Home Blog Page 5991

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்னை இல்லை: கமலா திரையரங்க அதிபர் கணேஷ்

ஒரு துறையில் பிரபலமானவர்களைச் திரைப்படங்களில் நடிக்க வைப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.அந்த வகையில் திரையுலகிற்கு முகம் தெரிந்தவரான திரையரங்கு உரிமையாளர் கமலா சினிமாஸ் கணேஷ் நடிக்க வந்துள்ளார். அவர் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தற்காப்பு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். 

‘கமலா சினிமாஸ்’ கணேஷை அண்மையில் சந்தித்த போது…!  

திரையரங்கு உரிமையாளரான நீங்கள் திடீரென்று சினிமாவில் நடிக்க வந்தது எப்படி? 

எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததில்லை. அப்பா ‘தூங்காநகரம்’ படத்தில் நடித்தபோது ,தான் வில்லனாக நடிக்கப் போகிறோம் என்று அவரும் நினைக்கவில்லை. ஆனால் அதில் நடித்த போது எல்லாரும் பாராட்டினார்கள். அவருக்கு அதில் நல்ல பெயர் கிடைத்தது. நடித்ததற்காக அப்பா பணம்  எதுவும் வாங்கவில்லை. 

அப்பா அப்போது எங்களிடம் சொன்னது என்ன தெரியுமா? நம் சினிமா நன்றாக இருக்க வேண்டும் அப்போதுதான் தியேட்டர் நன்றாக இருக்கும். அந்த சினிமாவுக்கு நம்மால் பெரிதாக எதாவது செய்ய முடியவில்லை என்றாலும் இப்படி படங்களில் நடிக்கும் போது பணம் வாங்கக் கூடாது. நீயும் இப்படி நடித்தால் காசு பணம் வாங்காதே என்றார். அந்த ‘தூங்காநகரம்’படத்தில் பணியாற்றியவர்கள் என்கிற
அறிமுகம் பழக்கத்தில் அடுத்தடுத்து என்னிடம் நடிக்கக் கேட்டார்கள் அப்படித்தான் நான் நடிக்க ஆரம்பித்தேன்.

நான் இதுவரை   ‘வல்லினம்’ ,’புதியதோர் உலகம் செய்வோம்’ ,’தற்

​கா​

ப்பு’ ‘பப்பரப்பாம்’, ‘என்னோடு விளையாடு’ என  படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து’துடி’ யில் நடிக்க இருக்கிறேன்.

நடிகராக உங்கள் அனுபவம் எப்படி?

நான் திரையரங்கு சார்ந்து சுமார் 30 ஆண்டுகள் அனுபவங்கள் கொண்டவன். ஆனால் ஒரு நடிகராக நான் மிகவும் இளையவன். அனுபவமில்லாதவன், கற்றுக் கொள்ள வேண்டியவன் என்கிற நிலையில்தான் இருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் நடிப்பில் நான் ஒரு குழந்தை.

நட்பில் பழகியவர்கள் ,அறிமுகமானவர்கள் ,தொடர்பில் உள்ளவர்கள் என்றுதான் என்னை நடிக்க அழைக்கிறார்கள் .அதில் தேர்வு செய்து நடிக்கிறேன். நான் நடிப்பிற்கு புதியவன் என்றாலும் திரையுலகில் அப்பாவுக்கு இருக்கும் மரியாதையால் எங்களுக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள்.படங்களில் நடிக்கும் போது மூத்த நடிகர் அண்ணன் ராதாரவி, இயக்குநர் சமுத்திரக்கனி போன்றவர்கள் எனக்காக பொறுமை காத்து ஒத்துழைத்தார்கள்.

எல்லா படங்களிலும் வில்லனாக வருகிறீர்களே..? 

என் ஆறு படங்களிலும் எனக்கு வில்லன் வேடம்தான் இந்த முகம் வில்லனாக நடிக்க பொருத்தமாக இருக்குமா? எனக்கு அது சரிவருமா என்று இயக்குநர்களும் நினைக்கவில்லை. நானும் நினைக்க வில்லை .ஏனென்றால் முரட்டு முகம் பெரிய மீசை, மிரட்டும் கண்கள்,முகத்தில் மரு, மச்சம் என்று வில்லன்களுக்கு தோற்றம் இருந்தது அந்தக் காலம். இப்போது அதெல்லாம் தேவையில்லை. 

​பளபளப்பான

 முகத்திலேயே வில்லத்தனம் செய்ய முடிகிறது. இது ஒரு காலமாற்றம்.
பெரிய அழகனான அரவிந்தசாமியையே வில்லனாக பார்க்க முடிகிறது, ரசிக்கவும் செய்கிறார்கள். வில்லன்களும் கைதட்டல் வாங்கும் காலமிது. எனவே தைரியமாக வில்லனாக நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களுக்குப் பணம் வாங்கப் போவதில்லை. 

திரையரங்கு அதிபராக உங்கள் அனுபவம் எப்படி?
 

