ஒல்லிக்குச்சியா இருக்கீங்களா? எனில் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க முடியாது: பிரான்ஸில் அதிரடி

பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் ஒல்லிக்குச்சி மாடல் அழகிகள் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கென ஒரு சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாடல் அழகிகள், பேஷன் ஷோக்களில் பங்கேற்கும் போது, அவர்களது வயது, உடல் அமைப்புக்கு ஏற்ப எடை இருக்கிறது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்து சான்று அளிக்க வேண்டும்.

ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதற்காக பெண்கள் பலர், உணவு சரியாக உண்ணாமல், வயிற்றைப் பட்டினி போட்டு, எலும்பும் தோலுமாக மாற்றி, இதன்மூலம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இத்தகைய பெண்களைப்  பார்க்கும் இளம் பெண்கள் தாங்களும் அதுபோல ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு நரம்பு தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது பெரிய பிரச்னையாக வடிவெடித்துள்ளதால், பிரான்ஸ் நாடு ஒல்லிக்குச்சி மாடல் அழகிகளுக்கு தடை விதித்தது. இதையும் மீறி ஃபேஷன் ஷோக்களில் எலும்பும் தோலுமாக மாடல் அழகிகள் பங்கேற்றால், அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை, ரூ.55 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டம் அண்மையில் அந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற சட்டம் ஏற்கெனவே இஸ்ரேல், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் நாடுகளில் உள்ளது.