள்ளன.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் தரைத் தளங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பெரும் சேதம் அடைந்தன. இதில், ராமபுரம் டி.எல்.எப். வளாகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த பிறகும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றது. டி.எல்.எஃப்பில் இயங்கி வந்த சில நிறுவனங்கள் தாற்காலிகமாக தங்கள் ஊழியர்களை நகரின் வேறு கிளை அலுவலகங்கள், அல்லது பெங்களூர், மைசூர், தில்லி உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மாற்றி விட்டு சமாளிக்கின்றன.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கணினிவழி சேவை செய்து வருமானம் ஈட்டிவந்த நிறுவனங்கள், வெள்ளம் கொடுத்த இழப்பில் இருந்து மீள முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்களைத் தவிர, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன.

சென்னை வெள்ளத்தில் ஒரு வாரம் எந்த வேலையும் நடைபெறாத நிலையில், இந்தக் காலாண்டு வருமானம் பெருமளவில் குறையும் என்று பிரபல நிறுவனங்களான டாடா, விப்ரோ தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவற்றின் பங்குச் சந்தை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டு பங்கு மதிப்பும் சரிந்தது.

டேக் சொல்யூஷன்ஸ் போன்ற நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பங்கு மதிப்பு ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. சென்னையில், 450 ஊழியர்களுடன் இயங்கும் இந்த நிறுவனம், கனமழை வெள்ளத்தில் ஒரு வாரம் முழுவதும் மூழ்கி இருந்ததால் ஊழியர்கள் பணிக்கு வரவே இயலவில்லை. வேல எதுவும் நடைபெறவில்லை. இதே போல பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாவேர் நிறுவனமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகம் மூலம்தான் உலக அளவில் 23% வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டி வந்தது. வெள்ளத்தால் இப்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் திகைத்துப் போயுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரில் இயங்கி வரும் அசெஞ்சர் நிறுவனமும் இதே பாதிப்பில் உள்ளது.

சில நடுத்தர நிறுவனங்கள் பெங்களூரு,கோவைக்கு மாற்றப்பட்டு, அதன் பணியாளர்கள் அங்கே மாற்றப்பட்டனர். அதனால், அதன் பணிகள் ஓரளவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களுக்கு இடம்பயரலாமா என்று சில நிறுவனங்கள் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பல ஐ.டி. நிறுவனங்களும், ஒரு வார கால அலுவலக முடக்கத்துக்குப் பின்னர், நிலுவைப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, தங்கள் நிறுவன ஊழியர்களை இரவு வெகு நேரம் வரை இருக்க வைத்து, பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் எதிர் காலத்தில் சென்னையில் தொடர்ந்து தங்கள் வர்த்தகத்தை நீடிக்க முடியுமா என்ற யோசனையில் ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக பேச தடை : நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எதிராக எதிராக எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுடனான அமைதி நடவடிக்கை தடைபடாமல் இருக்க அந்நாட்டுக்கு எதிராக பேசக்கூடாது என்று தனது அமைச்சர்களை நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 
பாகிஸ்தான் தினசரி பத்திரிக்கையான தி நேஷன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-
 
கடந்த காலங்களில் செய்தது போல அல்லாமல் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்று தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் பிரதமர் நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அதேபோல், இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று டெல்லியில் இருந்து சில தலைவர்கள் அறிக்கைகள் விடுவதால், எரிச்சல் அடைந்துள்ள நவாஸ் ஷெரீப், இருந்த போதிலும் இந்திய அரசின் கொள்கை இது இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாட்டின் போது நவாஸ் ஷெரீப், பிரதமர் மோடிசந்திப்புக்கு பிறகு இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
கடந்த டிசம்பர் 8-ம் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்ற மாநாட்டின் போது மோடி- நவாஸ் ஷெரீப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது

மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை:

மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது; நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் மதுரையில் சனிக்கிழமை இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது. மோடி பல நாட்கள் வெளிநாட்டிலும், சில நாட்கள் இந்தியாவிலும் இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அந்த சில நாட்களிலும் மக்கள் நலப்பணி குறித்து சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அரசியலை மூலதனமாகக் கொண்டு சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், நாட்டிற்காக தமது சொத்துக்களையே இழந்தவர்கள் நேரு குடும்பத்தினர். அத்தகைய நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று பேசினார் இளங்கோவன்.

இந்தியாவுக்கு எதிராக யாரும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்: பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கு எதிராக எந்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வெளியிட்டால் அது இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் ‘த நேஷன்’ வெளியிட்டுள்ள செய்தியில்…

இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று தில்லியில் இருந்து சில தலைவர்கள் அறிக்கைகள் விடுவதால், எரிச்சல் அடைந்துள்ளார் நவாஸ் ஷெரீப். இருப்பினும் இந்திய அரசின் கொள்கை அது இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.

அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி-நவாஸ் ஷெரீப் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலகப் பொருளாதார மன்ற மாநாட்டின் போது நரேந்திர மோடி- நவாஸ் ஷெரீப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.
-இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

 
 
வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கனகம்மாசத்திரம் கோட்டீஸ்வரன், பட்டாபிராம் ஜெயந்தி, பூங்கொடி, சந்தியா, அத்திப்பட்டு புதுநகர் ஜெகநாதன், 3-ம் தேதி வேம்பேடு மனோகரன், 4-ம் தேதி விடையூர் பழனி, இருளஞ்சேரி அன்புச்செல்வன், தண்டுரை பட்டாபிராம் யுவராஜ், மணிவண்ணன், மணலிபுதுநகர் தினகரன், 5-ம் தேதி காட்டூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மழை, வெள்ளத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
கடந்த 3-ம் தேதி வேப்பம்பட்டு காசி, 6-ம் தேதி மோவூர் மகாலிங்கம், பிரியாங்குப்பம் மணி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
 
உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியு்ள்ளார்.

ஜோதிடர் கூறிய அறிவுரை… சிம்புவிற்காக களமிறங்கிய டி.ஆர்!

சிம்புவின் பீப் பாடல் சினிமா உலகில் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர் வைகோ உட்பட இப்பாடலுக்கு பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ள பீப் பாடலுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்வதோடு மட்டுமின்றி பல மாவட்டங்களில் சிம்பு, அனிருத்திற்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டுள்ளன. சமீப காலமாக சிம்பு நடித்து வரும் படங்களும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் சிம்புவின் குடும்ப ஜோதிடர் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளாராம்.

எனவே அவருடைய குடும்பமே சேர்ந்து சிம்புவிற்கு பெண் தேடி அலைகிறதாம். சிம்பு ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா மற்றும் பிரபல நடிகரின் மகள் உட்பட மூன்று பெண்களை காதலித்து தோல்வியுற்றவர். அதோடு அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இதனால் அவருக்கு சீக்கிரம் பெண் கிடைக்குமா என்று கோலிவுட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை என வழக்கறிஞரின் மனைவி போலீஸிடம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலம் !

 
 
மதுரை அனுப்பானடி பாண்டியன் நகர் பனகல் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது65) வழக்கறிஞர், இவர் மனைவி சந்திரகாந்தி, மாமியார் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
 
வழக்கறிஞரின் மனைவி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்ததாவது:-
 
நேற்று (17-12-2015) இரவு இவரது வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் மஞ்சள் பையுடன் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதை நம்பிய பெண்கள் கதவை திறந்து விட்டனர்.
 
வேகமாக வீட்டுக்குள் புகுந்த கும்பல் 3 பேரையும் கத்தியை காட்டி மிரட்டினார்கள். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியவாறு வக்கீல் மற்றும் மனைவி, மாமியாரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
 
பின்னர் ‘மர்ம’ கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் மற்றொரு அறையில் இருந்த பீரோவில் இருந்து 55 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் என புகாரில் கூறி இருந்தார்.
 
புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல் துணை ஆணையாளர் (குற்றம்) உமையாள்,, உதவி காவல் ஆணையாளர் ஜோஸ் தங்கையா, ஆய்வாளர் வேல்முருகன், மற்றும் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் வழக்கறிஞர் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். துப்பறியும் மோப்பநாயும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் புகார் அளித்த சந்திரகாந்தி உட்பட பலரிடம் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.
 
வழக்கறிஞர் மனைவி சந்திரகாந்தியின் அக்காவின் பையன் சரவணனிடம் மேற்கொண்ட நடத்திய புலன் விசாரணையில் சந்திரகாந்தி 55 பவுன் நகையை மதுரை புதூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாராம்.
 
சரவணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்திரகாந்தியிடம் காவல் துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது 55 பவுன் நகையை அடகு வைத்தை அவரது கணவருக்கு தெரியாமல் மறைக்கவே நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து சந்திரகாந்தி நாடகமாடியது தெரிய வந்ததாம்.
 
மேலும் சந்திரகாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பதிவு செய்த முதலாவது புலனாய்வு அறிக்கையை ரத்து செய்து விட்டதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.
 
காவல் துறையினரிடம் பொய்யான ஒரு புகாரை எவராவது அளித்தால் அவர் மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக சட்டத்தின் பிரகாரம் வழக்கு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.
 
மதுரை மாநகர காவல் துறையினரிடம் 55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து நாடகமாடிய
சந்திரகாந்தி மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக வழக்கு பதிவு செய்யாமல் விடுவார்களா என்ன ?