அப்பா முதலில் புதுக்கோட்டயிலுள்ள பிரகதாம்பாள் என்கிற திரையரங்கை லீஸ் எனப்படும் குத்தகை முறையில் எடுத்து நடத்தினார் அதன்மூலம்  திரையரங்கம் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். சென்னை வந்த போது முதலில் கிருஷ்ணவேனி என்கிற பழைய  திரையரங்கத்தை வாங்கினார் அது பழையதாக இருக்கிறதே என்று புதிதாக ஒன்று கட்டநினைத்த போது கட்டியதுதான் கமலா திரையரங்கம்.இந்த  திரையரங்கம் 1972ல் கலைஞர் அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டு தொடங்கப் பட்டது. இதன் 25வது ஆண்டு விழாவிலும் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதலில் ஏசி இல்லாமல் தொடங்கியது.பின்னர் ஏசி கொண்டதாக மாற்றப்பட்டது. பிறகு 2 அரங்குகளாக மாற்றிக் கட்டப்பட்டது.

இப்போது ஆண்டுக்கு 120 படங்கள் வெளியாகின்றன. இத்தனை ஆண்டுகளில் பல ஆயிரம் படங்கள் வெளியாகியிருக்கும்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்லமாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது  ஏமாற்று வேலை.இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அதன்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை. ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50 திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால்ஏற்றுக் கொள்ள முடியாது.அதைப்போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

திருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை ,பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். ‘பாகுபலி’ எப்படி வசூல் செய்தது? ‘பாபநாசம்’ எப்படி வசூல் செய்தது?’தனி ஒருவன்’எப்படி வசூல் செய்தது?

‘தனிஒருவன்’ அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.

திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் புகார்கள் சொல்லப் படுகின்றனவே.?

இதை நான் மறுக்கவில்லை. திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் குறைகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. டிக்கெட் விலையில் சொல்வது ஒன்று, விற்பது ஒன்று என்று இன்றும் நடக்கிறது.

500 டிக்கெட் விற்றால் 250 தான் விற்றது என்று பொய்க் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கட்டணம் அதிகம், சுத்தமில்லை, வசதி இல்லை என்கிற நிலையும் இருக்கிறது. ஒரு திரையரங்கில் வாகனங்களுக்கு மணிக்கு 40 ரூபாய்  என்று  கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் 120 ரூபாய்தான் வண்டிவிட 4 மணி நேரத்துக்கு 160 ரூபாய் என்றால் என்ன அநியாயம் இது? கடடணங்களால் இப்படி மக்களை கசக்கிப் பிழியக் கூடாது.

சினிமா வளர நாங்கள் மட்டும் மாறினால் போதாது எல்லாரும் மாற வேண்டும்.


அப்படி என்ன உங்கள் திரையரங்கில்  வசதிகள் உள்ளன?

எங்களைப் பொறுத்தவரை மல்டிப்ளக்ஸ் எனப்படும் சொகுசு திரையரங்குகளில் குறைந்த கட்டணம் நிறைவான வசதி கமலா அரங்கில் மட்டும்தான் என்பேன். இதை ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் என்றால் நான் சொல்லியிருக்க முடியாது. இப்போது எல்லாம் முறைப் படுத்தி மேம்படுத்தி நடத்தி வருகிறோம். இப்போது எனக்குத் தகுதி இருக்கிறது என்னால் இப்போது சொல்ல முடியும். 

முன்பு வெண்திரையாக இருந்தது. இப்போது வெள்ளித்திரையாக மாறி இருக்கிறது. 

முன்பு படத்தின் பிலிமைப் பொறுத்து படத்தில் தரம் இருக்கும் இப்போது டிஜிட்டலாகி விட்டதால் ஒரே தரத்தில் எல்லா அரங்கிலும் காணமுடியும்.

ஒருகாலத்தில் மணலைக் குவித்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தார்கள். பின்னர் தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என்று மாறியிருக்கிறது  அப்போது க்யூவில் நின்று வியர்க்க விறுக்க வெளியில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும். இன்று நெட்டில் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் எடுக்கலாம். இதனால் டிக்கெட் எடுக்கப் போய் வரவும், படம் பார்க்கப் போய் வரவும் என ஆகிற நேர விரயம் மிச்சம்.படம் பார்க்க பத்து நிமிடம் முன்பு வந்தால் போதும். எவ்வளவு சௌகரியம், பாதுகாப்பு, சுத்தம், நிம்மதி தெரியுமா? ப்ளாக் டிக்கெட்டுக்கு வேலையே இல்லை.

ஆன்லைனில் எடுப்பதால் இன்று எல்லாருடைய முகவரியும் பதிவாகி விடுவதால் குற்றச் செயல்கள் இல்லை.படம் பார்ப்பது இன்று பாதுகாப்பான அனுபவமாக மாறி இருக்கிறது. யார் தலையும் மறைக்காத வகையில் திரையரங்க இருக்கைகள் அமைப்பு உள்ளது. ஒலியமைப்பு சரிவரத் துல்லியமாகக் கேட்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

குடிப்பவர்களை புகைப்பவர்களை நாங்கள் திரையரங்குகளில் அனுமதிப்பதில்லை.இங்கே சிகரெட் விற்பதே இல்லை. முன்பெல்லாம் இடைவேளையில் மட்டும்தான் தின்பதற்கு ஏதாவது வாங்க முடியும். திடீரென்று ஒரு குழந்தை  அழுதால் அதற்குப் பால் தேவைப்பட்டால் இப்போது உள்ளே உள்ள உணவகத்தில் வாங்க முடியும். எப்போதும் எதுவும் இப்படி   உணவகத்தில் வாங்கிக்கொள்ள முடியும்..டிக்கெட் எடுக்க காத்திருக்கும் இடமும் கூட ஏசி செய்துள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எங்களுக்குப் படம் பார்க்க வருகிறவர்களின் வசதிதான் முக்கியம். 

திரை நட்சத்திரங்களுடனான உங்கள் நட்பு பற்றி? 

அப்பா காலத்திலிருந்து எல்லா நடிகர்களும்  எங்கள் திரையரங்குக்கு வந்து இருக்கிறார்கள் ; இன்றும் வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ஒரு படம் ஓடினால் அதன் விழாக்களை திரையரங்கில் நடத்துவது வழக்கம். அப்போது இப்படி பலரும் வந்திருக்கிறார்கள். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் எங்கள் தியேட்டரின் ஓட்டல் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் அப்போது ரஜினி

​ ​

சாரும்வந்திருந்தார்.

​ ​

அன்று சிவாஜி அவர்களுக்கு திருமணநாள் .அப்பா அன்றைய விழாவில் அந்த கல்யாண நாளைக் கொண்டாடினார்

​.​
​ 

சூப்பர்ஸ்டார்

​ 

தாலி எடுத்துக் கொடுக்க சிவாஜி அவர்கள் மீண்டும் கமலா அம்மாளுக்குத் தாலிகட்டினார். இதற்காக ரஜினிசார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எங்கள் அரங்கில் அதிகமாக ரஜினிசார்  படங்களே வெளியாகும். கமல்சார் படங்கள் வெளியிட்டது மிகமிகக் குறைவே. இந்த நிலையில் புதிதாக திரையரங்கம் கட்டி

​ட​

 திறப்புவிழாவுக்கு அழைத்த போது மறுக்காமல் அவர் வந்ததுடன் இது என் குடும்பவிழா என்று பேசினார். அது மறக்க முடியாது. 

நடிகர் விஜய் என் கல்லூரிக்காலம் முதல் நண்பர்.அவரது ஆரம்ப காலத்தில் ‘பூவே உனக்காக’, ‘லவ்டுடே’ ,’சூரியவம்சம்’ படங்களுக்குச் சேர்த்து முப்பெரும் விழா எடுத்தோம். அப்போது கலைஞரை அழைத்தோம். விஜய் என் மீதும் தியேட்டர் மீதும் அன்பும் அக்கறையும் உள்ளவர். அவர் யோசனையின்படி தான் இரண்டாவது சிறிய அரங்கையே கட்டினோம். என் அண்ணன் மகன் திருமணத்துக்கு கேப்டன் வந்தார் .அது மறக்க முடியாதது. இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு.

உங்கள் அப்பாவுடனான அனுபவங்கள்?

எங்கள் அப்பாவுக்கு  இந்த திரையரங்கம்தான் உயிர். எங்கள் அப்பாவுக்கு வள்ளிப்பன், நாகப்பன், நான் என்று மூன்று பிள்ளைகள். அப்பா எங்களிடம் சொன்னது ‘மூன்று பேருக்கும் தனித்தனியாக சொத்து எழுதி வைத்து விட்டேன். ஆனால் தியேட்டரை மட்டும்  மூன்று பேருக்கும் சேர்த்து எழுதியுள்ளேன். எக்காலத்திலும் இது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்

​.​

இதை விற்கக் கூடாது.’ என்றதுடன், ‘முடிந்தால் சினிமாவுக்கு ஏதாவது உதவுங்கள் ‘என்றார். மற்ற சொகுசு திரையரங்குகளில் சினிமா விழா நடத்த 2 லட்ச ரூபாய் கட்டணம் உள்ளது. எங்கள் அரங்கில் மட்டும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்குகிறோம்.இதை திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.இதுதான் அப்பா ஆசைப்பட்டது.

நீங்கள் ஏன் படம் தயாரிக்கவில்லை?

அப்பா முதலில் ‘பட்டாக் கத்தி பைரவன்’ என்கிற படத்தை விநியோகம் செய்ய வாங்கினார் .அதில் நாலு லட்சம் நஷ்டம் வந்தது. அத்துடன் விநியோகம் செய்வதை விட்டுவிட்டார். தயாரிப்பாளராகிப் படம் தயாரிக்க  இயக்குநர் எஸ்.பி.எம் மை படம் இயக்க அழைத்தார். அவர் உங்கள் மனப்பான்மைக்கு தயாரிப்பு சரிப்பட்டு வராது வேண்டாம் என்றார். அத்துடன் அப்பா தயாரிப்பாளர் ஆகும் எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு : டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் 9 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கடந்த மாதம் 18–ந் தேதி தற்கொலை செய்த கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகாரிகள் கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தையும், ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டுமான ரவி , அவரது தோழியும் கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, வழக்கறிஞர் மாளவியா, என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் தீரன் சின்னமலை இயக்க தலைவர் யுவராஜ் ஆகியோர் கூறி இருந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கோகுல்ராஜின் தாயார் சித்ரா , சகோதரர் கலைச்செல்வன் , விஷ்ணுபிரியாவின் நண்பரும், மதுரை உயர் நீதிமன்றம் வழக்கறிஞருமான மாளவியா, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில் குருக்களும், விஷ்ணுபிரியாவின் இன்னொரு நண்பருமான விஜயராகவன் மற்றம் விஷ்ணுபிரியாவின் தாயார் கலைச்செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அவரது தோழியும், கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது.

நேற்று பகல் 11–45 மணிக்கு அவர் சேலம் சுப்பிரமணிய நகர் சன்னதி தெருவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பிக்கள் நாகஜோதி, அன்பு , டி.எஸ்.பி ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இடையில் 15 நிமிடம் சாப்பாட்டு வேளை தவிர மற்ற நேரங்களில் விசாரணை நடந்தது. அவரிடம் நூற்றுக்கனக்கான கேள்விகளை போலீசார் கேட்டு பதில்களை பெற்றனர்.

விஷ்ணுபிரியாவுடன் ஏற்பட்ட நட்பு, அவருடன் செல்போனில் அடிக்கடி பேசிய போது பகிர்ந்து கொண்ட தகவல்கள், வழக்கறிஞர் மாளவியா, கோவில் குருக்கள் ஆகியோருடன் அடிக்கடி பேசிய விவகாரங்கள் உள்ளிட்ட பல கேள்விகளை மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டு பதில் பெற்றனர். எந்த அடிப்படையில் அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்ததாக கூறினீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகளும் இடம் பெற்றன. அனைத்திற்கும் மகேஸ்வரி பொறுமையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை முடிந்து இரவு 9 மணிக்கு வெளியே வந்த மகேஸ்வரியிடம் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக உங்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர்? அதற்கு நீங்கள் கூறிய பதில்கள் என்ன? என்ன அடிப்படையில் விஷ்ணுபிரியாவுக்கு உயர் அதிகாரிகள் தொல்லை கொடுத்ததாக கூறினீர்கள்.

இது குறித்து உங்களிடம் சி.பிசி.ஐ.டி. அதிகாரிகள் கேள்வி கேட்டு பதில் பெற்றார்களா? உங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தார்களா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு மகேஸ்வரி சிரித்து கொண்டே பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது:–

என்னிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி வெளியே எதுவும் கூற முடியாது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர் என மகேஸ்வரி கூறினார்.

 

அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் ‘ஆகம்’ பாடல்

நமதுக் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும், அதனை களைக்கும் வழி முறைகளையும் சுவாரசியமாக கூறும் படம் தான் ‘ஆகம்’. இந்தப் படத்தில் மறைந்த திரு அப்துல் கலாமின் ஊக்கம் தரும் வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் மையமாகக் கொண்டு இயற்றப் பட்ட பாடல் ஒன்றும் இருக்கிறது.

இந்தப் பாடலை பற்றி இயக்குனர் ஸ்ரீராம் கூறும் போது ‘சமீபமாக பலப் படங்களில் கலாம் ஐயாவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பாடல்கள் பதிவாவதை நான் அறிவேன். ஆகம் படத்தில் அவரை பற்றிய பாடல் இருக்க வேண்டும் என்பதை கடந்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே நாங்கள் முடிவு எடுத்து விட்டோம்.

அதைக் குறித்து அவரை நேரில் சந்தித்து விவாதிக்கலாம் என்று எண்ணியப் போதுத் தான் பேரிடியாக அவர் நம்மை விட்டு பிரிந்துப் போன செய்தி வந்தது. கல்வி குறித்தும், நமது நாட்டின் அறிவு செல்வங்கள் மற்ற நாடுகளுக்கு செல்வம் நாடி போவதால் வரும் மனித வள இழப்பையும் கூறும் கதை என்பதாலும், அவரை குறித்த பாடல் ஒன்று இப்படத்தில் இருத்தல் அவசியம் என்றுக் கருதியதாலும் அந்தப் பாடலை பதிவு செய்து விட்டோம்.

ஜாய் ஸ்டார் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வர ராவ் தயாரிக்கும் இப்படத்தில் இர்பான் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீக்ஷிதா. குணசித்திர நடிகர் ஜே பி உடன் ரியாஸ் கான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தமிழ் திரை உலகம் கண்டிராரது என சொல்லலாம்.

என் முதல் படத்திலேயே இத்தகைய சவாலான கதையை தேர்ந்து எடுத்ததற்கும், திறனுடன் செயல்பட்டதற்கும் என்னுடைய குழுவினருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். வெறும் நுனிப்புல் மேயும் கதை அல்ல என்பதால் , நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது.

கல்வி துறையில் பல வருடங்கள் இருந்தப் படியால் கவனமாக கையாள வேண்டியதாக இருந்தது.படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டும், படம் வெளி ஆகும் தேதியும் அறிவிக்கப் படும்’ என்றார்.

இலங்கைக்கு சாதகமான ஐ.நா தீர்மானம்- ஈழத் தமிழர்களுக்கு அநீதி: ராமதாஸ்

சென்னை:
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக எடுக்கப்பட்டதில், ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
இன்று  அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணை நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடூரமானவர்கள் தண்டனையின்றி தப்பிக்கவும், சொந்தங்களை பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும் தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் தான் காரணம் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். இதை ஆதாரங்களுடன் நிரூபித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது.

ஈழத்தமிழர்களின் நலன்களையும், மனித உரிமையை பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென கடந்த ஆண்டு வரை வலியுறுத்தி வந்தன. அதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் சார்பில் விசாரணை நடத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடத்தப்பட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விசாரணையில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பது தான் இயற்கையான நீதியாக இருக்கும். ஆனால், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, அங்குள்ள நிலைமை முற்றிலுமாக மாறி விட்டதைப் போன்ற ஒரு பொய்யான சித்திரத்தை உருவாக்கி, இலங்கை மீதான போர்க்குற்றத்தை அந்நாட்டு நீதிமன்றத்திலேயே விசாரிக்க அனுமதிப்பது ‘திருடன் கையில் சாவியை ஒப்படைப்பதற்கு’ ஒப்பாகும்.

ஈழத் தமிழர்களின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை என்பதும், இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது மட்டும் தான் அதன் நோக்கம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இலங்கையை வழிக்கு கொண்டு வர இனப்படுகொலையை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, அதன் நோக்கம் நிறைவேறியதும் இலங்கையை காப்பாற்றத் துடிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை மீதான தீர்மானத்தைக் கொண்டுவந்த இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, மாசிடோனியா, மாண்டிநெக்ரோ ஆகிய நாடுகளும், அதற்கு துணை நின்ற அல்பேனியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கிரீஸ், லாத்வியா, போலந்து போன்ற நாடுகளும் அமெரிக்காவின் விரல் அசைவுக்கு கட்டுப்பட்டவை என்பதால் அவையும் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதில் எந்த ஆச்சரியமுமில்லை.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட இந்தியா  இந்த பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் தான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சம அதிகாரம் கிடைப்பதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய தூதர் அஜித்குமார் கூறியுள்ளார். உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு இவற்றைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் இந்தியா  உறுதியாக இருந்தால், அதற்கு முன் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க அது தான் அடிப்படையாக அமையும். போர்க்குற்ற விசாரணையை இலங்கை நீதிமன்றங்களே நடத்திக் கொள்ள அனுமதித்து விட்டு, தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16.09.2015 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்மீதான   நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய போதெல்லாம் அமைதியாக  இருந்து விட்டு, கடைசி நேரத்தில் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை ஆதரித்திருப்பது பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகமும், அநீதியும் ஆகும். இலங்கைப் பிரச்சினையில்  முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், இப்போதைய தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே இப்பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு காட்டுகிறது.

ஸ்வதர்மம்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே – விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

– என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவை இந்தப் பாட்டில் சொல்லியிருப்பதாக பாடம் படித்த நினைவு.

கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.

ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப் பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.

– என்ன அருமையான உவமை!

உவமைகள் மட்டும் இல்லாதிருந்தால், நம் வாழ்வில் சுவையேயிராது. கானல் நீராகக் கரைந்து போகும் கண நேர வாழ்க்கையில், வாழ்வீன் முழுமையை ரசித்து அனுபவிக்க உவமைகள் எப்படிக் கைகொடுக்கின்றன.

பார்க்கும் ஒரு பொருளை சொல்ல வரும் பொருளோடு பொருத்திப் புரிய வைக்க முயலுதல் உவமையின் பலன்!

அதுபோன்றதே, சிறு கதைகள் உதாரணக் கதைகள் வழியே விளக்குதல்….

சான்றோர் சினத்தைச் சொல்ல வந்துவிட்டு, சான்றோர் சினத்தின் இயல்பைக் கூறிவிட்டு, சான்றோர் குணத்தைக் கூறாது விட்டால்…? முழுமை பெறாதல்லவா?!!

ஸ்ரீராமகிருஷ்ணர் முதற்கொண்டு பலரும் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கதை…

துறவி ஒருவர்… ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது.

குளித்துக் கொண்டிருந்த துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் இந்தத் துறவி என்ற ஞானம் அந்தத் தேளுக்கு இல்லை. வழக்கம்போல் தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் நறுக்கென்று கொட்டியது தேள்.

வலியால் துடித்த துறவி, தவறிப்போய் தேளை நீரில் தவறவிட்டார். இருப்பினும் தன் இயல்பு குணமான கருணையைக் கைக் கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்… தேளோ மறுபடியும் கொட்டியது.

மீண்டும் அதே கதை. இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார்…

துறவியாரே… தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாய்க் கொட்டுகிறதே… நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்ப கையில் எடுத்து கொட்டுப் படுகிறீர்கள்.

அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்!

அதற்கு துறவி கூறினார்…

“கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாத போது என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?”. என்றார்.

இங்கே துறவி கூறியதே, ஸ்வதர்மம் என்ற பொருளில் முன்னோர் உரைத்தனர்.

இது நம் ஸ்வதர்மம் என்று நாம் கைக்கொண்ட பின், நம் இயல்பை விட்டு நாம் மீறலாமோ?!

(இதே விளக்கமாக ஸ்ரீவைஷ்ணவம் காட்டும் கதை ஒன்றும் கூரத்தாழ்வான் – கிருமிகண்ட சோழன் விஷயத்தில் உண்டு.)

என் வாழ்நாளில்… இந்தக் கதையில் கொட்டிய தேளைப் போல் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்… பதிலுக்குக் கொட்டாமல் தூக்கிக் கரையேற்ற முற்பட்டதால், தேள்களெல்லாம் காப்பாற்றுபவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. பதிலுக்குக் கொட்டியிருந்தால், முதிர்ச்சி அடைந்த மனிதன் என்றும், ராஜ தந்திரி என்றும் சாணக்கியன் என்றும் பட்டம் கிடைத்திருக்கும். நம் ஸ்வதர்மம் காத்த பலன் சின்னப் பையன் என்றும், அப்பாவி என்றும்தான் பட்டம் கொடுக்கிறது இந்த உலகம்!

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை

1988 – மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி ‘மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன்.

இடம்: தென்காசி திருவள்ளுவர் கழகம். தென்காசி பெரிய கோவில் கோபுரம் அப்போது கட்டப்பட்டு வந்தது. குற்றால மலைக் காற்று சுகமாய் மோதித் தலை கோதும்! நான் அப்போது தென்காசி கீழப்புலியூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன். அதற்கு முன்னர் பள்ளிகள் அளவிலான சிறு சிறு போட்டிகளில் பங்கு பெற்றிருந்தேன் என்றாலும், அவை எல்லாம் மைக் இல்லாமல் சிறிய அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் பேசும் பேச்சுப் போட்டிகளாகத்தான் இருந்தன! அன்று… அக்.2. காந்தி ஜயந்தி!
தென்காசி திருவள்ளுவர் கழகம், பொதிகைத் தென்றலுடன் அகத்தியம் கண்ட தமிழ் ஒலிக்கும் திருக்கூடம்!

இலக்கியவாதிகள் பலர் களம் கண்ட புனிதமான மேடை!
காந்தி ஜயந்தி என்பதால் அன்று மாணவர்கள், பெரியவர்களின் பேச்சுக்கு திருவள்ளுவர் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லாரும் காந்தியைப் பற்றியே பேசுகிறார்களே… நாம் வேறு ஏதாவது பேசலாமே என்று தலைப்பை யோசித்தேன். காந்தியைப் போல் தென்னகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய அரசியல் குருவாகத் திகழ்ந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் குறித்தே பேசலாமே என்றார் ஆசிரியர் ராமலிங்கம். குறிப்பெடுத்தேன். முதல் ’மைக் பிடித்து’ மேடையேற்றம் கண்டேன்!

பேசி முடித்த பின்னர் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்கள். “இந்திய சுயராஜ்யம்” என்ற புத்தகம். மதுரை காந்தி இலக்கியப் பண்ணை வெளியிட்ட புத்தகம். அதில், காந்திஜி ஒரு வாசகரும் ஆசிரியரும் பேசுவது போல் பல கருத்துகளை விதைத்திருப்பார். இந்தியாவின் நிலைமை, ஹிந்துக்களும் முஸ்லிம்களும், சுயராஜ்யம் என்றால் என்ன, இந்தியா எப்படி விடுதலை அடைய வேண்டும், மிருக பலத்தால் என்ன சாதிக்க முடியும், சாத்வீக எதிர்ப்பை பதிவு செய்வது எப்படி, கல்வி, இயந்திரம் போன்றவற்றைப் பற்றி தமது கருத்துகளை அலசியிருப்பார். இயந்திரம் பற்றி அவர் குறிப்பிடும் ஓர் இடத்தில், இயந்திரங்களால் மனிதனின் பணிகள் பாதிக்கப்படுவதையும், மனித உழைப்புக்கு மதிப்பில்லாது போவதையும் குறிப்பிடுவார். அதில், ரயில்களுக்கும் டிராம் வண்டிகளுக்கும் எதிரான அவரின் அதீத எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எந்த ரயில் வண்டியில் ஏறி இந்தியா முழுமைக்கும் ஊர் சுற்றி மக்களைச் சந்தித்தாரோ, அதே ரயில் வண்டியின் மீதான கோபம், ஆலைகளுக்கு எதிரான கொள்கை, இயந்திரங்கள் வேண்டாம் என்ற கருத்து… எல்லாம் 13 வயது மாணவனாக இருந்த எனக்குள் ஒரு தீவிர யோசனையைக் கிளப்பியிருந்தது. எனக்கு எழுந்த அதே சந்தேகத்தை அவரே ஒரு கேள்வியில் கேட்டு பதிலாகவும் ஆக்கியிருந்தார்.

நீங்கள் குறிப்பிடும் இந்த எதிர்ப்பு உணர்வையெல்லாம் அதே இயந்திரத்தின் மூலம்தான் அச்சிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.. என்று கேள்வியும் கேட்டு, அதற்கு பதிலாக, “விஷத்தைக் கொல்ல விஷம்தான் பயன்படும்” என்றும் கூறியிருப்பார் மகாத்மா காந்தி.

சிறு வயதிலேயே வேறு பொழுது போக்குகள் இல்லாத காலம் என்பதால், புத்தகங்களைப் படிப்பதே ஒரே பொழுது போக்கு! இந்த இந்திய சுயராஜ்யம் புத்தகத்தை நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். அதில் என் பெயரும் வருடமும் திருவள்ளுவர் கழக இலச்சினையும் இருக்கும்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர். காந்திஜியின் கிராம சுயராஜ்யம் குறித்து குறிப்புகளைக் கேட்டார். கைவசம் இருந்த இதே நூலை அவரிடம் கொடுத்து உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிவந்தேன்.

ஆண்டுகள் பலவானாலும் காந்திஜியின் தர்ம சிந்தனைகள் மட்டும் உள்ளத்தில் பதிந்து விட்டன.

பின் குறிப்பு: இலக்கிய தாகத்தை வளர்த்தது திருவள்ளுவர் கழகமும் ரசிகமணி டி.கே.சி., வாரிசுகளாய் தமிழ் கற்பித்த (பள்ளி சாராத) பெரியவர்களும் என்றால், அரசியல் வாசனையை வெறுக்க வைத்ததும்கூட அதை ஒட்டிய இடமும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் கட்சிப் பணிகளுக்கு அழைத்துச் சென்ற வாத்தியார்களும்தான்! திமுக கூட்டத்துக்கு ஆள் சேர்க்க எங்களை அழைத்துச் சென்றார்கள். தென்காசி பெரிய கோயில் எதிரே நடக்கும் திமுக கூட்டத்தில், வை.கோபால்சாமி அடுக்கு மொழியில் பேசினால் அடுத்தடுத்து கை தட்ட நாங்கள் வேண்டும்! தேர்தல் நோட்டீஸ் கொடுக்க நாங்கள் பயன்படுத்தப் பட்டோம். கருணாநிதியைத் தவிர வேறு தமிழறிஞர்களே தமிழகத்தில் தோன்றியதில்லை என்று கற்பிக்கப்பட்டோம். அண்ணாத்துரையைத் தவிர வேறு மேடைப் பேச்சாளரே கிடையாது என்று பாடம் புகட்டப்பட்டோம். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சரிதானே!

(இந்தப் படம், ஓவிய நண்பர் ஜெ.பிரபாகர் வரைந்து கொடுத்தது.)

தத்துவ ஞானி பிளாட்டோ

கிரேக்க நாடு தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளாட்டோ. சாக்ரட்டீசின் மாணவர்களில் முதன்மையானவர். இவர் ஏதென்சில் பிறந்தவர். இவரது காலம் கி.மு.427-347 ஆகும். இவர் பரம்பரை செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பம் ஒன்றில் பிறந்தார். ஆனாலும் இவருக்கு செல்வத்தின் மீது பெரிய ஈடுபாடில்லை. சிறுவயது முதலே எளிமையான வாழ்வை மேற்கொண்டார்.

  https%3A 4.bp.blogspot.com 6IQhdlQLUTc VdGOOd5KXHI AAAAAAAAFnk eyZV88USwqA s320 Plato 1 - 2026பிளாட்டோவின் தந்தை பெயர் அரிஸ்டோன். தாயார் பெயர் பெரிக்டியோனி. இவர்களுக்கு 4 குழந்தைகள். இதில் பிளாட்டோதான் கடைசி பிள்ளை. பெற்றோர் இவருக்கு வைத்த அரிஸ்டோக்கிளீஸ் என்பதாகும். அவர் எழுத தொடங்கியபோது பிளாட்டோ என்ற புனைபெயரில் எழுதினார். அதுவே நிலைத்து விட்டது.

 பிளாட்டோ சில காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தனது 20-வது வயதில் சாக்ரட்டீசிடம் சேர்ந்தார். 8 ஆண்டுகள் அவரது சீடராக கல்வி பயின்றார். சாக்ரட்டீஸ் காலமானபோது 28 வயது வாலிபராக இருந்தார். மாசிடோனியா, எகிப்து, லிபியா, இத்தாலி என்று பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல தேசத்து மக்களை சந்தித்து பேசினார். அனுபவ அறிவு பெற்றார். தன் கருத்தையும் சாக்ரட்டீஸ் கருத்தையும் பரப்புவதில் ஈடுபட்டார். பின்னர் ஏதேன்ஸ் நகரில் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பித்தார். இவரது மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர் அரிஸ்டாட்டில்.

 அரசியலுக்கும் சமுதாயத்துக்கும் தேவையான நல்ல மனிதர்களை உருவாக்குவதையே பிளாட்டோ தன் வாழ்நாளில் லட்சியமாக கருதி மிகுந்த ஆர்வத்துடன் உழைத்தார். கி.மு.4-ம் நூற்றாண்டில் கணிதக்கலையும், வான்இயல் கலையும் வளர்ந்ததற்கு பிளாட்டோ மிக முக்கிய காரணம் ஆவார். பிளாட்டோ தோற்றுவித்த கலைக்கழகமே உலகில் தோன்றிய முதல் பழ்கலைக்கழகமாகும்.

 ஒரு நாடு, மக்கள், ஆட்சி செய்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பிளாட்டோ எழுதிய ‘குடியரசு’ என்ற புத்தகம் இன்றளவும் உலக அளவில் மிகச் சிறந்த நூலாக போற்றப்படுகிறது.

 ‘அறிவு, வீரம், நிதானம், நேர்மை முதலிய நான்கும் நல்ல ஒழுக்கங்களாகும். இதில் முதன்மையானது அறிவு அடுத்தது வீரம். பிறகு எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது, அத்துடன் நேர்மையான வழியில் நின்று செயலாற்றுவது. இந்த நான்கிலும் மற்ற குணங்களும் அடங்கிவிடும்’ என்பது இவரது கருத்தாகும். ”பிளாட்டோ அறிவுக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்பார். மனிதர்களிடம் அறிவு உறங்கினால் கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். எல்லா தீமைகளும் போதிய நல்லறிவு இல்லாததால்தான் ஏற்படுகிறது.” என்பதும் இவரது கருத்துதான்.

 ஆசை பெருக பெருக தேவை அதிகமாகும். வாழ்வில் தடம் மாறி செல்ல நேரிடும். நிம்மதி குறைந்து துன்பம் வந்து சேரும். இதற்கு மாறாக மனதில் திருப்தி ஏற்படும்போது தேவை குறையும். நிம்மதி ஏற்படும். இவ்வாறு பல நல்ல கருத்துகளை மக்களிடையே பரப்பினார் பிளாட்டோ.

 பிளாட்டோ 80 வயது வரை உயிர்வாழ்ந்தார். இறக்கும்வரை சுறுசுறுப்பாக மகிழ்ச்சியோடு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தார். ஒரு மாணவரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திவிட்டு, அன்று இரவு திருமண வீட்டு திண்ணையில் படுத்து உறங்கி ஓய்வு எடுத்தார். விடியற்காலையில் மாணவர்கள் எழுப்பச் சென்றபோதுதான் உயிர்பிரிந்து உலக வாழ்வை நீத்த விவரம் தெரியவந்தது. மாணவர்கள் கண்ணீர் சிந்த, ஏதேன்ஸ் நகரமே இருள் சூழ்ந்து சோகமாய் காட்சி அளிக்க, பிளாட்டோவின் உடலை சகல மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.

வோக்ஸ்வேகன் கார் நிறுவன முறைகேட்டை தொடர்ந்து பிரச்சனையில் சிக்கும் உலகின் பிரபல கார் நிறுவனங்கள்

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தினார்.

தன் டீசல் கார்களில் செய்த, ளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது.

இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது.இந்நிலையில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்டர்கான், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி அம்பலம் ஆனதை அடுத்து ராஜினாமா செய்தார்.

மேலும் தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் இரண்டாவது பெரிய வாகன அமைப்பான ’ஜெர்மன் ஆட்டோமொபைல் கிளப்’ புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வால்வோ எஸ்.60, ரெனோல்டின் ஈஸ்பேஸ் மற்றும் ஜீப் ஆகியவை அனுமதிக்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக மாசை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்டதை விட அதிக மாசு வெளிப்பாட்டில் வோக்ஸ்வேகனை மட்டும் அல்லாமல் உலகின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ. மஸ்டா, பியட் மற்றும் போர்டு ஆகியவை ஈடுபட்டுள்ளதாக ‘ஜெர்மன் ஆட்டோமொபைல் கிளப்’ வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

 

காவல் நிலையம் முன்பு காவல் உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கியை திருடிய 2 பேர் சிக்கினர்

சென்னை  தேனாம்பேட்டை காவல்  நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த ரோந்து வாகனத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் வாக்கி டாக்கி நேற்று முன்தினம் இரவு மாயமானது. அதனை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் ‘‘வாக்கி டாக்கியை திருடியதாக தியாகராயநகர் தெற்கு போக் சாலையை சேர்ந்த முரளி, தாம்பரத்தை சேர்ந்த அவரது நண்பர் ஆகியோர் பிடிபட்டனர். குடிபோதையில் வாக்கி டாக்கியை எடுத்து குப்பை தொட்டியில் வீசியதாக அவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தேனாம்பேட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த வாக்கி டாக்கியை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழக போலீஸ் உயர் அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் கொள்ளையடிக்க கைவரிசை காட்டிய மர்மநபர்கள்

 திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 63). இவர்களது மகன் ரமேஷ் .இவர் சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். நல்லமுத்து இறந்து விட்டதால் லட்சுமி எழில்நகரில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், அவரது உறவினர்கள் சிலருடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் எழில்நகர் குறிஞ்சிதெருவை சேர்ந்தவர் முருகமாணிக்கம். விருப்ப ஓய்வு பெற்ற பெல் ஊழியரான இவர் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கோபால் (65). இவர் ஓசூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவரது வீட்டின் கதவும் திறந்து கிடந்தது.

இது குறித்து திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் 3 பேரின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட முயன்றதும், பீரோவை உடைக்க முடியாததால் கொள்ளையை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் பகுதி யில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இன்று போலீஸ் அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.